ஆய்வு: இல்லறம் கூறும் அறவியல் கோட்பாடுபழந்தமிழ் நூல்களில் சிறப்பிடம்பெற்ற நூலாக திருகுறள் விளங்குகின்றது. அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூலாக விளங்கும் திருக்குறள் மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம்,  தர்மம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பற்றி நுவலுகின்றது. பழந்தமிழ் நூல்களிலும் நான்கு பெரும் பகுப்புகள் கொண்டள்ளன.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு, பதினென்மேல்கணக்கு
பதினென்கீழ்கணக்கு
ஐம்பெருங்காப்பியங்கள்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்

அவற்றில் பதினென்கீழ்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் முப்பால் என்னும் பெயரோடு இந்நுல் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம், ஆகிய  மூன்றும் பால்களும் கொண்டமையால் முப்பால் எனப் பெயர்பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் இயல் என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது, ஒவ்வொரு அதிகாரமும் பத்துப்பாடல்களைக் தன்னுள் அடக்கியது.

பாவகை
திருக்குறள் அனைத்துமே குறள் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களாலாகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் திருக்குறள் ஆகும். குறள் வெண்பாக்களால் ஆனமையால் குறள் என்றும் திருக்குறள் என்றும் இது பெயர் பெற்றது.

 

பாயிரம்
பாயிரம் என்னும் பகுதியுடன் முதலில் அறத்துப்பாலில்  அறம், பொருள், இன்பம், தொடங்கி இன்பத்துப்பால் முற்றுப்பெறுகிறது.

குறளின் பகுப்பும் அமைப்பும்,“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்று “அகரம்” முதல்  தொடங்கி அறம், பொருள், இன்பம் என்று எல்லா கருத்துகளையும் உள்ளடக்கியிருக்கின்றனர்.

“ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால் அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். முப்பால் உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, திருவள்ளுவள்ளுவம் என்ற பெயர்களும் அதற்குரியவை ஆகும்.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு, அதற்கு துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு. அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன். “மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்” அறத்தால் வருவதே இன்பம் ஆகும். அறவழியில் நின்று பொருள் ஈட்டி அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழவேண்டும்.

அறக்கருத்து
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்

அறக்கருத்துகள் பற்றிய அறிஞர்கள் கருத்து
பழங்காலத்தில் அறிஞர்கள் இலக்கியங்களை அறங்களின் அடிப்படையிலேயே மதிப்பிட்டார்கள். தமிழில் தொல்காப்பியர் அறங்களை வலியுறுத்தினார். கிரேக்கத்தில் பிளேட்டோ மற்றும் ஆங்கிலத்தில் கவிஞரும் விமர்சகருமான மாத்யூ அர்னால்டு, இது பற்றி வலியுறுத்தி இலக்கியத்தில் அறநெறி பற்றி குறிப்பிடுகிறார்கள்.

இலக்கியத்தை வாழ்க்கையின் விமர்சனம் என்று ஆய்வில் பால் எல்மர் மோர், இர்விங் பாப்பிட் மற்றும் இவரை தொடர்ந்து நார்மன் பாஸ்டர், எச்.எச்.கிளார்க், ஜிஆர்.எலியட் போன்றோர் இலக்கியம் வாழ்க்கைக்கான அறம் என்று கூற. அவர்கள் காலத்திற்குப் பின் வந்த நவீனத்துவம் கோட்பாட்டாய்வாளர்கள் பழைய மரபுகள் இதுவ ரை  மறுத்தலித்தனர்.

அறம் பற்றிய வினா?
அறக் கோட்பாடு மதம் சார்ந்தவைய? என்ற வினா என்றவினா எழுகிறது. பொதவாக  மனிதனுக்கு இயல்பான அற உணர்வு இருக்கும் – இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

தமிழ் இலக்கியமும் அறங்களும்
இலக்கிய உலகில் அறநெறிக் கோட்பாடுகள் சமூகவியல் நோக்கோடு ஆராயப்படுகின்றன. குறிஞ்சி, முல்லை, முதலாகிய ஐந்திணை என்று மட்டும் சொல்லி நிறுத்தாமல் அதற்கு ஒரு நீண்ட அடைமொழியை தொல்காப்பியர்,

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்”                                             (தொல்.பொருள் களவு - 89)

என்று குறிப்பிடுகின்றார். இன்பமும் பொருளும் அறனும் என்பது உலகின்கண் நுகரும் காதல் இன்பமும், உலகவாழ்க்கையின் பொருள் என அமையுமாறு அறநிலை ஒழுக்கத்தின்பால் நிகழ்தலைக் குறித்தலாம். இது களவொழுக்கத்தின் சிறப்பு நிலை என்க. அன்பொடு புணர்ந்த ஐந்திணையாகிய ஒழுகலாறுகள் அன்பின் வயத்தால் நிகழ்த்தல் என்பதாகும்.

“அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை” – (குறள் – 76)

அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும். என்பர் அறியாதார் ஆனால் மறத்திற்கும் அதுவே துணையாகும்.

சங்க இலக்கியங்களில் அன்றைய காலத்து அறநெறிக் கருத்துகள் அதிகமாக இருக்கும் நிலையில் குறிப்பாக அக இலக்கியங்களுக்கும் புற இலக்கியங்களுக்கும் அறநெறிகள் அடிப்படை வாழ்க்கை நெறியைக் குறிப்பிட்டுயிருக்கின்றனர். காப்பியத்திலும் அறம் பற்றிய கருத்து உண்டு.

“அரசியல் பிழைத்தோர்க்கும் அறங் கூற்றாகும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” – (சிலப்பதிகாரம்)

இக்கால இலக்கியமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவல் பெண்ணின் பெருமையைப் பேசுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த குடும்பம் எப்படியிருக்க வேண்டும் என்பதை மரபு வழியிலான தமிழ்ச் சமுதாயத்தின் அறவழியில் நின்று விளக்கமாகப் பேசுகின்றது. இவை திருக்குறளில் குறிப்பிடுவது போல அறகொள்கைகளையும் அறநெறிக் கோட்பாட்டின் மூலமாக வெளிப்படுகின்றது.

தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் பெரும்பாலானவை அறம் பேசுபவையாகவே அமைந்துள்ளன. அறம், பொருள், இன்பம், வீடைதல், நூற்பயன் என்று இலக்கணம் பேசுகின்றது. தன்னெஞ்சறிவது பொய்யறக. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்று திருக்குறள் சமயம் சாராத அறத்தைக் கூறுகிறது.

இல்லறம் கூறும் அறவியல்
இல் - அறம் இல்வாழ்வின்கண் நின்று மனதால் தூய்மைப்பட அறம் செய்து ஒழுகி வாழ்தல். அவ்வாறு வாழுமிடத்துத் தம்மைச் சார்ந்தோருக்கும், சாராதோருக்கும் யாவர்க்கும் உதவி செய்து வாழ வேண்டும், இல்வாழ்வை.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” – (குறள் – 45)

திருமண வாழ்க்கை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பாகவும் ஒற்றுமையாகவும் உண்மையாகவும் அமைந்துவிட்டால் அதுவே சிறந்த பயன்னுள்ள பண்புகளையுடைய வாழ்க்கையாக இருக்கும்.

அறம்
அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களுள் பல்லிடங்களில் பயின்றுவந்துள்ளது. அறம் என்ற சொல்லுக்கு  கையறம் கருமம், நீர்மை, நூற்பயனில் நான்கினொன்று, மனம் வாக்கு காயம் நற்சிந்தனை, நற்செயல், நற்சொல் பெரியோரின் இயல்பினொன்று எனது தமிழ்மொழி அகராதியும், தனி மனிதனின் வாழ்வும், பொதுவாழ்வும், சீராக இயங்கத் தனிமனிதன் அரசு போன்றவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கத்தின் அடிப்படையான நெறிமுறைகள் அல்லது கடமைகள் என்று கிரியாவின் தற்காலத் தமிழ் மொழியகராதியும் பொருள் சுட்டிச் செல்கின்றது. இதனூடாக அறமாவது மனத்தெளிவு பெற்ற அல்லது மனத்தூய்மை பெற்ற தனிமனிதனின் ஒழுக்கத்தின் அடிப்படையிலான வாழ்வின் இன்றியமையா நெறிமுறை என்பது புலனாகிறது.

 

வள்ளுவர் காட்டும் இல்லறங்கள்
தனிமனித வாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று இல்லறமாகும். இல்லறத்தின் வழியாகத்தான் இன்பந்துய்க்க முடியும். பொருளின்பமானாலும் சரி, வீடு பேற்றின்பமானாலும் சரி இல்லறமே வாழ்வின் முதல் படி அறத்தான் வருவதே இன்பம்

“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல” – (குறள் -39)

ஒருவன் செய்யும் அறத்தால் கிடைக்கும் இன்பமே மிகுந்த பெருமைக்குரியதாகும். மற்ற எல்லா செயல்களுக்காகவும் கிடைக்கும் புகழ் இன்பமுடையதாக இருந்தாலும் அது சிறந்த புகழாகது.

மனைமாட்சி
குடும்பத்திற்கு தேவையான நல்ல குணங்கள் இல்லாத மனைவியை பெற்ற யாருக்கும் மற்ற வழிகளில் கிடைக்கும் சிறப்பான புகழ் பெருமை யாவும் பயன்யில்லாமல் போய்விடும்.

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் துயினும் இல்”. – (குறள் – 52)

மக்களுக்கு மங்கலகரமான மகிழ்க்கியை அளிப்பது குடும்ப வாழ்க்கை. அதில் தங்களுக்கான வருங்காள சந்த்திகளை உருவாக்கும் மக்கட்பேறு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு” – (குறள் – 60)

அன்பே அறம்
நம் உடலின் புறத்தே காணப்படும் கண், காது, கை, கால் ஆகிய எல்லாம் நமக்கும் செய்யும் உதவிகளைவிட நம் இதயத்தில் நிலைத்துநிற்கும் அன்பின் வெளிப்பாடு நமக்கு அதிகப்பயனை கொடுக்கிறது.

“புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவார்க்கு” – ( குறள் – 79)

அடக்கம் உடைமை
நம்முடைய வாழக்கையில் நாம் கடைப்பிடிக்கும் உயர்வான பணிவு நம் இறப்பிற்கு பின் நிலைத்து நிற்கும். ஆனால் அடங்காத முரன்பாடான வாழ்க்கை மீளமுடியாத இருட்டில் அடைத்துவிடும்.

நல்லொழுக்கம், தீயொழுக்கம்
நம்முடைய நல்ல ஒழுக்கமான வாழ்க்கையை நம்முடைய துன்பமான நேரத்திலும் பலர் வலிய வந்து உதவி செய்வர். அது நன்றியுடையதாக இருக்கும். ஆனால் தீயொழுக்கம் எப்பொழுதும் நமக்கு துன்பங்களையும் அழிவையும் தரும்.

“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்” – ( குறள் – 138)

வாழ்தலின் சாதல்
ஒருவனை அவன் முகத்திற்கு நேராக புகழ்ந்து பேசிஅவர்சென்ற பிறகு மட்டமாக பேசும் இயல்புடையவர் அவ்வாறு பேசி உயர் வாழ்வதைவிட செத்துவிட்டால் மற்றவர்களுக்கு நல்லது செய்த புண்னியமாவது கிடைக்கும்.

“புறம்கூறிப் பொய்த்துஉயர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.” (குறள் -183)

தோன்றின் புகழோடு
எந்தவொரு இடத்திருக்கு செல்வதாக இருந்தாலும் அங்கு நமக்கு பெருமை உண்டாகும் படி நடந்துகொள்வதாக இருந்தால் செல்லவேண்டும். அப்படி முடியவில்லை என்றால் நாம் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது.

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலர்
தோன்றாமை தோன்றாமை நன்று” – (குறள் – 236)

பார்வை நூல்
திருக்குறள் புதிய உரை – பு+ம்புகார் பதிப்பகம்
கலையும் கலைக்கோட்பாடுகளும் – ஜான் சாமுவேல்
தொல்காப்பியம் பொருளதிகாரம் – சாரதா பதிப்பகம்
https://ta.wikipedia.org/s/3izf

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.