இரவுகளின் வெளிச்சத்தைத் திருடிய
ஒரு பகலவனைத்தேடி எனது கவிதைகளுடன்
என் இருப்பிடத்தை விட்டுப் புலம்பெயர,
என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன்.

போகும் இடமானது நெருப்பைப் பருகும்
இடமாக இருக்கக் கூடும் என்பதற்காக,
ஒரு பெண்ணிடம் உடற்சுகத்தைச் சிலகாலம்
கடனாகப்பெற்று வரலாம் என்கிற முனைப்புடன்
அவளது இருப்பிடத்தை அடைய எனது கால்களோடு
நான் எண்ணிருந்த குறிக்கோளுடனும் சென்றேன்.

நெடுநேரம் நடக்கையில் என் கால்களோடு
எனது குறிக்கோளும் சோர்வினை அடைந்தன.
சற்று நேரம் இளைப்பாரி விட்டுச் செல்லலாம் என்ற
ஒரு தீர்க்கமான முடிவினை எனது வயிற்றுப்பசி
எனது காதுகளிரண்டில் கூவிக்கொண்டிருந்தது.

அடுத்தடி எடுத்து வைக்க முடியாமல் தவழ்ந்து பார்த்து,
எனது சோர்வுடனேயே ஐக்கியமான எனது கவிதைகளும்
உயிரற்ற நிலையை வெளிப்படுத்தத் தொடங்கின.
பெருத்த நெடிகளின் சூழ்ச்சியால் துவண்ட எமது உடலானது
இயற்கை கழிவுகளை வெளியேற்ற முடியாமல் வற்றிருந்தது.
நேரம் கழிய கழிய கடைசியில் பாலையாகவே  போய்விட்டன
எனதான தேடல்களும் தேடி வந்த பெண்ணுடற்சுகமும்.