அவள் ஓர் உயிர்!
அவளே எனதுயிர்!
எங்கு இருக்கிறாள்?
எங்கும் இருக்கிறாளா?
இல்லை என்னுள் இருக்கிறாளா?
அவளால் நான் இருக்கிறேன்
என அறிந்த அவள் மனம்,
அவளுள் நான் இருக்கிறேன் என்பதை அறிய
மறுப்பதேனோ?
பிரிந்து சென்றாள், ஆனால்
நினைவுகளைப் பிரிக்க மறந்தாள்! எங்கோ கேட்கிறது அவள் குரல்,
என்னுள் கேட்கிறது ஓர் அழுகுரல்,
அது மனதின் குரலோ
இல்லை என் மனக்குமுறலோ!
ஏன் இந்த மாற்றம்?
எதனால் இந்தத் தடுமாற்றம்? – என்னவளே!

அழகே!
உன் வார்த்தை மனதைக் கீறிட்டபோதிலும்,
நெஞ்சைக் கூறிட்டபோதிலும்
என்னில் எந்த வேறுபாடும் இல்லை!
என்னுள் எவ்வித மாறுபாடும் இல்லை!
உன்னைப் பிரிய எண்ணும்
அந்தச் சிறிய எண்ணமும் சிதைந்துபோகும்
உன் இதழ் விரிய!
அவ்விதழ் என்றும் எனக்காக அசைவதில்லை!
இருந்தபோதிலும் என் இமைகள்
உன்னை நினைக்க மறுப்பதில்லை!
அது ஏனோ!
என்றும் மறப்பதில்லை!
அதுவும் ஏனோ!
உனக்கு அதுதான் சுகமெனில்
அதனுள் நான் எதற்கு பெண்ணே?
ஏக்கம் ஏனோ என் கண்ணே!

யாரவள்? எங்கே குடிகொண்டுள்ளாள்?
எங்கும் எதிலும் இருக்க
அவள் கடவுளில்லை!
என் எழும்பிலும் சதையிலும் இருக்கும் என்னவள்!
எனக்கானவள்!
எனதுடல் இங்கே!
என்னுயிர் அங்கே!
அவ்வுயிரைத் தன்வசம் கொண்டவளும்
கண்ணால் கண்டவளும் அவளே!
என்னைச் சீண்டியவளும்
மனதைத் தீண்டியவளும் அவளே!
என்னவளே! எனக்கானவளே!!
என்றும் என்னுள் இருப்பவளே!!!!

விதை வெறுத்து பழம் உண்ணும் நீ விதைக்குள் ஒரு மரமுண்டு
என மறந்தாய்!
இன்று நீ வெறுத்த ஒன்று
நாளை விரும்பும் மரமாகும் என மறவாதே!
வெறுப்பின் தாக்கத்தில் விழுந்த அவ்விதை,
விருப்பின் தாக்கத்தில் மீண்டு விளையும் என மறவாதே!
இலை முளைத்து, காய் பழுத்து,
பழம் உதிக்கும் என்பதை மறவாதே!
உதிப்பது உன்னுள் அல்ல! அது உன் இடமும் அல்ல!
சாவுக்கு பயம்கொள்ளும் மனதுக்குள்ளே,
ஒரு சம்பவம்
அச்சாவைச் சந்திக்கத் தயார் செய்யும்!
அந்தக்கணம்!
எந்தன் மனம்!
அவ்வெண்ணத்தைச் சிதைக்கும்வண்ணம்
செயல்படும் எண்ணம் எவ்வர்ணம் என
இனம்காணுமோ!

கண்ணில் சிக்கும் கானல் நீர்
என்றும் கையில் சிக்குவதில்லை!!
கண்ட கனவைக் காண முயலும்
கண்கள்போல்,
நின்ற உறவில் நிற்க இயலுமோ?
எந்தன் மனமே!
இந்தக்கணமே!

அழகே!
ஏதோ ஓர் ஓரம்
மனதை
உடைத்தேன் என்றறிவேன்!
உடைந்தேன் எனவுமறிவேன்!
உடைத்ததும் உடைந்ததும் மனக்கால்கள் என்றிருந்தேன்!
என் உடற்காலும்தான் என்பதை மறந்தேன்!
இன்றுதான் அதை உணர்ந்தேன்!
ஏடெடுக்க மனமின்றி எழுதுகிறேன்!
எட்டெடுக்க நடையின்றி உலவுகிறேன்!
இங்கணம்,
முறிவின் வலியில் தவிக்கும்
நான்!!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.