- ரா. மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641046 -மனிதப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும் இடம், காலம், சூழல் என்னும் பௌதிகத்திற்குள் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதில் பண்பாட்டினை அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவது காலமும் சூழலுமே ஆகும். அதே போன்று சங்ககால மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தற்காலச் சூழலில் இனங்காணுவதற்கு மூலப்பனுவல்கள் தேவையான ஒன்றாகிறது. இப்பனுவல்கள் எழுத்தாக்கம் பெறும்போது தொகுப்பாக்கம் பெறவில்லை. மாறாக வாய்மொழி மரபுத்தன்மையில் மக்களாலும், பாண்மரபுகளாலுமே அவை பாடப்பட்டு, பின்னர் அவை கவிதையாக்கம் பெற்றன. இந்நிலையிலிருந்து சங்கப் பனுவல்களைப் பார்க்கும்போது சூழல்த் தன்மையும் காலவரையறையும் வெளிப்பட்டு நிற்கிறது.

சங்க மரபுகள் அவை தோன்றிய காலகட்டத்தில் தளப்பார்வை (நிலம்) கொண்டு இயங்கின. ஆனால் இன்றைய நிலையில் வரலாற்றுச் சான்றுகளகாவும், தொல்லியல் ஆவணமாகவும் காலப்பார்வை சார்ந்து வெளிப்பட்டு நிற்கிறது. இத்தகையப் பொதுத்தன்மையில் இயங்கிவரும் சங்கப் பனுவல்களை நிலத்தோடு மக்கள் வாழ்வியலாகப் பண்பாடாக வெளிப்படுத்துவதற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் தேவையான ஒன்றாகிறது. இம்மூன்றையும் ஒருமித்த தன்மையில் வெளிக்காட்டுகிறது சங்கப்பாடல்கள். இருந்தபோதிலும் முப்பொருள் செயற்பாடு ஐந்து நிலமக்களின் வாழ்வியலில் ஒரே தன்மையில் வெளிப்படவில்லை. சுற்றுச்சூழல் மாற்றம், நிலஅமைப்பு, மக்கள்வாழ்வு என வெவவேறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிசெய்யப்பட்டத் திணைச்சமூக மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்குச் சுற்றுச்சூழல், சுற்றுச்சூழலை ஒட்டிய தனிமனிதசூழல், குடும்பச்சூழல், வாழிடச்சூழல், சமூகச்சூழல் ஆகிய அனைத்தும் இடத்திற்கேற்பத் தேவையாகிறது. அதனை உள்வாங்கி சங்கப் பாடல்கள் வாயிலாகச் சூழல் படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

திணைக்குடி மக்களின் வாழ்விற்கு ‘இடம்’ தேவையான ஒன்றாக இருப்பின் அவை நிலத்தோடு, சமூகக் குழுக்களோடு, சுற்றுச்சூழலோடு என இணைந்து செயல்புரிய வேண்டியிருக்கிறது. நிலம் - மக்கள் இருகூறுகளும் தனித்தனியே இருப்பினும் அவை செயலாற்றுவதற்கு சூழல், பொழுது (காலம்) இரண்டும் தேவையாகின்றது. இவை சுற்றுச்சூழலோடு இணைந்து “உள்ளீட்டுத் தொடர்புகள், பண்பாட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்கள்,  வேலைப்பிரிவு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைகள் மற்றும் இயற்கை வளங்களை அடைய விரும்புவோரும் பயன்படுத்துவோரும் அவற்றைப் பங்கீட்டுக் கொள்ளுதல்”1 என அனைத்துச் செயல்பாடுகளிலும் சூழல் செயலாற்றுகிறது. ஒரு படைப்பாக்கப் பனுவலில் சூழல் தன்மையில்லை என்றால் அப்பனுவல் வெறும் படிமமாகவே பொருளற்றுக் கிடக்கும். அதற்கு உயிரோட்டம் கொடுத்து இயங்கச் செய்வது சூழலே ஆகும். நிலம் - மக்கள் என்ற இறுமைக்கும்  இருவழிகளில் சூழலும் காலமும் செயலாற்றுவதால் நிலம் ஓர் எதிர்வு வாய்பாடு கொண்டதாகப் பிரிக்கப்பட்டுப் பண்பாட்டுப் பொருண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது. நிலத்தின் மீது வரையப்பட்டுள்ள பண்பாட்டுப் பொருண்மைகள் உடல் மீதும் வரையப்படுகின்றன. உடல் என்பது நிலமாகவும் நிலம் என்பது உடலாகவும் மாற்றீடு பெறுவதும் கூட நிகழ்கிறது.”2 இத்தகைய சிறப்பு பெற்ற நிலமும் உடலும் பண்பாட்டில் மரபுசார்ந்த நடத்தை முறைகளையும் சடங்கியல்சார்ந்த நிகழ்வுகளையும் ஊடாட்டப்படுத்துகிறது. இதற்கு இயங்கு தன்மையே காரணமாக அமைகின்றது.

சூழல் - விளக்கம்
சூழல் என்பதை ஆங்கிலத்தில் (Context)  என்றழைக்கப்படுகிறது. இதனைப் பதம், இயங்கியல், இயங்குநிலை, பின்ணனி, சூழல் என அழைப்பதுண்டு. “சூழல் என்ற பதம் 1952 -இல் Robert J.Milks என்பவர் முதன் முதலில் தமது கட்டுரையில் பயன்படுத்தினர். பின்பு 1960 க்களில் அப்பதம் நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தில் ஒரு தரமான பதமாகக் கருதப்பட்டது”3 இவை பனுவலில் தனித்து இயங்குவதில்லை. அதன் பொருத்தப்பாட்டிற்கு ஏற்ப இணைந்து செயல்புரிகிறது. ஒரு பனுவலின் அர்த்தம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் அதன் சூழலிருந்துதான் விளங்கிக் கொள்ள நேரிடும். எனவே பனுவல் ;(Text) என்பது கடந்தகால, நிகழ்கால,  எதிர்கால என மூன்று காலங்களுக்கும் பண்பாட்டோடு ஒன்றியதாகும்.  மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் சூழலில்லாமல் அது உயிரற்றதாகவுள்ளது.”4 எனவே சூழலே பண்பாட்டை தீர்மானிக்கிறது.

சூழல் வெளிப்பாடு
சூழல் வெளிப்பாட்டில் ஒரு பண்பாட்டின், சமூகத்தின் நிலவியல் பின்ணனி, வாழ்வியல் பின்ணனி இரண்டும் முதற்பொருள் வாயிலாகவும், கருப்பொருள் வாயிலாகவும், உரிப்பொருள் வாயிலாகவும் வெளிப்பட்டு நிற்கும். முதற்பொருளும் உரிப்பொருளும் கூறுவோன் (புலவன்) வாயிலாகப் பின்ணனியாகச் சூழல் படுத்தப்படும். ஆனால் நிலம் சமூகம் வயத்தில் கருப்பொருள்கள் (தொல்காப்பிய அமைப்பின்படி) ஒவ்வொன்றும் சூழலைப் பிரதிபலித்தே செயற்படுத்தப்படுகிறது. ரிச்சர்டு பாவ்மென் பண்பாட்டினை ஒட்டி ஆறு வகையான சூழல்களை விளக்குகிறார். பண்பாட்டை ஒட்டிய வழக்காறுகளைச் சடங்குகளைக்கொண்டு நுட்பமாக உற்றுநோக்கும்போது அதன் சமூகவயம் அதில் வெளிப்பட்டு நிற்கும். இதில் சூழல்உறவுகளைப் பண்பாட்டுச்சூழல் என்றும் சமூகச்சூழல் என்றும் இருவகையாக வகைப்படுத்துகிறார். பண்பாட்டுச்சூழல் பொருள்களின் அமைப்புகளையும் சமூகச்சூழல் சமூக அமைப்யையும் பரிமாற்றங்களையும் விளக்குகின்றன.

அ. பொருள் சூழல்  (Context  of  Meaning)
வழக்காற்று வகை ஒன்றைப் பற்றி அச்சமூக உறுப்பினர்களின் ஒட்டு மொத்தமான பொருள் கொள்ளும் முறையாகும்.
ஆ. நிறுவனச் சூழல் (Institutional)
அவ்வகை பண்பாட்டிற்குள் எங்கே பொருந்தி வருகிறது என்பதாகும்.
இ. தொடர்புமுறைச் சூழல் (Context of Communication System)
அது எவ்வாறு பிற வழக்காற்று வகைகளோடு (நிலஒப்பாய்வு, திணைமயக்கம்) தொடர்பு    கொண்டுள்ளது என்பதாகும்.
ஈ. சமூகச்சூழல் (Social base)
அவ்வகையைக் கொண்டிருப்பவர்கள் என்ன வகையான மக்கள் (நிலக்குடிகள்ää திணைக்குடிகள்,  அரசுடைமைகள்)
உ. தனிமனிதச் சூழல் (Individual Context)
அது எவ்வாறு ஒரு தனிமனிதன் வாழ்வில் செயலாற்றுகிறது. (தனிமனிதன், குடும்பம்)
ஊ. சுற்றுச் சூழலமைவுகளின் சூழல் (Context of Situation)

சமூகப் பின்ணனிகளில் அது எவ்வாறு பயன்படுகிறது. சுற்றுச்சூழல் பின்ணனி தாவரங்கள், விலங்குகள் நிலத்திற்கு ஏற்ப செயல்படும் விதம்”5 என்று ஒன்றோடுஒன்று தொடர்பு கொண்டிருந்தாலும் இந்த ஆறு வகையானச் சூழல்களும் ஆய்வுக்கு மிகவும் பயன்தரத்தக்க வகையில் அமைகிறது.

சூழல் குறித்த கருத்தாக்கங்கள்
சூழல் வாயிலாக பண்பாட்டினை வெளிக்கொணர்வதென்றாலும், சமூகம் தொடர்பான மக்கள் வாழ்வியலையும் அவர்களது பழக்கவழக்கங்கள், வழக்காறுகள், சடங்குகள் என அனைத்துக்கூறுகளையும் இனங்கானவேண்டுமென்றாலும் அது தொடர்பான பனுவல் முதன்மையான தேவையாக இருக்கிறது. பின்பு அப்பனுவல் எழுந்த காலச்சூழல், பின்ணனி இதனை இனம்புரிய வேண்டியிருக்கிறது. இச்சூழல் தமிழ்ச் சூழலுக்குப் புதிதாக இன்றைய நிலையில் கருதப்பட்டாலும் தமிழ்ச்சூழலில் இது குறித்து புலவர்கள் முன்னமே வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அதன்தன்மை முறையாக வெளிப்படுத்தப்படவில்லை. தே.லூர்து அவர்கள் சங்கப் பனுவலின் சூழல் குறித்து கூறும்போது பின்வரும் கருத்தாக்கங்களை முன்வைக்கிறார். “சூழல் என்ற கருத்தாக்கம் தமிழ் இலக்கிய வாணர்களுக்கு முற்றிலும் புதிதன்று;  கி.பி.முதல் நூற்றாண்டிலேயே தொகை நூல்கள் தொகுக்கப்பட்டன. அவற்றில் காணப்படும் பாடல்களுக்கு திணை, துறை வகுத்துள்ளனர். துறை என்பது சூழலையே குறிக்கும் என்றும், திணை துறை வகுத்தவர் இப்பாடல் இந்த வேளையில் இன்னார் இன்னாரை நோக்கிச் சொல்லியது என்று குறிப்பிடுகிறார்”6 இக்கருத்தின்படி திணை துறையே சூழலைத் தீர்மானிக்கிறது என்று பார்க்கும்போது சங்கப்பாடலை உள்வாங்க முடிகிறது.

“குறுத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும்
பறம்பு பாடினரதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே” (புறம். 108).


இப்பாடல், பாரியைக் கபிலர் சிறப்பித்து அவனது நாட்டின், மலையின், இடத்தின் சிறப்பைப் புகழ்ந்து பாடியமையை வெளிப்படுத்துகிறது. இதில் திணையாவன பாடாண்திணையாகவும், பரிசிலர்க்கு இரப்பின் வாரேன் என்பதால் இயன்மொழித் துறையும் புலவரால் எடுத்துரைக்கப்படுகிறது. இதன் பண்பாட்டு சூழலைச் சமூகவயத்தில் இனங்கண்டால் வெளிப்படுவது,

1.    பாடலின் கவிதையியல்     -     பனுவல்
2.    கூறுவவோர்                  -          புலவர் (கபிலர்)
3.    கேட்போர்                   -             பாரி (இனக்குழுத் தலைவன்)
4.    சூழல் பின்ணனி         -             நிலம் நிலத்தின் தன்மை (வருணனை)

கூறுவோர் (புலவர்) வாயிலாக வெளிப்படுகிறது. புலவர் வெறுமனே ஒரு பனுவலை படைக்கும் என்ற நோக்கில் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு வெளிப்படுத்தினாலும் அதன் தன்மை எந்த ஒரு நிலையிலும் அப்படியே அவை இருந்து விடும். ஆனால் சிறப்பித்தல் கேட்போர் அதுதொடர்பான பண்பாடு நிலச்சூழலை இணைத்து வெளிப்படுத்தும்போது பனுவலுக்கானச் சிறப்பு தனித்து இயங்குகிறது. ஆகவே புலர்கள் தாங்கள் செய்யுளைப் படைப்பாக்கம் செய்யும்போது “இன்னார் இன்னாரை” என்று உள்வாங்கிக்கொண்டும் அதன் நிலப்பின்ணனி,  காலம்(பொழுது),  சூழல் இவைகளையும் உள்வாங்கிக் கொண்டும் கவிதைகளைப் படைத்துள்ளனர். இத்தன்மையில் பாணர்களது வாழ்வும் அடங்கும்.

நிலங்களின் சூழல் அமைவுகள்
திணைக்குடி மக்களின் நிலமார்ந்த சூழல்கள் பண்பாட்டு வாழ்வியலை ஒட்டி வெளிக்காணும்போது நிலமும் நிலத்தை ஒட்டிய வாழ்வு தனித்தனியே வெளிப்படுகிறது. நிலம் (இடம்) பின்னணியில் பூகோளத்தின் அமைப்பு, அதனை ஒட்டி வாழ்கின்ற உயிரினங்கள் இடம் பெருகின்றதுடன், அதனைத் தன்வயப்படுத்தக்கூடிய மனித வாழ்வும் இடம்பெருகிறது. இவை பண்பாட்டுச்சூழல் (பொருள் அமைப்பு) சமூகச்சூழல் (சமூக அமைப்பு பரிமாற்றம்) என்ற இருநிலைகளிலே சுற்றுச் சூழலை ஆளுகின்றது. ஐவகை நிலங்களைப் பண்பாட்டில் வைத்துப்பார்க்கும்போது இயற்கைச்சூழல், சமூகச்சூழல், உயிரினச்சூழல், வரலாற்றுச்சூழல் ஆகியவகைகளைப் பிரித்துணரலாம். இதில் இயற்கைக்கும் மக்களுக்குமுள்ள உறவே திணைக்குடி வாழ்வில் அதிகம் வெளிப்பட்டுள்ளதுடன், இயற்கையை தன்னுடைமைக்கு ஆட்படுத்தி பொருளாதாரம் ஈட்டும் உடமையாகவும் பூகோளத்தை மாற்றியுள்ளனர்.

நிலப்பகுதி

உணவு

பொருளாதார வாழ்வு

நீர்வளம்


குறிஞ்சி

தினை, மூங்கிலரிசி தேனெடுத்தல், கிழங்ககழ்தல்

தினைக்கதிரை உண்ணும் பறவைகளை ஓட்டுதல்

 

சிறுநீரோடைகளும் சுனைகளும்

முல்லை

வரகு, சாமை

முதிரை ஆநிரை மேய்த்தல், தினை சாமைப்பயிர்களுக்குக் களைஎடுத்தல் எருதுகளைக் கொண்டு தானியக்கதிர்களைப் போரடித்தல்

காட்டாறு

மருதம்

அரிசி

நடுதலும் களைக் கட்டலும்

கடாவிடுதலும்

ஆற்றுநீர், மனனைக்கிணறு, பொய்கை

 

நெய்தல்

மீன்விற்றும் உப்பு விற்றும் வாங்கி உணவுப்பொருள்

மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், இரண்டினையும் விற்றல்

மணற்கிணறு, உவர்நீர் நிறைந்த குட்டை

பாலை

கொள்ளையடித்தும் வழிப்பறி செய்தும் கிடைத்த பொருள்

வழிப்போக்கர்களைத் தவறாக வழிப்படுத்தி அவர்களை வழிப்பறி செய்தல்

மணற்கிணறு, உவர்நீர் நிறைந்த குட்டை கிணறும் சுணையும்.”7

 

நிலங்களை அதன் இயங்குதன்மையிலே பார்க்கும்போது ஒரே தோற்றத்தை வெளிப்படுத்துவதில்லை. புறச்சூழலினால் பருவமாற்றம் ஏற்படும்போது நிலத்தின் தன்மையும் மாறக்கூடுகிறது. இதனைக் காலமாற்றம் என்று கூறுவதுடன் அத்தகைய சூழலில் சுற்றுச்சூழலின் தட்ப வெப்ப தன்மையை உள்வாங்கிக்கொண்டு நிலத்தை தன்வயப்படுத்திக் கொள்வதுண்டு. நிலமும் இயங்கு தன்மையில் இயங்குகிறது. நிலத்தை தத்துவார்த்த நிலையில் பண்படுத்தும்போது ஐந்திணைக்கான அகம் புறம் கருத்துருவாக்கம் வெளிப்படுகிறது. தாய்வழித் தலைமையிலான சமூக வாழ்முறை தந்தை வழித்தலைமை வாழ்முறையாக மாற்றம் பெற்றள்ள வரலாறும் இதனுள் அடங்கியுள்ளது.

இதில் பெண்ணுடல் என்பது அகமாக அதாவது நிலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண் உடல் என்பது வரலாறாக (காலம்/பொழுது உருகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணுடல் நிலமாக, பூமியாக, வளமை, பொறுமை என்ற பண்புகளுடன் நகர்வுத் தன்மையற்ற ஒன்றாய் இருக்க, ஆண் உடல் என்பது மனித மூலமாகக் காத்துக் காலத்தின் ஊடாக வரலாற்றைப் படைக்கும் ஓன்றாகவும் மேலும் உருவக நீட்டிப்புப் பெறுகிறது.
இவை நிலம் (சுற்றுச்சூழல் தகவமைப்பு), சமூகஅமைப்பு (குடும்பம், சமூகம்) இவைகளிலே புறச்சூழலை ஒன்றுக்கொண்று வினை புரிந்து இயங்கச் செய்கிறது. நிலம் - சமூகமென்ற கருத்துருவாக்கத்தினை ஏற்றுக்கொண்டாலும், ஐவகை நிலத்தின் பூகோளத் தன்மையில் நிலம் வாயிலாகவும், பொழுதுகள் வாயிலாகவும், தொழில் பொருளாதாரம் வாயிலாகவும் மாற்றமே அதிகம் நிகழ்ந்துள்ளது. மருதம் நெய்தல் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில்முறை, பொருளாதாரமுறை மலையொட்டிய பகுதிகளில் நிகழவில்லை. ஒன்றுகொன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெண்ணின் உடல் நிலத்தோடு இணைவுறும்போது உடல் தோற்ற அழகியலும் நிலத்துக்கான கருப்பொருள் பின்ணனியும் இணைந்து வெளிப்படுகிறது.

அறல் என அவிர்வரும் கூந்தல் மலர்என
வாள்முகத்து அலமரும் மாஇதழ் மழைக்கண்
முகை நிரைத் தன்ன மாவீழ் வெண்பல்
நகைமாண்டு இலங்கும் நலம்கெழு துவர்வாய்
கோல்அமை விழுத்தொடி விளங்க வீசி
கால்உறு தளிரின் நடுங்கி” (அகம்.குறி.162: 10-15)


என்கிறார் பரணர். குறிஞ்சி நிலத்துக்கான சாயலை வெளிப்படுத்த புலவர் நிலத்தோடு ஒன்றி வாழ்ந்த மக்களை உட்புகுத்தியுள்ளார். நிலம் பெண்ணின் உடல் மொழிக்கான சூழல் என்ற கருத்தாக்கினை நிலத்தோடு கொள்கிறார். இதில்,

உடல்        -        நிலம் (கருப்பொருள்)
கூந்தல்     -        கருமணல் போன்றிருத்தல்
முகம்         -       குவளை மலர் சார்ந்திருத்தல்
இமைகள்      -    சுழலும் அழகிய காடுகள்(இயற்கை)
கண்கள்     -        குளிர்ச்சிபொருந்திக் காணப்படல் (நிலம், இயற்கை)
பற்கள்      -         முல்லை அரும்புகள்
வாய்         -        பவளம் போல் காட்சியளித்தல்.
வளையல்கள் -   காற்றில் அசையும் தளிர்கள் சுற்றுச்சு10ழல்)

இத்தகையச் சிறப்பினை நிலம் பெற்றிருப்பதுபோல் பெண்ணும் தனித்துப் பெற்றுக் காணப்படுவதுண்டு.  ஆகையால் நிலம் - உடல் இரண்டும் பண்பாட்டோடு தொடர்புற்றது. இருவேறாகப் பிரிந்து இனங்காண முடியாத தன்மை வாய்ந்தது.    பாலை நிலத்தில் உடன்போக்கு அழைத்துச்சென்ற தலைவன் நிலத்தின் தன்மையும் சூரியனின்  வெம்மையும் பொருட்படுத்தாமல் கடக்க முயன்றனர்;. இதில் நிலத்தோடு ஒட்டிய சூழல் தன்மையை அறிந்து செவிலித்தாய் தமது மகள் பாலைநிலச்சுரங்களில் சென்றுள்ளாள் என்பதை அறிந்து, நிலத்தினையும், நிலக்கடவுளையும்,  இயற்கையையும் வணங்குகிறாள்.  தமதுமகள் மலையடியில் அமைந்த சிறிய வழிகளில் நடக்கும் கால்களுக்கு மெத்தென விளங்கும் மணல் மிகப்பரவப் பெற்றதாகவும், குளிர்ச்சியைத் தரும் மழையைத் தன்னிடத்தே கொண்டதாகவும் விளங்க வேண்டும் என்று இயற்கையை வணங்குவது, மனிதனுக்கும் இயற்கைக்குமுள்ள தொடர்க்கூற்றினை காணமுடிகிறது. இதனை,

“ஞாயிறு காணாத மாண்நிழற் படீயஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக – நம்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
முடமா அரிவை போகிய சுரனே” (குறுந்.பாலை.378)


என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது. இங்கு மனிதன் இயற்கையின் தேவையை நாடவேண்டியும்ää பூகோளச் சுற்றுச்சூழல்,  தாவரங்கள் முதலியவற்றை சார்ந்தும் இருக்க வேண்டிய நிலைக்கு ஆட்கொள்கிறான். எனவே பாலை நிலத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு மட்டும் இல்லாமல் சமூக ஒருங்கிணைவுகளுக்கும் இயற்கையைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

அ. இயற்கைச்சூழல்
இயற்கையமைப்பு உயிரினங்கள் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டது. இது தெய்வீக சக்தியினாலோ அல்லது சு10ன்யத்திலிருந்தோ உறுப்பெறவில்லை. நிலத்தோற்றம் பெற்ற காலங்களிலிருந்து தகவமைப்பை பெற்றுத் திகழ்கிறது. இயற்கைச்சூழல், சுற்றுச் சு10ழலையும் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், பின்பு சமூக உருவாக்கம் என அனைத்துக் கூறுகளையும் இணைத்து செயல்புரியச் செய்கிறது. குறிஞ்சி நிலத்திற்கான தாவரங்கள் கார்காலத்தின் மழைப்பொழிவினாலும், கூதிர் நிலைப்பாட்டினாலும் தாவரங்கள் பூக்கும் தன்மையைப்  பெருகிறது. இதில் பிச்சிப்பூ, பீர்க்கம்பு, குறிஞ்சிப்பூ காலைப்பொழுதினில் மலரக்கூடியது.“மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்” (குறுந்.குறி.222: 5) (அகம்:42.1) கார்காலத்தின் தொடக்கத்தில் பெய்த மழையால் தாவரங்கள் பூக்கும் தன்மையை எய்தி விட்டன. இதில் காயா,  கொன்றை, நெய்தல், முல்லை, செம்முல்லை, பிடவம் போன்ற மலர்கள் கார்காலத்தில் மலரக்கூடியவையாகும். அதேபோல் குடும்பச் சூழலுக்கான தன்மையைப் பெண் குறித்த பருவத்துடன் எய்திவிட்டாள். அதனால் தனிமையில் இருக்கும் நிலையை மாற்றமுறச் செய்து இனஉற்பத்திக்கான தன்மையை ஏற்படுத்திக் கொடுப்பதே ஆணிற்கான தன்மையாகும்.

“காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளமொடு பிடவு அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே” (ஐங்.412:1-3)


கார்காலத்தின் தொடக்கத்தில் பெய்த மழையால் தளிர்விட்டு மலர்ந்த பூக்கள் பறவைகள் விலங்குகள் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தச் செய்யும். அதுபோல மாலைப்பொழுது வாழ்க்கைக்கான சூழலை முல்லை வெளிக்காட்டுகிறது. இதனை,

“புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள
கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி
மெல் இயல் அரிவை கண்டிகும்
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே” (ஐங்.414)

அதே நேரத்தில் மருத நிலத்தின் இயற்கையமைப்பில் வளமையே பெரிதும் நிகழ்ந்துள்ளது. புலவர்களும் வளமைக்கே முன்னுரிமை கொடுத்துள்ளனர். இதில் ஆற்றங்கரை, வயல்வெளிகள், குளங்கள், நெல்வயல், குளக்கரையில் அமைந்துள்ள மரங்கள் ஆகியவை மருத நிலத்தை அழகுபத்தின.

“மனைநடு வயலை வேழம்” (ஐங்.2-1)
“கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்” (ஐங்.12:1)
“அடைகரை வேழம் வெண்பூப் பகரும்” (ஐங்.13:2)
“கொடிப் பூ வேழம்
வடிக் கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
பனித் துயில் கொள்ளும்” (ஐங்.14)


மருத நிலத்தில் இளவேனிற் காலத்திலும் மரங்கள் தளிர்விடக் கூடும். இங்கு நீரின் செயல்பாடு கார்காலத்தில் இயல்பாகப் பொழியினும், இளவேனிற் காலத்தில் நிலத்தடி நீரின் மூலம் மரங்கள் துளிர்விடச் செய்யும், ஆகையால் இயற்கையின் தன்மை எப்போதும் வளமையாகவே காணப்பட்டதுடன், பொருளை உற்பத்தி செய்வதற்கும் பொருளாதார லாபம் ஈட்டுவதற்கும் வழிவகைகளை மருத நிலம் ஈட்டித்தருகிறது.

நெய்தல் நிலத்தின் இயற்கையின் பின்னணிப்போக்கில் மென்புல வாழ்வே வாழ்வாக மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுச்சூழலை நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் கூறுகளையும், நேரடியாவே அல்லது மறைமுகமாக மேற்கொள்ளும் கருத்துப்புலப்பாட்டினையும் நெய்தல்நிலம் கொண்டுள்ளது. கடற்பரப்பின் புறச்சூழலில் நீர்நிலை உப்பங்கழிகளிலும், கடற்கரையை ஒட்டியும் புன்னை மரங்களும், பனைமரங்ளும், நீர்காகம், நீர்நாய் போன்றவை புறச்சூழலை வெளிப்படுத்துவதும், மீன்கள் அகத்தின் மறைமுகமாகவும் இயற்கையமைப்பை வெளிப்படுத்துகிறது. கடற்கரை சூழலை விரிவுபடுத்துவதை,

“……………. புன்னை
அரும்பு மலி கானல் இவ்ஊர்”  (ஐங்.நெய்.132:1-2)
“எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
புயலை செய்தன பணி படுதுறையே” (ஐங்.நெய்.141)


கடற்கரை மணற் பரப்புகளில் ஞாலல் மரங்களும்,  செருந்தி மலர்களும் நருமணத்தைப் பரப்புமளவிற்கு பூக்களைப பரப்பி அழகுறச்செய்யக் கூடியது. இதனை,

“அடும்பு அவிழ் அணிமலர் சிதைஇய மீன் அருந்தி
தடந்தாள் நாரை இருக்கும்” (குறுந்.349:1-2ääஅகம்.நெய்.40:1-7).

கடற்கரை, பண்பாட்டில் கருப்பொருள்களின் செயற்பாடு மிகுந்திருப்பினும் நிலத்தை ஒட்டிய சுற்றுச்சூழலை வழிநடத்தி செல்வது அங்கு வாழ்வுரிமை பெற்றுத் திகழும் கருப்பொருள்களே ஆகும். இவைகள் காலை மாலை என இருநிலைகளிலும் தங்களது பங்கினை மேற்கொள்கிறது. இங்கு சூழல் வெளிப்பாடானது நிலம் - தாவரங்கள் - பறவைகள் தொடர்பு படுத்தி வெளிப்பட்டுள்ளது.

கழி -      மென்பறை,
நீல் நிறப்பெருங்கடல்  -  நிலச்சூழல்
மீன், குருகு        -  விலங்குகள்                       இவை அனைத்தையும் காலம் ஒருங்கிணைக்கும்.
புன்னை, தாழை    -  தாவரங்கள்
குடம்பை         -  வீடமைப்பு

மாறாக பாலை வறட்சியின வெளிப்பாடு. வேனிற் காலத்தில் நிகழும் வாழ்வும் பிரிந்து செல்லும் மக்கள் பொருளீட்டி மீண்டும் வரும் சூழலையும் வெளிக்காட்டுகிறது. பாலை நிலத்தில் தனித்து வாழ்வியலை மேற்கொள்ள சூழலில்லாததால் பிறரை சார்ந்து அடித்துண்ணும் வாழ்வே பெரிதும் வெளிப்படுகிறது. நிலங்களிலுள்ள குளங்கள்,  தாவரங்கள் மழையின்மையால் வெயிலின் தாக்கம் அதிமுற்று வறண்டு காட்சி தரக்கூடியனவாக உள்ளது.

“பின்பனி அமையம் வரும் என முன்பனிக்
கொழுந்து முந்துநீஇக் குரவு அரும்பினவே” (நற்.பாலை.224)

முன்பனியில் தளிர்விட்ட மரங்கள் அனைத்தும் பின்பனி இளவேனிற் காலத்தில் வறட்சியுறச் செய்தன. இதனால் பாலைக்கான இயற்கைச் சூழல் அழிவுறுவை ஏற்படுத்துகிறது. இதன் தன்மையில் ஐவகை நிலத்துக்கான இயற்கையை உள்ளீடு செய்தால் நிலத்தின் செயல்பாடு ஒரு நிலையிலே இயங்குகிறது. ஆனால் சூழல் அவ்வாறு இயங்கவில்லை. கால மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு சீதோசனநிலைக்கு தகுந்தாற்போன்று பருவங்களை அமைத்துத் தருகிறது. இதில் மனிதன் புறச்சூழலின் தன்மையில் இயற்கையைத் தமது தேவைக்கு ஏற்ப பண்படுத்திக் கொள்வதுடன், செயற்படுத்தவும் செய்வதைக் காணமுடிகிறது.

ஆ. சமூகச்சூழல்
ஆ.அ.தனிமனிதசூழல்

சமூகம் தொடர்பியல் வயப்பாட்டுடைய ஒரு இயங்கு தளம். தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்ககூடியது. சங்க காலத்தில் தனிமனிதனின் இயல்பு வெளிப்பாடு வெறுமனே ஒரே சிந்தனையில்  இயங்கியதில்லை.  உரிப்பொருள் வாழ்வுடன் இணைந்து தனித்து வெளிப்பட்டன. உரிப்பொருள் சிலநேரங்களில் தனித்து இயங்கும். அல்லது முதற்பொருள் கருப்பொருள் இவைகளுடன் இணைந்து வினைபுரியும். முல்லைக்கான தலைவியின் இருத்தல் வெளிப்பாட்டை சூழல் வயத்தோடு ஒப்பிடும்போது ஏக்கம்,  பிரிவு, காத்திருப்பு, எதிர்பார்ப்பு இவைகள் எழக்கூடுகிறது. இவைகள் பெரும்பாலும் பெண்களின் உடலியல்பு செயல்பாடுகளைச் சிதைக்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. அதேபோல் ஆண்களின் தனிமனித சூழலை வெளிக்கண்டால் கற்பு வாழ்வுக்கான தன்மையை ஏற்படுத்துகிறது. இதில் ‘மடல் ஏறுதல்’ ஆணின் தனித்த ஒருங்கமைவாக இருப்பினும் இதன் சூழல் புறத்தன்மையில் சமூகம், குடும்பம் இவைகளை பிரிதிபலிக்கவே ஏற்பட்டதாக வெளிப்படுகிறது. இதனை,

“அமிழ்து பொதி செந்தா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெருகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம இவ்வுரே மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப் பல்லோர்கூறு நானும் சிறிதே” (குறுந்.குறி.14)


இங்கு தனியொரு ஆணின் சூழல் வெளிப்பாடு துணையகம் ஏற்பு என்ற எண்ணத்தில் வெளிப்பட்டு நிற்கிறது. இருந்தபோதிலும் ஊர், ஊர்மக்கள், கற்புவாழ்க்கைக்கான ஏய்ப்பு ஆகியவை பொது நிலையில் வெளிப்பட்டுள்ளதுடன் தனிமனித சூழலை தூண்டிவிடும் செயல்களைக் குடும்பம், சமூகம் செய்கிறது. முல்லை நிலத்தின் தனிமனிதனின்  செயல்பாடு எதிர்பார்ப்பு வெறுமனே உரிப்பொருள் நிலையில் மட்டும் நிகழவில்லை. காலத்தை எதிர்பார்த்து நோக்கும் செயலிலே இருந்துள்ளது. தலைவனை நினைத்தால் கார்காலத்தின் தொடக்கம் தொடங்கி இயற்கையின் இடிமுழக்கமும், மனையின்கண் முல்லைக்கொடிகள் படர்ந்து கார்கால மழைப்பொழிவு வரவை வெளிப்படுத்துவனவாக உள்ளது. (நற்.113:6-9)

இடையனின் மேய்த்தல் தொழிலைத் தனிப்பட்ட சூழலில்) பார்க்கும்போது வாழ்க்கை, தொழில், இடம், கருப்பொருள் ஆகியவை அதனுடன் இணைந்து வினைபுரிகிறது. இடையன் இரவுநேரங்களில் மழைபொழியும் காலத்தில் ஆட்டுப் பட்டியை காவலிடச் செய்வது வழக்கம, அவ்வாறு செல்லும்போது தோலில் பின்னிய உறியும், கையில் தீக்கடைக்கோலும், தோற்பை, முதலியனவற்றை எடுத்துச் செல்வதுண்டு. அதோடு பனையோலைப் பாயைச்சுருட்டி முதுகில் கட்டிக்கொண்டு, கையில் கோலையூன்றி ஒரு கையினால் நாவை மடக்கி ‘வீளை’ ஒலியை எழுப்பிக்கொண்டு ஆட்டுக் கூட்டத்தைநோக்கி காவலிடச் செல்வது இடையனின் தொழில்சார்ந்த தனிச்சூழல் ஆகும் (நற்.முல்.142:1-4). இங்கு தனியொருவனின் சூழல் வெளிப்பாடு புலவர் நிலையிலே நின்று விடாமல் பண்பாட்டை ஒட்டிய இடையர்களின் வாழ்வியல் வெளிப்பாட்டையும் பிரிதிபலிக்கும் நிலையில் வெளிக்காட்டுகிறது.

மருத நிலத்தின் தனியொருவனின் சூழல், தொழிலை மையப்படுத்தியே வெளிப்படுகிறது. மருதநில இளம் பெண்கள் சூழலமைவுகளைத் தனியாக ஏற்படுத்திக் கொண்டாலும் இயற்கை, இடம், கருப்பொருள் இவைகளைச் சார்ந்தே இனங்கிவந்தனர். கருங்கழியினைக் குற்றும் பெண்கள் குடும்பம் நிலையில் இல்லாமல் பண்பாட்டோடு தொடர்புபடுத்தி அடையாளப்படுத்தப்படுகிறது. பெண்கள் வெள்ளியாற் செய்யப்பட்ட பூணை உடைய உலக்கயைக்கொண்டு காஞ்சி மரநிழலில் சுற்றத்தாரின் உறவுநிலையை வெளிப்படுத்திக் கருப்பங்கழியினை இடித்தனர். இங்கு இயற்கை ஒட்டிய சமூக வெளிப்பாடு வெளிப்பட்டாலும். சங்க காலத்தில் உரல், நெல்  தானியங்கள் இடிப்பதற்குப் புழங்குப் பொருளாக இருந்தன. அவை ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியே இருந்ததாகத் தெரியவில்லை. ஊர்பொது மன்றத்தின் காஞ்சி மரத்தின் அடியில் கிடத்தச் செய்துள்ளன (அகம்.286:1-5).

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பெண்கள் தனது கணவனும்,  மகனும் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ள நிலையில் அவர்களின் எதிர்வை எதிர்நோக்கி, தாயானவள் நீர்த்துறையில் அமைந்துள்ள தெய்வத்தை வணங்கி எதிர்பர்த்து காத்திருப்பது குடும்பத்திற்கான எதிர்பார்ப்பாகும். இதனை,

“எந்தையும் செல்லுமார் இரவே அந்தில்
அணங்கிடைப் பணித்துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும்” (அகம்.நெய்.240:7-9)


என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. இப்பாடலின் பார்க்கும்போது நெய்தல் நிலத்தில் கடலுக்குச் சென்ற ஆண்கள் மீன்களைப் பிடித்து மீண்டும் கடற்கரைக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடத்தில் இருந்து வந்துள்ளது. இது தனி மனித நிலையிலிருக்கும் குடும்ப இணைவாகவே வெளிப்படுகிறது. ஆனால் சூழல் தனிமனித நிலையிலே பண்பாட்டை இயங்கச் செய்கிறது. பாலை நிலத்தின் தன்மை இயல்பாகவே அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. இங்கு ஆண்களின் வாழ்வு தொழில்மட்டும் தனித்துப் பேசப்படுகிறது. உணவுப் பகிர்வு நிலையில் ஒன்றுக்கொன்று இயைபு ஏற்படுத்துகிறது. தொழில் சார்ந்த மறவர்களின் வாழ்க்கை, சுரம் வழியாகச் செல்வோரை தமது கையில் கொண்டுள்ள வில் அம்பு கொண்டு எய்தி ஊனினைப் புசிப்பதுவே தொழிலாக உள்ளது (குறுந்.பாலை.283:5-8). மறவர்களின் வாழ்வு இயற்கையோடு இயைந்த வாழ்வாகவே உள்ளது. இயற்கையை ஒதுக்கி நிலைபெற்றதாக இல்லை. ஆகவே,  ஐவகை நிலங்களில் தனிமனித செயற்பாடுகளை இனங்காணும்போது இயற்கையோடு இயைந்த வாழ்வே வெளிப்படுகிறது. அத்தோடு இயற்கையை மனிதன் தன்வயப்படுத்தி தொழில்புரியவும், விளையாட்டுகள், சடங்குள் நிகழ்த்துவதற்கும் பயன்படுத்தியதையும் காணமுடிகிறது.

ஆ.ஆ.குடும்பச்சூழல்
களவு வாழ்வின் விரிவே கற்பு வாழ்க்கை. இது தனியொரு வாழ்க்கையிலிருந்து கூட்டு வாழ்வாக அடுத்தகட்ட வாழ்க்கைக்கு மாறுகிறது. இதனை மணவாழ்க்கை, குடும்பவாழ்க்கை எனக்கூறுகிறது. குறிஞ்சி நிலத்தின் குடும்ப அமைப்பு தனிக்குடும்பமாக உற்பத்தி செய்தல் தன்மையில் அமைந்துள்ளது. ஆனால் முல்லை நிலம் பொருளாதாரச் சூழலை ஒட்டிய விரிந்த குடும்ப முறைக்கு வழிவகையை ஏற்படுத்தி தருகிறது. குடும்பத்திற்கான ஏய்ப்பே பெண் தாய்மைநிலை எய்தியதை வெளிப்படுத்துவதாகும். அதனை

“ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சு10ல் மகளிர் போல நீர் கொண்டு
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி” (குறுந். முல்.287:4-6)


என்ற பாடல் வரியும். பின் ஆண்மகனை பெற்றதால் மட்டுமே பெண் சமூகத்தில் மதிக்கப்பட்டாள்.

புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை” (ஐங்.முல்.401:2-3)
“புதல்வனைத் தழுவிய தாயைத் தந்தை தழுவுதல்” (அகம்.26)

என்ற பாடல் வரிகளும் குடும்பத்தின் வளர்ச்சியையும், பெண் ஆண்மகனைப் பெற்ற தன்மையில் சமூகம் அவளை ஏற்கிறது என்ற குடும்பச் சூழலையும் முல்லை வாழ்வு வெளிக்காட்டுகிறது.

“வாணுத லரிவை மகன்முலை யூட்ட
தானவள் சிறுபுறம் கவையினன்”(ஐங்.404:1-2)
“புதல்வன் கவைஇய தாய்புறம் முயங்கி” (ஐங்.402:1)


இதில் மிகப் பெரும்பான்மையாகப் பார்க்கும்போது ஆண்மகன் பிறப்பினைப் பற்றியக் குறிப்புகள் நிரம்பப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் புதல்வனின் சார்பு தாயின் அறவனைப்பிலும் மகளின் சார்பு தந்தையின் புறத்திலும் இருந்துள்ளது. பெண்குழந்தை தந்தையின் இனத்தை ஒட்டி வெளிப்பட்டுள்ளதை,

“குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற எல்வiளைக் குறுமகள்” (ஐங்.257:1-2)


எனக் குறவன் பெண்மகவு வேண்டி வரம்பெற்று குழந்தை பெற்றதும், பெண்மகவினை தெய்வத்திற்கு இணையாகவும் குறிஞ்சி நிலத்தில் மதிக்கப்படுகிறது. பரதவர்களின் வாழ்க்கையை ஒட்டிய குடும்ப அமைப்பை விவரிக்கும்போது, ஆண் மீன்பிடிக்கச் செல்லும் சூழலும், அதில் எந்தவித இயந்திரத் துணையுமின்றி குறிப்பிட்ட எல்லைக்குள் சென்று மீன்டு வருவதும், மறுமுனையில் அவன் வரவை எதிர்நோக்கி எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பெண்ணினன் வாழ்வானது, எவ்வித பாதுகாப்புகளும் இன்றி இருக்கிறது. அதேபோல் கணவன், தந்தை பிடித்துவரும் மீன்களை எடுத்துச் சென்று விற்பதும், வருவாயைப் பெருக்குவதும் பெண்களே. இந்த இரண்டு நெருக்கடி நிலைக்கு பெண் குடும்பத்தில் உள்ளாக்கப்படுவதுண்டு. இவ்விரு காரணங்களை உட்படுத்திக்கொண்டு பெண் குடும்பத்தை நிகழ்த்த வேண்டிய கட்டாயச் சூழலுக்கு உள்ளாக்கப்படுவது முல்லை, நெய்தல் நிலக்குடும்பங்களின் வெளிப்பாடாகும்.

ஆ.இ.சமூகச்சூழல்
சமூகம் தனித்து இயங்கக்  கூடியதல்ல. பல கூட்டுக்களின் ஒருங்கிணைவாகும். இது ஒரு வாழ்க்கை நெறியையும் பண்பாட்டையும் வளர்ப்பதில் தனிமனித நிலையிலும் கூட்டு நிலையிலும் இணைந்து செயல்படுகிறது. குறிஞ்சியின் சமூக அமைப்புச் சூழலமைவுகளை இனங்காணும்போது சிலப் பண்புகள் வெளிப்படுகின்றன. அகமரபில் தலைவி உடல்மெலிவு ஏற்பட்ட நிலையைத் தன்னுடைய தாய் அறிந்து அவளது மெலிவிற்கு முருகன் காரணம் என்றுகூறி தாய் வெறியாட்டு எடுப்பது பண்பாட்டிற்கான குலக்குழுவாகத் தென்படுகிறது. உடல்மெலிவு, பசலைநோய் ஏற்படல், தனித்திருத்தல் இந்நிலையினால் பெண்ணுக்கு பொதுவான சிலசடங்குகளைக் குடும்பத்தில் ஏற்படுத்தச்செய்வது வழக்கம். அவ்வாறு செய்தால் அத்தகைய சூழலிருந்து மாறுபடக்கூடும் என்ற எண்ணப்போக்கும் பண்டைய மக்களிடத்தில் இருந்து வந்தன. இதில் பெண்ணுக்காக, வெறியாட்டுக் களத்தை முருகன் முன்பு தயார் செய்தல்;. அவ்விடத்தில் மணற்பரப்பினைக் கொட்டி வெறியாட்டிற்கு தயார் செய்தல். அல்லது வீட்டின் முன்பாக தயார் செய்தல்.

சடங்கின்போது அலரிப் பூக்களை மாலையாகத் தொடுத்துக் கூந்தல் களைந்த பெண்ணின் தலையில் சொருகச் செய்தல்.
பாடல்களைப் பாடுதல்.
வேலன் கடம்பமாலையை  அணிந்திருத்தல்
பாடலுக்கு ஏற்ப வாத்தியங்கள் இசைத்தல்.
அத்தோடு ஆட்டுக்குட்டி ஒன்றினைப் பலிகொடுத்து அதன் குருதியுடன் தினையரிசியைக் கலந்து கடவுளுக்குப் படைத்து வேள்வி நடத்துதல்.
பூசாரியின் மீது கடவுள் இரங்கப்பெற்று ஆரவாரத்தை வெளிப்படுத்தச் செய்வதும், பின்பு கழங்கு பார்ப்பதும் மலைக்குறியச் சடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதில் ஆண்,  பெண் என்ற உறவுகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறது. சூழலின் வெளிப்பாடும் ஒரே குழுவுக்குள்ளே இரத்தக் கலப்புடன் வெளிப்பட்டு சமூத்தை வெளிக்காட்டுகிறது. (அகம்.138:2-13).

முல்லை நிலமக்களின் வாழ்க்கையை ஒட்டிய சமூகச்சூழல் கால்நடைகளை மேய்த்தல் முக்கிய வாழ்வாகிறது. கால்நடைகளை மேய்த்து அதிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருள்களை உபரியாக மாற்றி பொருளீட்டும் தன்மை முல்லை நிலத்துக்கான வாழ்வாக எழுகிறது. காடுகளை அழித்து குடியேற்றங்கள் அமைத்த வாழ்வும், வேளாண்மையில் நிலங்களை வெட்டி விளைநிலமாக மாற்றிய உழவும் ஆகிய இருதன்மையும் முல்லையில் தொடக்கம் பெருகிறது. முல்லை நிலத்தில் கோவலர்கள்ää இடையர்கள் மேய்தல் தொழிலை மேற்கொண்டுள்ளதைப்போல் விவசாயத் தொழிலையையும் மேற்கொண்டுள்ளனர். (அகம். முல்.194).

மருதநிலம் புன்செய் நிலமாதலால் உழவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இங்கு வாழும் உழவர்களின் வாழ்வு, ஆரவாரமும் மகிழ்ச்சியும், சண்டைகளும் உட்பூசல்களும் நிறைந்துக் காணப்படக்கூடியது. பருமழையை நம்பி விவசாயம் மேற்கொண்ட உழுகுடிகள் மழைபெய்யும் காலங்களில் ஒன்றிணைந்து விவசாயம் மேற்கொண்டனர். இதனை,

“தொய்யில் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப்
பூசல் அயம் புகன்றுஇழி அருவி
மண்ணுறு மணியின் தோன்றும்” (குறுந்.மரு.367)


என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. ஆயினும் இயற்கைக்கும் மனிதனுக்குமுள்ள உறவு தொழிலில் ஒன்றுபடுகிறது. இருப்பினும் மனிதன் இயற்கையான மழையைத் தன்வயப்படுத்தி தனது தேவைக்குப் பயன்படுத்த்திக் கொண்டுள்ளான். அதே நேரத்தி;ல் இயற்கை மனிதர்களை சமூக வயத்தில் தொழில் செய்வதற்காகக் கார்காலத்தில் மழையைப் பெய்து ஆராவார நிலையில் வயல்வெளிகளில் ஒன்றிணையச் செய்கிறது. இதுசமூக அமைதிக்கான நிகழ்வாகக்கூட வெளிப்படுகிறது. நெய்தல் நிலத்தின் சமூக அமைப்பு கடலையும் அதனை ஒட்டிய சுற்றுச்சூழல் கூறுகளையும் ஒருங்கிணைப்பதுடன் அங்கு மீன்பிடித்தொழில்  முதன்மையாகப் பேசப்படுகிறது. மீன்பிடித்தல் தொழிலில் அடிக்கடி உயிர்நீக்கம் பெறுவதுடன் சமூகமதிப்பில் குறைந்தும் ஒரு குறிப்பிட்ட அடையாளத்துடன் வாழக்கூடிய வாழ்வும் நெய்தல் நிலத்தில் வெளிப்படுகிறது. நெய்தல் நிலமக்களின் வாழ்வியலை வெளிக்காணும்போது வீட்டின் அமைப்பு, வீட்டையொட்டிய இயற்கைச்சூழல், அங்கு கிடைக்கும் பொருட்கள், புழங்குபொருட்கள் இவைகளின் வாயிலாக சமூகத்தின் பிரதிபழிப்பு வெளிப்படுகிறது. பரதவர்கள் குடியிருப்புகளில் வேழக்கோல், வெண்கோடு, தாழைநார், தருப்பைப்புல் இவைகளைக்கொண்டே தங்களது குடியிருப்பினை அமைத்துக்கொண்டும் மீன்பிடிப்பிற்கான ‘பறி’ என்ற கருவியை கடற்கரையை ஒட்டிய பூன்னை மரத்தின் கொம்புகளைக்கொண்டும் உருவாக்கி கொண்டுள்ள தன்மையில் தனது சுற்றுப்புறத்தில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டே தமது வாழ்வுக்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளனர். தொழிலில் தனிமனித வாழ்வு வெளிப்பட்டாலும், சுறாமுள் வழிபாட்டில் சமூக இனக்கத்தை ஏற்படுத்திய இனக்குழு வாழ்க்கையே வாழ்ந்தனர்.

கடலினுள் அச்சம் தரக்கூடிய வலிமைமிக்க வாட்சுறா, சினைச்சுறா மீன்களைப் பரதவர்கள் தமது இல்லங்களில் குலக்கடவுளாக வழிபட்டு வந்தனர். மாதத்தின் முழுநிலா நாளில் பரதவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது கிடையாது. அன்றையநாளில் வீட்டின் நடுவில் மணல்களைக் குவித்து அதில் சினைச்சுறா முள்ளினை நட்டு வழிபட்டு வந்துள்ளனர். இச்சடங்கு ஒரு குறிப்பிட்ட இனக்குழுக்குள்ளே நிகழ்ந்தது. (பெரும்.263 -274) பாலைத் திணைக்கான சமூகச்சூழலில் பெரும்பகுதி அந்தச் சமூக்தில் எழும் அவலக்குறலும், அங்கு நிலவுகின்ற இயற்கையை ஒட்டிய வெயிலின் கொடுமையும், வறட்சியுமே காரணமாக அமைகிறது. காலத்தின் வெளிப்பாடு மக்களின் வாழ்வை பொருளீட்டும் தன்மைக்கு இட்டுச்செல்வதுடன், அப்பொருளீட்டல் தனது ஊரை ஒட்டிய காடுகளிலே நிகழ்கிறது. பாலைக்கான சமூக ஒருங்கில் மக்கள் மத்தியில் சடங்கு சார்ந்த நம்பிக்கையில் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒற்றுமை இருந்து வந்துள்ளது. ஐவகை நிலங்களின் சூழலமைப்பு இடங்களுக்கு ஏற்பவும் தட்ப வெட்பநிலைகளுக்கு ஏற்பவும் தனித்து வெளிப்பட்டு வந்துள்ளன. மனிதன் இயற்கையை தமது முழுபயன்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளதுடன் அதனை ஒட்டியே வாழ்வையும் மேற்கொண்டுள்ள தன்மை வெளிப்படுகிறது. மாறாக சமூக ஒருங்கிணைவு சடங்கு வயத்திலும், தொழில் வயத்திலும். உணவுபரிமாற்றத்திலும் இனக்குழு, குலக்குழு முறையிலே நிகழ்ந்துள்ளது.

துணைநூல்கள்
1.    தனஞ்செயன் - சங்க இலக்கியமும் பண்பாட்டு சூழலியமும். ப.138
2.    ச. பிலவேந்திரன் -  பண்பாட்டில் நிலமும் உடலும்.(கட்டுரை). ப.74
3.    தே.லூர்து -  சூழலியம் பழமொழிகளை முன்வைத்து. ப.37
4.    மேலது. ப.36
5.    மேலது.ப.37
6.    என்.பக்தவச்சல் ரெட்டி -  நாட்டுபுறவியல் கோட்பாடுகள்.ப.395
7.    க.சிவத்தம்பி -  திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள். பக்.36-37

E-Mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.