ஓதிமம் நடையே என்றார்
 இருவிழி கயலே என்றார்
காதலாள் நீயே என்றார்
கவலைநீ படாதே என்றார்
ஏதுவாம் உனக்கு வேண்டும்
என்பதைக் கூறு என்றார்
வீதியில் மடிகின் றாயே
விளங்கிடு பேதைப் பெண்ணே !

முல்லைபோற் சிரிப்பே என்றார்
முழுமதி நிலவே என்றார்
பல்லொரு அழகே என்றார்
படித்திடு எல்லை என்றார்
சொல்லொரு கவிதை என்றார்
சித்திரம் என்றார் ஆயின்
கல்எனக் கற்பைத் தின்றார்
கசக்கியே வருத்திக் கொன்றார் !
 
சின்னவோர் சிட்டு என்றார்
சிந்திடும் மழலை எண்ணார்
மன்னவர் எனவே நீயும்
மதிப்பது தெரியா தென்பேன்
கன்னியாய் மடியும் தீமைக்
கதையதோ உன்றன் வாழ்க்கை
கின்னரம் பயிலும் உன்னைக்
கொலையிட மிருகம் நின்றார்

பாரதி பிறந்தால் என்ன?
பாவலர் தாசன் வந்து
ஆரமும் பிடிலும் வைத்து
அருந்தமிழ் வரைந்தால் என்ன?
நேரெதிர் கம்பன் தோட்டம்
நிறுவிய சீதை உன்னை
மாரொடும் பிய்க்கின்றாரே
மனுக்குலம் ஈது தானோ?

தமிழ்மர பெல்லாம் கல்லார்
தனித்தறம் அவ்வை கல்லார்
அமிழ்தெனும் தமிழை விட்டு
அரைத்திடும் ஆங்கி லத்தை
கமழ்கிற வகையே பேசி
கவிழ்க்கிறார் தமிழர் நாட்டை
உமிழ்இவர் பெயரை எல்லாம்
உசத்தியாய்ச் சாச்சா என்பார் !

சங்கமும் மகளிர் தேசம்
சண்பக அகமும் புறமும்
சுங்கத்தே தொலைத்து விட்டுத்
திரிகிறார் தமிழ்;நா டெங்கும்
திங்களும் மாற வில்லை
திரிந்திடும் கோளும் இல்லை
பங்கமாய் நாடே கொன்றார்
பழித்திடும் முறையில் நின்றார் !

மாதுநீ வரமாய் மாறாய்
மரபொடும் பெயரைக் கூறாய்
சாதுநீ இல்லை அம்மா
சரிதமாய் எழுவாய் பெண்ணே
நீதியைக் கழுவாய் கொல்லும்
நெருப்பினை அழிப்பாய் கண்ணே
பாதியிற் சாகா தேடி
பழந்தமிழ் புதுமைப் பெண்ணே !
 
Thesa Bharathy V.Rajalingam