கொரோனாவால் இவ்வுலகு
பட்டழிதல் கொஞ்சமல்ல
பரிதவிப்பும் கொஞ்சமல்ல
கெட்டழிந்து போனாலும்
கெடுமதிக்குக் குறைவுமில்லை
ஒட்டிஉலர்ந்த வயிறு
தட்டுத்தடுமாறும் வயது
பொட்டென்று போவதென்ன
இத்தனையும்தாங்கி இன்னும்
உயிர்வாழும் இப்பூமி கோட்டைமதில் வீடுகட்டி
கொண்ட மலர்மஞ்சத்தில்
நீட்டி நிமிர்ந்தமர்ந்து
நிறைவாகத் தின்றவரும்
அடுத்தவேளைச் சோற்றுக்கே
ஆலாய்ப் பறந்தவரும்
நின்று நிதானித்து- தம்
நிலையுணர்ந்தார் இப்புவியில்

பழந்தமிழர் பண்பாடு
மறந்திருந்த எம்பாடு
திண்டாடிப் போனதைத்தான்-கொரோனா
துண்டாடி வைத்தகதை
சொல்லுதிப்போ
ஓடித்திரிந்த உறவு
கூடிவாழ்ந்த கதை-மீண்டும்
வெல்லுதிப்போ

கண்ணுக்குத் தெரியாக் கடவுளென்பார்- அதே
கண்காணா வைரஸை என்ன சொல்ல- ஞானக்
கண்ணுக்குத் தெரியும் கடவுளென்போம்- பூதக்
கண்ணுக்குத் தெரியும் வைரஸென்பார்
விண்ணுக்கும் மண்ணுக்கும் விளங்காததிந்த
விந்தையை என்னவென்று சொல்வேன்!

அணுவைத் துளைத்து ஆயுதம் செய்வார்
வைரஸ் துளைக்க வல்லமை இல்லார்
எல்லாம் முடியும் தம்மால் என்பார்
எமக்கும் மேலே சுமக்கும் ஒருவன்
இருப்பதை மறந்து மனிதம் துறந்தார்
பாடம் படிக்க பாரினில் இன்று
கோவிட்தான் கோட்(GOD)டாய் வந்ததோ?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.