கேள்வி: சென்ற தடவை உங்களுக்கு பிடித்தமான ஓவியர் வான்கோ எனக் கூறினீர்கள். இதற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?

பதில்: நிறமும், கருவும் தான்.

கேள்வி: நிறத்தை பற்றி விளக்குவீர்களா?

பதில்: அவரது நிறங்கள் ஆழமானவை. எண்ணற்றவை. நிறங்களை அவர் தேர்வு - தெரிவு செய்வது வித்தியாசமானது. உதாரணமாக வானத்துக்கான அவரது நிறத்தின் தேர்வு படத்துக்கு படம் வேறுபடும். அதுபோலவே மரங்கள், மேகங்கள், பூக்கள், நீர் - இவை அனைத்துமே - தான் கூற வரும் பொருளுக்கேற்ப அவரது கரங்களில் - வித்தியாசப்பட்டு நிற்கும். நிறங்களை அவரே ஆக்கி கொள்வதாகவும் ஒரு கதை உண்டு. பொதுவில் இது ஓவியர்களுக்கு நடக்கும் ஒன்றே. தங்களுக்கு தேவையான நிறங்களை அவர்களே ஆக்கி கொள்வார்கள். அது, உண்மையாக இருக்கலாம் - இவர் ஆக்கியுள்ள நிறங்களை பார்க்கும் போது – கபில வானம், நீல வானம், செம்மஞ்சள் வானம், எத்தனை வானங்கள். அத்தனையும் வித்தியாச வித்தியாசமான அதிர்வுகளை ஏற்படுத்துபவை.

கேள்வி: கவிஞர் ஜெயபாலன் அவர்கள், வான்கோவின், தூரிகையின் அசைவு குறித்து பேசும் பொழுது, தீப்பற்றியெறியும் காட்சியை போல அவரது தூரிகையின் வீச்சு அவ்வப்போது இடம்பெற்றுள்ளது என குறித்தார். அவரது தூரிகை வீச்சைப் பற்றி (Brush strokes) என்ன கூறுவீர்கள்?

பதில்: அவரது Brush strokes பற்றி என்னால் கூறவே முடியாது. என்னால் மாத்திரம் அல்ல. யாராலும்தான் என்றே கூறுவேன். ஏனென்றால் அப்படி அவை இயங்குபவை. தான் எடுக்கும் பொருளுக்கேற்ப, வண்ணங்களை மாத்திரமல்ல தனது தூரிகையையும் வித்தியாச வித்தியாசமாக பாவித்த மகா கலைஞன் அவன். உதாரணமாக ஒரு மூன்றாம் பரிணாமத்தை பெற்றுக் கொள்ள அவர் சமயங்களில் Pallet Knife பாவித்துள்ளதாகவே படுகின்றது. அதாவது, தான் கூறவரும் பாவத்திற்கு, ஓவியத்தின் செய்திக்கு – தூரிகை அவருக்கு போதாமல் போகின்றது.

கேள்வி: அவரது தூரிகை வீச்சை நீங்கள் பின்பற்ற எத்தணித்துள்ளீர்களா?

பதில்: பின்பற்றுவதற்கு முன் அவரது தூரிகை வீச்சு எத்தகையது என்பதனை அறிந்து நான் உள்வாங்க வேண்டி இருக்கின்றது. சில சந்தர்பங்களில் அவர் Pallet Knife ஐ பாவித்திருக்கிறாரோ என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஒரு பூதக்கண்ணாடியின் உதவியுடன் (Magnifiying glass) அவ் ஓவியங்களை நான் நுணுகி ஆராய்ந்த சந்தர்ப்பங்களும் உண்டு. அத்தகைய பரிசீலனைகளில் இருந்து நான் வந்து சேர்ந்த முடிவு, வான்கோ அவர்கள் நிச்சயமாக ஒரு Pallet Knife ஐ அல்லது தன் கைவிரலை பாவித்திருக்க வேண்டும் என்பதே. அண்மித்த ஓவிய நிபுணர்கள் Impasto என்னும் technique ஐ அவர் பாவித்துள்ளார் என்று அபிப்பிராயப்படுகின்றார்கள்.

கேள்வி: Impasto எனப்படுவது யாது?

பதில்: அது நேரடியாக, colour tubes இலிருந்து canvas க்கு நேரடியாகவே நிறங்களை பிதுக்கி பூசப்படும் ஒரு முறைமையாகும். மேற்படி முறைமையின் போது பிதுக்கப்பட்ட தீந்தைPallet Knife ஆல் அல்லது விரல்களால் அல்லது சிறுகுச்சிகளால் அல்லது சிறு குச்சிகள் போன்ற தடித்த டீசரளாகளால் ஓவியத்திற்கேற்ப அல்லது ஓவியம் கோரக்கூடிய நிபந்தனைகளுக்கேற்ப செதுக்கி வடிவமைக்கப்படுகின்றது. இது ஒன்றாவது.

இரண்டாவது, வான்கோ அவர்கள் தனது oil canvass ஐ செய்யும் போது, நிறங்கள் காயாமல் இருக்கும் பொழுதே இன்னுமொரு நிறத்தை புகுத்திவிடும் அணுகுமுறையை கொண்டிருந்தார் என்றே நம்புகிறேன். உதாரணமாக Orchard in Blossom with view of Arles(1859) என்ற ஓவியத்தை எடுத்தோமானால், மரங்களை அவர் தீட்டும் போது ஒரு கபிலம் கலந்த கருப்பு காய்வதற்கு முன்பே, செம்மண் நிறத்தில் குறுக்கீடும் செய்து மரத்தின் சிறு சிறு வாதுகளை வரைய முற்பட்டுள்ளார். இப்படி, அதாவது நிறங்கள் காய்வதற்கு முன்பே இன்னுமொரு நிறத்தை புகுத்துவது என்பது என்னை போன்ற ஓவியர்களால் முடியாத காரியமாகின்றது. இருந்தும் இதனை நான் முயற்சித்து பார்த்துள்ளேன். ஆனால், நிறங்கள் உருக்குலைவது மாத்திரமல்லாமல், ஓவியமே உருக்குலையும் சந்தர்ப்பங்களையும் நான் கண்டுள்ளேன். என்னைப் பொறுத்த வரையில், மலைகளையும் மலைகள் மேல் இருக்கும் மரங்களையும் தீட்டும் போது மலைகளை தீட்டி முடித்து காயவைத்த பின்னரே, மரங்களை வரைவதற்காக தூரிகையை கையிலெடுப்பேன். ஓவிய உலகில் இது ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு நடைமுறையாகும். எனது ஆசான்களை டொனால்ட் ராமநாயக்காவும், ரிச்சர்ட் கெப்ரியலும் இதே அணுகுமுறையைதான் கொண்டிருந்தார்கள் என்பதை நான் அறிவேன்.

கேள்வி: எப்படி நீங்கள் அறிவீர்கள்? அவர்கள் படிப்பித்த போது உங்களுக்கு அவ்வாறு படிப்பித்தார்களா?

பதில்: டொனால்ட் ராமநாயக்காவும், ரிச்சர்ட் கெப்ரியலும் தத்தமது ஓவியங்களை தீட்டும் போது அவர்கள் அருகேயே அமர்ந்து, மணிக்கணக்கில், நான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றேன். டொனால்ட் ராமநாயக்காவின் கற்பித்தல் முறையானது பொதுவில் அவர் வரையும் பொழுது சொல்லிக் கொடுப்பதும், அல்லது நாங்கள் ஓவியம் தீட்டும் போது அவர் அவற்றை திருத்தி சரியான வழிமுறைகளை காட்டுவதாகும். ஆனால் ரிச்சர்ட் கெப்ரியல் சில சமயங்களில் பல்வேறு வகைப்பட்ட ஓவிய நூல்களை அள்ளியெடுத்து வந்து அவற்றில் காணக்கிட்டும் ஓவியங்கள் குறித்த நுணுக்க முறைகளை எமக்கு கற்பித்ததும் உண்டு.

கேள்வி: உங்கள் ஓவியங்களில் அதிகமாக காடுகள் பற்றிய விவரிப்புகளே அதிகம் காணக்கிட்டுகின்றன.

பதில்: காடு எல்லோரையும் போலவே என்னையும் ஆகர்ஷித்தது. காடுகள் சொல்லமுடியாத ஓர் அமைதியை தருகின்றன. அவற்றை காணக்கிட்டும் மௌன மொழி, பலமாக இதயத்துடன் பேசக் கூடியது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக எனது தந்தை, நான் ஒரு பாடசாலை மாணவனாக இருந்த போது என்னை காடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்வார். எனது வீட்டிற்கு முன்பாக இருந்த சிங்கமலை காட்டிற்கு எனது நண்பர்களுடன் செல்வேன். ஒருமுறை எனது தந்தை பொகவந்தலாவ நகரிலிருந்து ஹோட்டன் பிளேன்ட்ஸ் (பத்தனை புல்வெளிக்கு) செல்வதற்காக ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்து தந்தார். உண்மையில் அந்த வழிகாட்டி தந்தைக்கு தெரிந்த குறித்த தோட்டத்து துரையால் அனுப்பி வைக்கப்பட்டவர். அவர் ஒரு கையில் துப்பாக்கியுடனும், ஒரு கையில் லாந்தருடனும் எங்களை வழி நடத்தி சென்றார். அதிகாலையில், எனது நண்பர்களுடன் புறப்பட்ட நான் காடுகளின் வழியாக, ஹோட்டன் பிளைன்ட்சை அடைந்த பொழுது கிட்டத்தட்ட பகல் பதினொரு, பன்னிரெண்டு மணியாகி விட்டது. நானும் எனது நண்பர்களும் உணவு பொட்டலங்களை காவி சென்றிருந்தபடியால் உணவுக்கு பிரச்சினையில்லை. ஆனால் வழி நெடுகிலும் இருந்து சில்லிட்ட குளிர்ந்த ஓடையில் முகம் நனைத்து, அந்நீரைப் பருகி எமது களைப்பினை நீக்கிய போது எழுந்த ஆசுவாசங்கள் சொல்லி மாளாது. அன்று நாம் தரிசித்த காடுகள் எவ்வளவு ரம்மியமானவை என்பதனை கூறுதற்கு இன்று என்னிடம் வார்த்தைகளில்லை. அந்தக் காடுகளே வித்தியாசம் பூண்டிருந்தவையாக ஓர் நினைவு. ரம்மியமானவை, பசுமையானவை, மர்மம் சூழ்ந்தவை – நிசப்தம் பொங்கி வழிபவை.

கேள்வி: வான்கோ, காடுகளை மிஞ்சி மனிதனையே தலையாய பாடுபொருளாக்கினான். இது குறித்து என்ன கூறுவீர்கள்?

பதில்: வான்கோ, ஒரு மகா மனிதன். இயற்கையை அவன் வடித்ததுண்டு. ஆனால் அந்த இயற்கையும் கூட மனிதனின் துயரத்தையே தன் பாடுபொருளாக கொண்டதாய்ப் படைத்தான் - அம்மேதை. அவனது வானம் கூட மனிதனை துயர் கொண்டு பார்க்கும். கேள்விகள் எழுப்பும்.

கேள்வி: வான்கோவின் ஓவியங்களில் உங்களுக்கு பிடித்த ஓவியங்கள் யாவை?

பதில்: முதலாவதாக நான் Starry night ஐ தெரிவு செய்வேன். காரணம் அது வரைந்துள்ள முறைமையும் அங்கே தெரிவு செய்யப்பட்ட நிறங்களுமே ஆகும். குளிர்ந்த இரவு, அமைதி, தனிமை, எல்லையற்ற பரந்த பூமி, நீல கபில வானத்தின் கீழ் - இவற்றை மனிதன் புனிதத்துடன் எதிர்கொள்ளும் முறைமை -இவை அனைத்தும் - அங்கே மிக மௌனமாக ஒளிர முற்படுவதாகும். மௌனத்தின் நிசப்தத்தினை இதைவிட பெரிதாக எந்த ஓர் ஓவியத்திலும் நான் கேட்டதில்லை எனலாம். ஒரு வேளை காடுகள் இந்த நிசப்தத்தை தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்த ஓர் தனி ஓவியம் இவ்வளவையும் தன்னுள் அடக்கி, இவ் ஓவியத்தை வாசிக்கும் வாசகனை அசைக்கின்றதே – அதுவே இவ் ஓவியத்தின் சிறப்பு எனலாம். காட்டை வான்கோ வரையாமல் இருக்கலாம். ஆனால் அக்காடு எழுப்பும் நிசப்தத்தை, புனிதத்தை - இவ் ஓவியத்தில் நான் கேட்டேன். இது மாத்திரமல்ல - இன்னும் என்னென்னவோ…!

கேள்வி: அடுத்ததாய்?

பதில்: அடுத்ததாக Potato eaters ஐக் குறிக்கலாம்.

கேள்வி: ஏன்?

பதில்: இவ் ஓவியம், சாதாரண கஷ்டப்படும் மனிதர்களின் வாழ்க்கை – அவர்களின் அத்தகைய வாழ்வில் நீதிக்கான கோரிக்கையை விடுப்பதாகவே நான் காண்கின்றேன். அவர்களது எளிமையான உணவு, ஒளியற்ற அல்லது மங்கலான அல்லது அரையிருட்டு சாப்பாட்டு அறையின் அங்கே ஒரு குடும்பமாய் அமர்ந்து, இருக்கும் எளிமையான உணவை, ஒரு குடும்பமாய் பகிர்ந்துண்ணும் நாகரிகம் - இவற்றை ஓவியன் படம்பிடிக்கின்றான்.

வேறுவகையில், இதற்கூடு சமூகத்திடம் ஒரு கேள்வியையும் எழுப்புகிறான்: இதுவா உங்கள் நாகரிகம் என்றும். இக்காரணங்களாலேயே வான்கோ ஒரு மகத்தான ஓவியனாக எனக்கு தெரிகின்றான். இதனாலேயே, அதாவது இந்த பலத்தாலேயே அவன் ஒரு ஏழையாக, பாலிய காலத்திலேயே இறந்து போனான் என்றும் சொல்லலாம்.
அதாவது, அவனது காலத்து ஓவியர்கள் அனைவரும் - ஏறத்தாழ அனைவரும் - தமது ஓவியத்துக்கூடாக, பெரும் செல்வத்தை நோக்கி ஓடுகையில், அல்லது ஓவியத்துக்கூடாக, வசதியான வாழ்வுகளை நோக்கி ஓடுகையில், இவன் வயல் வெளிகளிலும், சுரங்கங்களிலும், தொழிலாளர் குடியிருப்புகளிலும், விவசாயிகள் மத்தியிலும் அலைந்து திரிந்து தன் வாழ்வை – அல்லது தன் ஓவியத்தை – தேடியவன். அவனது சகோதரன் தியோ இல்லாவிட்டால் அவன் என்றோ மரித்திருக்ககூடியவன் தான்.

இப்படியான, இவனுக்கு எதிரான பார்வைகள் அன்று மாத்திரமல்ல. இன்றும் தொடர்வதாகவே உள்ளது.

மிக சிறிய உதாரணமாக, 1991 இல் வெளிவந்தPocket Encyclopedia of impressionist என்ற நூலை நான் குறிப்பிடுவேன். 1886ம் ஆண்டு வரையிலான Impressionist வகைப்பாட்டை சேர்ந்த அனைத்து ஓவியர்கள் குறித்த தொகுப்பாக பதிப்பிக்கப்பட்டுள்ளது – கிட்டத்தட்ட 21 ஓவியர்களை உள்ளடக்கிய இந்நூல் (Camille Pissaro, Edouard Manet, Edgar Degas, Claude Monet, Pierre-Auguste Renoir,Alfred Sisili) வான்கோவை தொட்டுப்பார்க்காதது திகைப்பூட்டக்கூடியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்த இருட்டடிப்பு ஏன்? அதுவும் இத்தகைய ஓர் மகா கலைஞனுக்கு? இவ்வளவுக்கும் வான்கோ செய்திருக்க கூடிய ஒரு கெடுதல் என்று ஒன்று இருக்குமானால், அது கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களின் கண்ணீருக்கான கேள்வியை ஆழமாக தொட்டு வினவிய ஒன்றை தவிர வேறு ஒன்றும் இருந்ததாக இல்லை.

கேள்வி: கடந்த காலங்களில், “ஏழைகள் அழுத கண்ணீர் கூரிய வாளென கூறுவோர் பெரியோர்” என்ற கூற்றினை நாம் அறிந்தே உள்ளோம். இருந்தும் வான்கோவின் ஓவியம் எவ்வகையில் இவற்றின் மத்தியில் வித்தியாசமுறுகிறது?

பதில்: உயிர். உயிரால் தான் அது வித்தியாசமுறுகின்றது என்பேன். அதாவது, ஒருவனின் கண்ணீரை, நான் வடிப்பதும் வான்கோ போன்ற மகத்தான கலைஞர்கள் வடிப்பதற்குமிடையே அனேக வித்தியாசங்கள் உண்டு.

கேள்வி: இது தொழில்துறை சம்பந்தமானதா? அதாவது தொழில் நுணுக்கங்கள் சம்பந்தமானதா?

பதில்: இல்லை. இதயம் சம்பந்தமானது. வாழ்க்கை சம்பந்தமானது. அவனைப் போல் தன் வாழ்வையே ஓவியத்திற்காக அர்ப்பணித்தவர்கள் எத்தனை பேர். மிக இலகுவாக தன் திறமைக்கூடு அவன் ஒரு பெருஞ்செல்வந்தனாக ஜீவித்திருக்க முடியும். ஆனால் அவன் தேர்ந்ததோ ஒரு கஷ்டப்பட்ட வாழ்வு. இக்காரணத்தினாலேயோ என்னவோ அவனது ஓவியங்களில் அனேகமானவை உயிரோவியமாய் திகழ்கின்றன. சக மனிதனின், சாதாரண மனிதர்களின் அன்றாட, மொத்த வாழ்வையும் தூக்கி நிறுத்துபவையாக அவை இருக்கின்றன.

கேள்வி: வான்கோவின் ‘Wheatfield with Crows’ எனும் ஓவியம் பற்றி என்ன கூறுவீர்கள்?

பதில்: உலகத்தின், அனைத்து மானுட நேயர்களாலும் அற்புதமாய் கொண்டாடப்படும் ஓவியம் இது. ஜப்பானிய, புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் அக்கிரோ குருசோவா, வான்கோவை பற்றிய தனது ஆவணப்படத்தை, (Dreams) மேற்படி ‘Corn Field and Crows’ – எனும் ஓவியத்துடன் நிறைவு செய்கின்றார். இது தற்செயலானது அல்ல. தர்க்க ரீதியானது. தன் வாழ்வின் தரிசனம் முழுவதையும், இவ் ஓவியத்தில், ஒரு பிடிக்குள் அடக்கி விடுகின்றான் கலைஞன்.
எனது நண்பர்களின் தூண்டுதலால், இதே கருவைக் கொண்ட, கவிஞர் சாருமதியின் கவிதை ஒன்றையும் நான் அண்மையில் வாசிக்க நேர்ந்தது. வான்கோவுக்கு சாருமதியை தெரியாது. அதேப் போல சாருமதிக்கும் வான்கோவை தெரியாது. உலகத்தின் இரு துருவங்களில், இரு வேறுபட்ட காலப்பகுதியில் வசித்த இம்மனிதர்களுக்கு பொதுவானது - கண்ணீர்! சாதாரண உழைக்கும் மக்களின் கண்ணீர்! சாதாரண உழைக்கும் மனிதர்களின் மேல் இவர்கள் கொள்ளும் பரிவும் பாசமும், அவரவர் படைப்புகளில் வித்தியாசமுற்ற மட்டங்களில், வித்தியாசமுற்ற தளங்களில், எழுந்து வினா தொடுப்பதாய் உள்ளன எனலாம்.

கேள்வி: இது போல, உங்களை கவர்ந்த ஏனைய உலக ஓவியர்கள் யார், யார்…?

பதில்: பலர்… கான்ஸ்டபிலில் ( ( John Constable) இருந்து…