1. நடந்துவிடாதா அந்நற்கூத்து.

உங்களிடம் இருக்கும்
அறியாமையைக் கொஞ்சம் தாருங்கள்.
அத்துடன்
அந்தக் கல்லாமையின் புன்முறுவல்.
உள்ளிருக்கும்
யாவையும்
துடைத்தெறிந்து
காம்பு சப்பும்
மடியிலிருந்து
தொடங்கலாமா.

மண்ணோடு கலந்துவிட்ட
தொப்புள் கொடி
உறவற்ற
துயரம் சொல்லிலடங்காது.

அலுப்பு கூட்டும்
அன்றாடத்தின்
மதிப்புகள் கூடிய
வாழ்வைவிட்டு
அக்காக்கள் தேடும்
தம்பியாக
ஆடு மாடுகளுக்குள்
ஒலிந்து ஓட
என்ன செய்ய வேண்டும்
இப்பொழுது
நான்.

2. தூண்டலின் பிரகாசம்.

பார்த்ததன் பூரிப்பில்
ஊற்றெடுக்கும்
உற்சாகத்தை
மொண்டு வைக்கத்தான்
முடியவில்லை

எப்பிரயத்தனத்திலும்.
பதியமிட
ஒரு வார்த்தைபோதும்
பூக்காடாக.

எப்பொழுது
மௌனம் கலைப்பாய்
எனக்குள் மணம்
வீச.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.