- இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சொல்கிறார்: ‘We are fighting with human animals’. இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் சொல்கிறார்: ‘Israel is fighting with the enemies of civilization this war is between forces of civilization and the forces of barbarism’ இக்கவிதை அதற்கு ஓர் எதிர்வினை. -

நீ சொல்கிறாய்
நாங்கள் விலங்குகளுடன் போரிடுகிறேம் என்று.
அவர்களை அப்படித்தான் நடத்தவேண்டும்
என்று சொல்கிறாய்.
நீ அப்படித்தான் சொல்வாய்.
உன் மூளை மரத்துவிட்டது.
உன் இதயம் காய்ந்துவிட்டது.

விலங்குகளை அவமதியாதே.
விலங்குகள் மனிதரின் தோழர்கள்.
விலங்குகள் இல்லாத உலகில்
நீயும் நானும் வாழமுடியாது.
விலங்குகளை அவமதியாதே.

விலங்குகள் ஆக்கிரமிப்பதில்லை.
விலங்குகள் குண்டுவீசி மனிதரைக் கொல்வதில்லை.
விலங்குகள் ஒரு தேசத்தை அபகரிப்பதில்லை.
விலங்குகள் மனிதரைத்
தங்கள் வீடுகளை விட்டுத் துரத்துவதில்லை.
கிராமங்களை நிர்மூலமாக்குவதில்லை.
விலங்குகள் மனிதரை அகதிகளாக்குவதில்லை.
விலங்குகளை அவமதியாதே.

நீ யார் என்று யோசித்துப்பார்.
நீ எங்கிருந்து வந்தாய்
எப்படி இங்குவந்தாய்
என்பதை எண்ணிப்பார்.
எப்படி எங்கள் மண்ணில் காலூன்றினாய்,
எப்படி எங்களைத் துரத்தினாய்,
எப்படி எங்கள் கிராமங்களை அழித்தாய்,
எப்படி எங்களைக் கொன்றுகுவித்தாய்,
எப்படி எங்களை அகதிகளாக்கினாய்
எப்படி எங்களைச் சிறையில் அடைத்தாய்
என்பதை எண்ணிப்பார்.

உன்மனச்சாட்சி மடிந்துவிட்டது.
உன் இதயம் காய்ந்துவிட்டது.
உன் மூளை மரத்துவிட்டது.
நீ எங்களைப் பயங்கரவாதி என்கிறாய்.
மனித விலங்குகள் என்கிறாய்.
விலங்குகளை அவமதியாதே.

எங்கள் அமைதியைக் குலைத்தவன்
நீ இல்லையா?
எங்கள் தேன்கூட்டைக் கலைத்தவன்
நீ இல்லையா?
எங்கள் ஒலிவ மரங்களை அழித்தவன்
நீ இல்லையா?
எங்களைத் துப்பாக்கி தூக்கவைத்தவன்
நீ இல்லையா?
எங்கள் குழந்தைகளைக் கல்பொறுக்கவைத்தவன்
நீ இல்லையா?
இப்போது நீ எங்களைப் பயங்கரவாதி என்கிறாய்.
மனித விலங்குகள் என்கிறாய்.
விலங்குகளை அவமதியாதே.

நீ சொல்கிறாய்
நாங்கள் நாகரீகத்தின் எதிரிகளுடன்
போரிடுகிறோம் என்று.
இது நாகரிக சக்திகளுக்கும்
காட்டுமிராண்டிகளுக்கும்
இடையிலான போர் என்று சொல்கிறாய்.
இந்த நூற்றாண்டின் பெரிய நகைச்சுவை
இல்லையா இது?
நான் சொல்லவேண்டியதை நீ சொல்கிறாயா?
சாத்தான் வேதம் ஓதுகிறதா?
ஹிட்லருக்குப் பிறகு
அவன்பாதையில் செல்லும்
மனித நாகரீகத்தின் மோசமான எதிரி
நீ இல்லையா?

உலகின் பெரிய பயங்கரவாதிகள்
உன்னை ஆதரிக்கிறார்கள்,
ஆனால் உன் கண்களைத் திறந்துபார்.
நீதி உணர்ச்சி கொண்ட மக்கள்
உலகெங்கும் உனக்கெதிராகக்
கிளர்ந்தெழுகிறார்கள்.
நீதி உணர்ச்சி மிக்க உன் சொந்த மக்களே
உனக்கெதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள்.
உங்கள் முடிவு நெருங்கிவிட்டது.

அநியாயக் காரர்கள் நிலைத்திருப்பதில்லை.
வரலாறு அவர்களைக் காறி உமிழ்கிறது.
அந்த வரிசையில் நீ வந்துநிற்கிறாய்.
உன் முடிவு நெருங்கிவிட்டது.

உன் மனச்சாட்சி மடிந்துவிட்டது.
உன் இதயம் காய்ந்துவிட்டது.
உன் மூளை மரத்துவிட்டது.
உன் சித்தம் கலங்கிவிட்டது.

நீ எங்களை விலங்குகள் என்கிறாய்.
காட்டுமிராண்டிகள் என்கிறாய்.
நாகரீகத்தின் எதிரி என்கிறாய்.
எங்களை முற்றாக அழித்துவிட
ஆசைப்படுகிறாய்.
எங்களை அழித்துவிட்டு
நிம்மதியாய்த் தூங்கலாம்
எனக் கனவுகாண்கிறாய்.

அது நடக்காது.
உலகில் ஒரு துளி நீதி இருக்கும்வரை
அது நடக்காது.
பிறரின் அமைதியைக் குலைத்தவனுக்கு
ஏது அமைதி?
பிறரின் சுதந்திரத்தைப் பறித்தவனுக்கு
ஏது சுதந்திரம்?

இன்னும் இன்னும்
ஆயிரம் ஆயிரம்
குண்டுகளை வீசி நீ எங்களை அழிக்கலாம்.
அந்த இடிபாடுகளில் இருந்து
அந்தச் சாம்பலில் இருந்து
மீண்டும் மீண்டும்
நாங்கள் உயிர்த்தெழுவோம்.
உன் கனவுகளைக் கலைப்போம்.

உன் ஆயுதங்களைக் கடலில் வீசிவிட்டு
ஒரு ஒலிவம் கிளையைக் கையில் எடுத்துக்கொண்டு
என்னை நோக்கிவா.
எழுபத்தைந்து வருடகால
உன் பாவங்களை நான் மன்னித்துவிடுகிறேன்.
உன்னை அரவணைத்துக்கொள்கிறேன்.
என் மண்ணில் வாழ உனக்கும் இடம் தருகிறேன்.
நாம் நம் வீடுகளில் நிம்மதியாகத் தூங்கி எழலாம்
அதற்கு நீ தயாரா?

உன் இதயத்தில் ஈரம் கசியட்டும்.
உன் உணர்வு துளிர்க்கட்டும்.
உன் சித்தம் தெளியட்டும்.
அதற்கு நீ தயாரா?

உன் ஆயுதங்களைக் கடலில் வீசிவிட்டு
ஒரு ஒலிவம் கிளையுடன் வர நீ தயாரா?

அதுவரை கலைக்கப்பட்ட தேனீக்கள்
உன்னைத் துரத்திக்கொண்டே இருக்கும்.
உன் காதில் இரைந்துகொண்டே இருக்கும்.
எங்களை முற்றாக அழித்துவிடலாம்
என்று மட்டும் கனவுகாணாதே?
அது நடக்காது.
உலகில் ஒரு துளி நீதி இருக்கும்வரை
அது நடக்காது.

* பதிவுகளுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி-

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.