1. சமர்ப்பணம்!ஊரின் வாசம்
அப்படியே காற்றில் கரையாமல்
வெட்டிவேரின்வாசம்போல,
மூக்கைத்துளைத்தது.
நல்லூர் தேரிலன்று சுடச்சுட வாங்கின
வறுத்த கச்சான்.அந்தவாசம்தான் அது.
வாங்கியது யார்? பேர்லின் உறவுகள்.
எந்தையும், தாயும்போல
எமக்குக்கிடைத்த உறவுகள்.
ஒன்று கெங்காக்கா,
அடுத்தது சித்தப்பா.
எங்களை நினைச்சு
வாங்கிய கச்சான் பையது.
வாங்கி,ஊரிலிருந்து
கவனமாக முதலில்
பேர்லினிற்குக்கொண்டுவந்து,
பின்பு
கட்டிக்காத்த அன்பைச்சுமப்பது போல,
பீலவில்ட்'வரைக்கும்
சுமந்துவந்து தந்தபோது
ஒரு வார்த்தை சொன்னா
எங்கட கெங்காக்கா.
"இஞ்ச பார் சித்ரா,
உங்கள் இரண்டுபேருக்கும் பிடிக்குமெண்டு
ஊரிலயிருந்து உங்களுக்கொரு
பொக்கிஷம் கொண்டந்திருக்கிறன்.
என்ன எண்டு சொல்லு பார்ப்பம்..?"
'எங்கள்இரண்டுபேருக்கும் பிடிச்சதெண்டா,
ஏதோ வித்தியாசமான பொருளாத்தானிருக்கும்'.
"சரி..நீ யோசிச்சுப்பிடிக்கமாட்ட. ஆனால்,
ண்டீங்களெண்டா
நல்லா சந்தோசப்படுவீங்கள் இருவரும்.
தரட்டே..?
என்றஅந்தக்குறும்புடனும்,
ஆழமான அந்தப்பாசம்கலந்த
புன்சிரிப்புடனும்
கச்சான்பையைப்பகிர்ந்தார்
எங்கட கெங்காக்கா.
சுடச்சுட வாங்கின கச்சான்
இப்ப சுடேல்ல, இளகவும் இல்ல.
ஆனால்,
ருசி மட்டும் திருவிழாக்களையும்,
அந்த வாழ்வையும்,வசந்தங்களையும்,
ஞாபகமூட்டியடியேயிருந்தது.
நாற்பது வருடங்களுக்கு முன்பாகச்
சாப்பிட்ட
அதே ருசி,
அதே மண்வாசனை,
அதேபோல கைக்கு
அடக்கமான பையும்,
குட்டிக்குட்டியாய்க்கச்சான்களும்.
அன்றும்,இன்றுமாய்ப்
படிச்சுமுடித்த பாடப்புத்தகங்களிலும்,
கொப்பிகளிலும் வெட்டி ஒட்டிய கச்சான்பை.
நெருப்பு வெக்கைக்குள்நின்று போராடி
வறுத்து,வலிசுமக்கும் ஆச்சியோ,
அப்புவோ
அந்தப்பையை வாயால் ஊதி,ஊதித்திறந்து
மனமாரப்போட்ட உழைப்பாளிகளின்
கச்சான்கள் எம்மிடம் வந்துசேர்ந்தன.
"எள்ளெண்டாலும் எட்டாப்பிரியென"
எல்லோரையும் நினைச்சு வாங்கின
எங்கட கெங்காக்காவையும்,
சித்தப்பாவையும்
ஆரத்தழுவி
நெஞ்சார்ந்த நன்றி சொன்னோம்.
"கச்சானுக்காக வியர்வை சிந்திப்பாடுபட்டவரையும்,
கஷ்டப்பட்டு பதத்துடன் வறுத்து விற்றவரையும்
நல்லூரான் கைவிட மாட்டான்"
என்று
மனதார வேண்டியபடி
மண்ணின்வாசமும்,ருசியும்
நம்மோடு கலந்தன..
"என்ன பிள்ளை,என்னபிள்ளை,
என்ரமகன்,என்ரமகன்,என்னஇரவி,என்ன இரவி" என்று எல்லோரிடமும்
அளவுக்கதிகமாய் பாசத்தைக்கொட்டிக்கொட்டி வாழ்ந்த
எங்கட கெங்காக்காவை,நினைவுகூர
இதுமட்டுமல்ல,இன்னும் ஏராளமாய்
உண்டு..!
2. ஞாபகங்கள் மழை!
மஞ்சள்வெயில்
மெல்லச்சாய்ந்து,
எங்கடவீட்டுத்
தாழ்வாரத்தில பட்டுத்
தெறித்தது.
இரண்டு நாளாகப்பெய்த மழை
இப்ப நின்றுவிட்டது.
பெய்தமழையைத்
தேக்கிவைச்சிருந்த
தாழ்வாரம் மெல்ல,மெல்லமா
சொட்டுச்சொட்டா மழைத்துளிகளை '
ப்ளக்,ப்ளக்'என அமைதியாய்
மண்ணில விழுத்தி குமிழிகளாக்கின..
ஆசைதீர மழையில் குளித்துவிட்டுக்காகங்கள்
சிறகுகளை அடித்துச்சிலிர்த்துக்கொண்டன..
ஈரத்தை தன் உடலில் ஏந்திய காற்றும்
தன்மோகத்தை
எங்கள்மீது தூவியது.
எம் உடல்களும் மெய்மறந்து சிலிர்த்துக்கொண்டன..
ஆச்சியும் அதையுணர்ந்தபடி,
"இந்த மழைக்குளிருக்கு மரவள்ளிக்கிழங்குத்துவையல்
போட்டுச்சாப்பி டவேணும்போல இருக்குப்பிள்ளை"என்றார்.
ஆச்சி ஆசைப்பட்டா வீட்டில அது உடனே
அரங்கேறும்.அன்றும் அப்படித்தான்.
அப்பா வீட்டுத்தோட்டத்திலேயே
வேரோடு,மண்ணும் தொங்கியபடி
மரவள்ளிக்கிழங்கைப்
பிடுங்கிக்கொண்டுவந்து,
கொடுவா கத்தியால துண்டு,துண்டாப்
பிளந்து,தோல்உரித்து
அம்மாவிடம் கொடுத்தார்.
அம்மாவும்,அடுப்புமூட்டி,
பானையில வைச்சு,பதமா
அவிச்சா.
அவிச்சு இறக்கி
அப்பாவிடம் கொடுக்க
,மர உரலுக்குள்ள போட்டு
அப்பா இடிச்சார்.
இந்த மர உரலுக்குள்ள எதைப்போட்டு
இடிச்சுச்சாப்பிட்டாலும்
அது அமிர்தம்தான்.
அம்மாவின்ர
ஆசைப்படித்தவமிருந்து கிடைச்ச உரலிது.
அதை சண்முக அத்தார்தான் துணுக்காயிலயிருந்து
பஸ்ஸில கொண்டுவந்து
யாழ்ப்பாணத்தில இறங்கிப்பிறகு,
தன்ர தோளில வைச்சுக்காவிக்கொண்டுவந்து
கொடுத்த உரலிது.
அப்பாவின்ர தமக்கையின்ர மருமகன்.
அவருக்கும் அம்மாவின்ர சமையல் எண்டாப்போதும்.
அதுக்காகவே அம்மா ஏதாவது கேட்டாச்சரி,
அடுத்தமுறை வரேக்க கேட்டது வீட்டில இருக்கும்.
சண்முகம் அத்தான் கொண்டுவரும்
பாலப்பழத்தைவிட ருசியான
பழத்தை நான் கண்டதேயில்லை.
அவர் தந்த உரலுக்குள்ள
மாசிக்கருவாட்டுச்சம்பல்
இடிச்சுச் சாப்பிட்டா
கமகமவென்று ஒரு வாசம் வரும்.
ரோஸ்பாணோட,
அந்தச்சம்பலும் சாப்பிட்டா,"ப்பா"
அது வேற லெவல்.
சின்ன வெங்காயம்,உள்ளி,பச்சைமிளகாய்,மிளகு,
கல் உப்பும் போட்டு அப்பா இடிக்க,ஆச்சி உரலுக்குள்ள
கையைவைச்சுத்தொட்டுப் பதம்பார்த்தா.பார்த்துவிட்டு
"இன்னும் இரண்டுகைபோட்டாப்போதும்".என்றா.
இரண்டுதரம் ஓங்கிப்போட்டு அப்பா
தன்கைகளுக்கு ஓய்வு கொடுத்தார்.
ஆச்சி கரண்டியால கிளறி,
துவையல வெளியில எடுத்து
பாத்திரத்தில வைத்து
உருண்டைகளாகப்பிடிச்சா.
பிடிச்ச உருண்டையில ஒன்றை
ஆசையா எனக்குத்தீத்தியும் விட்டா.
மழைக்குளிருக்கு,உள்ளியும்,மிளகும்,
பச்சைமிளகாயும் கடிபட
"இதைவிட என்ன காசும்,பணமும்.."என்று
ஆச்சி நித்தம் சொல்ர
அதே வார்த்தைகளை
அவாவுக்கே சொல்லிச்சிரிச்சன் நான்!
இன்றைக்கு வேலையால வர,
நான் ஆசைப்பட்ட மரவள்ளிக்கிழங்கும்,
கட்டைச்சம்பலும்,பிளேன்ரீயுமாய் அன்பைப்பகிர்ந்த
என்னவளின் விருந்தோம்பலில்
ஞாபகங்கள் மழையானது..