* ஓவியம் - AI
கறுப்பு ஜூலை
மரண வாடையும்
அகதி அவலமும்
லங்கா ரத்னாக்கப்பல்
கறுப்பு ஜூலையை
கண் முன்னே நிறுத்தும் .
காமமும் கொடூரமும்
காடைத்தனமும்
தலை கொண்ட நாட்கள்
மனிதத்தை இன்னும்
கேள்வி கேட்கும் .
வரலாற்றுச் சிதைவுகளுக்குள்ளே
வாழும் மனிதர்கள்
பதியப்படாத புத்தகங்களாய்ப்
புதைந்து
போய் விடக் கூடாது .
ஆவணங்களுடன்
ஆதாரமாய்
மீண்டும் எழுவோம் !
தமிழ் வாழ்க !
தமிழ்க் கலாச்சாரம் என்று
செய்யப்படும் நிகழ்வுகளில்
தமிழ் அருகி வருகிறதைத் தான்
காண முடிகிறது .
அதிசய மானிடனே
யார் , யார் மீதோ கோவம்
கொள்வதாய் நினைத்து
உன் முகத்தை ஏன்
அகோரப்படுத்திக் கொள்கிறாய்?
அதன் பயன் அறியாயோ !
ஆடம்பரங்களை
தேவைகளாக எண்ணும்
நீ
அடிப்பதைத் தேவைகளுக்கு
அல்லல்
படுபவர்களை
மறந்து விடுவது ஏனோ?
காலவெள்ளம்
முதலாம் , இரண்டாம் வகுப்புகளில்
படித்த மாதவனும் ,
தேன்மொழியும் எங்கே
இருக்கிறார்கள்?
தெரியா விட்டாலும்
அவர்கள் என் நினைவுகளில்
நிலைத்து இருக்கத் தான்
செய்கிறார்கள் .
அடுத்து
ஒன்பதாம் வகுப்பு வரையில்
படித்தவர்களில்
சிலர்
இன்றும் தொடர்பில்
உள்ளனர் .
அந்த நாட்கள் விளையாட்டுக்களும்
பகிடிகளும்...
ஆங்காங்கே
நினைவுகளை
நிரப்பும்.
அடுத்துப் பழகிய
தோழர்களின் பசுமையான நினைவுகள்
உயர்தர வகுப்பின்
சிலரைத் தவிர பலருடன்
தொடர்புகள் அற்றுப் போனாலும்
அவர்களில் ஒரு சிலரை நினைவுத் திரைகளில்
நீக்க முடியாதவை .
பல்கலைக்கழக நாட்கள்
அரசியலுடன் சில கணம் நின்று
மறைந்து போனது.
என்றும் ஊரில் இருந்து ஒன்றாய்
திரிந்து உறவாடிக் கொண்டிருக்கும்
சிலர் நினைவுவெளியை
பெரிதும் நிரப்பி நிற்கின்றனர்.
வீழ்ச்சி
ஏதோ ஒரு வகையில்
எல்லோரும் நம்பிக்கையைத் தான்
விதைக்கப் பார்க்கிறார்கள்
ஆனாலும்
அமைதி இழந்த இதயம்
அவநம்பிக்கையைத் தான் சுமக்கிறது .
அப்பா
நயாகரா வீழ்ச்சியால் ( சிதறல்களால்) நனைந்த
பொழுதுகளில்
ஆற்று அருவியில் அப்பாவுடன்
குளித்த நாட்கள்
வந்து கண்ணீராய்
கசிந்து கொண்டது .
போர்
வேகமும் தூரமும் கணித்துக்
கொண்டு வேதாளங்கள் புறப்பட்ட
பின்பு வெந்து போவது
மனித உயிர்கள் தானே .
வெற்று உடல்களை விதைப்பதற்கா
பல வேதாங்களைக் கற்றோம் .
புதைகுழி
இந்த மிருக இனம் மட்டும் தான்
உயிரோடு புதைத்து விட்டு
எலும்பை எண்ணிப் பார்க்கிறது
ஆனால் , உயிரின் மதிப்பு
உலகைக் கடந்தும்
உபதேசம் செய்கிறது .
சாட்டு
எந்த ஒரு நிகழ்வும் தானாக நடந்து
விடுவதில்லை , தேவைகளை ஒட்டித்
தேர்வு செய்தே நடக்கின்றன .
கண்ணீர்
பிச்சைக்காரனின் பொய்யும்
வழக்கறிஞரின் பொய்யும்
உண்மையைக் கட்டி வைக்கத் தான்
பார்க்கிறது
ஆனால் மனிதர்களின் கண்ணீர்
அதை அறிய வைத்து விடுகிறது .
சாதனையாளர்
சாதனையாளர் வர வேண்டுமெனில்
சாதிகளைக் கடந்த சமூகம் உருவாக வேண்டும்
பாதை அமைத்து வாய்ப்புக்கள்
வழங்கப்பட வேண்டும்
ஆய்வுக்கூடங்கள்
இல்லாமலே ஆய்வாளர்கள்
வரவில்லை என்று வாதம்
செய்வதை
எப்படி ஏற்க முடியும் ?
தனிமனித வழிபாடு
யாரோ ஒருவரின் சிறிய
சந்தோசத்திற்காக வாழ்வின் சில
வருடங்களை தொலைத்த பின்பும்
தனது சந்தோசம்
தொலைக்கப் படுவதை உணாராமல்
காலத்தை கடத்தி விட்ட சில
மனிதர்களுக்காக
கண்ணீர் வடிப்பதை விட ஏதும் செய்ய துடிக்கிறேன் .
சுற்றுலா
சுற்றுலா போனோம்
அனுபவப் பாடம் படித்து வர
பாடத்தை விட்டு
படத்தை மட்டும்
எடுத்து வந்தோம்
கைபேசி கனத்திருக்க
உலகம்
பசித்தவர்களின் தலையில் கையை
வைத்து இவர்கள் கொடுக்கும்
ஆசீர்வாதம்
இவர்களுக்கோ இல்லை இந்த
உலகிக்கோ எதைச் சொல்லி விடப்
போகிறது?
மாய வித்தைக்காரர்களால்
மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்
மறுபடியும்.
சக்தி
அன்னை அவள்
ஆக்கச் சக்தியின் உறைவிடம்
உண்மை அன்பின் இணைவிடம்
காதல் நிறைந்த கனிவிடம்
கலைகள் 64 இன் பிறப்பிடம்
காலம் மாறக் காதலுடன் ...
இவை கண்டே மகிழ்வோம்
அவளிடம் .
பறவை
சிறகை நம்பும்
எந்தப் பறவையும்
கிளைகளை நம்பி ஒரு நாளும்
இளைப்பு ஆறுவதில்லை
குழந்தை
ஒவ்வொரு குழந்தையும்
முதன்முதலில் உலகின் பரிசம்
கிடைக்கும் போது
அதை அழுகையால் வெளிப்படுத்துகின்றது .
ரோபோ
இயந்திர உலகில் வாழ்வது
அவஸ்தை என்றவர்கள் இனிவரும்
இயந்திர மனிதர்களோடு எப்படித்
தான் வாழப் போகிறார்களோ ?
அகதி
கிளி கூட்டில் அகப்பட்டுக்
கிடந்தாலும்
அதன் நினைவுகள் பறப்பு
வெளியில் அல்லவா அலைந்து
கொண்டு இருக்கிறது
அதே போலத்தான் அகதியின்
நினைவுகளும்
நித்தம் அந்த உயிர்நிலத்தை
உணர்வுகளோடு சுற்றி வரும் .
மாறி விட்டான்
பேரறிவாளன் ஆக மாறிய
மனிதன்
பேர் அழிவாளன் ஆக மாறிய கதை தான் உலகப்
போர்களும் அணுகுண்டு
அச்சுறுத்தல்களும் .
மலை மனிதர்
இவை நாம் கைப்பட்டுப் பறிக்கப்
பட்ட கொழுந்துகள் , ஆனால் இவை
முதல் தர தேயிலை ஆனதும்
நுகரவோ , ருசிக்கவோ எமக்கு
அருகதை இல்லை
நாங்களும் இந்த இலைகளைப்
போலவே காய்ந்தோம். ஆனால் எம்
வாழ்வில் என்றும் மாற்றம் இல்லை .
நேசம்
நீ நேசித்த மனிதர்கள்
காலம் கடந்து போய் இன்று
நேசிக்க கூடிய நிலையில்
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நேசம் மட்டும்
எங்கோ ஒரு மூலையில்
உறைந்து கிடக்கும்
கண்ணீர் கூட காய்ந்து போன
இந்த நாட்களில் .
கணம்
நாளை வாழலாம் என்று
ஒத்திப் போடுறவர்கள்
இன்றும் வாழ்வதில்லை
இனியும் வாழ்வதில்லை
வாழ்க்கை அந்தந்த கணங்களில்
தொகுப்பே அன்றி எதுவும் இல்லை .
புதியவர்கள்
இவர்கள் புதிய நீதிபதிகள் தான்
தண்டனையைக் கொடுத்து விட்டு
அல்லவா தீர்ப்புப் புத்தகத்தை
தேடுகிறார்கள் எதை எதையோ
எழுதிக் கொள்ள .
சருகுமாலை
ஒரு மனிதன் இழப்பின் பின்
படத்திற்கு மாலை போட்டு வைத்துக்
கொண்டு வாழ்க்கையைப் படிப்பதை
விட அவர் இருக்கும் போதே
வாழ்க்கையை புரிந்து வாழ்ந்தால்
அது உனக்கும் நல்லது அவருக்கும்
நல்லது அல்லவா !
'தீ ' பற்ற வைக்கும் நேரத்துக்குக்
முன்னேயே எதை எதையே
பற்ற வைக்கக் கூடிய
தகுதி பெற்ற பலரும் இங்கே
வாழத்தான் செய்கிறார்கள் .
இந்த முயலின் வேகம் தன் உயிரை
காப்பதற்கானது அதே போல்
இந்த மாணவனின் கல்வி
ஒரு தலைமுறை மாற்றத்துக்கும்
ஆனது .
எனவே அங்கே ஒரு வேகமும்
இங்கே ஒரு விவேகமும்
இருக்கத் தான் செய்யும் .
அகவை அறுபது
வயது என்பது எண்ணிக்கை அல்ல
எல்லாக் கோள்களும் பிறந்த
நேரத்தில் இருந்தது போல் ஓரளவு
அதே இடத்திற்கு வர எடுக்கும் நேரம்
ஒரு சகாப்தம் முடிந்து
மறு சகாப்தம் தொடங்கும் காலம்
இங்கே எல்லாக் கோடுகளிலும்
தாண்டியும்
தாண்டாமலும் பயணித்து
பெற்ற அனுபவங்களும்
நினைவுகளும் நிறைந்து கிடக்கும்
பாலகனாக பந்துடன் ஓடிய காலமும்
பழகிய தோழர்களும்
விடலைப் பருவத்தில் வந்த
வித விதமான நினைவுகளும்
விசித்திரமான சந்திப்புகளும்
காளைப் பருவத்தில் வந்த
கவிதையும் காதலும்
மழழை இன்பத்தை
மகிழ்வுடன் தந்தது
மிதந்த கனவுகளை
நினைவுகளாக்கி நிறுத்தப் பார்த்ததும்
மறவோன் பருவத்தில்
இறையைத் தேடலும்
இசையைத் தேடலும்
இயல்புடன் கலந்தது
திறவோன் பருவம்
திறனுடன் மலரட்டும்
திட்டம் இட்ட திசைகளில்
நடக்கட்டும்
முதுவோன் பருவத்தை
முழுமையுடன் வரவேற்க
காத்திருக்கிறேன் .
துயர நாட்கள்
கொடுமை நடப்பதும்
குரல் கொடுப்பதும்
எதைக் காட்டுகிறது
நாம் இன்றும் ஒரு கொடூர
சமூகத்தில் இருப்பதைத் தான்
காட்டுகிறது
அதுவும் மிக அழுத்தமான
குரல்கள் எழுப்படாத நிலையும்
இதையே
குறிக்கிறது .
மானுட துயர்களின் போது ஒன்று
படாமல் தனித்தனி தீவுகளாக நின்று
என்ன சுகம் கண்டு விடப்
போகிறோமோ
அத்துயர் நம்மைச் சூழும் வரை .
பேத்தியின் வருகை
உனது முகம் பார்க்க
உயிரே துடித்திருக்க
உந்தன் அசைவுகளில்
உள்ளம் மகிழ்ந்திருக்க
இங்கு பலர் பாலினத்தை
பதிந்து உரைக்க
இனிய உன் வரவை
எண்ணி
இதயம்
இசைத்திருக்க
வருவாய் கண்ணே
எம் வாழ்வின் வசந்தமாக !
கருவுற்ற ஆயிரம் சொற்கள்
காற்றில் குப்பைகளாகவே
சேர்கின்றன. கருவுள்ள ஒரு சொல்
மனிதனின் கலக்கத்தை தீர்க்கிறது.
உன்னைக் காணத் துடித்த கண்கள்
கண்ட போது பனித்துளிகளை
அல்லவா பொழிகிறது அந்த நீரில்
கூட உன் விம்பம் கரைவதை
நினைத்துக் கதறுகின்றேன் .
கண்மணிகளை உருட்டி
நீ பார்த்த பார்வைக்கு
அர்த்தம் என்ன்வென்று
நீயும் சொல்லப் போவதில்லை
நானும் தெரிந்து கொள்ள
முடியவில்லை
எனினும்
கடத்தப்பட்டி அந்த உணர்வு
ஒரு பெரும் ஈர்ப்பு சக்தியாக
என்னைத் தொழிற்பட வைக்கிறது
என்பதில்
எந்த மாற்றுக் கருத்தும்
இல்லை
பிழை
மனித நாகரீகம் பேசும் இந்த
மனிதர்கள் தான்
மனிதனை அடிமையாக்கி
விற்பனை செய்தார்கள்
அதிலும் குடும்ப உறுப்பினர்களை
பிரித்து வேறு இடங்களில்
விற்றார்கள்
அது தானோ மனித நாகரீகம் ?
மிருகங்களுக்கும் இந்த கதி
வேண்டாம் ;
மனிதர்களை
மதிக்கப் பழகுவதே நாகரீகம் !
மாயை!
நான் கைபேசியை பிடித்து
பார்த்திருக்க
செயற்கை தொழினுட்பம்
உணவு ஊட்டட்டும்
காலுறை போட்டு விடட்டும்
வயோதிபத்தில் மனிதனுக்கு
மிஞ்சும் நினைவுகள் கூட சிலருக்கு
கிடைக்காமல் நினைவுகளை
இழந்து போகின்றது
நினைவாற்றலை பேணுவதற்கு
நினைவிருக்கும் போதே
நிதம் முயல்வோமாக !
கலை இலக்கியத்திற்காகய்
காலத்தை ஈந்தவர்களும்
மனித வளர்ச்சிற்காய்
மான்புடன் உழைத்தவர்களுமே
காலத்தைக் கடந்து
கண்களில் நிறைவானவர்களாக
நிற்கிறார்கள் .