என் கோப்பையை நான் எப்போதும் காலியாகவே வைத்திருக்கிறேன்.
என் மேசையின் எதிர் இருக்கை
தினம் தினம் காலியாகவே இருக்கிறது.
இன்று என்னோடு ஒருமுறை மட்டும் வந்து அருந்திப் பாருங்களேன்.
குடித்து முடிக்கும் வரை நிபந்தனை இல்லாமல் தொடங்குவோம்.
பின் முடிவு செய்துகொள்ளலாம்
யார் கொடுப்பது என்று.

அடிக்கடி நம் கண்கள்
பார்த்தும் பார்க்காததுமாய்
ஓஷோவிடம்
சந்தேகம் கேட்டுக்கொண்டே
ஆடை இல்லாத அடுத்த தேநீருக்கு
யார் சொல்லுவது எனக் காத்து இருக்கிறது.
ஈக்கள் மொய்க்காத தேநீர் எங்கும் இல்லை.
தெரிந்தே பருகுகிறோம்.
ஏகமாய் காண்பதே எல்லாம் என்கின்ற சூஃபியை
நம்மில் ஒளித்து வைத்துக்கொண்டே  
எதிர் இருக்கைக்கு ஏக்கமாய் மனம் விண்ணப்பிகிறது.
இப்பொழுது யார் ஓஷோ? யார் ரூமி?

காதலும் காமமும் கலந்த இந்த
சுடும் நீரில் எந்தச் சுவை முதலில் ருசிக்கிறது.
நாளையும் என் கோப்பை காலியாகவே இருக்கும்.
என்னோடு மீண்டும் அருந்தப் பிடிக்கும் எனில்
என் பக்கத்து இருக்கையில் வந்து அமருங்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.