- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -போட்டி பொறாமை எலாம்
பொசுக்கியே விட வேண்டும்
வாட்டமுறும் வகையில் என்றும்
வார்த்தை பேசல் நல்லதல்ல
மூத்தவரை மனம் நோக
வைப்பதிலே என்ன பயன்
கீழ்த்தரமாய் வரும் நினைப்பை
கிழித் தெறிவோம் வாருங்கள் !

பெற்றவர்கள் மனங் கலங்க
பிள்ளை செய்தல் கூடாது
சொத்துப்பற்றி சண்டை செய்து
சுகம் பறிக்கக் கூடாது
கற்றுத் தந்த ஆசானை
களங்கமுற வரும் நினைப்பை
கடுந்தீயில் போட்டு நின்று
கருக்கி நிற்போம் வாருங்கள் !

 

நம்பிக்கை எனும் பண்பை
நாம் உடைத்தல் நல்லதல்ல
அவநம்பிக்கை எனும் நினைப்பை
அறுத்துவிடல் நம் கடனே
கும்பிட்டு தலை குனிதல்
குறைவான செயல் அல்ல
கும்பிட்டு வாழ வெண்ணும்
குணம் அதனை பிய்த்தெறிவோம் !

செருக்கோடு சினம் சேர்ந்தால்
சிறந்த நிலை அழிந்துவிடும்
பொறுப்பின்றி  நடந்து நின்றால்
பொழுது எல்லாம் சிதைந்துவிடும்
அடக்கம் கொண்டு வாழ்வதுதான்
அனைவர்க்கும் பொருத்தம் அன்றோ
அமைதி எனும் மருந்தருந்த
அகில மக்காள் வாருங்கள் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.