கடலும் தாமிரபரணியும்
வெகுண்ட இரண்டு ஆதிசேடன்கள்போல
மோதிய பண்டை நாட்கள் போலாயிற்று
என் ஹைக்கூ காதல் வாழ்வு.
*
உண்மையில் ஆரி மக்சிமோட்டோ
கடலைப்போல பொறுமையானவள்தான்.
காதலில் மட்டும் சுனாமி என்றிருந்தேன்.
எனினும் எனினும் அமைதிக்கடல்  
ஊழிப் பேரலையாய் எழுகிறதல்லவா?
வரலாற்றில் ஒருநாள்
காலைத்தூக்கி மூன்று தடவைகள்
காயல்களின் மணல்பற்கள் உடைய
தாமிரபரணி ஆற்றை உதைத்ததல்லவா?

பேர் ஊழிக்குமுன்னம் ஈழத்திலும் ஓடிய
எங்கள் தாமிரபரணி கருணை உள்ளவள்.
உதைபட்டு பின்வாங்கிய தள்ளுமுள்ளில்
மிதிபட்டு ஆதிச்சநல்லூர் அழிந்தபோதும்
நேசிக்கும் தன் பிளைகளின்
மரியாதையான இறுதிச் சடங்குக்காக
இடுகாடுகளைக் காப்பாற்றினாளல்லா?
வாழ்வின் கயிற்றை பற்றி எழுங்கள்என
பறை முழங்கி பாணர் வந்தனர்.
எழுக எனும் கூத்தில் பாடினி வந்தனர்.
சோறு சுமந்து உழவர் வந்தனர்
பால்கலசங்களோடு இடையர் வந்தனர்
சக்கரத்தோடு குயவர் வந்தனர்.
தேனும் தினையுமாய் குறவர் வந்தனர்.
பறைமுழங்க தாழிகள் புதைய.
முள்ளிவாய்க்கால்போல
மெல்ல உயிர்த்தது தாமிரபரணி மண்.
*
ஆரி மக்சிமோட்டோவும்
கருணைக் கடல்தான்.
பின்வாங்கும் சுனாமிபோல
என் உயிரழிய பிரிந்தபோதும்
கவிதையாய் நெருடும்
வாழ்ந்த தருணங்களின் ஈமத்தாழிகளை
இதயத்தில் புதைத்தே சென்றாள்.
அன்றே அறுக்கும் அரசனின் பகையிலும்
நின்று அறுக்கும் நினைவுகள் கொடிது.
*
ஆரி ஜப்பானையும் காதலித்தாள்.
எனக்கோ ஈழமண்மீதும் உயிர்க்காதல்.
கணித்தலில் காதல்
கழித்தல் அடையாளம்போல
இரண்டு காதல் சமன் சூனியம்.
*
பெண்ணியம் பேசுமென்
காதல் கவிதைகள் ஏன் எப்பவும்
ஆண் மொழியிலேயே முடிகிறது?
ஆரி ஜப்பானியப் பெண்.
சுனாமி யப்பானியச் சொல்.