- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி ,கோயமுத்தூர் -தமிழ் மொழியின் இன்றைய வளர்ச்சி என்பது பல்வேறு ஊடக மாற்றங்களைக் கடந்து வந்த ஒன்று. கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான வளர்ச்சிப் பாதையில் தமிழ்மொழி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் காலத்திற்கேற்ற சிந்தனை மாற்றம் என்பது இன்றியமையாததாக இருந்துள்ளது. இன்றளவும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மொழி அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கு உரைநடை ஒரு அடிப்படை சிந்தனைமாற்றமாக இருந்துவருகின்றது. இலக்கண உலகில் இதன் தோற்றுவாய் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

தொடர் அல்லது வாக்கியத்தின் இலக்கணத்தைக் கட்டமைப்பது தொடரிலக்கணம். சொல்லிலக்கணக் கூறுகளே தொடரிலக்கணத்திற்கு வடிவம் தருகின்றன. எழுவாய், பயனிலை ஆகிய இரண்டும் இணைந்த வடிவமே வாக்கியம் எனும் அமைப்பைத் தருகின்றன. பெயர், வினை இவற்றோடு இணையும் உருபுகளே வாக்கியத்தின் முழுமையானப் பொருளைத் தீர்மானிக்கின்றன. “முன்பும், பின்பும் எதுவும் வருதல் வேண்டாம் என்ற அடிப்படையில் முன்பும் பின்பும் வருகின்ற விட்டிசையும், குறிப்பிட்ட குரலிசைகளையும் உடையன வாக்கியம்”1 என்று வாக்கியத்திற்கான விளக்கம் தருகிறார் டாக்டர் முத்து சண்முகன். ஆரம்ப காலத்தில் கிரேக்க இலக்கணத்தில் தொடரிலக்கணம் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. சொல்லிலக்கணக் கூறுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. டயோனிசியஸ் த்ராக்ஸ் (Dionysius Thrax) என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முதலாவது கிரேக்க மொழி இலக்கணம் எழுதப்பட்டது. இந்நூல் ஸ்டாயிக் மற்றும் அலெக்ஸாண்டிரிய இலக்கண அறிஞர்களைக் கடந்து வினையடை, மூவிடப்பெயர், முன்னுருபு என்னும் இலக்கணக் கூறுகளை விளக்கியது. இந்நூலில் சொற்றொடர், வாக்கியம் பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடரியல் (Syntax) பற்றிய சிந்தனை கிரேக்க இலக்கண மரபில் தோற்றம் பெற்றுள்ளது.

கிரேக்க இலக்கணத்தில் காணப்பட்ட தொடரியல் பற்றிய இலக்கணத்தை இந்திய இலக்கணமரபு கொண்டிருக்கவில்லை. குறிப்பாகத் தமிழ் இலக்கணத்தில் அத்தகைய நிலையைப் பார்க்க முடிகின்றது. ஆனால் தொடர் பற்றிய சிந்தனை தமிழ் இலக்கண அறிவாண்மையாளர்களுக்கு இருந்துள்ளது. தொடரிலக்கணம் பற்றி தனித்துப் பேசப்படவில்லை எனினும் அதற்கானக் கூறுகளைச் சொல்லிலக்கணத்தில் காணமுடிகின்றது. “சொல்லாக்கத்திற்கும் சொற்றொடராக்கத்திற்கும் காரணமாக அமையும் ஓரெழுத்து ஒருமொழி முதலாய மூவகை மொழிகளையும் தொடராக்க அடிப்படையில் பிரித்துணர இலக்கண நோக்கில் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என்றும், பாட்டு உரை நூல் முதலாய எழுவகைச் செய்யுளிடத்தும் அமைந்து பொருள் தரும் நோக்கில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொன்னூல் வழி நின்று தொல்காப்பியம் பாகுபாடு செய்து உணர்த்துகின்றது.”2 சொல்லிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதில் தொடரிலக்கணத்திற்கான கூறுகளைத் தமிழ் மரபிலக்கணங்கள் அமைத்துக் கொண்டுள்ளதை இக்கூற்று தெளிவாக்குகின்றது. ஐரோப்பிய வருகையை ஒட்டியே மொழிக்குள் புதுவித மாற்றம் உருவாக்கம் பெற்றது. தொடரிலக்கணம் பற்றிய சிந்தனைக் கோட்பாடும் ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றமாகும். இவர்களின் வருகைக்குப் பிறகே பண்பாடு சார்ந்தும் மொழி சார்ந்தும் பெருவித மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. “மேலை நாட்டாரின் கிறிஸ்துவ மதப்பரவல், காலனி ஆதிக்க ஆசை, நாத்திக-ஆத்திக சர்ச்சைகள், அச்சுக்கூடங்களின் அறிமுகம் முதலியன பெரும்பான்மை உலகை வடிவமைக்கும் சக்திகளாக மாறின. இது இந்தியாவுக்குள் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் மாறுபட்டாலும் பெரும்பான்மை மொழிகளில் சமச்சசீரான மாற்றங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துவும் செய்தன.”3 நவீன அச்சு ஊடகத்தின் வருகை தமிழ் இலக்கண உலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. எழுத்து, சொல் இலக்கணங்களில் செய்வித்த நவீன மாற்றம் தகவல் பரிமாற்றத்திற்கான தொடரை அமைப்பதில் முக்கியப் பங்காற்றின. மொழியைக் கற்றுக்கொளல் அல்லது கற்றுக் கொடுத்தல் என்பது மதப்பரப்பலுக்கான காரணியாக இருந்தது. தொடரைப் பிழையற அமைத்துக் கொள்வதில் தொடர் பற்றிய இலக்கணம் ஐரோப்பியர்களுக்கு முக்கியத்துவப்பட்டுள்ளது. இதனை ஒட்டி மொழியில் அமைந்த மாற்றம் நவீன உரைநடையைத் தோற்றுவித்தது.

இலக்கிய வழக்கிலும் உலகியல் வழக்கிலும் கையாளப்பட்ட மொழி பேச்சுமொழியில் அமைத்துக்கொள்ளப்பட்டது. இது எழுத்துலகில் ஏற்பட்ட ஒரு நடை நோக்கிய மாற்றமாகும். தகவல் பரிமாற்றத்தில் நவீனத்தை அதாவது இதற்கு முந்தைய நிலையிலிருந்து ஒரு மாறுபாட்டினைப் பிரதிபலித்தது. “நவீன மொழி என்பது சமூக விழுமியங்களை அதன் பயன்பாட்டில் நவீனத்துவத்தை வெளியிடும் தன்மையிலும் அளவிடப்படுகிறது.”4 தொடரிலக்கணம் நவீன மொழியாக உருவெடுத்து நவீன உரைநடை வடிவத் தோற்றத்திற்குக் காரணமாகவும் அமைந்திருந்தது.

தமிழ் மரபிலக்கணங்கள் தொடரிலக்கணத்தைத் தனித்துப் பேசவில்லை. எழுத்து, சொல்லிலக்கணங்களின் சில பகுப்பினூடாகத் தொடரியல் இலக்கணத்தைப் பேசுகின்றன. எழுத்ததிகாரத்தில் புணர்ச்சியைப் பற்றி பேசுமிடங்கள் சொல், தொடர் இலக்கணக்கூறுகளை விளக்குவதாக உள்ளது. “புணர்ச்சியை எழுத்ததிகாரத்தில் விளக்குவதால் அங்கு சொல்லியல், தொடரியல் உண்மைகளும் புதைந்துள்ளன. ஆனால் தொல்காப்பியர் உருபனியல், சொல்லியல் ஆய்வு பற்றி நேரடியாகப் பேசவே இல்லை. நன்னூலாரே (13ஆம் நூற்.) எழுத்தியலுக்கும் (ஒலியியல், ஒலியனியல்) புணரியலுக்கும் இடையே பதவியல் என்ற ஓர் இயல் அமைத்துச் சொல்லியல் கோட்பாடுகளைக் குறிப்பாகச் சொற்களைப் பகுப்பதை விளக்கியுள்ளார்.”5 சொற்பகுப்பினை விளக்கும் பொருட்டு நன்னூலார் பதவியலை வைத்துள்ளார். இதனைப் பின்பற்றி இலக்கண விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், தொன்னூல் விளக்கம் ஆகிய மரபிலக்கணங்கள் பதவியல் பற்றி பேசியுள்ளன. ஆனால் பகுபத உறுப்பிலக்கணத்திற்கு அடிப்படை அமைத்தவர் தொல்காப்பியராவார். நன்னூலார் குறிப்பிடும் பதவியலைக்காட்டிலும் தொல்காப்பியருடைய புணரியல் விதிகளில் சொல்லியல் கோட்பாடுகள் அடங்கியுள்ளன. “தொல்காப்பியர் புணரியல் புணர்ச்சி மாற்றங்களை விளக்குவதற்குச் சொல்லியல் வகைப்பாட்டோடு தொடரியல் வகைப்பாடும் செய்தே விளக்கியுள்ளார். அதாவது பெயர் + பெயர், பெயர் + தொழில் (வினை), தொழில் + பெயர், தொழில் + தொழில் என்று முதலில் (108) சொற்கள் இணையும் முறையைக் குறிப்பிட்டுள்ளார்.”6 மேலும் வேற்றுமைத்தொடர், அல்வழித் தொடர் பற்றி பேசுமிடங்களிலும் தொடரியல் பாகுபாட்டினை விளக்குவதாக தொல்காப்பியர் அமைத்துள்ளார்.

தொல்காப்பியச் சொல்லதிகாரம் ஒருபாதி சொல்லியல் நோக்குடையதாகவும் ஒருபாதி தொடரியல் நோக்குடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், எச்சவியல் எனும் இயல்கள் தொடரியல் நோக்கில் படைக்கப்பட ஏனைய இயல்களான விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் ஆகியவை சொல்லியல் செய்திகளை விவரிப்பனவாக உள்ளன. “தொல்காப்பியச் சொல்லதிகாரம் தொடரியல் நோக்கு மிகுந்தது என்று முதன்முதலில் கூறியவர் தெய்வச் சிலையாரே (15ஆம் நூற்.). ஆனாலும் அந்த நோக்கில் ஆராய்ச்சி அதிகம் வளரவில்லை. 20ஆம் நூற்றாண்டில் மாற்றிலக்கண மொழியியல் வளர்ந்த பிறகே தமிழிலும் தொடரியல் ஓரளவு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.”7

தமிழ் இலக்கண நூலார் வாக்கிய அமைவு பற்றி வெளிப்படையாக எந்த இடத்திலும் பேசவில்லை. பல இயல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை வைத்தே அவர்களுக்குத் தொடரியல் பற்றிய சிந்தனை இருந்துள்ளதை உணர முடிகின்றது. தமிழ்மொழியின் வாக்கிய அமைவினை வேற்றுமைப் பற்றி பேசுமிடங்களில் தெளிவுபடுத்துவதைக் காணலாம். தொல்காப்பியரும் நன்னூலாரும் வேற்றுமை உருபு மறைந்து வருவதை வேற்றுமைத் தொகை என்று குறிப்பிடுகின்றனர். இங்கு வேற்றுமைத் தொகைப் பற்றி பேசுமிடங்கள் தொடர்ப் பொருளை உணர்த்துவதாக சேனாவரையர் தனது உரையில் குறிப்பிடுகின்றார். அவர் உரையெழுதும் போது “வேற்றுமைத் தொகை அவ்வேற்றுமை உருபு தொடர்ப் பொருளுணணர்த்தியாங்கு உணர்த்தும்” என்று கூறிப் பின்னர், “உருபு வெளிப்பட்டு நின்றால் அத்தொடர் என்ன பொருள் உணர்த்துமோ அப்பொருளையே திரிபின்றி உணர்த்துவது வேற்றுமைத் தொகை” என்றும் விளக்கம் தருகிறார்.8

வாக்கியத்தின் அடிப்படை உறுப்பாக எழுவாயும் பயனிலையும் அமைகின்றன. “தமிழ் மொழியிலே எழுவாயாக அமையும் பெயர்ச்சொல்லுக்கும், பயனிலையாக அமையும் வினைச்சொல்லுக்கும் ‘திணை’, ‘பால்’, ‘எண்’, ‘இடம்’ எனும் இலக்கணக் கூறுகளின் அடிப்படையிலே இயைபு காணப்படுவது அம்மொழியின் அடிப்படைப் பண்பாக அமைகின்றது.”9 தொல்காப்பியர் குறிப்பிடும் திணை பால்பாகுபாடு சொற்றொடர் நிலையை விளக்குவதாக உள்ளது. தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் முதல் நான்கு சூத்திரங்களில் திணை பால்பாகுபாட்டினைக் கூறும் அவர், அதன் இலக்கணப் பாகுபாடுகளைக் குறிக்கும் உருபன்களைப் பற்றி ஐந்தாவது சூத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த உருபன்கள் வினையுடன்தான் வருமென்பதை பத்தாவது சூத்திரத்தில் கூறுமிவர் அதனை அடுத்த சூத்திரத்தில் சொற்றொடர் இயல்பினை விளக்குகின்றார் என்று அ.சண்முகதாஸ் (1977) குறிப்பிட்டுள்ளார்.

“வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
பெயரிற் றோன்றும் பாலறி கிளவியு
மயங்கல் கூடா தம்மர பினவே”10

இந்தச் சூத்திரத்திற்கான விளக்கம் அக்காலத் தமிழின் சொற்றொடர் அமைவினை குறிப்பிடுவதாகவே உள்ளது என்பது அ.சண்முகதாஸ் அவர்களின் கருத்து. “பயனிலையாக வரும் வினைச்சொல் எந்தப் பாலைக் குறிக்கின்றதோ, அதே பாலினைக் குறிப்பதாகவே எழுவாயில் வரும் பெயர்ச்சொல்லும் அமையும் என்பது அச்சூத்திரத்தின் கருத்தாகும். விதிமுறையாக ‘மயங்கல் கூடா தம்மர பினவே’ என்று தொல்காப்பியர் கூறினும், அது அவருடைய காலத் தமிழின் சொற்றொடரியல் பின் விவரணமாகவே அமைகின்றது.”11 மேலும் பெயரில் தோன்றும் பால்பாகுபாடும் வினையிற் தோன்றும் பால்பாகுபாடும் எழுவாய், பயனிலை எனும் அமைவில் இயைபுற்று அமைந்து தமிழ் மொழியின் வாக்கியவியல் அடிப்படைப் பண்பாக அமைகின்றது என்கிறார். தமிழ்மொழியில் காணப்படும் வாக்கியங்கள் பெரும்பாலும் எழுவாய், பயனிலை கொண்டு அமைவதையே பார்க்க முடிகின்றது.

தொல்காப்பியர் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு இயல்களில் தொடரியல் நோக்கில் சில சூத்திரங்கள் அமைத்துள்ளதை செ.வை.சண்முகம் எடுத்துக்காட்டுகின்றார். “பெயரியல் விரவுப் பெயர்களின் தொடரியல் பண்புகள் இரண்டு சூத்திரங்களிலும் (657-8) வினையியல் எச்சங்களின் தொடரியல் பண்புகள் நாலு சூத்திரங்களிலும் (712, 715, 716, 719) விவரிக்கப்பட்டுள்ளன. இடையியலில் ‘முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும்’ அதுமன் (முன் அடுத்து வந்தது), கென்னூர் (பின் அடுத்து வந்தது) என்பது தொடரியல் நோக்கு உடையது.”12 இதேபோன்று இயற்சொல் ஆர் விகுதி ஏற்று வினைமுற்றில் பலர்பால் ஏற்று வருதல் (755), எண்ணிடைச் சொற்கள் (778), உரியியலில் உரிச்சொல் வருமிடம் (872) பற்றி குறிப்பிடுகையிலும் தொடரியல் பண்பை உணர்த்துவதாக உள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றார். சொல்லதிகாரத்தில் தொடரியலுக்கான கூறுகள் காணப்பட்டாலும் மொழியியலார் சொல்லியலுக்கும் தொடரியலுக்கும் உள்ள எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டதில்லை என்கின்றனர். சொல்லியல், தொடரியல் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவதில் சில சிக்கல் இருக்கவே தொல்காப்பியர் இரண்டையும் வேறுபடுத்தி விளக்கவில்லை என்பது செ.வை.சண்முகம் அவர்களின் கருத்தாக உள்ளது. “தமிழில் குறிப்புவினை, வினையெச்சம் ஆகியவை சொல்லியல் நோக்கும் தொடரியல் நோக்கும் உடையவையாகவே கருத வேண்டும். வேற்றுமை என்பது சொல்லியல் நோக்கில் எளிமையானது. தொடரியல் நோக்கில் சிக்கலானது. எனவே தான் தொல்காப்பியர் சொல்லியல், தொடரியல் என்று வேறுபடுத்திக்காட்டவில்லை.”13

தமிழ் இலக்கண நூலார் வேற்றுமை, திணை, பால்பாகுபாடு, பெயர்ப்பாகுபாடு, வினைப்பாகுபாடு, இடைச்சொற்கள், உரிச்சொற்கள் பற்றிய இலக்கணப் பாகுபாடுகளைப் பேசுமிடங்களில் தொடரியல் நோக்கில் அமைத்துள்ளதைக் காணமுடிகின்றது. தொடரியல் அமைவை விளக்குவதில் ஒட்டுகளின் பங்கு முக்கியத்துவப்படுகின்றது. பெயர், வினையோடு இணையும் ஒட்டுகளே வாக்கியப் பொருண்மையைத் தீர்மானிப்பனவாக உள்ளன. இவை இடைச்சொற்கள் என்ற நிலையிலே ஒட்டுகளாக நின்று செயல்படுகின்றன. “இடைச்சொல் தனித்து இயங்கும் ஆற்றல் அகராதிப் பொருளை (Lexical Meaning) இழந்து, பெயர் வினைகளோடு சேர்ந்து நின்று இலக்கணப்பொருளை (Grammatical Meaning) மட்டுமே உணர்த்துகிறது. இவ்வகைச் சொற்களை மொழியியலாளர் ஒட்டு (Affix) என்றும் உருபு என்றும் வெவ்வேறு பெயரில் வழங்குகின்றனர்.”14 மொழியியலாளர் மொழியல் காணப்படும் ஒட்டுகளை முன்னொட்டு (Prefix), இடையொட்டு (Infix), பின்னொட்டு (Suffix) என்று வகைப்படுத்திக் கொண்டுள்ளனர். தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் பெயர், வினையின் முன் சேர்க்கப்படும் சொற்கள் அடை என்று குறிப்பிடப்படுகின்றன. இதேபோன்று தனித்து நின்று பொருள் உணர்த்தாது பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து இலக்கணப் பொருளை உணர்த்தக் கூடிய சொற்கள் தமிழ்மொழியில் காணப்படுகின்றன. இவை இடைச்சொற்கள் எனும் பகுப்பில் அடக்கப்படுகின்றன. பால்காட்டும் விகுதிகள், கால இடைநிலைகள், சாரியைகள், வேற்றுமை உருபுகள், எச்ச விகுதிகள், உவம உருபுகள் முதலானவை இதனுள் அடங்கும். இவை ஒட்டுகளாக நின்று தொடரியல் அமைவினை உருவாக்கித் தருகின்றன.

தொல்காப்பியர் காலந்தொட்டு ஐரோப்பியர் வருகைக்கு முன்பாக தமிழில் அமைந்த உரைநடை என்பது இலக்கிய வழக்கு சார்ந்த ஓர் அமைப்பைக் கொண்டிருந்தது. பேச்சு வழக்கிலிருந்து மாறுபட்ட அறிவார்ந்த சிக்கலான நீண்ட இடைவெளியற்ற ஒரு தொடரமைப்பைக் காணமுடியும். ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் மொழியில் நவீனத்தை தோற்றம் பெறச்செய்தன. அச்சுப் பண்பாட்டினால் ஏற்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், சந்திபிரிப்பு, சொற்புணர்ச்சி, தொடரமைப்பு போன்றவை நவீன உரைநடை எனும் புதிய வடிவை உருவாக்கித் தந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் முன்பும் உரைநடை அமைப்பு இருந்துள்ள போதிலும் அது பொதுப் பண்பாட்டிற்குப் பயன்படுத்தப்படவில்லை. பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதவும், கல்வெட்டு ஆவணங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.15 நவீன உரைநடை என்னும் புதிய வாக்கிய அமைப்பு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகே நிகழ்ந்துள்ளது.

தமிழ் மரபிலக்கணம் குறிப்பிடும் சொற்றொடர் இலக்கணத்தில் முற்றுத்தொடர், எச்சத்தொடர், தொகைநிலைத்தொடர், தொகாநிலைத்தொடர் ஆகியன பற்றி பேசினாலும் தொடர் பற்றிய முழுமை  இலக்கணம் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலேயே பேசப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டங்களில் உரைநடையின் செல்வாக்கு மிகுந்து அதிகமான உரைநடை நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. உரைநடையின் செல்வாக்கு இலக்கணத்தில் சில மாற்றங்களை அமைத்துக் கொடுத்தது. மொழியின் வளர்ச்சியை ஒட்டி ஏற்படும் இத்தகைய மாற்றம் மொழியை நவீனப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டினை ஒட்டி மொழியில் ஏற்பட்ட மாற்றம் பல்வேறு துறைகளிலும் படிப்படியாக வளர்ச்சிப் பெற்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது. “மதப்பிரசாரகர்களும், நவீன அறிவியல் தொழில்நுட்பவியலாளர்களும், எழுத்தாளர்களும், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத்துறையினரும் பிரஞ்சை பூர்வமாகவும் இத்தகைய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். இதனைத் தமிழின் நவீனத்துவம் நோக்கிய வளர்ச்சியே எனலாம்.”16 இன்றைய தமிழ்மொழியின் நடையில் எளிமை நோக்கிய மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைவது ஐரோப்பியர் நிகழ்த்திய அச்சுப் பண்பாட்டு புரட்சியே. சந்தி பிரித்து எழுதுவதிலும், வாக்கிய அமைப்பிலும்  எளிமையாக்கத்தைக் கொண்டு வந்து நவீன உரைநடையைத் தோற்றம் பெறச் செய்துள்ளனர். “தற்காலத் தமிழின் முக்கிய பண்புகளுள் ஒன்று சந்தி பிரித்து எழுதுவதாகும். இதனை எளிமையாக்கத்தின் ஒரு அம்சமாக அண்ணாமலை (1980) விளக்குகிறார். சொற்புணர்ச்சியிலும் வாக்கிய அமைப்பிலும் எளிமையாக்கம் வெற்றி பெற்றிருப்பதையும் அவர்(1979) சுட்டிக் காட்டியுள்ளார்.”17

தமிழில் உரைநடை வகை என்ற ஒன்று காணப்படாத சூழலில் கிறித்துவர்களின் வருகை உரைநடை எனும் வகையைத் தோற்றுவித்தது. இவர்கள் உருவாக்கிய ஒரு நடை கிறித்துவத் தமிழ் எனும் ஒருவகை உரைநடையையும் உருவாக்கித் தந்துள்ளது. “உரைநடையைப் பரவலாக்குதல், பிறமொழிக் கலப்பு, பேச்சு வழக்கைக் கையாளுதல், பிற சமய மரபுகளைத் தழுவுதல், கலைச்சொற்களை உருவாக்குதல், மொழிபெயர்ப்புக் கொள்கை, மொழி பற்றிய மனப்பாங்கு, சமூக நோக்கு போன்ற பல காரணிகளும் கிறித்துவத் தமிழை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க அளவில் செயலாற்றியுள்ளன.”18 தமிழில் உரைநடை அமைப்பு இல்லாததற்கு இடைகாலத்தில் தமிழகத்தில் நிலவிய சமூக சூழலே காரணமாக இருந்துள்ளது. “தமிழ்நாட்டில் இடைக்காலங்களில் சனநாயகம் இல்லாததும் சாதி அமைப்பின் விளைவாகக் கல்வி மேல் சாதியினருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்ததையுமே இந்நிலைக்குக் காரணங்கள்.”19 என்றும், “உரைநடை சாதாரண மக்களின் இலக்கிய வாகனம், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தில் அது தழைப்பதில்லை. சனநாயகச் சூழலில் தான் அது வளர முடிகிறது. தமிழ்நாட்டு ஆட்சி முறைகளில் சனநாயக மரபு இல்லாததும், அங்கு நிலவிய சாதி வருண அமைப்பும், அவ்வமைப்பின் கடுமையான அமலும், சமயமும், கல்வியும் ஒரு சிலரின் அனுபவமாக மட்டுமே இருந்ததுமே முக்கிய காரணமாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது”20 என்றும் ச. இராசமாணிக்கம், சரோஜினி பாக்கியமுத்து ஆகியோரின் கருத்தை டேவிட் பிரபாகர் (2002) சுட்டிக் காட்டுவதைக் காணலாம். மேலும் அவர் கிறித்துவப் பணியாளர்களே விவிலிய மொழிபெயர்ப்புகளோடு, இறையியல், மருத்துவம், இலக்கணம் ஆகிய துறைகளில் உரைநடை நூல்களைப் படைத்தனர் என்றும் குறிப்பிடுகின்றார்.  பயன்படுத்தப்பட்டதை என். முருகேச முதலியார் (1976) குறிப்பிடுகிறார்.”21 பிற்கால உரைநடை வகையை உருவாக்குவதன் அடிப்படை வேலையை கிறித்துவப் பணியாளர்கள் செய்துள்ளனர்.

ஆரம்ப காலத்தில் உருவாக்கம் பெற்ற உரைநடை வடிவம் மதப்பரப்பல் நோக்கில் உரையாசிரியர்களின் நடையை ஒத்த ஒரு நடையையும், பேச்சு வழக்கில் அமைந்த ஒரு நடையையும் பெற்றிருந்ததை சு. சக்திவேல் (1989) குறிப்பிட்டுள்ளார்.22 ஐரோப்பியரே முதன் முதலில் உரைநடை நூல்களை உருவாக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலக்கண உலகில் ஏற்பட்ட உரைநடை எனும் சிந்தனை மாற்றம் பல படிநிலைகளைக் கடந்து இன்றைய நவீன நடையை எட்டியுள்ளது. இந்த நவீனத்தின் தோற்றுவாய் ஐரோப்பியரைக் கொண்டே ஆரம்பிக்கின்றது.

குறிப்புகள்
1.    முத்து சண்முகன், இக்கால மொழியியல், ப.204
2.    சண்முகம், செ.வை., சொல்லிலக்கணக் கோட்பாடு, தொகு.1, ப.56
3.    தமிழவன் கட்டுரைகள், இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள், பக்.162-163
4.    இராமமூர்த்தி, எல்., மொழியும் அதிகாரமும், ப.57
5.    சண்முகம், செ.வை., தொல்காப்பியத் தொடரியல், ப.3
6.    மேலது
7.    மேலது, ப.1
8.    சேதுபாண்டியன், கா., இன்றைய தமிழில் இலக்கண மாற்றங்கள் (கட்டுரை), தமிழ் இலக்கணக் கட்டுரைகள், ப.79
9.    சண்முகதாஸ், அ., தமிழ் இலக்கண இயல்புகள், ப.236
10.    கணேசையர் (பதி.), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் சேனாவரையருரையும், நூ.11
11.    சண்முகம், செ.வை., தமிழ் இலக்கண இயல்புகள், 236
12.    சண்முகம், செ.வை., தொல்காப்பியத் தொடரியல், ப.7
13.    மேலது, ப.9
14.    முருகேசன், மு., இக்காலத் தொடரியல் நோக்கில் பின்னுருபுகள், ப.24
15.    நுஃமான், எம்.ஏ., மொழியும் இலக்கியமும், ப.72
16.    நுஃமான், எம்.ஏ., மொழியும் இலக்கியமும், ப.151-152
17.    மேலது, ப.157
18.    டேவிட் பிரபாகர், ப., கிறித்துவத் தமிழ் நடையியல் நோக்கு, ப.3
19.    மேலது, ப.8
20.    மேலது
21.    மேலது, ப.10
22.    மேலது, ப.12

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.