கவிதை வாசிப்போமா?

எனது பயணம்
தொடங்கிய பிறகுதான்
பாதையைப் பார்க்கின்றேன் -
பாதிக்கும் மேல் புற்கள்
ஆனாலும்
பாதிக்கும் என்று தோன்றவில்லை!

தொடர்ந்ததென் பயணம் - உடனே
உணர்ந்ததென் பாதம்
புற்களின் ஊடாக
கற்கள் - இடையில்
படர்ந்த நெருஞ்சி
முட்கள்!

வருந்தின கால்கள்
வலித்தது நெஞ்சம்
நீரை
உகுத்தன கண்கள்!

நிலைமையை உணர்ந்த மூளை
நிதானித்து சொன்னது -
"இலக்கை நோக்கிய
இந்த பயணத்தில்
முடிவில்லா பாதையும்
முடியும் - உனக்குள்
முடியும் என்ற
நினைப்பும் - தன்
முனைப்பும்
இருந்தால்!"

தளர்ந்த கால்கள்
மலர்ந்தன மீண்டும்!
வலிகளை - மனதின்
வலிமையாக்கினேன்
மெலிதானது பயணம்
எட்டி நடை போட
கிட்ட வந்தது இலக்கு!

வெற்றிக் கனியை
வெட்டிப் பறிக்கையில்
கரைபுரண்ட வியர்வையில்
கரைந்தோடின -
சலிப்பு
களைப்பு
மலைப்பு
என்ற உப்பெல்லாம்!

ஆனாலும்
ஓயாத வெள்ளத்தில்
காயாத கண்கள்!
ஏனிந்தக் கண்ணீர்
என்ற வினாவிற்கு
விடை - இது
ஆனந்தக் கண்ணீர் என்பதே!
அதில் கலந்திருக்கும்
உப்பு -
மனதிற்கு மகிழ்வூட்டும்
இனிப்பு!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.