* ஓவியம் - AI
1. மலரும் பூக்களல்ல காதல்!
பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை
பூத்திடும் குறிஞ்சிப் பூக்களல்ல
நம் உறவு…!
பூத்த நொடிகளிலே உதிர்ந்து
விழும் சகுரா மலர்களல்ல
நம் காதல்…!
காலையில் மட்டும் கண்சிமிட்டும்
வெண் தாமரைப் பூக்களல்ல
நம் அன்பு…!
இரவில் இமைகள் இசைக்கும்
மல்லிகை மலர்களின் மணமல்ல
நம் நேசம்…!
வாசம் நுகர வாடிப்
போகும் அனிச்சம் மலர்களல்ல
நம் சரசம்…!
இடம் பார்த்துப் படர்ந்து
கொள்ளும் மணிச்சிகைப் பூக்களல்ல
நம் புரிதல்…!
அரும்பி அறுவடைகளை அழிக்கும்
பெரிய உந்தூழ் பூக்களல்ல
நம் பாசம்…!
பூக்களைக் காதலுக்கு ஒப்பிடுவதேன்…?
ஒப்பிடும் தரம் அல்லவே ஆழமான
உண்மை நெஞ்சங்களின் கேண்மை!
2. தூது
பூக்களைத் தூதுவிட்டேன் பூவையே...!
புலம்புகின்றன உன் வாசல் போக.
மேகத்தைத் தூதுவிட்டேன் மேனகையே ...!
மெய் சிலிர்க்கின்றது உன் முகம் பார்க்க.
தென்றலைத் தூதுவிட்டேன் தேவதையே...!
தேம்பி அழுகிறது உன்னை ஸ்பரிசிக்க.
அஞ்சுகத்தை அஞ்சி அனுப்பினேன் அணங்கே...!
ஆமோதிக்கவில்லை அங்கு வர.
மயிலைத் தூதுவிட்டேன் மங்கையே...!
மறுப்பு சொல்லியது உன்னைக் காண.
விசாரணை மண்டபத்தில்
இவைகளிடம் கேட்டபோது
பூக்களின் மலர்ச்சி உன் முகம்,
மேகத்தின் தன்மை உன் பாதம்,
தென்றலின் சாயல் உன் ஸ்பரிசம்,
அஞ்சுகத்தின் அலகு உன் இதழ்,
மயிலின் அசைவு உன் நடை,
மண்டியிட்டு சொல்கின்றன.
மயக்கும் மதன மாதுவிடம்
எம்மால் போக முடியாது என்று.
எதை தூதுவிட்டாலும் என் காதல்
ஊமையாகி உதிர்ந்து போய்விடும்
நானே வருகிறேன் உன்னைத் தேடி
தூதுவனாக அல்ல உன்
காதலனாக!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.