மெலிந்த கட்டை உடல்வாகு கொண்டவன் அவன். நான்கடி உயரம். அவன் நடந்து நான் கண்டதில்லை. ஓடி ஓடியே வேலைகள் அனைத்தையும் செய்வான். காலை ஐந்து மணி அளவில் அவனது வேலை ஆரம்பமாகும். விடுதியை சுற்றி கூட்டி, வாசலையும் துப்புரவாக்கி, பின் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி மீண்டும் கூட்டி பெருக்கி - இரவு ஏழு மணிக்குத்தான் இவனது அலுவல்கள் முடியும். இதற்கிடையில் வெவ்வேறு சில்லறை எடுபிடி வேலைகள். கூறினான்: றாகலை தோட்டத்தில் இருந்து வந்தவனாம். பின், இங்கேயே தங்கி திருமணத்தை முடித்து விட்டதாக. இப்போது மொத்தமாய் பதினைந்து வருடங்களாய் ஆகிவிட்டதாம் - இந்த விடுதி எசமானுக்கு ஊழியம் செய்து. நான் சென்றால் இவனுக்கு ஒரு வித சந்தோஷம். துள்ளி குதித்து வருவான். காலையில் காப்பியை தயாரித்து இருவரும் சேர்ந்து குடிப்போம். ஐந்து மணி. தனிமையில், குடில் போன்ற அந்த சமையலறையில் கோப்பியை சுவைத்து பருகியவாறே நாங்கள் அனைத்தையும் அளவளாவிக் கொண்டிருப்போம்.

ஒருமுறை கூறினான்: “சற்று வெளிச்சம் வந்தவுடன்தான் வீட்டை விட்டு புறப்படுவேன். சனம் அப்போதுதானே போக வர துவங்கும். சவம் எடுத்து வரும் பாதை இது…”.

“தோட்ட புறங்களில் பேயின் நடமாட்டம் ஒன்றும் அதிகமாக இல்லை. இங்கேதான் அதிகமாக இருக்கின்றது…”.

“அது ஏன்…?” என்றேன்.

“சுனாமிக்கு பின்னர்தான்… சுனாமியில்தானே நிறைய பேர் இறந்து போனார்கள்…”.

“காலையில் அஞ்சு மணிக்கு முன்னாடியே வந்துட்டு போயிரும்…”

“சாமிக்கு பூப்பறிச்சிட்டு இருப்பினம்…வாய்க்குள்ளேயே தேவாரத்தை முணுமுணுத்தவாறு… கேட்கும்… சாமி எத்தன மணிக்கு இங்கன வருமாம்… இவங்க வாய திறந்து ஏதோ சொல்லுவாங்க… திரும்பி பார்த்தா யாருமே இருக்க மாட்டாங்க…”.

“கலர் கலரா மீன் இருக்குமே… வட்ட வடிவமா… பின்னுக்கு சடை போல ஒரு வாலையும்

வச்சு… தோல உறிச்சுத்தான் சாப்பிடனும்…”.

“அடுத்த முறை எப்ப வருவீங்க… போன் பன்னுங்க… றாகலையில, ஒரு பார்சல தருவாங்க… அம்மா…’ அவனது கண் கணநேரம் லயித்து விரிந்து பளபளத்தன…”.

‘பலாக்காய் சம்பல்… அம்மா செய்றது… யார் அந்த மாதிரி இப்ப செய்வாங்க… ஏக்கமும்

கனவும் அவன் கண்களில் மீண்டும் கொப்பளித்தன.

“யானை கெட்ட சாதி ஜீவன்… வஞ்சம் தீர்ப்பதிலேயே முதல் ஆசாமி… வயலுக்கு தூக்கி

சென்று மிதிக்கும்…”.

அண்மையில் யானைகள் பற்றிய ஓரிரு செய்திகளை படித்திருந்தேன்:

‘சின்ன புல்லுமலை கிராமத்தில், தோட்டத்து வாடியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரை,

இரவு 10.30 மணி அளவில் அங்கு வந்த காட்டு யானை, வாடியை உடைத்து, துரத்தி சென்று, ஓடிய அவரை தன் முன்னங்காலை வைத்து மிதித்தது…. ஸ்தலத்திலேயே உயிர் பிரிந்தது… உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.’

இன்னுமொரு செய்தியை வாசித்தேன்:

‘யானைகள் பெருத்த அட்டகாசம்… நித்திரையில் இருந்தவனை யானை இழுத்து போட்டு

மிதித்து கொன்று விட்டது’.

எனது ஆட்டோ நண்பனின் கதையும் கிட்டதட்ட இவ்வாறே இருந்தது. காட்டின் நடுவே, தோட்டம் போட்டிருந்த அந்த மனிதனை ‘இரும்பு மனிதன்’ என அவன் அழைத்தான். உண்மைத்தான். சுத்தமான யானை காடு அது. பழங்குடி மக்களை காண அந்த மரகறி தோட்டத்தை கடந்துதான் செல்ல வேண்டும். வயல் வெட்டி முடிந்தால், மாலையில் அங்கே யானைகள் கூட்டம் கூட்டமாய் திரிய தொடங்கும்.

காவல் காக்கும் நான்கைந்து பேரை, ஒரு சமயம் மலைபோன்று, உயர்ந்த பாறைகளில் ஏறி

இருப்பதைக் கண்டேன். நான்கைந்து வயல்காரர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களுக்கு பணம் தந்து அவர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளனராம் - யானைகளை துரத்த. வெடியை கொழுத்தி அல்லது சத்தம் வைத்து அல்லது ஆர்பாட்டம் செய்து யானைகளை துரத்தி விடுவார்களாம் அவர்கள். இத்தகைய ஒரு இடத்தில்தான் ‘இரும்பு மனிதன்’ தன் தோட்டத்தை அமைத்திருந்தான்.

அவனது கூற்று சற்று வித்தியாசமாக இருந்தது: “யானைகளை பேசாது விடுங்கள். ஒன்றுமே செய்யாதீர்கள். இருளோடு இருளாய் இருக்க வேண்டும்… யானைகள் வரலாம் - வந்து பார்த்து விட்டு பேசாது போய் விடும்…”.

இதென்ன புதுகதை? யானை வருமாம் - இருளோடு இருளாய் நாம் நிற்க வேண்டுமாம்..

‘பயந்தால் ஆகாதாம்…’ எங்கிருந்து வருமாம் இவ்வகை நெஞ்சுரம் மனிதனுக்கு?

உண்மைத்தான். இயற்கையோடு இயற்கையாய் மனிதன் ஒன்றித்து நிற்கும் போது,

விலங்குகளும் மனிதனின் இருப்பை, இயற்கையுடன் ஒன்றாய், ஒன்று சேர்த்து பார்க்கத்தான் செய்கின்றன.

“ஒரு நாள், நடு நிசியில் ஓர் அரவம்… மழை வேறு… யானைத்தான்… பார்த்தால், ஒரு யானை தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்து மெதுவாக ஏறி வருகின்றது… மற்றொன்று மறு மூலையில்… மூன்றாவது, இன்னுமொரு மூலையில்… தோட்டத்தில் அவை இறங்கி விட்டால், பயிர்களை நாசமாக்காமல் போகாது… திக்கொன்றுக்காய் வரும் மூன்று யானைகளையும் நான் விரட்டுவது சாத்தியமில்லை… தனி ஆளான நான்… மழை வேறு… காற்று வேறு… நடப்பது நடக்கட்டும் என குடிசைக்குள் சென்று இழுத்து போர்த்தி பேசாது படுத்துவிட்டேன், இறைவனிடம் பாரத்தை போட்டு. காலையில் எழுந்து நின்றேன்… தின்று தீர்த்திருக்கும்… எனது இருமாத உழைப்பும் வீண். மெதுவாய் வெளியே சென்று எட்டி பார்த்தால் கத்தரி, பயறு, மொச்ச கொட்டை அனைத்துமே அப்படி அப்படியே… யானைகள் தோட்டத்தினுள் காலடி எடுத்து வைக்கவே இல்லை!”

“இம்முறை வெண்டையும், மிளகாயும், சோளமும் விதைத்திருக்கின்றேன்…’

“தூங்குவதா?” சிரித்துக் கொள்வான்.

அவனது தோட்டத்தின் ஒருபுறமாய் ஒரு கால்வாய் ஓடியது. நீருள்ள காலங்களில் அவனை

நான் சந்திக்க வரும் போதெல்லாம் அந்த கால்வாயை கடந்தாக வேண்டும். முடியாது.

முக்கியமாக எனது காலணிகளுடன். ஆதனால் அவனே முழங்கால் அளவு உள்ள அந்த

கால்வாய் நீரில், தனது கால்சராய் நனைய நனைய நீர் சொட்ட சொட்ட பாதைக்கு ஏறி

வருவான். முதலைகள் இருக்கும். வெயில் காலங்களில் ஒரு சொட்டு நீரும் கால்வாயில் இருக்காது. இச்சூட்டு காலங்களில், முதலைகள் எங்கு சென்று மறையும்.?

ஆனால், அன்றொரு நாள் அவன், தன் தோட்டத்தை சுற்றி யானைகளுக்காக மின்வேலியை

எழுப்பிக் கொண்டிருந்ததை கண்டேன். கூறினான்: “எமது பாதுகாப்பை நாம்தானே தேடிக்

கொள்ள வேண்டும். எல்லா யானையும் ஒன்றுப் போல் இராது…”.

“மனதை சஞ்சலப்பட விடக் கூடாது…”.

“யானை போன்ற நன்றி உள்ள ஜீவனை நான் பார்த்ததே இல்லை… எவ்வளவு பெரிய

மிருகம்… குரங்குகளும் மாடுகளும் வித்தியாசம் கொண்டவைகள்…. நீங்கள் விலங்குகள் மேல் அன்பு செலுத்தினால் அவையும் பதிலுக்கு அன்பு செலுத்தும்…”.

“இரவு பன்னிரெண்டு மணிக்கு வெண்டியை வெட்ட தொடங்குவேன்… காலை நான்கு

மணிக்குத்தான் வேலை முடியும்…. இனி மூட்டைகளை அடுக்கி அவற்றை மார்க்கெட்டுக்கு

கொண்டுபோக ஆறு மணியாகி விடும்… வியாபாரிகள் வந்து விடுவார்கள்…. அந்த காலையில், பாதையில், யானைகள் என்னை காணவே காணும்…. நான் பேசாது போவேன்… அவையும் தன்பாட்டில் மேயும்… அவைக்கு தெரியும்… யார் வருவது என்று… வியர்வையின் மணமோ?

ஆனால், ஒரு கடைக்காரர், வேறு ஒரு சித்திரத்தை எனக்கு படைத்து காட்டினார்:

“யானைகளா….! மோசமான மோசம்... ஊர் சனம் வெடி வைத்து கொழுத்தி ஆரவாரம் செய்த பின்னர்தான் அவை அகலும்… சில வேளைகளில் அகலவே அகலாது….” அவரது கண்களில் பயம் தோன்றியது.

ஆனால், இரும்பு மனிதனின் கூற்றோ: ‘நீங்கள் யானைகளை நம்பலாம்…. மனிதரைத்தான் நம்ப முடியாது’ சிரித்தபடியே கூறுவான் அவன்.

ii

வேட்டைக்காரனின், யானைகள் பற்றிய அறிவு வித்தியாசப்பட்டிருந்தது. வேட்டைத்தான் அவரை அவ்வாறு பார்க்க வைத்ததோ? தெரியாது. பழங்குடி மக்களில் ஒருவரான அவர், நாய்கள் பத்தையும் அழைத்துக் கொண்டு, மேலும் ஐவருடன் வேட்டைக்கு சென்று விடுவார். வேட்டைக்கு சென்றால் நான்கைந்து நாட்கள் வரையில், வேட்டையாடி, இறைச்சியை கூறு போட்டு, விற்று, பணத்தை திரட்டிய பின் வீட்டுக்கு வந்து சேர்வார். சமைப்பதும், இரவில் தூங்குவதும் மிக உயர்ந்த பாறைகளில்தான். ‘ மிருகங்கள் ஏறி வராது… நெருப்பு வேறு…’.

“எனக்கு மிகவும் பிடித்தது பன்றி வேட்டைத்தான். உயிரே போனாலும் சரி… குத்திக் கிழிக்க துணிந்து முன்னுக்கு வரும். அது எனக்கு பிடிக்கும். யானைகள் இருந்தால் விலகி விடுவோம். தனி யானை என்றால், முன்னால் ஓடும் நாய், மூக்கை சுளித்தவாறு அணத்தியபடி எம்மிடம் திரும்பி ஓடி வரும்… பன்றியை குறிவைத்து அம்பை அல்லது ஈட்டியை எய்தால் யார் அம்பை எய்தார்களோ அவர்களை குத்திக் கிழிக்க, குறி வைத்து, மூர்க்கமாய் சிலுப்பியவாறே பாயந்து வரும். மூன்று முறை என்னை தாக்கி விட்டது. விலாவில் ஒருமுறை. பின்புறத்தில் ஒருமுறை . கையில் ஒருமுறை. காயங்களின் தழும்புகளை என்னிடம் காட்டினார் மனிதர். பாய்ந்து தப்பினேன்… மற்ற மிருகங்கள் என்றால் அப்படியே ஓட பார்க்கும்… பன்றி ஓடாது….”.

இந்த வேட்டைக்காரனின் மனைவி மெலிந்தவள். கருத்தவள். வேட்டைக்காரர் எனது

நாற்காலிக்கு எதிர்த்தாற்போல் தரையில் குந்தி கதைப்பார். யாரும் சொல்லாமலே, எனது

ஆட்டோ நண்பனுக்கு, அவரது மனைவி, ஒரு மூட்டை விளாம்பழங்களை கட்டி வந்து தந்தாள். “இவள் மான், மரை ஒன்றுமே சாப்பிடுவதில்லை. பன்றி மாத்திரம்தான்…. இவளுக்காகவே பன்றி வேட்டையை நான் ஆடுவேன்… ‘பொத்துவில்’ வரை நடந்தே செல்லுவோம்… பன்றியான பன்றி… அந்த காட்டில் வேட்டையாடி, அங்கேயே கூறு போட்டு, ‘பொத்துவில்’ சிங்கள வியாபாரிகளுக்கு விற்று விட்டு வந்து விடுவோம்… அவர்கள் அள்ளி கொண்டு போய் விடுவார்கள் இறைச்சியை…”.

“மரை என்றால், அது, வேறு சாதி மிருகம்… ஈட்டியால் அல்லது அம்பால் அதை தாக்கியவுடன், நீர்நிலைகளை நோக்கித்தான் ஓடும்… பின்னர், அவற்றின் பின்னால் நாங்கள் ஓட! ஒரு முறை ஒரு இருபத்தைந்து கிலோ மீட்டர் வரை ஓடிய பிறகுதான் ஓர் குளத்தில், நாங்கள் தாக்கிய அந்த மரை, எம்மை எதிர்ப்பார்த்திருந்தது… மரக் கொப்புகளால், முகத்தை மறைத்து, முதலைகளையும் கவனியாது குளத்தில் இறங்கி…”.

“யானைத்தான் மோசமான மோசம்…”.

iii

புட்டு வாங்க சென்ற போது, அந்த வயதான முஸ்லீம் கிழவரை கண்டேன். கதைப்பதில்

பெருத்த ஆர்வம் கொண்டிருந்தார் அவர். ஆசிரியராக பணி புரிந்தவர் அவர்… இன்னமும் தூய வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை சாரமும், அணிந்து… ‘என் வயதை கண்டு பிடியுங்கள்

பார்க்கலாம்….’;. வேண்டுமென்றே குறைத்து சொன்னேன். ‘எண்பது’ என்று. என்னை,

உண்மையில் அதிசயப்படுத்தினார் மனிதர். “பத்து வயல்கள்… ரிட்டையர் ஆகியவுடன்

வயல்களை எனது மகனுக்கு கொடுத்து விட்டேன்… நீங்கள் வக்கீலா… ஆஹா…ஒரு பத்து

கோடி வைத்திருப்பீர்களா…” விசாரித்தார்.

“அந்த காலங்களில், ‘சாகம’ பகுதியில் உள்ள எனது வயல்களுக்கு நடந்தே நான்

செல்வேன்… பஸ் ஒன்றும் கிடையாது…”. இன்று கூட ‘சாகம’ பாதைகளில் பஸ்கள்

ஓடுவதில்லைத்தான். ‘ஆனால், யானைகள்…?’ கேட்டேன். “யானைகளா? அப்போதெல்லாம் யானைகளே கிடையாது… எல்லாம் காட்டில்தான்… விடுதலை புலிகள் தான், யானைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்தது. அரசு புலிகளை வேட்டையாடி துரத்த, விடுதலை புலிகள் காட்டுக்குள் ஓடி விட்டனர். காட்டுக்குள் இருந்த யானைகளை அவர்கள் துரத்த, அவை ஊருக்குள் புகுந்து விட்டன. ஊரில், ருசி கண்டு விட்ட அவை, பின்னர், ஊருக்குள் வருவதையே வழக்கமாய் கொண்டன - கூட்டம் கூட்டமாய்…’.

iv

உண்மை. வரலாறு எப்படி எப்படி மாறி விட்டது. மனிதன், மனிதனை துரத்துவதும், அவன் பின் காட்டை அடைவதும், அங்கே யானைகளை குழப்புவதும், பின் அவை மனிதர்களை தமது பெருத்த கால்களால் மிதித்து கொல்வதும்…

ராஜா வருத்தப்பட்டு கூறுவான்:

“சமயங்களில், தமிழர் நகரங்களை பார்ப்பேன்… செழிப்பும் இல்லை… வளர்ச்சியும் இல்லை… காய்ந்த கருவாடு போன்று… ஏனைய நகரங்களை பாருங்கள்… பாதி சனம் வேறு நாடுகளுக்கு போய் விட்டது…. ஒற்றுமையும் இல்லை… மற்ற நகரங்களில், ஏதோ ஒன்று வித்தியாசம் கொண்டு இயங்குவதாய் படுகின்றது…. என்ன…”.

கடற்கரை ஓரமாக அமைந்திருந்த அந்த விடுதியின் சுவர்கள் இப்போது வெடிக்க

ஆரம்பித்திருந்தன. ஜன்னல்களிலும் துரு ஏறத் தொடங்கி இருந்தது. இதனால் ராஜாவுக்குத்தான் இரு மடங்கு வேலை. அலுத்துக் கொள்வான்: “எல்லாமே இந்த உப்புக்காத்தால்தான்”.

“சுவர் வெடிக்கும்… துரு பிடிக்கும்… உப்புக் காத்து…”.

ஆனால் இந்த உப்புக்காத்து, ‘இரும்பு மனிதனை’ மாத்திரம் ஒன்றும் செய்ததாக இல்லை.

ராஜாவின் கோரிக்கை அவ்வப்போது என்னில் ரீங்காரமிட்டது. ‘கோல் கொடுப்பீர்களா?’ தனது தாயின் அந்நாள் சமையலை எண்ணி, விரியும் அவனது விழிகள் என் நினைவில் அடிக்கடி தோன்றி மறைந்தன.

எனது ஆட்டோ நண்பன் கூறுவான்:

“இரும்பு மனிதனின்” பேச்சை அவதானித்தீர்களா? அவன் கூறுகின்றான்: ‘வாழ்வது என்று முடிவு செய்து விட்டால், காடாவது யானையாவது மேடாவது… தோட்டம் போட வேண்டியதுதான்…’

இதே நாட்களில்தான், இந்தியாவின் ‘காட்டு மனிதன்’ குறித்தும் நான் வாசிக்க நேர்ந்தது.

பிரமபுத்திரா நதியின் அருகே, ஒரு மனிதன் கஷ;டப்பட்டு, நாற்பது வருடங்களாய், மரங்களை பிடிவாதமாய் நட்டு, ஒரு காட்டையே, உருவாக்கி உள்ளான் என்பதே செய்தி.

வரண்ட அந்த மணற்பிரதேசம், இப்போது, காடாய் உருவாகி, அங்கே யானைகள், காண்டா

மிருகங்கள் முதல் அனைத்து மிருகங்களும் வாசம் செய்கின்றனவாம்.

யாரிவன்? ஏதற்காக இப்படி செய்தான்? வெறுமனே இட்லியையும் சாம்பாரையும் ருசித்து நக்கி சாப்பிட தெரியாமல் இப்படி எல்லாம் சிந்திக்க முற்பட்டவன்? மனிதர்கள் என்போரின், சிலரின் சாரம்சம் இதுதானோ?

இந்த கேள்விகளுடன்தான், ஆட்டோ நண்பனின் ‘இரும்பு மனிதன்’ முதற்கொண்டு உப்புக்

காற்று அனைத்தையும் சம்பந்தப்படுத்தி பார்த்தேன். ராஜாவின் சம்பா~ணை எகிறி பாய்ந்தது. வாடியில் களைத்து உறங்கும், மனிதரை மிதிக்கும் யானைகள் தொட்டு, அங்கே பேய்கள் குறைவுத்தான்’ என கூறும் உப்புக்காத்து மனிதன் வரை, தோன்றும் மனித சிந்தனைகளை –கால மாற்றங்களை - தொகுத்து நோக்கும் மனிதன், யாராக இருக்ககூடும் என வரலாறு கேட்கின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

விளம்பரம் செய்யுங்கள்