ஜனவரி 2013 கவிதைகள் - 3

 நாங்கள் பிறந்த பூமியைக் காப்போம்.....!

வே.ம. அருச்சுணன் - கிள்ளான்
 
இந்த நாடு
நாம் பிறந்த நாடு
பல நூற்றாண்டுகள்
அரும்பாடுபட்டு ஒவ்வொரு கணமும்
இரத்த வியர்வை சிந்தி
உருவாக்கிய நாடு மலேசியா
இந்த மண்ணின் மைந்தர்கள் நாம்......!
 
இனம்,மொழி,சமயம்
வேற்றுமைகள் கடந்து
அனைவரையும் அணைத்தவர்கள்
56 ஆண்டுகளாக
நாட்டுக்கு விசுவாசம் குறையாமல்
ஒற்றுமை வளர்த்தவர்கள்
வாக்குச் சிதறாமல்
தடம் பிறழாமல்
அப்பழுக்கில்லாமல்
ஓட்டுப்போட்டுப் போட்டு
ஆளும் அரசாங்கத்தை
உயிராய்க் காத்தவர்கள்
இதற்கு முக்கியக் காரணம்
இந்த மண்ணின் மைந்தர்கள் நாம்.....!
 
எங்கள் பற்று மீது
சந்தேகம் வேண்டாம்
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாதவர்கள்
நாங்கள் வந்த மரபு அப்படி
உப்பிட்டவரை உள்ளளவும் மறவோம்......!
 
திட்டமிட்டே எங்களைத் தீண்டாதே
நாங்கள் காக்கும் அகிம்சையைக்
கொச்சைப்படுத்தாதே
உலகுக்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள்.....!
 
குட்டக்குட்ட  இனியும்
குனிபவர்கள் அல்லர் நாம்
நம்பி ஏமாந்த
காலம் மாறிவிட்டது
உரிமையைப் பெற துணிந்துவிட்டோம்
உரிமையைப் பெற்றெடுக்க
உயிரைப் பணயம் வைப்போம்....!
 
வரலாறு தெரியாத
அறிவு சூனியங்களுக்கும்
இன துவேசிகளுக்கும்
கைகூலிகளுக்கும்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தே
சொல்கிறோம்
நன்றாகக் கேளுங்கள் அறிவிலிகளே
உரக்கச் சொல்வோம் பலமுறை
நாங்கள் யார் என்பதை
அறிவால் புரிய வைப்போம்
இது நாங்கள் பிறந்த பூமி....!
                        
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பெண் பூவை வாழ விடு

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை -

ஜனவரி 2013 கவிதைகள் - 3

மண்ணோடு மண்ணாகிப் போகும்
இந்த மனித நேயம் -
பயிர்களுக்கு
உரமாகத் துடிக்கின்றது ..!

காம வெறிபிடித்த குண்டு விதைகள்
பெண் பூக்களின்
உயிரிதழ்களைத் தேடுகிறது

இறை படைப்பில்
நிறம் மாறாத
குருதிக்குள்ளும்
ஏன் இத்துனை வேற்றுமைகள் ...?

மனிதனை
மனிதன் கொல்லும்
கொடுமைச் செயலை
எந்த தலைமைத்துவத்தின்
ஆட்சியில் -
முற்றுப் புள்ளி வைக்கப்போகிறார்கள்...?

மரணத்திற்கு அத்திவாரம்
கொலை .களவு .கற்பழிப்பு
துப்பாக்கிச் சப்தம்
இந்த கொடுரம்
எம் மண்ணில் எதற்கு ...?

பொறுமையாய் வாழும்
பெண்புறாக்கள் செத்துப் போகட்டுமென்றா .?

ஊமையாய் வடியும்
மனிதப் பிணங்களில்
வெள்ளைப் புறாக்கள்  நீந்தட்டும் மென்றா ...>

மண்ணோடு மண்ணாகும்
மனித நேயமே !
உன் நிழலிலாவது
பெண் பூவை வாழ விடு

சுத்தந்திரப் பூவை
மணக்க விடு ..!
சமாதனம் தேடும் இதயங்களாவது

மானத்தை காக்கும் பெண்களாவது -அதனை
முத்தமிடட்டும

எமது மூதாதையர்
மூளையுடன் நடந்திருந்தால்
எம் பெண்கள்
மானம் இழந்திருக்காது
எமது கால்கள்
இன்று
சருகு களாயிருக்காது

சிந்திய குருதிகளை
சேகரித்து -
கவிதையெழுதும்
எம்முயிருக்கும் -
என்ன உத்தரவாதம்

உணர்வுகள் வரண்டு
நிம்மதியின்றி வாழும
எமக்கு

என்ன 'நாமம '
தெரியுமா ?

காலத்தால் மாறாத
மனித நேயங்களின்
அகராதியில்
நாம்
'அகதி' என்று ...!

அல்லது
பிண மென்று ....!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஜனவரி கவிதைகள் - 3

இது உங்கள் கதையல்ல

 - மகரந்தன் -

எப்போதும் -
தவளையாக மாற
எண்ணம் கொண்டிருக்கும்
தெருநாய் ஒன்று
இங்கு படுத்திருக்கிறது.

நாயாகக் குரைப்பதில்
துளியும் விருப்பமில்லை.
தவளையாய்
குட்டையில் ஊறவும்
விருப்பமில்லை.

என்றாலும்-
தவளைபோல்
குரலெழுப்பிக்கொண்டே
படுத்திருக்கிறது
அந்த மனநாய்.


 

ஜனவரி கவிதைகள் - 3

மரங்களின் மரணம்

- மகரந்தன் -

மீண்டும் அவர்கள் வந்திருக்கிறார்கள்
கையில் ஒரு பட்டியலோடு.
அதில் என் பெயரும் இருக்கிறது
இம்முறை-
அவர்களோடு போகவே
விருப்பப்படுகிறேன்.

பணக்கார பயணிகள்
வந்து போகுமிடம்;
என் வசிப்பிடம்.

இங்கு-
ஒரு சமயம்
உயரமாக வளர்ந்த
அடர்ந்த பசுங்காடுகள் இருந்தன.

மலை முகடுகளிலும்
ஆற்றின் திவளைகளிலும்
யானைத் தந்தத்தின் நிறத்தில்
விரிந்து கிடக்கும் மணற் செதில்களில்
மின்னும் சூரிய ஒளியில்
ஓர் ஆன்மீக அமைதி தவழும்.

பரிசுத்தமான
தென்றலின் ஆட்சி
இங்கு குடிகொண்டிருக்கும்.

அருகில் இருந்த நகரம்
சிறியதாய் இருந்தபோது
சில மரம் வெட்டிகள் வந்து போனார்கள்.
பின்னும்
பலமுறை வந்தார்கள்
நகரம் பெருநகரமாகிவிட்டது.

விலைமதிப்பற்ற மரங்களுக்காக
இப்போது-
மீண்டும் வந்திருக்கிறார்கள்;
கையில் ஒரு பட்டியலோடு.
அதில் என் பெயரும் இருக்கிறது.

இம்முறை-
அவர்களோடு பயணிக்கவே விரும்புகிறேன்.
எனக்கு முன்னால்
இங்கிருந்து குடிபெயர்ந்த
சக நண்பர்களைக் காண
ஆவலாய் இருக்கிறது.

இனி இங்கே-
மலைகளும் ஆறுகளும்
மணல் திட்டுகளும் இருக்கலாம்.

ஆனால்-
பருத்து திமிர்த்த அந்த கறுத்த மரம். . .
நெஞ்சை நிமிர்த்தி வீராப்பு பேசும்
அந்த தேக்கு மரம். . .
காற்றுக்கு வாசனை பூசிவிடும்
அந்த சந்தன மரம்....
ஆற்று நீரில் அடிக்கடி முகம் பார்க்கும்
அந்த ரோஸ் மரம்.....

இன்னும்.... இன்னும்...
அந்த பரிசுத்த தென்றலின் ஆட்சி...... ?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 ஜனவரி கவிதைகள் - 3

தனி ஆவர்த்தனம்

- மு.கோபி சரபோஜி. -

காதலைச் சொல்ல
தைரியமற்றவனின்
கவிதையாய்........

காமத்தை வடிக்க
தெரியாதவனின்
ஓவியமாய்......

ஏமாற்றத்தை ஏற்க
திராணியற்றவனின்
ஒப்பாரியாய்......

ஏமாறியதை மறைக்க
முடியாதவனின்
ஏக்கமாய்......

தனக்குத்தானே
ரசிக்கத் தெரியாதவனின்
முழு நிர்வாணமாய்.....

கழிப்பறைகள் எங்கும்
தனி ஆவர்த்தனம் செய்கின்றன
கரிக்குச்சிகள்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஜனவரி 2013 கவிதைகள் - 3

குழந்தை ஒன்று  

ஜுமானா ஜுனைட், இலங்கை.


இந்து சமுத்திரமே!
எத்தனை உயிர்களைத் தத்தளிக்க
எத்தனித்தாய்…?
நித்தமும் அலைகளால்
புன்னகைத்தாய்… அது பொய்யோ?
வைத்தகண் வாங்கிட முன்னே
அலைக் கரத்தால்
நனைப்பாய்… நகைப்பாய்…
இப்போது வேஷங் கலைத்தாயே!

வற்றிய கண்ணில் நீர் சுரந்து
முகத்தில் இரண்டு சமுத்திரங்கள்!!
 
கடலே! உந்தன் கைப்பிடிக்குள்

உயிர்களைப் பறித்தாய்.ää இதுகொடுமை
ஒரு காகிதக் கப்பல் தத்தளித்தாலும்
தாங்கிடுமோ சிறு குழந்தை!

தாகம் கொண்டு
கரையைக் கடந்து
தாவிடத் துணிந்தாய்
தரையில்,
தாயை இழந்து தந்தையை இழந்து
தவிக்கும் குழந்தைக்கு
பதில் சொல்.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.