அவள்
எழுதுகிறாள்
எழுதிக்கொண்டே
இருக்கிறாள்
கண்ணில் நிரம்பிய
மையால்…!

உள்ளதில்
உள்ளதையே
எழுதுவாளோ…?
இல்லை
எழுதுவதுபோல்
நடிக்கின்றாளோ…?

என்னதான்
எழுதுகிறாள்
என்னென்னவோ
எழுதுகிறாள்.

எதை
எழுதுகிறாள்
எதையெதையோ
எழுதுகிறாள்.

மாயம்
நிரம்பிய
மையால்…!
யாருடைய
மனத்தைத்
துளைக்கப்
போகின்றதோ…?

அவள்
எழுத எழுத
மை
தீருமோ
தெரியவில்லை…?

கண்களில்
சுரக்கும்
மை
வண்ணமறியா…!

எழுதும்
நிகழ்வுகளுக்கு
ஏற்றாற்போலவே
மையும்
வண்ணம்மாறும்…!

அவள்
நகைத்துக்கொண்டே
எழுதுகிறாள்
அந்த நகை
முல்லை முகையோ…?

இன்னும் இன்னும்
எழுதுகிறாள்
மௌவல்
மொக்குகள்
மெட்டுகளாக…!

அவள் பல்லும்
தெரியவில்லை
உதடும்
அசையவில்லை
ஆனால்
சிரிக்கிறாள்
எழுதிக்கொண்டே…!

யாரைப்பற்றி
எழுதுகிறாள்
தன்னையா…?
சுற்றத்தாரையா…?
சமூகத்தையா…?
புரியாத புதிராகவே
எழுதிக்கொண்டேயல்லவா
இருக்கின்றாள்.

எழுதுகின்ற
பொழுதெல்லாம்
என்ன என்ன
நினைப்பாளோ…?

தொடர்ந்து
எழுதிக்கொண்டே
செல்கிறாள்
பக்கங்கள் தீருமோ
தீராதோ…?

எழுதுகோலும்
அவள்
கைகளில்
சிக்கிக்கொண்டோதோ…!

கோலின் பெருமையோ…!
கோலின் தவமோ…!
தெரியவில்லை.

ஆனால்
எழுதுகோலோ…!
சொர்க்கத்தின்
பிடியில்
சிக்கிக்கொண்டது…!    

அவள்
விரல்களின்
பிடியில்
மயிலிறகாய்
மாறிபோனதோ…?

எழுதுகோலுக்கு
முகவரி கொடுத்த
வள்ளல் மகளோ…!

என்னதான்
எழுதுகின்றாள்
கண்களால்
நகுகின்றாள்
வதனத்தால்
வட்டமிடுகின்றாள்…!

கூட்டத்தையே
உற்றுப்பார்க்கின்றாள்
சிந்திக்கின்றாளோ…?
சிந்தனை வீச்சில்
சிறகடிக்கின்றாளோ…?

என்னதான் தேவை
அவளுக்கு
என்னதான் தேவையோ..!
எழுதிக்கொண்டே
செல்கின்றாள்.

அருகில்
இருந்துபார்த்தாலும்
தொலைவில்
இருந்துபார்த்தாலும்
ஓரேமாதிரியல்லவா
தோன்றுகின்றது
அவள் எழுதும்
கோணம்…!

ஏன் எழுதுகின்றாள்
எதற்காக எழுதுகின்றாள்
எதைநோக்கிய
பயணமோ
தெரியவில்லை…!
ஆனால்
எழுதுகின்றாள்.
குறிப்பேட்டுக்கும்
கண்ணுக்கும்
ஓர் இடைவெளியில்
எழுதுகோல்
அவள்
பார்வையில்
ஒளிர்கின்றதே…!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.