இன்று
சூரியனும் உதிக்காது போயிற்று.
காலிமுகக் கரையில்
அலைகளும் எழவில்லை.
பறவைகளும்
சிறகை விரிக்கவில்லை.
மேக மெத்தைகளும் பறக்கவில்லை.
தேசத்தைப் பாட
நானும் கறுப்பை உடுத்திக்கொள்கிறேன்.

கடல்கள் சூழ்ந்திருந்தும் என்ன!
மலைகள் நிமிர்ந்திருந்தும் என்ன!
மக்கள் மூச்சுத் திணறும் தேசத்தில்
சுடலைச் சாம்பலாகிய
சுதந்திரத்தை
எப்படிப் பாடுவேன்?

எழுதுவதற்கும்
என்னிடம் பல் துலக்கும்
கரித்துண்டுகளே உள்ளன.

பறவைகளைப் போலிருந்த மக்கள்
பாறாங்கல்லாய்
இறுகிக் கிடக்கும் நாளில்,
தானிய மணிகளாய்
என் சொற்களை
எவ்வாறு பரிமாறுவேன் அவர்களுக்கு...

ஒரு குழந்தையின் முகத்தில்
இந்த ஒரு நாளாவது
மகிழ்ச்சியை விரிக்கவில்லை எனில்
ஒரு முதியவனின் கண்களில்
இந்த ஒரு நாளாவது
நம்பிக்கையை நடவில்லை எனில்
எனது பாடலில் என்னதான் இருக்கிறது!

இசைக் கலைஞரின் முகங்களுக்கும்
அவர்கள் அணிந்து செல்லும் ஆடைகளுக்கும் இடையில்
மகிழ்வும்
அணிவகுப்பு வீரரின் முகங்களுக்கும்
அவர்கள் ஏந்திய ஆயுதங்களுக்கும் இடையில்
இறுமாப்பும் அறுபட்டுப்போயிருக்கும் போது...
நானும் எதைத்தான் பாடுவேன்!

பாணின் விலையும்
பால்மாவின் விலையும்
தேசியக் கொடிக்கும் மேலான உயரத்தில்
பறக்கும்போதும்
வாளேந்திய சிங்கம்
கேலிச் சித்திரமாய்த் தோன்றும்போதும்
நான் பாடுவதற்கு என்னதான் இருக்கிறது!

என் தேசத்தை
ஒரு பச்சை யானையின்
சப்பாத்துக் கால்கள்
நசுக்கித்தள்ளும்
இன்றைய அதிகாலைக் கனவுகூட
நான் எழுதுவதற்கு
எந்த வரியையும் விட்டுச்செல்லவில்லையே!

ஆனாலும்
ஒரு வரியையாவது பாடிவிட்டுப் போகிறேன்.

"தேசியகீதத்தின் வரிகளுக்கிடையில்
'வரிகள்' பொங்கி வழிகின்றன!"

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
04/02/2023