முகநூல் எனக்குப் பலரின் ஆளுமையினைத்
தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
புரட்சிகரமான கருத்துள்ளவர்கள் என்று
நான் நம்பிய பலரின் உண்மைச் சொரூபத்தினை
வெளிப்படுத்தியிருக்கின்றது.
சமூகத்தையே மாற்றிவிடப் போவதாகக்
கூக்குரல் இட்டவர்கள்
அவர்கள்தம் உண்மைச் சொரூபத்தை
முகநூல் வெளிப்படுத்தியபோதும்
நாணவில்லை. ஓடி ஒளியவில்லை.
இன்னும் அவ்வாறே கூக்குரல் இட்டுக்
கொண்டுதானிருக்கின்றார்கள்.
பலர் அற்ப ஆசைகளுக்குள்,
போலிப் பெருமைக்குள்,
மூழ்கிக் கிடப்பதையும் முகநூல்
முற்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
கோழைகள் அடையாளங்களை மறைத்து
வீரராக ஆட்டம் போடுகின்றார்கள்.
முகத்தைக் காட்டுவதற்கு அஞ்சும் கோழைகளை
முகநூல் வெளிப்படுத்தியிருக்கின்றது.
நண்பர் என்ற போர்வையில் உலா வந்த பலரை
நட்பின் ஆழத்தைப் புரிய வைத்திருக்கின்றது
முகநூல்.
உள்ளே விடத்தையும்
வெளியில் இனிக்கும் புன்னகையையும்
காட்டும் நல்ல பாம்புகளையும்
முகநூல் சுட்டிக் காட்டியிருக்கின்றது.