படுக்கையறையின் மெல்லிய வெளிச்சத்தில் ரேகா தன் மகன் விஷால் பக்கம் திரும்பிப் படுத்திருந்தாள். திடீரென அவளது தூக்கம் சற்றே கலைந்தது. விழித்தவள் தன் மகனைப் பார்த்தாள்; அவளுக்குள் பதட்டம் எழுந்தது. விஷால் தன் உள்ளங்கையை உயர்த்தி, வலது ஆள்காட்டி விரலால் தொடர்ந்து மேல்நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தான். இதைக் கவனித்த ரேகா, அவனது முகத்தை உற்றுப் பார்த்தாள். விஷால் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, அதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்.

பதறிப் போன ரேகா அவனை உலுக்கினாள்.

“கண்ணா விஷால், எழுந்திரு.”

“என்ன ஆச்சு உனக்கு?”

“டேய், கண்ணை முழி,” என்று அவனிடம் இரண்டு மூன்று முறை கூப்பிட்ட பிறகு, விஷால் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.

“என்னம்மா… என்ன ஆச்சு? ஏன் என்னை எழுப்பினீங்க?” என்றான்.

“கண்ணு, நீ தூக்கத்துல என்ன பண்றேன்னு தெரிஞ்சுதா?”

“ஏம்மா, தூக்கத்துல அப்படி என்ன பண்ணியிருப்பேன்? நல்லா தூங்கியிருப்பேன்,” என்றான்.

“இல்லடா விஷால், நீ தூங்கியிருந்தா நான் ஏன் உன்னை எழுப்பப் போறேன்? நீ தூங்கு, காலையில பேசிக்கலாம். உங்க அப்பாவும் ஊருக்கு போனவரு; காலையில வந்துடுவாரு. நீ தண்ணி குடிச்சிட்டு படு,” என்றாள் ரேகா.

விஷால் மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான். ஆனால் ரேகாவுக்கு மீண்டும் தூக்கம் வரவே இல்லை. தலைவலி தைலம் தலையணை கீழே இருக்கிறதா என்று கையை நீட்டி தேடினாள். அப்போதுதான் அவளது கைப்பேசியில் செய்தி அப்டேட் வந்திருந்தது. அதில், இக்கால குழந்தைகள் முழு நேரம் எதில் மூழ்கியிருக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு கட்டுரையின் செய்திதான் இருந்தது.

உடனே சத்தமில்லாமல் எழுந்து, படுக்கையிலிருந்து கைப்பேசியை எடுத்துக்கொண்டு, கட்டிலுக்கு அந்தப் புறம் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள். தனது விரல்ரேகையால் கைப்பேசியின் ஸ்கிரீன் லாக்கைத் திறந்து, அந்தக் கட்டுரையைப் படித்தாள். அதில் உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை; பொய்யாகவோ, மிகைப்படுத்தியோ எதுவும் சொல்லவில்லை. இன்னும் நன்றாகச் சொல்ல வேண்டுமெனில், இதைப் பற்றிய முழுமையான ஆய்வைத் தயார் செய்த பிறகே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதில் மனநல மருத்துவரும் பேசியிருந்தார்; கட்டுரையாளர் அவரிடமும் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு தகுந்த பதிலையும் அந்த மனநல மருத்துவர் சொல்லியிருந்தார்.

கட்டுரையைப் படித்து முடித்தவள் அப்படியே கண்ணயர்ந்தாள். விடிந்துதான் எழுந்தாள். அவசர அவசரமாகக் காலை வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். காய்கறி நறுக்குவதிலிருந்து பால் காய்ச்சுவது வரை, பையனுக்கு வேண்டிய காலை மற்றும் மத்திய உணவு தயார் செய்வது வரை தன்னையே பம்பரமாக இயக்கிக் கொண்டிருந்தாள்.

வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டு வாசல் பக்கம் வந்து கதவைத் திறந்தவுடன், தன் கணவனைப் பார்த்ததும் நெற்றியில் வழிந்த வியர்வையை இடது கையால் துடைத்துக்கொண்டு, மெல்லிய சிரிப்பைத் தன் உதடுகளால் உதிர்த்தாள். மனதில் ஆனந்தம் பொங்கியது.

“வாங்க, என்ன? டிரெயின் லேட்டா?” என்றாள்.

“ஆமாம், வழக்கம் போலத்தான்,” என்றான் சேகர்.

“சரி, உள்ளே வந்து கை, கால் எல்லாம் அலம்புங்க. நான் சூடா ஒரு கப் காபி தரேன்,” என்று சொல்லிவிட்டு சமையல்கட்டுக்குச் சென்றுவிட்டாள்.

பத்து நிமிட இடைவெளிக்குப் பிறகு குளித்துவிட்டு வந்த சேகர் மீண்டும் ஹாலுக்கு வந்து, அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழை வாசித்துக்கொண்டிருந்தான்.

“ஏங்க, உங்களைத்தான்,” என்றாள் ரேகா.

“சொல்லும்மா, என்ன விஷயம்?”

“முதல்ல இந்தக் கப் காபியைக் குடிங்க. அதுக்கப்புறம் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“என்ன விஷயம்? நீ உங்க அம்மா வீட்டுக்குப் போகணுமா?”

“இல்லைங்க, நம்ம பிள்ளையைப் பத்திதான்.”

“நம்ம பிள்ளையைப் பத்தியா? அப்படி என்ன விஷயம் பண்ணிட்டான் அவன்?”

“ஏங்க, அவன் தூக்கத்துல இப்படி நடந்துக்கிறதைப் பற்றி கேட்க மாட்டீங்களா?”

“சரி, சொல்லும்மா. பீடிகை போடாதே. சொல்ல வேண்டிய விஷயத்தை நறுக்குத் தெறிச்ச மாதிரி சொன்னாதானே விளங்கும்.”

“நம்ம பிள்ளைக்கு கைப்பேசியை கொடுக்காதீங்க, கொடுக்காதீங்கன்னு சொல்றேன். அதையும் மீறி கொடுத்ததால இப்ப அனுபவிங்க. இப்ப என்ன நடந்துச்சுன்னு எம்மேல குத்தம் சொல்லிக்கிட்டு இருக்க. நான் மட்டுமா அவனுக்கு கைப்பேசியை கொடுக்கிறேன்? அவன் சின்னப் பிள்ளையா இருக்கும் போதே, பால் குடிக்கிறதுல இருந்து சோறு சாப்பிடுற வரைக்கும், அவனுக்கு அந்தக் கைப்பேசியைக் கொடுத்து பழக்குனது யாரு?”

“சரி, விடுங்க. இப்ப யார் கொடுத்தாங்கறது முக்கியமில்ல. அவனது பழக்கத்தை எப்படி உடைப்பது? அவனுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கணும். அதற்கு நாம் என்ன செய்யணும் சொல்லுங்க.”

“ஏம்மா, இன்னும் தெளிவாக நீ சொல்ல வந்ததைச் சொல்.”

“ஏம்பா, உங்களுக்கு எல்லாத்தையும் விளாவாரியாகச் சொன்னால்தான் புரியுமா? நம்ம பையன் தூக்கத்திலும் வீடியோ கேம்ஸ் விளையாடுறான். இப்போ அவனுக்கு எட்டு வயசு. இன்னும் இரண்டு மூன்று வருசம் போன அப்புறம் அவனை நல்ல வழிக்கு கொண்டுவர முடியாது; பிடிவாதம் அதிகமாகிவிடும். அதனால்தான் சொல்றேன், ஒரு நல்ல குழந்தை மனநல மருத்துவரைப் பார்க்கணும்; அவருடைய கருத்தைக் கேட்டா நல்லாயிருக்கும். நேத்து நான் என் கைப்பேசியில் படித்த கட்டுரையில ஒரு psychiatrist இதைப் பற்றி பேசியிருந்தார். ஏன் அவர்கிட்ட appointment வாங்கக் கூடாது?”

“சரிம்மா, அதான் நீ இவரைப் பற்றி முன்னாடியே தெரிஞ்சு வச்சிருக்கே. அப்ப இந்த வாரக் கடைசில ஒரு appointment வாங்கி, போயிட்டு வந்துடலாம்.”

“சரிங்க, நான் டாக்டர்ட்ட appointment வாங்குறேன்,” என்றாள் ரேகா.

இதோ, அதோ என்று ஒரு வழியாக அந்த டாக்டரிடம் அப்பாயின்ட்மெண்ட் கிடைத்தது. டாக்டருடைய கிளினிக்கைப் பார்த்து, “அட, இப்படிக்கூட கிளினிக் இருக்குமா!” என்ற எண்ணம் இருவரது மனதிலும் மேலோங்கியது. அங்கிருந்த பொருட்களைப் பார்த்து வியந்தனர். அவர்களுடைய மனதில் அந்த கிளினிக்கில் டேபிள், சேர், மின்விசிறி, இரண்டு மூன்று நாற்காலிகள் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் குழந்தைகளுக்காக வேண்டிய அனைத்துப் விளையாட்டு உபகரணங்களையும் பார்க்க முடிந்தது. சின்ன கைப்பந்து முதல் பெரிய கைப்பந்து, ரிங் பால், கேரம் போர்ட், செஸ், கலர் பென்சில், சார்ட் போன்ற அனைத்தையும் அவர் அங்கு வைத்திருந்தார்.

உள்ளே நுழைந்து இருவரும் அவரது அறைக்குச் சென்றனர்.

“வாங்க, உட்காருங்க,” என்றார் டாக்டர்.

“டாக்டர், எங்க பையனைப் பற்றித்தான்...” என்றாள் ரேகா.

“உங்க பையனுக்கு என்ன?”

“தூக்கத்துல...”

“என்ன, தூக்கத்துல நடக்கிறானா?”

“இல்ல டாக்டர், அவன் தூக்கத்துல வீடியோ கேம்ஸ் விளையாடுறான்.”

“என்ன?”

“ஆமாம் டாக்டர், அதான் நாங்க உங்களைப் பார்க்க வந்தோம்.”

“சரி, நீங்க ஒண்ணும் மறைக்காம சொல்லுங்க. இந்த மாதிரி பழக்கம் உங்க வீட்டில் வேறு யாருக்காவது இருக்கா? இல்ல உங்க வீட்டில் இருக்கும் நபர்கள் அதிகம் கைப்பேசி உபயோகப்படுத்துபவர்களா?”

“இல்ல டாக்டர்.”

“அப்படியென்றால் இந்தப் பழக்கம் அவனுக்கு எப்படி வந்தது? எல்லாரும் பண்ணும் அதே தப்பை நீங்களும் செய்தீங்களா?”

“என்ன டாக்டர் சொல்றீங்க?”

“அவன் குழந்தையா இருக்கிறப்ப அவனுக்கு வேடிக்கை காட்ட அதிகம் நீங்க கைப்பேசியை கொடுத்தீங்களா?”

“ஆமாம் டாக்டர்.”

டாக்டர் இருவரையும் ஒரு முறை பார்த்தார். தன் விரல்களால் டேபிளில் தட்டி, ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு பேசினார்.

“சரி, இப்ப அவனை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும். நீங்க கத்தினீங்கன்னா அவன் அதற்கு மாறாகத்தான் செயல்படுவான். அதனால அவனிடத்தில் பொறுமையாகப் பேசுங்க, கோபத்தை காட்டாதீங்க. இந்தப் பழக்கத்தை மாற்ற வேறு விளையாட்டில் கொண்டு போய் சேர்த்துவிடுங்க. அவனுக்கு வேறு ஏதாவது ஹாபி இருக்கான்னு கண்காணிங்க. அதை கண்டுபிடிச்சு அந்த ஹாபியை வழக்கமாக்குங்க.

“இதெல்லாம் ஒரே நாளில் முடியாது. நீங்கத்தான் படிப்படியாக அவனது போக்கை மாற்றணும். இதற்கென்று மாத்திரை, மருந்து எல்லாம் இல்லை. முதல்ல நீங்க உங்க பழக்கத்தை குறைங்க. அப்புறம் அவனிடத்தில் மாற்றத்தை படிப்படியாகக் கொண்டு வாங்க. என்ன சொன்னது எல்லாம் புரியுதா உங்க இரண்டு பேருக்கும்?”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு, “சரி டாக்டர், நீங்க சொன்ன மாதிரியே நடக்கிறோம்,” என்றனர்.

“கிளம்புங்கள். புள்ள கட்டாயம் மாறிடுவான். உங்க செய்பாடுல மாற்றம் இருக்குமுன்னா, அவனிடத்திலும் மாற்றத்தை கூடிய விரைவில் பார்க்க முடியும்,” என்றார் மருத்துவர்.

அவர் சொல்லியது இருவருக்கும் தெளிவாகப் புரிந்தது. வெளிவந்தபோது, விஷால் கிளினிக்கிலிருந்த செஸ் போர்டில் மற்ற குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இருவருக்கும் ஒன்று விளங்கியது: குழந்தைகளை ஒரே இடத்தில் கட்டிப் போட்டு வைத்திருக்கக் கூடாது. அவனை இனி ஸ்கூல் விட்டு வந்தவுடன் அவனது நண்பர்களுடன் விளையாட வைப்பது என்று இருவரும் முடிவெடுத்தனர்.

விஷால் தன் அப்பா, அம்மாவைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தான். அதை பார்த்த இருவரும், அவன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கையுடன் அவனை நீண்ட நேரம் பார்த்தபடி நின்றனர்; மனதில் ஒரு நிம்மதி பெருமூச்சுடன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* ட்ஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா