நீலகண்டக் கவி பாரதி

சொன்னதெல்லாம் சொல்லாததையும் சுமந்ததாக
சொல்லாத எதையெல்லாம் சுமந்து போனாயோ
சுப்ரமண்ய பாரதீ…
சொப்பனவாழ்க்கையின் சூட்சுமத்தை இப்பவும்
பாடிக்கொண்டிருப்பாயோ?
செத்து முடித்த பின்னான இத்தனை வருடங்களில்
இன்னொரு சொர்க்கம் சமைத்திருப்பாயோ ?
தனியொருவனுக்குணவிலாதுபோவதறியா
பிரபஞ்சமதில் உனக்கு முன்னும் பின்னுமான
வரகவிகளோடு
இறக்கை விரித்துப் பறந்தவாறே
இலக்கியம் பேசிக்கொண்டிருப்பாயோ?
இயற்றிக்கொண்டிருப்பாயோ நந்தமிழில்
சுந்தரக்கவிதைகளை?
அந்திப்பொழுது அங்கு நீலார்ப்பணமாயிருக்குமோ?
பட்டுக்கருநீலப் புடவை பதித்த நல்வயிரமாய
நட்சத்திரங்களைத் தொட்டுணர முடியுமோ?
நாலுமே பலித்திட வரமருள இயலுமானால்
நல்குவா யதை நாங்கள் கேட்கத் தயங்கினாலும்.
நினைவுநாளில் மறுபடியும் பிறந்துகொண்டிருக்கும்

நீயாகி நானாகி அவராகி அதுவாகி வானாகி
மண்ணாகி _
வாழ்வாங்கு வாழட்டும் வாழ்வு.
வெந்துமடியட்டும் ஏற்றத்தாழ்வு..


அமரத்துவம்

”அவரைத் தெரியுமா உங்களுக்கு?”
நன்றாகவே தெரியும்”
”அவரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?”
”பலமுறை பார்த்திருக்கிறேன்”.
”அவரோடு பேசியிருக்கிறீர்களா?"
"நிறையவே பேசியிருக்கிறேன்".
எப்போதுவேண்டுமானாலும் அழுதுவிடுவதாய்

எதிரே நிற்கும் இளைஞன் கண்களில்
தழுதழுப்பு…..
காணக்கிடைக்காத கொள்ளையழகு!
கோடிசூரியப் பிரகாசம் பிரசன்னம்
சிரிப்பில் மலர்ந்த அவன் கன்னக்குழியில்!
ஒரு கணம் தனது ஆதர்ஷப் படைப்பாளியை
நானாகக் கண்டு உருகிநின்றவன்
அன்பின் உச்சத்தில் தன் சட்டைப்பையில்
வைத்திருந்த
ஐந்து ரூபாய் ஜெல் பேனாவை எடுத்து
என்னிடம் கொடுத்தபோது
நடந்த உருமாற்றம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது.
வருகிறேன் என்று சொல்லிச் சென்ற அவன் குரலில்
மறுபடியும் பிறப்பெடுத்த அந்தப் படைப்பாளி
திரும்பவும் ஏன் அதே ஒண்டுக்குடித்தன வீட்டிலேயே
அத்தனை அருமையான கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்
என்பதைத்தான்
என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

புத்துயிர்ப்பு

மரணத்திற்கு அப்பாலுள்ள மிக கனத்த இருட்சுவரை

ஒருமுறையேனும்
வலுகொண்ட மட்டும் உந்தித் தள்ளி
ஒருபுறமாய் ஒதுக்கி விலக்கி
மறுபுறமுள்ள தரமான தமிழ்ப்படைப்பாளிகள் சிலரைக்
கைப்பிடித்து அழைத்துவந்து
அவர்களுடைய ஆக்கங்கள் உண்டாக்கும் தாக்கங்களை
இன்று சிலர் அத்தனை ஊக்கத்தோடு பேசிக்கொண்டிருப்பதைக்
கேட்கச்செய்யவேண்டும் என்ற
தீரா ஆசை
ஆறாக் காயமாய் வலித்தாலும்
பரவாயில்லையென் றதை தினம்
சாம்ஸன் தலைமுடியாய் தனக்குள் வளரவிட்டவாறிருக்கும்
ஆன்ற வாசக மனம்.


பிரம்மம்


உந்துவது
கால்களா காற்றா மனமா
காலமா அந்த ஆறா வேறா
ஏகாந்தம் அப்படியொன்றும் ஏகாந்தமல்ல
என் என்பதும் நான் என்பதும்
ஒருமை பன்மை மயங்கித் திரிய
என்னோடு நானிருக்குமொரு
அந்தரவெளி;
ஏகாந்தத்தின் கோட்டுருவை வரைவதற்கும்
சாட்சாத் ஏகாந்தத்தில் கரைவதற்கும்
இடைப்பட்ட பெரும்பிளவில்
ருத்ரனின் பிரதாபம் நிசப்தத்தின்
ஓங்காரமாய் ரீங்கரிக்க
ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும்
முடிவிலி கவிதையின்
ஒரு துளி.

(*கவிஞர் பிரதாப ருத்ரனுக்கு)

பாரபட்சங்கள் படைப்பாளுமைகள் பரிந்துரைகள் பேரிலக்கியங்கள்......

குழந்தைக் கிறுக்கல்கள்
தந்தைக்குக் காவியமாக_
ஞானத் தந்தைக்கு
ஆழமற்ற கிணற்றுக்குள்ளிருந்து
உபதேசிக்கக் கிடைத்த
அரிய வாய்ப்பாக _
காயத்ரியின் மழலைப்பேச்சு
மந்திரமாக உச்சரிக்கப்பட்டு
உருவேற்றப்பட்டுக்கொண்டிருக்கும்
சூழல்….
பழகப் பழகப் பழகிவிடக்கூடும்
இதுவே பேரிலக்கியம் என்ற
புரிதலும்…..
இருந்தாலும்
மழலை மாறும் விழிகளில்
விரியும் வானம்
ஒரு நாள் தெளிவாக்கும்
பரிந்துரையில் பிறப்பதல்ல பேரிலக்கியம்
என்று.
அது தன்னிலிருந்து கிளர்த்தெழுமொரு
காட்டுச்செடி,

மனிதநேயம்பாற்பட்ட மலைப்பிரசங்களுக்கும்
மலைப்பிரசங்கங்களுக்கப்பாலான
மனிதநேயங்களுக்கும் இடையே
மறைந்தோடும் ஜீவநதியென
அம்மமாகா ஆன்மாவொன்று
அன்போடு சொல்லக்கேட்டு _
முயல் ஆமை முயலாமை ஊடாய்
வழியேகும் படைப்புவெளியில்
வளர்ந்த மகள் நடைபழக
நாலிலே ஒன்றிரண்டு பலித்திட
வழியுண்டு.