
பாலத்தை கடந்து, கார், குன்று போல் அமைந்திருந்த, மேட்டு நிலத்தில் ஏற தொடங்கிய போது, சூட்டு முள் அசாதாரணமாக உச்சத்தை தொட்டிருந்தது. திடுக்கிட்டேன். காரை வலப்புறமாய் ஒடித்துத் திருப்பினேன். இரு புறமும் காடுகள். வலப்புறமாய், மற்றொரு கார் வாயை பிளந்து கொண்டு நின்றிருந்தது. எனது காரைப் போல சூடேறி இந்த வனாந்தர பிரதேசத்தில் ஆள் அரவமற்று அகப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்ன? அந்த காரின ட்ரைவர் கதவுகளின் ஜன்னல் வழியாக யாருடனோ கதைத்தப்படி நின்றிருந்தான்.
இனி, செய்வதற்கு ஒன்றுமில்லை. இறங்கிய போது, மற்ற காரின் சொந்தக்காரன் என்னிடம் மெதுவாக வந்து என்ன பிரச்சினை என்றான். தண்ணீர் இல்லை என்றேன். பரவாயில்லை. இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது காரில் இருந்து ஒரு பிளாஸ்டிக் போத்தலை இழுத்தெடுத்தான். இந்த ஒரு லீட்டரால் ஆக போவது ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தேன். குறைந்தபட்சம் எனது காருக்கு ஆறு லீட்டர் ஊற்றியாக வேண்டும். அன்புடன் நீட்டிய அவனது உதவிக்கரத்தை மறுத்து, காரில் பின் சீட்டில் இருந்த ஐந்து லீட்டர் கேனை எடுத்து கொண்டு பாலத்தை நோக்கி, வந்த வழியே, அந்த நடுக்காட்டில் நடக்க ஆரம்பித்து விட்டேன்.
வெப்ப அலை வீசும் முன்னரே, விடிய தொடங்கியதும் அக்கரைப்பற்றில் இருந்து, புறப்பட்டு வந்திருந்தேன். அந்த இளங் காலையில் சுகமான காற்று வேறு. ஆனால் இப்போது? வாகனம் எப்போது சூடு பெறத் தொடங்கி இருக்கும்? பாதையின் இருபுறமும் அடர்ந்த காட்டு மரங்கள் அமைதியாக நின்றிருந்தன, அமைதியுடன் பார்த்தப்படி. காற்று வேறு இல்லை. பாலத்தின் அடியே மிக அகலமான, மஞ்சள் நதி ஓடிக் கொண்டிருந்தது. மேல் பிரதேசத்தில், பெய்யும் மழையில், இப்படி கலங்கல் அடைந்து ஓடுவதாக இருக்கலாம். இம் முனையில் ஹ{ம்…ஹ{ம்… இறங்க முடியாது. ஒருவேளை பாதையின் மறுமுனையில் இறங்க கூடிய பாதை ஏதாவது இருக்கலாம். ஆனால் அங்கேயும் இதே கதைத்தான். அப்படி, என்றால் இனி வந்த வழியே நடந்து, பாலத்தின் மறுமுனையை மீண்டும் அடைந்து, காட்டின் வழியாக இறங்கி, காட்டுக்குள் சென்று நதியை அடைந்தாக வேண்டும். ஆம், அங்கே இறங்குவதற்கு வசதிதான். ஆனால், நதியை நோக்கி, காட்டு பிரதேசத்தினுள்ளேயே நடக்க வேண்டும் - அது தண்ணையாக இருந்த போதிலும். பாலத்தின் நடுப்பகுதியை நான் மீண்டும் கடந்து கொண்டிருந்த போது, ஒரு கெப் வாகனம் என்னை கடந்து சென்றது. பின்னால் ஐந்தாறு இளைஞர்கள், நீல நிற, அழுக்கடைந்த யூனிபோர்மில் இருந்தார்கள்.
என்னைத் தாண்டி சென்ற கெப் வாகனம், சில யார் முன்னே சென்ற பின் ஏனோ அப்படியே நின்றது. ஒருவேளை எனக்காகத்தான் இருக்கும். பாவப்பட்டிருப்பார்கள். யார் இவன், யானைக் காட்டில் இப்படிக் கேனை தூக்கிக் கொண்டு தனியே நடந்து திரிவது?. உண்மைத்தான். இந்த பாதையில், இவ்வளவு தூரமாய், ஓர் ஆள் நடமாட்டத்தையும் நான் கண்டேனில்லை. ஆளரவமற்று வெறிச்சோடி கிடந்தது இந்தக் காடு. ஏதோ ஒரு வாகனம்… இருந்திருந்து... அவ்வளவே.
“தண்ணீர் இல்லையா…” கெப் ரக வாகனத்தின் முன்சீட்டில் இருந்து இறங்கி வந்த அதிகாரி சிங்களத்தில் வினவினான். அருகில் வந்ததும்: “இது யானை காடு… இப்போது யானைகள் வந்தாலும் வரலாம்… தண்ணீர் எடுக்கவா? எங்கே?”
“நதியில் தான்…” என்றேன். தொடர்ந்தேன் “அப்படியே காட்டுக்குள் சென்று…”
இளைஞர்கள் கீழே குதித்து எம்மைச் சூழ்ந்து கொண்டனர். “யானைக் காடு… இது அபாயகரமானது… நல்லது… நீங்கள் இங்கேயே இருங்கள்… நாங்கள் ஓர் ஐந்து பேராக சென்று, நதியில் நீரைமொண்டு வருகின்றோம்…”.
உரையாடல் சிங்களத்திலேயே அமைந்திருந்தது. அவர்கள் காட்டுக்குள் இறங்கி, காட்டில் மறைந்தனர்.
அதிகாரி கேட்டான்: “உங்களது வாகனம் எங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றது…”.
சற்று நேரத்தில் இளைஞர்கள் ஐவரும், காட்டிலிருந்து, ஒருவர் பின் ஒருவராய் நீர்க் கேனுடன் பாதைக்கு ஏறி வந்தனர்.
“புதிதாய் யானை சாணம் போட்டிருக்கிறது”- ஒருவன் கூறினான்.
“ நீங்கள் எங்களது வாகனத்தில் ஏறி கொள்ளுங்கள்…”.
அவர்களது வாகன ஓட்டி வயதானவர். தண்ணீர் ரேடியேட்டரில் இருந்து ஒழுகி வருகின்றதா அல்லது ஏதாவது ஒரு ஹோஸ் உடைந்து ஒழுகுகின்றதா என்பதை, வாகனத்தின் அடியில் ஊர்ந்து சென்று பார்த்தப்பின், சத்தம் வைத்தார்: “ ஆம்… நான் நினைத்தது சரி… ரேடியேட்டரில் இருந்து இல்லை… இதோ இங்கே… ஏதாவது ஒரு ஹோஸ் உடைந்திருக்க வேண்டும்…”.
வாகனத்தின் அடியில் இருந்து, அவர் மீண்டும் ஊர்ந்து வெளியே வந்தார். அவர் வெளியில் வந்ததும், ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றியப்படி இருந்த இளைஞன் தன் பணியை நிறுத்தினான்.
“நல்லது. நீங்கள் ஒரு ஆறு கிலோமீற்றர் வந்த வழியே திரும்க்ச் சென்றால், ஒரு கராஜை அடையலாம். மேல் புறமாய்ச் செல்ல முடியாது… சென்றால், கீர்த்திபண்டாரபுரவில்தான் ஒரு மெக்கனிக்கின் உதவியை நீங்கள் பெறக் கூடியதாக இருக்கும்… அது, முப்பது அல்லது நாற்பது கிலோமீற்றர்கள்… வரும் வாகனம் ஒன்றில் ஏறி, அந்த கராஜை முதலில் அடையுங்கள்"
மேலும் அவர் அறிவுறுத்தினார்: “இங்கே, யானைகள் வரும். இது பொல்லாத இடம். கவனம்”. வாகனத்தில் ஏறி கையசைத்து விடை தந்தார்கள்.
ஆம். இனி செய்வதற்கு ஒன்றுமில்லைத்தான். பாசமிக்கவர்கள். அனுதாபப்பட்டு இவ்வளவு தூரம், தமது வேலையையும் விட்டு இப்படி மினக்கெட்டார்களே.
வாகனத்தில் இருந்து அகலப் போவது இல்லை என்று முடிவு செய்து கொண்டேன். எனக்கு முன்னால் நின்றிருந்த வாகனமும், சூடு தணிய ஏற்கனவே புறப்பட்டுச் சென்றிருந்தது. தனித்து, ஆள் அரவமற்ற அந்த வனாந்தர பிரதேசத்தில் தனிமையில் நின்றிருந்தேன்.
யானைகளாவது வருவதாவது. பயமுறுத்துவதே, மனிதர்களுக்குத் தொழிலாகிவிட்டது.
சற்று நேரத்தில் ஒரு லொறி வந்தது. அவனும் அன்பானவன்தான்…. நிறுத்தினான். தொற்றி ஏறி கொண்டேன்.
“ஆனால்… ஆர்மி கேம்புடன் திரும்பி விடுவேன்…”
“பரவாயில்லை… நான் ஆர்மி கேம்பிலேயே இறங்கிக் கொள்கின்றேன்…”
காலை, எனது உணவை அந்த ஆர்மி கேம்பினில்தான் முடித்திருந்தேன்.
தோசை சுட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனிடம் விடயத்தை விளக்கினேன். அவனும் ஆர்மிகாரன்தான். இப்போது, சண்டை நின்றுவிட்டபடியால் தோசை சுடுகின்றான் போல. அவனுக்கு, உடனடியாக விடயம் புரிந்தது. என்னையும் அவனுக்கு அடையாளம் தெரிந்தது. “ஆம்…இப்போதுதானே உணவு அருந்திவிட்டு போனீர்கள்…கார் எங்கே… பிரச்சினை இல்லை… வரும் வாகனத்தில் நான் ஏற்றி விடுகின்றேன்… இல்லை… இல்லை… சற்று பொறுங்கள்… அவர்களை கேட்கலாம்”. குதித்து, ஐந்தாறு பேராய் அமர்ந்து, தேனீர் அருந்தியபடி இருந்த ஒரு பள்ளத்தை நோக்கி குதித்து ஓடினான். அவர்களிடம் ஏதோ கதைத்தான். அதே நேரம், பாதையில் ஒரு வாகனம் வரும் சப்தத்தைக் கேட்டு, மீண்டும் அவசரமாய் ஏறி ஓடி வந்தான்… பஸ்… கையசதைதான். சற்று தொலைவில் பஸ் சென்று நின்றது. நன்றி தெரிவித்து ஓடி தொற்றிக் கொண்டேன். குலுங்கியபடி பஸ் புறப்பட்டது.
அனைத்து தட்டு முட்டு சாமான்களுடன், நாங்கள் ஓர் ஆட்டோவில் வந்திருந்தோம்… அடியில், மெக்கானிக் ஊர்ந்து பார்த்தான். பின், கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீரை ரேடியேட்டரில் ஊற்றினான். வெளியே வந்து உதட்டைப் பிதுக்கினான். வாட்டர் பம்பிலிருந்துதான் நீர் செல்கின்றது… அப்படி என்றால் வாகனத்தைக் கட்டி இழுத்துத்தான் எடுத்து செல்ல வேண்டும். எனக்குத் தூக்கி வாரி போட்டது.
“எப்படி… இந்த காட்டில்…”.
“என்னிடம் லாரி உண்டு… இழுத்து செல்லலாம்…” என்று இதற்கெல்லாம், ஏற்கனவே வெகுவாக பழக்கப்பட்டிருந்தவன் போல், சாவதானமாய்க் கூறினான். நான் ஆறுதல் அடைந்தேன். இழுத்து சென்றோம். லாரியின் பின்னால் கட்டி. அவன் காரை ஓட்ட, நான் முன்னால் ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டேன். கார் இழுபட்டு எம் பின்னால் வந்தது.
“இரண்டு நாட்கள் ஆகும்…”.
மாலையே என்னை அழைத்து செல்ல அந்த ஆட்டோவும் வந்து சேர்ந்தது. ஆட்டோவில் இருந்து எனது ஜுனியரும் ஆட்டோ ஓட்டியும் இறங்கி காரில் இருந்த எனது பொருட்களை எடுத்து ஆட்டோவில் அடுக்கத் தொடங்கி விட்டனர். ஏற்கனவே மாலை நான்கு மணி ஆகிவிட்டிருந்தது.
இப்போது புறப்பட்டால்தான் ஓர் ஏழு மணியளவில் அட்டனை அடையலாம். அதிலும் முக்கியம், இந்த காட்டைத் தாண்டியாக வேண்டும், வெளிச்சம் இருக்கும் போதே… இருட்டிவிட்டால் அவர்கள் கூறிய யானைகள் வந்தாலும் வரும்.
ஆட்டோ புறப்பட்டுச் சற்று தூரம் சென்றதும், அடியில் இருந்து கர்ண கடூரமான சத்தம் கிளம்பிற்று. ஆட்டோ ஓட்டி ஆட்டோவை பாதை ஓரமாக நிறுது;தினான். அடியில் பார்த்தான்… சுற்றி சுற்றி வந்தான். பின் கூறினான்: “சூடு. சுட தொடங்கி விட்டது. ஆட்டோவுக்கு கிரீஸ் போட மறந்து விட்டேன்… ஆறினால் சரியாகி விடும்”. காத்திருந்தோம். இடபுறமாய் குன்று. வலப்புறமாய் தண்ணையான நிலம். ஆனால், இருபுறமும் அடர் காடுதான்… யானை வந்தால்… ஆட்டோ ஆறியவுடன், மீண்டும் புறப்பட்டோம். சப்தம் இப்போது ஓரளவு அடங்கி இருந்தது. ஆனால் கிரீஸ் போட்டேயாக வேண்டும். இறுதியில், சத்தத்துடன், ஒருவாறு காட்டை நீங்கி விட்டோம். ஒரு வளைவில் கராஜ். ஆட்டோ மெதுவாக சென்று அதன் முன்னே நின்றது. மெக்கனிக் ஒருவன் வெளியே வந்தான். ஏதோ கதைத்தபின், பம்பிற்கூடாக கிறீஸ்ஸை ஆட்டோவின் மூன்று சக்கரங்களுக்கும் அடித்தான். நான் செலவை எடுத்து கொடுப்பதற்கு தெண்டித்தேன். ஆனால், ஆட்டோ ஓட்டி இளைஞன் மறுத்தான். “இல்லை… இல்லை… ஒரு முன்னூறு ரூபாயே வரும்… நானே கொடுக்கின்றேன்…”. ஆனால் கராஜ்காரன் ஐநூறு ரூபாவை அவனிடம் கேட்டான். ஆட்டோ ஓட்டி ஒன்றும் பேசாது அப்பணத்தை தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான்.
காட்டை விட்டு நீங்கி விட்டோம் என்ற நினைப்பு மன நிம்மதியைத் தந்தது. இளங் குளிர் காற்று வேறு வீசி அடிக்க தொடங்கி இருந்தது. நாம் களைத்து விட்டோம். சாலையின் ஓரமாய்க் கண்ட சிற்றுண்டி சாலையைப் பார்த்தவுடன், தேனீர் அருந்தி செல்வோமா என்றேன் - இருட்ட தொடங்கி விட்டதையும் பொருட்படுத்தாமல்.
“வரும் போது யானை” – தொடங்கினான் ஆட்டோ ஓட்டி.
ஜுனியர் வெறுமனே தலை அசைத்தவாறு சிரித்தான்.
''இந்த பகல் நேரத்திலா?”.
''ஆம்'’ என்றான் ஆட்டோ ஓட்டி.
'' பாலத்தின் அருகிலேத்தான்'' . எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது.
“முதலில் கண்டது பெரியது… மண்ணிற பூதம் போன்று பாதை ஓரமாய் நடந்தபடி சென்றது. அந்தளவு பெரிய யானைகளை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. செம் மண்ணிற பூதமேதான்… பருத்த கால்களுடன்… ஆறடிக்கு மேலிருக்கும்… தடித்து… தும்பிக்கையுடன்… ஆடி ஆடி… சற்று தொலைவில் ஓர் சிறிய கார். பம்மியபடி ஊர்ந்தது. சற்று நேரத்தில் வேகம் பிடித்து சடாரென அவ் யானையை தாண்டி சென்றது… இதனை, எதிர்ப்பார்த்திருந்த நான் கார் வேகத்தை அதிகரித்து சீறி பாய்ந்து யானையை தாண்டத் தொடங்கியதும், நானும் எனது ஆட்டோவின் வேகத்தை உச்சத்துக்கு கொண்டு போய் யானையைத் தாண்டி விட்டேன்… அப்பா… அதற்கு பிறகுதான் மூச்சே வந்தது. யானை எம்மை அடித்தாலும் அடித்திருக்கும்… அப்படித்தான் எங்களை ஒரு தினுசாக பார்த்தது. அதன் பிறகு சிறிய ஒரு யானை… பாதை ஓரமாய், சாவதானமாக புல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தது…. நின்று ஒரு படம்? இவரைக் கேட்டேன். காலில் போட்டு மிதிக்கும். நானும் பேசாமல் ஓடி வந்து விட்டேன்…”. கணநேரம் இவ்விரு யானைகளையும் நான், என் மனக்கண்ணில் கண்டேன். பாலத்தில், கேனுடன் தனியாக வரும் வேளையில் இவை வந்திருந்தால் - மண்ணிற கரும் பூதங்களாய், பருத்த தமது கால்களை ஒன்றன்பின் ஒன்றாய் தூக்கி வைத்து, தும்பிக்கைகளையும் ஆட்டியபடி…உண்மைதான்… அந்த மின்சார ஊழியர்கள் என்னை வெறுமனே பயமுறுத்தி இருக்கவில்லை. சுட்டெரிக்கும் இந்த பகல் வேளைகளிலும்…. தேனீர் அருந்திவிட்டுப் புறப்பட்டோம்.
ஏற்றம். நீண்ட நெடிய மரங்களை தாண்டி விட்டோம். இப்போது, தேயிலை மலைகள். தோட்டங்கள்… ஆட்டோ இப்போது செங்குத்தாக அமைந்திருந்த பாதைகளில் ஏற தெடங்கி இருந்தது. எமக்கு முன்னால், ஒரு கொழுந்து லாறி. சாணம் அடுக்குவதை போல், இறுக்கி தேயிலையை மூட்டைகளை அடுக்கி இருந்தார்கள். அந்த ட்ரிப்பரின் உச்சியில் இரு தொழிலாளர்கள். உல்லாசமாக அவர்கள் கதைத்தபடி… இது அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கலாம். இந்த மூட்டைகளை அவர்களே லாறியில் அடுக்கியும் இருக்கலாம். கிட்டத்தட்ட நூறு பெரிய பெரிய மூட்டைகள். வாகனத்தின் உச்சியில், சிம்மாசனம் போன்று, அமர்ந்து கதைத்தப்படி வீசி அடிக்கும் மென் காற்றை சுவாசித்து, சென்று கொண்டிருக்கின்றார்கள்.
வீசியடிக்கும் இந்த அருமை காற்றின் சுகத்தை அனுபவித்தவாறே அவர்கள் ஆயாசத்துடன் பயணிப்பதாய் இருக்கும். ஆட்டோ, லாரியை தாண்ட முயற்சித்த போதிலெல்லாம், அதற்கு லாரிகாரன் இடம் தந்தானில்லை. அந்த லாறியும் கூட, ஏற்றத்தில், குறிப்பிட்ட வேகத்துடனேயே சென்றது. ஓர் இருபது கிலோ மீற்றர் ஏறி இருப்போம். இப்போது மெல்லிய தூரல். கூடவே பனி புகாரும் வீச தொடங்கி விட்டது. ஆட்டோ ஓட்டி ஆட்டோவை, பாதை ஓரமாய் நிறுத்தி ஆட்டோவின் உச்சியில், பக்கங்களில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ரப்பர் தடுப்பு திரைசீலைகளை இழுத்தெடுத்து இரு புறமாயும் மூடினான்.
இனி, எந்த ஒரு குளிர் காற்றும் உள்ளே நுழையாது… தூறலும் தெறிக்காது. நானும் ஜக்கட்டை தேடி கழுத்து வரை காலரை இழுத்துவிட்டு, செயினையும் இறுக பூட்டிக் கொண்டேன். இப்போது பூரண இருட்டு. மழையும், காற்றும், பனியும் இப்போது, சுழன்று சுழன்று அடிக்க தொடங்கி விட்டது. நேரம் செல்ல செல்ல, மழையின் வேகமும், காற்றின் வேகமும் சொல்ல முடியாத அளவு அதிகரிக்க தொடங்கி விட்டது. ஆட்டோவின் திரைசீலை காற்றில் அப்படியே படபடத்தது. கவிழும் அந்த மழை இருட்டில், ஆட்டோ ஓட்டி ஆட்டோவை சிரமப்பட்டே ஓட்டினான் எனலாம். காற்றின் வேகம் இப்போது உச்சத்தை தொடுவதாய் இருந்தது. திரைசீலையை அப்படியே இரண்டாய் உடைத்து விட போவதாகவும் ஆட்டோவை அப்படியே தூக்கி, குப்புற அடித்து விட போவதாகவும் காற்று இப்போது உரக்க தொடங்கி இருந்தது. ஒரு கணத்தில், ஆட்டோ ஓட்டி, ஆட்டோவை மேலும் செலுத்த முடியாமல், பாதை ஓரமாய் சென்று ஓரங்கட்டி நிறுத்தினான். என்ன இது? ஊதல்காற்றா இல்லை புயல்காற்றா… குளிர் இப்படி நடு நடுங்க வைக்கின்றதே… மழையும் காற்றும் ஒன்றாய் கலந்து… பாதை தெரியாமல் இருளில் ஆட்டோ ஓட்டி தடுமாறி நிறுத்தினானா அல்லது முடியாது மூச்செடுக்க நிறுத்தினானா என்பதும் புரியாமல் இருந்தது. ஆட்டோவின் முன் கண்ணாடி சுவர்களிலும் பெரிய, பெரிய மழை துளிகள் சத்தத்துடன் சுளீரென அடித்து, அப்படியே தெறிக்க தொடங்கி இருந்தன. ஆட்டோ ஓட்டி, மனம் கேளாது ஆட்டோவை மீண்டும் முடுக்கினான். தட்டு தடுமாறி, குளிரிலும் மழையிலும் ஓர் வழியாக நாம் தலவாக்கலை நகரை அடைந்து விட்டோம். மழைசாரலும் சூறை காற்றும் இப்போதுதான் தணிய ஆரம்பித்து இருந்தது. எமது ஜுனியரை, தலவாக்கலையில் இறக்கி விட்டோம். நேரம் சென்றது. பெருமூச்சையும் விட்டோம். ஆட்டோ, இப்போது, மீண்டும் படுவேகத்தில் இருட்டை கிழித்தப்படி செல்லத் துவங்கி விட்டது… மழை முற்றாக நின்றிருந்தது.
அந்நேரத்தில்தான் அவர்களைக் கண்டோம். ஆம், எமக்கு முன்னால் சென்ற லாறியில்…இவ்வளவு தூரம் இந்த லாறி பயணிக்கின்றதா? இங்கே என்ன செய்கிறது? தேயிலை மூட்டைகளை இவர்கள் எங்கே எடுத்து செல்கின்றார்கள்? எனக்கு தூக்கி வாரி போட்டது. தேயிலை மூட்டைகளை ராகலையிலேயே ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் இறக்கி இருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். இவ்வளவு தூரமா? நம்ப முடியவில்லை.
லாறியை, ஆட்டோ தாண்டும் போது, என் கண்கள் லாரியின் உச்சியை கூர்ந்து பார்த்தது. ஆம் அந்த இரு உருவங்கள், இப்போது இருட்டில், நன்கு நனைந்து, தோய்ந்து, ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி, குலுங்கியபடி வீசிய காற்றிலும் மழையிலும் நனைந்தவாறு பயணித்திருப்பது நன்றாய் தெரிந்தது.
நனைந்து, மழையிலும், குளிரிலும், வீசி அடித்த சூறை காற்றிலும் இந்த மனிதர்கள் இப்படித்தான் லாரியில் தேயிலை மூட்டைகளின் மத்தியில், பதுங்கி இருந்தனரா? பாலத்தின் நடுவே, யானைகள் வருவதாக கற்பனை செய்திருந்தேனே. ஆனால், இங்கே, மனிதன், இப்படி குளிராய் அடிக்கும் ஊதல் காற்றையும் மழையையும் ஒன்றாய்த் தாங்கியவனாக...இந்த தேயிலை மூட்டைகளை நாளையும்
சுமந்து வரத் தயாரான மனிதனாக... இதுவரை , தனது உழைப்பால் உருவாக்கிய தோட்டங்களை எல்லாம் மௌனமாய்க் கட்டி காப்பவனாக... வானுயர்ந்த இந்த மரங்களை எல்லாம் இங்கே வேருடன் பிடுங்கி எறிந்த அசுரனாக...ஆம். எனது சிந்தனை இப்படிதான் தறிகெட்டு ஓட தொடங்கியிருந்தது ....."
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.