- எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் கதை, கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இதழியல்  என இலக்கியத்தின் பல்துறைகளிலும் பங்களித்து வருபவர். அத்துடன் நூல்களைத் தனது பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டும் வருபவர். இவர் எழுத்தாளர் மட்டுமல்லர், சமூகச் செயற்பாட்டாளரும் கூட.


‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)

1. கவிதையின் விதிப்பயன்

நீங்கள் மர்மம் என்றால் அது மர்மம்;
அதுவே இன்னொருவர் சொன்னால்
அதர்மம்.
மர்மமெனக்கோருணர்வென்றால்,
மனநிலையென்றால்
உங்களுக்கு அது கத்தி கபடா கொலை
துப்புத்துலக்கலாக
இருக்கக்கூடாதா என்ன?
உயிரின் ஊற்றுக்கண் ஆகப்பெரிய
மர்மமென்றால்
பர்மா நீரல்ல நிலமென்கிறீர்கள்!
கவிதையின் சர்வமும் நானே என்று
எத்தனை தன்னடக்கத்தோடு
கர்வங்கொள்கிறீர்கள்!
அதைக் கண்டு மலைத்துயர்ந்த
என் இருபுருவங்களும்
இன்னமும் இறங்கி இயல்புநிலைக்குத்
திரும்பியபாடில்லை.
கர்மம் கர்மம் _

இல்லையில்லை உங்களைச்
சொல்லவில்லை.
வர்மக்கலை பயின்ற நல்லறிவாளி நீங்கள்
நயத்தக்க வார்த்தைகளால்
வையத்தொடங்கினாலோ
நான்கைந்து வட்டுகள்
நிச்சயமாய் நகர்ந்துவிடும் முதுகெலும்பில்
நன்றாகவே அறிவேன்…

மற்றெல்லோரையும் முட்டாள் எனச்
செல்லமாகவும் சினந்தும் குட்டியும்
இட்டுக்கட்டியும்
தன்னைத்தானே அரிதரிதாமெனக் கட்டங்கட்டிக்
காட்டுவோர்
பலரையும்கூட பரிச்சயமுண்டெனக்கு
என்பதுதான் பிரச்சினையே.

கர்மவினையென்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே
நான் குறிப்பிடும் கர்மமும் அதுவேயென்று
எங்குவேண்டுமானாலும்
துண்டுபோட்டுத் தாண்டிவிடுகிறேன்.
பயன்படுத்திய பழையது போதுமா?
புதிதாக வாங்கவேண்டுமா?
நிர்மலமும் மலமும் வேறுவேறென்று
உறுதியாகத் தெரியுமென்றாலும்
கர்மமும் கருமமும் ஒன்றா அல்லவா என்று
சொல்லமுடியாதிருக்கிறது.
துர்மரணமோ கல்யாணச்சாவோ _
இருத்தலும் இருபதுவரிக் கவிதை
இயற்றலும்..
திருத்தமான இருபதுக்கும்
குறியீடாகும் இருபதுக்குமிடையேயான
பிரிகோடுள்ள வரை _
எவர் மறுத்தால் என்ன?
அவரவர் மர்மம் அவரவருக்கு.


2. மர்மக்கிளி வாழ்க்கை

”எத்தனை காலம் என்று தெரியவில்லை
ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும்
ஒரு குகையில்
சிறைப்பிடிக்கப் பட்டிருந்தேன்.
எப்படியோ தப்பித்துவந்திருக்கிறேன்.
எனக்கு உண்ண கொஞ்சம் தானியம் கொடு –
நான் அவசியம் உயிர்வாழவேண்டும்’
என்றது அந்தப் பச்சைக்கிளி.
ஒரு கிண்ணத்தில் அரிசியும் பருப்பும்
கொண்டுவந்து தந்த பின்பு
’அவசியம்’ என்பதை விளக்கமுடியுமா?’
என்று கேட்டதற்கு
’வசியத்தின் எதிர் அல்ல’ என்று
கீச்சுக்குரலுயர்த்தி விளக்க முற்பட்டு
பின் தன் குட்டி மண்டையை இப்படியு
மப்படியும் ஆட்டி
"உன் வாழ்க்கை உனக்கு அவசியம் போலவே
எனது எனக்கு" என்று
நறுக்கென்று சொல்லிக் கிளம்பி
வேகம் கூட்டி
விர்ரென உயரே பறந்த பறவைக்கு
சிறகுகளிருக்கவில்லை யென்பது
சிறிதுநேரத்திற்குப் பிறகே உறைக்கிறது.....


3. நமதான ரகசிய உயிர்களும் உயிரிகளும்

உனக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியை
உனது வரிகளிலெல்லாம் உயர்த்திப்பேசியவாறே
எனக்குள்ளிருப்பதை எள்ளிநகையாடுகிறாய்.
ஒரு சொல் ரகசிய உயிரியாய் எவரொருவருடைய
ரத்தவோட்டத்திலும்
மிதந்துகொண்டிருக்கலாகும் சூட்சுமம் அறிந்திருந்தும்
அறவேயதை மறுதலித்தாகவேண்டிய அவசியமென்ன?
அதோ _
ஒருவர் அருவ இடக்கையால் ரகசிய உயிரியைத்
தான் போகுமிடங்களுக்கெல்லாம் அழைத்துச்
சென்றவண்ணம்…..
இன்னொருவர் தன் இடுப்புவளைவில்
அதைஏந்தியபடியே…….
வேறொருவருக்கு அதன் அருவத்தலையைத்
தடவித் தீரவில்லை….
நீயுங்கூடத்தான் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்த்
தாவியபடியே;
ஆனான அந்தரத்திலும் சுவடு பதித்தபடியே….
அப்போதெல்லாம் உன்னை வழிநடத்துவது
உன்னுடைய அந்த ரகசிய உயிரிதானே!
நாமொரு உயிரியாக இருப்பதே
நமக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியால்தானே!
ரகசியம் என்பதோ உயிரி என்பதோ
கெட்ட வார்த்தைகள் அல்லவே!
நமக்குள்ளிருக்கும் நாமறிந்த அறியாத
ரகசியம்
உயிர்த்திருக்கும் காலம் வரை
அதுவுமோர் உயிரிதான்.
நினைத்துப் பார்த்தால்
நாமேகூட ரகசிய உயிரி நமக்கு.
அறிந்தவர்களுக்குள்ளிருக்கும்
ரகசியம்
உயிரி _
ரகசிய உயிரி.


4. இல்லாதிருக்குமொரு முயல்

நள்ளிரவைத் தொடும் இந்நேரம்
நேர்கீழே ஒரு முயலைக் கண்டால்
நகைப்பேனா நடுங்குவேனா நெக்குருகுவேனா…
சிறு முயலின் பாதங்களில் என்னைப்
பொருத்திக்கொள்ள இயலுமோ என்னால்…
குறுகுறுவென்று பார்க்குமதன்
கண்ணின் கருமணிக்குள்
விரியுமோ ‘ALICE IN WONDERLAND’
அல்லது, போர்ஹேயின் ‘THE BOOK OF SAND’
இரண்டையும் நான் படித்திருக்கிறேனா
பார்த்திருக்கிறேனா
படித்ததும் படிக்காததும்
பார்த்ததும் பார்க்காததும்
கேட்டதும் கேட்காததும்
கேள்விப்பட்டதும் படாததுமாய்
கலந்துகட்டிக் குழம்பும் வாழ்வில்
முயல்குட்டி மாய யதார்த்தமாய்…..
பெருவிருப்பிருப்பினும்
ஒரு முயலை மிகச்சரியாக என்னால்
தூக்க முடியுமா
எனக்கு 'மிகச்சரியாக' முயலுக்கு
என்னவாக இருக்கும்?
முயலொரு குறியீடு
முள்ளங்கிபத்தை யொரு குறியீடு
இரண்டும் ஒருசேர இன்னுமொரு குறியீடு
குறியீடுகளுக்கப்பால் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது
தன்னைத்தானே
மானே தானே என்று சேர்த்துக்கொள்வதே நம்மாலானதாக……
காணாதவரை கண்டதாகிவிடாது
கண்டதாலேயே கொண்டதாகிவிடாது
என்றுணர்ந்தபின்னும் வேறு வேறு
கண்டுகொண்டிருக்கும் மனது
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
என்று கவிதையெழுதியவாறு.


5 காரண காரியம்

’கருத்துக் கந்தசாமி’ என்று எதற்குச் சொல்லவேண்டும்?
கந்தசாமிகள் மட்டுமா கருத்துச் சொல்கிறார்கள்?
அப்படிச் சொல்வது கந்தசாமி என்ற பெயருடையவர்க ளைப் பரிகசிப்பதாகாதா?
பழிப்பதாகாதா?
பொதுவாக சாமியையும் குறிப்பாக கந்த சாமியையும்
என்றுகூடச் சொல்ல முடியும்….
சீக்கியர்களைப் பார்த்துச் சிரித்துச் சிரித்து
சகட்டுமேனிக்கு பகடிசெய்து திரித்து
குலுங்கி வலிக்கும் வயிறுகளில் இன்னமும்
நகைச்சுவையுணர்வு செரிமானமாகாமலேயே……
கந்தசாமி என்ற பெயர்
அந்தப் பெயருடையவரை மட்டும் குறிப்பதில்லை
என்று புரிந்துகொள்ளவியலாத அளவு
அறிவீலியில்லை நான்.
இருந்தாலும்,
நானும் கருத்துச் சொல்ல
ஒரு காரணம் வேண்டாமா?
அதனால்தான்.......


6. காலக்கணக்கு

அப்பொழுதுக்கும் இப்பொழுதுக்கும் இடையிலான
கால வெளியில்
காணாமல்போய்விடலாகும் சில
பலவாக
முப்பொழுதும்
இருபொழுதும் நிலைபிறழக்
குழறும் மனதின் குரல்வளை
நினைவுமுள் குத்திப் பழுதடைய
எப்பொழுதும்போல்
தப்பாமல் விடிந்துகொண்டிருக்கும் பொழுதும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.