இன்னுயிரைப் பலர்  ஈந்தார்
ஈன்ற மண்ணை மீட்பதற்கு
பல் கொடுமை அனுபவித்தார்.
பாரதத்தாய் துயர் களைய
காந்தியெனும் மகான் வந்தார்
கை பிடித்தார் அனைவரையும்
சாந்தி சாந்தி என்று
சத்தியத்தை தூக்கி நின்றார்.

கொள்ளை கொண்ட வெள்ளையர்
குமுறி  கனல் கொப்பளித்தார்.
வெள்ளமாய் குருதி மண்ணில்
பெருகுவிட வழி சமைத்தார்.
ஈரமின்றி உயிர் பறித்தார்.
இரக்கமதை மறந்து நின்றார்.
பாரத்தாய் துயர் அறியா
பாதகராய் மாறி நின்றார்.

படைபலத்தைக் கொண்டு நின்றார்.
பணபலத்தைப் பெருக்கி நின்றார்.
பாதகர்கள் பல பேரை
பக்கபலம் ஆக்கி நின்றார்.
பாரதத்தாய் படு துயரை
பரிகாசம் செய்து நின்றார்.
கயவர் பலர் கைகோர்த்து
கண்ணியத்தை மறந்து நின்றார்.

அடிமை கொண்ட வெள்ளையர்
ஆணவத்தில் அமிழ்ந்து நின்றார்.
அசுரராய் உரு மாறி
அழித் தொழித்து மகிழ்ந்தார்.
அவர் முன்னே வந்தார்.
அகிம்சையை கை எடுத்தார்.
ஆள வந்த வெள்ளையரை
ஆட அவர் செய்திட்டார்.

ஆண்டவனின் அருள் பெற்ற
அவரே நம்மண்ணல் காந்தி.
ஊதி விட்டால் பறந்திடுவார்.
உலர்ந்த உடல் கொண்டவரவர் .
ஆன்மீக பலம் மிக்கார்.
அகிம்சையினைத் துணை கொண்டார்.
பலங் கொண்ட வெள்ளையை
பாரதம் விட்டோடச் செய்தார் .

ஏறி நின்ற வெள்ளையரை
ஏற்றி விட்டார் கப்பலிலே
மாறி அவர் மனமாற
வைத்திட்டார் காந்தி மகான்.
ஆகஸ்டு பதின் ஐந்தில்
அனைவருமே வியப் படைந்தார்.
அகிம்சையால் பாரதத் தாய்
அடைந் திட்டாள் சுதந்திரத்தை.

பாடினார் ஆடினார் பரவசமாயினார்.
கூடினார் கொடி ஏற்றினார்.
கொண்டாடி மகிழ் வெய்தினார்.
அடிமை இருள் அகன்றது.
ஆதவன் ஒளி பரப்பினான்.
காந்தி எனும் சக்தியால்
கண்டு விட்டார் சுதந்திரத்தை.

பெற்று விட்ட சுதந்திரத்தை
பேணி விடல் முக்கியமே.
காந்தி கண்ட சமுதாயம்
குலைந்து விட செய்யாதீர்.
கிடைத் திட்ட சுதந்திரத்தை
மதித்துமே போற்ற வேண்டும்.
ஆணவத்தில் ஏறி நின்று
அதை மதிக்க மறக்காதீர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.