1. நான்

அகக்கிண்ணம் நிறைந்து வழிவதால்
கனிந்த பார்வையின் கண்ணொளி வீச்சை
மனச்சுரங்கத்தில் சேமித்து வைக்கிறேன்
கடற்காற்றில் கன்னம் சிலிர்க்கிறது.
கப்பற் பாய்களை நினைவுபடுத்தும்
ஓப்பரா மண்டபக் கூரை. அதன் படிகளில் நான்.

 2.  தவம்
 
கவிதைச்சொல் பூப்பல்லக்காகவும்
பவித்திரத் தென்றலின் இதமாகவும்
புவியில் புதுப் பிரசவமாகவும்
புத்துணர்வு தருவது இன்பம்.
சொல்லின் அலங்கார உரு
நல்ல ஒரு நாட்டியமாகவும்
புல்லரிக்கும் தேவலோக நுழைவாகவும்
வல்லமையாய்ச் செதுக்குதல் தவம்.


3.  உருவேந்தும் உடை

உணர்வுகள் உள்ளே உந்த
உகந்த வார்த்தைகளை உருட்டி
உன்னும் மனது உடையெனும்
உருவேந்தும் மொழியை உதிர்க்கிறது.

வசீகர வரிகள் பரந்து
வரமான மலர்களாக மணக்கிறது.
வசியமான கருத்துகள் மனதில்
வச்சிரமாய் ஒட்டும் முனைவிது.

துக்கம் காயங்கள் அழிய
துணையாகும் வரிகள் ஒரு
துருவநட்சத்திரமாகஇ  துளசியாக மாறும்.
துன்னெறி அழிக்க உதவிடும்


4.  கலங்கரை விளக்கு

பொலிவுறு தமிழின் பெருங்காதலால்
நலிவுறா ஆலாபனையலை மனமெங்கும்.

சலிப்புறாது வெள்ளி நிலாவை
வலியின்றி மாந்தும் கடலுக்கு
கிலி தருமொரு தோற்றம்!

சோர்வற்ற தமிழ் வெள்ளிநிலா
ஆர்வமுடை கடல் நானோ!
ஈர்ப்புடை கனவுகள் உயர்ந்தன
ஆர்ப்பரிக்கும் புலம்பெயர் அலைகளால்

காலவழியில் கற்பக தருவாய்
கோலக் கலங்கரை விளக்காய்
நீலக் கடலாய் வாழ்வைத்
தாலாட்டும் கவிதைத்தீபம் சுகபோகம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.