வாடாத மல்லிகையாய் வாணி அம்மா
வரமாக வந்தாரே தமிழ் இசைக்கு.
தேனான குரலாலே வாணி அம்மா
தித்திக்கப் பாடினார் பல மொழியில்.

ஊனுருக்க பலபாடல் அவர் தந்தார்.
உளம் இனிக்க உணர்வாக அவரீந்தார்.
வாழ்வதனை இசையாக்கி அவர் வாழ்ந்தார்.
வாணி அம்மா வாழுகிறார் இசையாக.

கலை வாணி குயிலாய் வாணியானார்.
கான சரஸ்வதியாய் ஆகி நின்றார்.
பலவிருதை பாராட்டைப் பெற்று நின்றார்.
பண்பாடி மனமெல்லாம் அமர்ந்தே விட்டார்.

வேலூரில் பிறந்தார் விரும்பியிசை பயின்றார்.
வடநாடு சென்றார் வங்கியிலும் இருந்தார்.
இந்தியிலும் இசைத்தார் இன்பவிசை கொடுத்தார்.
எல்லோரும் விரும்பும் இசையரசி ஆனார்.

அபூர்வ ராகங்களால் முன்னெழுந்து வந்தார்.
சங்கரா பரணத்தால் உச்சியினைத் தொட்டார்.
சுவாதி கிரணம் தொடர்ந்தது வெளிச்சத்தை
துலக்கமாய் வாணியம்மா இசை வெள்ளியானார்.

நித்தம்நித்தம் நெல்லுச்சோறு நினைக்கவே இனிக்குது.
நீகேட்டால் நான்மாட்டேன் நெஞ்சையே வருடுது.
என்னுள்ளே என்னுள்ளே ஏங்கிடவே வைக்கிறது.
இசையரசி வாணியம்மா இருக்கின்றார் இசையுலகில்.

மல்லிகை என்  மன்னன் மயங்கும்
மறக்கும்  பாடலா? வியக்கும் பாடலா?
மனமினிக்கும் பாடல். மனமமரும் பாடல்.
உளமுவக்கும் பாடல். உயிருணர்வுப் பாடல்.

ஆயிரக் கணக்கில் இசைத்தனர் பாடல்.
அத்தனை பாடலும் அமைந்தன விருந்தாய்.
இசையெனும் மொழியிலே இணைந்தவர் வாணி.
இசையினைப் பருகிட இறைவனே அழைத்தார்.

வாணி அம்மா வாழ்கிறார் இசையாய்.
வாணி அம்மா வாழ்வே இசைதான்.
வாணி அம்மா மறைந்திட வில்லை.
வாணி அம்மா வாழ்கிறார் மனங்களில்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.