- தமயந்தி (தமயந்தி சைமன்) கவிஞர், எழுத்தாளர், புகைப்படக்கலைஞர், காணொளிக் கலைஞர், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமை மிக்கவர். ஏப்ரில் 8 அவரது பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சொல்லும், செயலும் ஒன்றாக இயங்கும் சமூக,அரசியல் செயற்பாட்டாளர்களில் எழுத்தாளர் தமயந்தியும் ஒருவர். முகநூலில் அவர் பதிவு செய்திருந்த இக்கவிதைகள் அவர்தம் ஆளுமையினை வெளிப்படுத்தும். கடலுடனான அவர்தம் பிணைப்பை வெளிப்படுத்தும்.  தமயந்தி கடலின் மைந்தன். நவீனத்தமிழ் இலக்கிய உலகில் கடலைப்பற்றிய இவரது கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முக்கியமானவை. - பதிவுகள்.காம் -


1. சாட்சிகள் செத்த இரவு

எதுவுமே தெரியாததுபோல்
காலையில்
எழுந்துவரும் சூரியனிடம்
எதைத்தான் எடுத்துரைக்கும்
முகமுடைந்த பனந்தீவுகள்?
இரவோடு இரவாக
எல்லாவற்றையும் அள்ளிச்சென்ற
புயலின் வழித்தடம் பற்றி
எஞ்சியிருக்கும் கோரைப்புற்களிடம்  
சாட்சியம் சொல்ல ஏது வார்த்தைகள்?
நிலமெங்கும்  
கடற்கரை மணலைப்போல
சிந்திக்கிடக்கும் நட்சத்திரங்களை
கடகத்தில்
அள்ளிச் செல்கிறது கடல்.
புயல் பிரித்தெறிந்த
ஏதாவதோர் குடிசையின் கீழ்
நிலவு
உடைந்து கிடக்கக்கூடுமென
எல்லா திசைகளிலும்
தேடி அலைகிறது கடல்.
காரான் சுழி உறிஞ்சி
கரையில் போடப்பட்ட மீன்களுக்கு
பால் கொடுத்துக்கொண்டிருந்த
நிலவைக் கண்டு
விம்மி அழுதது கடல்
நிலவும் கடலும்  
ஒன்றையொன்று தழுவிக்கொண்டபோது
பாதிப்பகலை முடித்துக்கொண்டு
மீண்டும்
பனந்தீவுகளுக்குப் பின்னால்
மறைந்துகொண்டது சூரியன்.
நாளையிரவோ
அல்லது
இன்னொரு நாளின் இருளிலோ  
மீண்டும் புயல் வரக்கூடும்.
அப்போதும் சூரியனுக்கு
எதுவுமே தெரியாதுபோம்.

2. விதானையாருக்கு ஒரு குறிப்பு

நீ சற்று அதிகமாகவே
கடலைக் கொண்டாடுகிறாய்.
அல்லது
அதி மேலாகவே
வார்த்தைகளால்
உன்னதப் படுத்துகிறாய் அதை.
ஆழிப்பேரலை அள்ளியிறைத்த
அத்தனை அவலங்களையும்
அலங்கார வார்த்தைகளுக்குள் மறைத்து
பூச்சூடுகிறாய் அதற்கு.  
சரிதான் விதானையாரே!
தங்கள் கொதிப்பில் நியாயம் இருக்கலாம்
அது
தங்களின் பொருட்டும்
தங்கள்
பட்டினங்களின் பொருட்டுமானது.
கடலுக்கும் தங்களுக்குமான வழக்கில்
தீர்ப்பாயம் சொல்லும் பாத்தியதை
எவ்வகையிலும் எனக்கல்லவே.
கடல் நாளை என்னையும்
தூக்கிச் செல்லலாம், கொல்லலாம்
மீன் தின்றதுபோக மீதத்தை
ஏதாவதோர்
கரையில் தூக்கிப் போடலாம்
ஆனால் அது
கடல்கொண்ட குற்றமல்ல.
மறுபடி மறுபடி சொல்கிறேன்,
கடலிடம் பேசிப்பாருங்கள்
ஏதாவது
பதில் கிடைக்கக்கூடும்.
அதற்கு முதலில் தாங்கள்
கடலில் இறங்கியாக வேண்டும்.
விளப்பம் தருகில்...,
"கடலை அறிதல்" எனலாம்.
தங்கள் கண்களிலிருந்து விலக்காகும்
இன்னொன்றையும் சொல்கிறேன்;  
கடல்
அள்ளுகொள்ளையாக தூக்கிச்சென்றது
கடலோர மனிதர்களைத்தான்.
ஆயினும் இவர்கள்
கரைகளை விட்டு அகலுவதுமில்லை
கடலைவிட்டு விலகுவதுமில்லை
அதையொருபோதும் வருந்தியதுமில்லை.
காக்கை குருவிகளும்   
கால்களிசான் கட்டிய
கரையோரச் சிறுசுகளும்
கடலோடுதான் விளையாடும்
அதனோடுதான் உறவாடும்.
இந்த வாழ்வுக்குள்
தாங்கள் கண்டடைய எத்தனையோ.
இங்கே  
பொதுமொழி, பொதுமதம்....
அது
கடலைத்தவிர
வேறேதும் தேவன் இல்லையென்பதே.  
விதானையாரே!
கடலை கற்றுக்கொள்வதானால்  
கரையில் குந்தியிருந்து
சிறுநண்டு பொறுக்காமல்  
கடலில் இறங்குங்கப் பாருங்கள்.

3. அவர் வழியாக  அவரோடு அவரில்....

தெருவில் இறங்க அச்சப்பட்டு
தலைமறைவான வார்த்தைகள்
பேறு பெற்றவை  
ஏனெனில்
தம்மை தமக்குள்ளே
அடக்கம் பண்ணிக்கொண்ட
ஞானம் பொருந்திய மனிதர்களின்
வாக்குமூலப் பெட்டகங்களுக்குள்
அடைக்கப்பட்ட  
திவ்விய அப்பங்கள் அவை
உயிரும் உத்தானமுமான வாழ்வை
கடற்கரை மணலுக்குள் போட்டுப்புதைத்து  
உரிமை மண்ணையும்
அள்ளியிறைத்துப்போன மக்கள்
இனி
எப்போதும் மீள வாரார் என
எங்கேயோ இருந்துவந்த செந்நாரைகள்
குரலறைந்து சொல்லின.  
கரையிழந்து போன சனங்களை
என்றைக்குமே
தாங்கள் அறிந்ததில்லையென
அவர்கள் கட்டிக்காத்த
ஆலயங்களின் மணிகள்  
மும்முறை
மறுதலித்து ஓய்ந்தன.
குருதியுறைந்த கரைகளை
கடல் அழுதழுது
கழுவிக்கொண்டேயிருக்கிறது.
அலைகள் அடங்கிய ஓரிரவில்  
என்றென்றைக்குமாக
சாட்சிக்கு முன்வராத,
மறைபொருளான உண்மைகளோடு
எல்லா கடவுளர்களும்
கப்பலேறிப் போய் விட்டார்கள்.
எல்லா மறுதலிப்புக்களையும்,
எல்லா சாட்சியங்களையும்,
எல்லா ஞானிகளையும் கடவுளர்களையும்
அறிந்துவைத்திருக்கும் கடலோ
குமுறியெழுந்து
வானத்தை இழுத்து விழுத்தி
கிழித்தெறியும் சந்தர்ப்பமொன்றுக்காக
காத்துக் கிடக்கிறது.

4. அச்சப்பட்ட வார்த்தைகள்  

ஆழிப் பாறைகள் வரை
ஆழ வேரூன்றிக்கிடந்த
கனவுகளையும் நட்சத்திரங்களையும்
அவர்கள்
பிடுங்கிப் போட்டார்கள்.
விலா எலும்புகளூடே
அறையப்பட்ட ஆணிகளோடும்  
யுத்தக் காயங்களோடும்  
தப்பித்துக் கிடந்தன தீவுகள்.
அங்குமிங்குமாய் ஓடியோடி
ஒவ்வொரு தீவுகளின் காயங்களையும்
கழுவித் துடைத்து
மருந்திட்டுக் கொண்டிருந்தது கடல்.
பின்நாட்களில்
இவர்கள் வந்தார்கள்.
சர்வாங்கமும் ஆணிகள் அறையப்பட்டு
பேராறாய்ப் பாயும் பெருங்குருதிக்குள் கடல்.
இப்போ
கரைந்துபோன சூரியனின் கீழ்
கலங்கிக் கிடக்கிறது கடல்.
கடல்,
ஐயோவென்று கதறியழவும் முடியாத
அச்சப்பட்ட வார்த்தைகளோடு
அலைகளால் வாயைப் பொத்திக்கொண்டு
அலைகிறது கரை கரையாக.

5. போய்ச்சொல்லு மதலேனா

வீசி வீசி,
பாடுகள் தேடி வீசி வீசி
வெறுவலையிழுத்து ஓய்ந்த கைகள்
சிலுவையில் அறையப்பட்ட
ஆண்டவரைப்போல அகல விரித்தபடி
உவர்க்காற்றில்
உலர்ந்துதிர்ந்த மீதித்திண்ணையில்
வானத்தை அண்ணார்ந்து
வேண்டியபடி காத்துக்கிடக்கின்றன
ஒன்றல்ல இரண்டல்ல,
எல்லாக் குடிசைகளின் திண்ணைகளும்
சுமக்கமுடியா சுமைகளோடு முனகியபடி
துக்கசமுத்திரம் கழுத்தை நெரிக்க
தூங்காமல் திரிகிறது கரை கரையாக
கூத்துப் பாட்டு.
முள்ளிச்செடிகளிலும் முசுட்டைக்கொடிகளிலும்  
கோட்டான்கள்
கூடு கட்டத்தொடங்கியதை கண்ட  
அண்ணாவி ஒருத்தன்
தான் கட்டிய அம்பாக்களை அள்ளி
கடலில் கொட்டிவிட்டுத் திரும்புகிறான்
கடல் பற்றி எரிகிறது.
கடல் எரிகிறதுதான்.
அது எரியும்
ஆயினும்
எரிந்து சாம்பலாகாது
எரி நட்சத்திரங்கள் எல்லாமும்கூடி
கொட்டுண்டாலும்,
கொட்டுண்டு எரித்தாலும்
தீயாது வாழும் கடல்.
என்னடியென் மரிய மதலேனா....
எரித்தாலும் எரியாத கடல்
கைகளை அகல விரித்தால்  
எரிவது நாங்கள்தானேயடி...?  
பொதுக்கை உருண்டைகளால்
மூடுண்ட கடலடியில்
ஒற்றை உயிரிதானும் வாழுமோ சொல்?
போ, போய்ச்சொல்லு கடலிடம்
சிதறடிக்கப்பட்ட மந்தைகளாக
சிதறுண்ட வாழ்வை
கரையில் உரிந்தெறிந்துவிட்டு
நாங்கள்
தேசாந்திரம் போகிறோமென்று.
போ, போய்ச்சொல்லு.
எங்களைத்தேடி
எங்கும் வரவேண்டாம் என்றும்
சொல்லடி என் மரியமதலேனா.

6. செய் அல்லது செத்துப்போ

வேலிகளில் காத்திருக்கிறார்கள்
மீன்களோடு கடலையும்
தீட்டிய நகங்களால் தூக்கிச்செல்ல
சூரியன்
என்ன செய்யும் பாவம்.  
எழவும் விழவும்,
எழும்போதும் விழும்போதும்
சுடவும் மட்டுமே தெரிந்த சூரியன்.
சூடாற முன்னம்
சூனியமாகிப்போகும் கடலில்
எதை விட்டுச் செல்வோம்
எங்கள் சந்ததிக்கு?
கடலில் வேட்டையாடிய மாந்தரை
வேலிகளில் குந்தியிருந்தவர்கள்
வேட்டையாடினர் என்ற கதைகளையா..?
கடலே!
எல்லாவற்றிற்குமான பதில்
உன்னிடமே உண்டு என்பதை
நாங்கள்
இன்னமும் நம்புகிறோம்.
செய் அல்லது செத்துப்போ.

7.கடல் முட்டைகள்

எண்ணற்ற பறவைகளின் சிறகசைப்பில்
எழுந்து நடந்தது கடல்.
கடல்
தான் நடந்த வழிகளெல்லாம்
முட்டைகளை இட்டுச்சென்றது.
கடல்முட்டைகளின்மேல் அமர்ந்த பறவைகள்
அவற்றைத் தீவுகள் என
சொல்லிக்கொண்டன.
அங்கே
தமது கூடுகளையும் அமைத்துக்கொண்டன.
பின்பு
மனிதர்கள் கடலின்மேல் நடந்தார்கள்.
நடந்த இடங்களெல்லாம்
கடல்முட்டைகள் உடைந்தன.
கூடுகள் சிதற அடிக்கப்பட்டன.
பின்னால்
சில சித்தர்கள் கடலின்மேல் நடந்தார்கள்.
சித்தர்களைச் சிறைப்பிடித்த மனிதர்கள்
அவர்களை
கல்லாய் கட்டினார்கள்
இதோ...! கடவுளர்கள் என்றார்கள்.
நாளை
பறவைகள் மீண்டும் வரும்
கற்களின்மேல் தமது கூடுகளை
திரும்பவும் கட்டும்
கடலோ
கற்களை விலத்தி
மீளவும் நடந்து செல்லும்
பறவைகளுக்கான உயிருள்ள தீவனங்களோடு.