
ஜிம்னாஸ்டிக் அரங்கின் உள்ளே ஒளிரும் மின் விளக்குகள் அழகாக அலங்கரித்திருந்தன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு—எல்லாத் திசைகளிலும் இருக்கைகள் அணிவகுத்திருந்தன. அவை கீழிருந்து மேல்நோக்கி படிநிலைகளாக அமைந்திருந்தன.
அரங்கின் மையப்பகுதியில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கேற்ற இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரிவைச் சார்ந்த உபகரணங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. முழு அரங்கும் குளிர்சாதன வசதியுடன் முறையாக இருந்தது.
குளிர் இருந்தாலும், விளையாட்டில் பங்கேற்பவர்களின் முகத்திலும் கைகளிலும் வியர்வைத் துளிகள் காணப்பட்டன. ஆனால் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அந்தக் குளிர் உடலில் ஊசி ஏறுவது போல இருந்தது.
நான்கு திசைகளிலும் பல நாடுகளின் கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அரங்கின் மையப்பகுதியில் இந்தியாவின் கொடி மிகவும் அழகாகவும் பிரம்மாண்டமான முறையிலும் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த அரங்கில் கிழக்கு பகுதியில் வரதனும் மஞ்சுலாவும் அமர்ந்திருந்தனர்.
அரங்கிலிருந்த ரெஃபரியின் விசில் ஒலி கேட்டது. விளையாட்டு வீரர்களின் ஓடும் சப்தம் கேட்டது. மெத்தையில் கால்கள் பதியும் “தப்” சத்தமும், ரிங்ஸின் மெல்லிய “கீச்” சுழற்சி சத்தமும் சேர்ந்து ஒரு சூழலை உருவாக்கின. இவை அனைத்தும் பார்ப்பவர்களின் மனதில் ஏதோ ஒரு உற்சாகத்தை எழுப்பின. அவர்களே விளையாட்டில் பங்கேற்கும் மாதிரி தோன்றச் செய்தது அந்த அரங்கு.
விளையாட்டு ஆரம்பமாகும் முன்னர், பயிற்சிக்கு வீரர்கள் செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது தங்கள் கோச் மற்றும் பெற்றோரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தனர். அங்கேதான் வரதனும் தனது மகன் மனோஜுடன் பேசிக்கொண்டிருந்தார். சில விஷயங்களை மனோஜுக்கு வரதன் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
“மனோஜ், கவனமா இருக்கணும்; இல்லனா கீழ விழுந்துடுவ. பாத்துடா, எங்காவது இடிச்சுக்க போற.”
“சரிப்பா, நான் கவனமாத்தான் விளையாடுறேன். நீ இங்க இருந்துகிட்டு கத்திக்கிட்டே இருந்தா எப்படி? நான் எப்படி இந்த ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் என் முழு கவனத்தையும் செலுத்துறது?”
“ஏம்பா, சின்ன வயசுல இருந்து இதையே கேட்டுகிட்டு இருக்கேன். டேபிள் கார்னர்ல இடிச்சுக்காத, கட்டிலுல இருந்து விழுந்திடாத, சேர் சாயப் போகுது, வண்டிய மெதுவா ஓட்டு, ஓடிப்போய் பஸ்சில் ஏறாத, தண்டவாளத்தை கிராஸ் பண்ணும் போது பாத்து பத்திரமா கிராஸ் பண்ணணும்னு எவ்வளோ தடவத்தான் சொல்லுவீங்க? கொஞ்சம் எனக்குத் தெரியும்பா,” என்றான் மனோஜ்.
பின் அவன் வரதனிடம்,
“அப்பா, இப்ப நான் பயிற்சி விளையாட்டுல விளையாடவா இல்ல நீ என்ன சொல்லுறேன்னு பார்க்கவா? அதான் கோச் இருக்காருல்ல; அவரு பார்த்துக்கிட்டேதான் இருக்காரு.
அவரு நான் என்ன தவறு பண்ணுறேன்னு என்கிட்ட சொல்லுவாரு. நீ இப்படி கத்திக்கிட்டே இருந்தீன்னா அவருக்கும் தொந்தரவா இருக்கலாம்.
இல்ல, என்ன மாதிரி மத்த பசங்களும் வந்திருக்கிறாங்க; அவுகளுக்கும் கஷ்டமா இருக்கலாம். கொஞ்சம் நேரம் நீ அமைதியா இருக்கப் போறியா இல்லையா?
இதையெல்லாம் நான் பயிற்சில இருக்கும் போது உனக்கும் சொல்ல முடியாது; அதான் இப்பவே உன்கிட்ட சொல்றேன்.”
“அப்பா, நான் வளர்ந்துட்டேன். இன்னுமா நீ என்ன கொழந்தை மாதிரி பார்க்கிற!” என்றான் மனோஜ்.
“அது அப்படி இல்லடா, மனோஜ். நீ எங்களுக்கு ஒரே புள்ள. உனக்கு எவ்வளவு வயசு ஆனாலும் நீ எங்க இருவருக்கும் கொழந்தைதான்டா; இதை உன்னால மறுக்க முடியுமா, சொல்லு.”
“ஓக்கே பா, நான் ஒத்துக்கறேன். நான் உங்க புள்ளத்தான், அதுவும் ஒரே புள்ளத்தான். அதுக்குன்னு நாலு பேரு இருக்கிற இடத்தில இப்படி கத்தினா எப்படி?
இப்ப நான் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு உள்ளே போறேன்; நீ கத்தாம இருக்கணும். நான் கவனமா, ஜாக்கிரதையா ஜிம்னாஸ்டிக் பயிற்சி கிளாசை முடிக்கறேன்,” என்று சொல்லி உள்ளே சென்றான் மனோஜ்.
மனோஜ் எவ்வளவு முறை வரதனிடம் சொன்னாலும், தன் மகன் ஜிம்னாஸ்டிக் அரங்குக்குள் நுழைந்தவுடனே வரதனுக்கு ஒரு பதற்றம் பற்றிக்கொண்டது. மலை உச்சியிலிருந்து கீழே பார்க்கும்போது ஒரு வித பதற்றம் மனதில் ஏற்படுமே. அதுபோலத்தான், மனோஜ் பயிற்சி செய்யும் போது வரதனின் மனதிலும் அது உண்டானது.
இப்ப மனோஜ் கல்லூரியில் இஞ்சினியரிங் டிகிரி முதலாம் ஆண்டு படித்து வருகிறான். அவனுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதுவும் ஜிம்னாஸ்டிக் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பாரலல் பார், பாலன்சிங் பார், ரிங்ஸ் போன்ற பிரிவுகளில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறான்.
ஆறு வயசுல இருந்து டிரைனிங் சென்டருக்கு கூட்டிக்கிட்டு போவதும் வருவதுமாக இருந்தனர் வரதனும் மஞ்சுலாவும். அப்ப இருந்து இப்ப வரைக்கும் வரதனின் போக்கில் மாற்றம் இல்லை.
சில சமயம் மனோஜ் வரதனிடம் கேட்பான்:
“ஏம்பா, நீதானே சொல்லியிருக்க ‘ஐந்துல வளையாதது ஐம்பதுல வளையாது’ன்னு. அது சரிதான் போல. ஏன்னா ஆறு வயசுல நான் உன்னை எப்படி பார்த்தேனோ, அப்படியே உன்னோட குணத்தை மாத்திக்காம இப்பவும் இருக்க. ஏம்பா, கொஞ்சம் உன்னோட குணத்தை மாத்திக்கலாமில்ல?”
“ஏன்டா, இப்ப என்னோட குணத்தை மாத்தி நான் என்ன சாதிக்கப்போறேன்? என்னோட கவலை எல்லாம் உன்ன நினைச்சுதான்.”
“டேய் மனோஜு, நீ ஒவ்வொரு முறையும் அந்த பாரலல் பார்ல பயிற்சி செய்யும் போதும் சரி, பாலன்சிங் பார்லையும் சரி, ரிங்ஸ்ல பல்டி அடிக்கும் போதும்… ஒழுங்கா நீ லேண்ட் ஆகணும்னு என் மனசு படபடன்னு அடிச்சுக்குது.
ஏரோப்பிளைன் லேண்ட் ஆகும் போது மக்கள் சிலர் தங்களது காதுகளைப் பொத்திக்கொள்வார்கள்; மேலும் சிலர் முன் இருக்கையின் மீது தங்களது தலையைச் சாய்த்துக்கொள்வார்கள். அதைப் போலத்தான் எனக்கும் ஒருவித கலக்கம், பயமெல்லாம் மனதைச் சுற்றிக்கொள்கிறது.”
“சரி, நீ போய் உன் பயிற்சியை தொடங்கு; நான் அமைதியா பாக்கறேன்.”
அவனுடைய கனவு, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பங்கு கொள்ளவேணும் என்பதே. வரதனுக்கு, ஒலிம்பிக்குக்கு செல்லணும்னா எவ்வளவு உழைக்கணும் என்பதை மனோஜ் ஆறு வயசா இருந்தப்போ அன்றைய கோச் வரதனுக்கும் மஞ்சுலாவுக்கும்
முதல் நாளே கூறியது இப்ப கண்முன்னே வந்து போனது. வரதன் அன்றைய கோச் சொன்னதை நினைவுக்குள் வரவழைத்து, மீண்டும் மனசுக்குள்ள அசைப்போட ஆரம்பிச்சார்.
அப்பவே அன்றைய கோச் சொன்னது:
“கடின உழைப்பு போடணும். சிறு வயதிலிருந்தே பயிற்சியைத் தொடங்கி, டிஸ்ட்ரிக்ட், ஸ்டேட் அளவிலான போட்டிகளில் சிறந்து விளங்கி, நேஷனல் அளவிலான குழுவில் இடம் பெறணும்.
இன்டர்நேஷனல் விளையாட்டு போட்டிகளில் ஒன்றான வேர்ல்டு சாம்பியன்ஷிப் பிரிவில் பங்கு கொள்ளணும்; இல்லனா ஏசியன் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு தேர்வாகி, நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களை (Qualifying Scores) கிடைத்தால் மட்டுமே ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும்.”
அன்று மனோஜுடைய கோச் சொன்னது அனைத்தும் மனக்கண்ணில் ஒரு படம் ஓடுவது போல இருந்தது வரதனுக்கு.
மீண்டும் சுய நினைவுக்கு வந்த வரதன், மஞ்சுலாவை பார்த்து,
“ஏம்மா, கொஞ்சம் தண்ணி கொடு,” என்று கேட்டார்.
“ஏங்க, இந்தாங்க… குடிங்க முதல்ல. நீங்க கத்துற கத்துக்கே தண்ணி குடிக்கத்தான் வேணும். அவன் சொல்றதையும் கொஞ்சம் யோசிக்கலாமில்ல!
நீங்களும் பயந்து, மத்தவங்களையும் பயப்பட வைக்கிறீங்களே; இது நியாயமா?” என்றாள் மஞ்சுலா.
“என் மனசு படபடன்னு அடிச்சுக்குது.”
“ஏங்க, ஏன் உங்க மனசு படபடன்னு அடிச்சுக்கணும்? அவன் பயிற்சி செய்யும்போது அவனோட கோச் கூடவே இருக்காரு. பிஸியோத்தெரபிஸ்டும் உடன் இருக்காரு.
ஆம்புலன்ஸ் ஒண்ணு வெளியில காத்திருக்குது. மெடிக்கல் எமர்ஜென்சி கிட் உள்ளேவே இருக்கு. நல்லா பாருங்க; ஒரு அடுக்கு இல்ல—ரெண்டு, மூணு அடுக்கு மெத்தை விரிக்கப்பட்டிருக்கு.
உங்களுக்கு நியாபகம் இருக்கா? நீங்கதான் சொன்னீங்க, உங்க சின்ன வயசுல மதில் சுவர் மேல ஏறி நின்னுக்கிட்டு “தொப்பக்கடீர்”னு குதிப்பீங்களாம். அது போலதான் இதையும் நீங்க புரிஞ்சுக்க வேண்டும்.
மனசு பதட்டப்படாம; நிதானமா வச்சுக்கோங்க,” என்று சொல்லி முடித்தாள் மஞ்சுலா.
அவள் சொல்லி முடிக்கறதுக்குள்ளே, உள்ள பயிற்சியில் இருந்த மனோஜ் ரிங்ஸ்ல சுத்தி சுத்தி பல்டி அடிக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகிறான். உடனே வரதனோட இதயம் ஒரு நொடி நின்றது போல இருந்தது. அடுத்த நொடி படபடவென்று ஓட்டமெடுக்க ஆரம்பிச்சது. நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.
மனசு கேட்காம வரதன் கத்தப் போனார். உடனே மஞ்சுலா அவரோட கைகளைப் பிடிச்சு அமுக்கினாள். மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், கத்த வாயைத் திறந்தவர் மௌனமாக மனோஜையே பார்த்தபடி இருந்தார்.
“நல்லா பாருங்க; கீழே மெத்தை இருக்கு. கோச்சும் பிஸியோவும் உடன் உள்ளே இருக்காங்களே. கத்த வேண்டாம்; அவங்க பார்த்துக்குவாங்க,” என்றாள் மஞ்சுலா.
வரதனோட கண்கள் குளமாகிடுச்சு. கண்களும் உடனே சிவந்து போச்சு.
அந்த பயிற்சி கூடத்தில் இருந்த முதல் உதவி குழுவினரும், மனோஜின் கோச்சும், பிஸியோவும் ஓடிப்போய் மனோஜுக்கு என்னன்னு பார்த்தனர். முதல் உதவியும் அளித்தனர். விழுந்த வேகத்தினால் மனோஜுக்கு உடம்பில் சில பகுதிகள் வலித்தது. அதற்கு ஆயின்மென்ட் தடவி மசாஜ் செய்தனர் முதல் உதவி குழுவினர். வலி நிவாரண ஸ்பிரேவும் வலி உள்ள இடத்தில் அடித்தனர்.
பின் மனோஜை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு, கோச் வெளிவந்து மனோஜின் அப்பாவிடம் சென்றார்.
“சார், மேடம், ஒண்ணுமில்ல. சின்ன மிஸ்டேக் பண்ணியிருந்தான். அதனாலதான் அவன் கீழே விழுந்துட்டான்.
நான் அவன் செய்த மிஸ்டேக்கை அவனுக்கு புரியும் மாதிரி சொல்லிட்டேன். இனி அவன் மீண்டும் அந்த மிஸ்டேக்கை செய்யமாட்டான் என்று நம்புகிறேன்,” என்று கூறிய கோச், வரதனைப் பார்த்தார்.
“சார், என்ன ஆயிப் போச்சுன்னு உங்க கண்ணெல்லாம் கலங்கிப்போயிருக்கு. பாதுகாப்பு உபகரணம் இல்லாம இந்த விளையாட்டை மேற்கொள்ள முடியாது,” என்று சொல்லியவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.
“சார், இதை நான் சொல்லியே ஆகணும். மனோஜ் உங்களுக்கு ஒரே புள்ள. அவன் மேல உங்களுக்கு அன்பும் பாசமும் அதிகமாத்தான் இருக்கும்.
ஆனா இந்த மாதிரி அவனை உங்க கைக்குள் அடைத்து வளர்க்காதீங்க. அவனை அவனாக யோசிக்க விடுங்க. உங்க பாசம் அவனை கட்டிப்போடும். அவன் விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்த முடியாது.”
“கோழி முட்டையை அடைக்காக்கும். ஆனா முட்டையிலிருந்து வர்ற குஞ்சு தானாகத்தான் இந்த பூமியைப் பார்க்கும்.
அது போல மனோஜை ஃப்ரீயா விடுங்க. அவன் அடிபட்டு கத்துப்பான்.”
“மைக்கேல்!” என்று சத்தமா கூப்பிட்டார்.
சத்தம் கேட்டு மைக்கேல், கோச் இருக்கும் இடத்தை நோக்கி வந்தான்.
கோச் உடனே வரதனைப் பார்த்து,
“சார், இவனை பாருங்க. இவனுக்கு அப்பா அம்மா யாரும் அவனுடன் இல்லை. அவன் தனியா ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான்.
இவன் எப்படி விளையாடுறான் என்று பார்த்தீர் அல்லவா? பதட்டமில்லாம கூலா விளையாடுறான். அவன் அவனை நம்புறான். முழு தன்னம்பிக்கையோட விளையாடுறான்.”
“ஆனா மனோஜ் எப்பவுமே ஒருவித தயக்கத்துடனே விளையாடுறான். அதற்கு காரணம் உங்க பாசம். பாசம் வைக்க வேண்டியதுதான்.
ஆனா ஒரு வயசுக்கு மேல வளர்ந்தவுடனே பெற்றவர்கள் தள்ளி நின்னு வேடிக்கைத்தான் பார்க்க வேண்டும். அவனை ஃப்ரீயா விடுங்க. பிறகு பாருங்க—அவன் எப்படி பர்ஃபார்ம்பண்றான்னு,” என்றார்.
வரதனும் மஞ்சுலாவும் அவர் சொன்னதை கேட்ட பிறகு மௌனமாக இருந்தனர். அந்த மௌனம் அவர்களது சம்மதத்தை கோச்சிடம் தெரிவித்தது போல இருந்தது.
பின் அதே மௌன நிலையில் அங்கிருந்த ஒலிம்பிக் போஸ்டரைக் கவனித்தனர். மீண்டும் தங்களது மகனை—மனோஜை—பார்த்தனர்.
மனோஜ் இந்த முறை நிதானமாகச் சுழன்று, ஒரு பல்டி அல்ல; இரண்டு மூன்று பல்டிகளை அடித்து, மெத்தையில் உறுதியாக இறங்கினான். இதைக் கவனித்த கோச் கைகளைத் தட்டி, தலையாட்டி, அவன் செய்தது சரியானதே என்று தன் செய்கைகளின் மூலம் அவனுக்கு உணர்த்தினார்.
மனோஜின் முகத்தில் சின்ன புன்னகை தென்பட்டது.
அன்று பயிற்சி முடிந்து மனோஜ் வெளியே வந்தான். அவன் அணிந்திருந்த உடைகள் அனைத்தும் வியர்வையால் நனைந்திருந்தன. மனோஜின் நெற்றியிலும் வியர்வை துளிகள் இருந்தன. கைகளும் கால்களும் சோர்வாகக் காணப்பட்டாலும், அவன் கண்களில் நம்பிக்கை இருந்தது.
வரதன் வழக்கம் போல “ஜாக்கிரதை” சொல்லவில்லை—இந்த முறை. சிறிது நேரம் அமைதியாக அவனைப் பார்த்தார். பிறகு மெதுவாக,
“நல்லா பண்ணினப்பா—வாழ்த்துகள்!” என்றார்.
அந்த வார்த்தையில் பயம் இல்லை. ஒரு நம்பிக்கை இருந்தது.
அவன் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் பயிற்சிக்குச் செல்வதைப் பார்த்த வரதனும் மஞ்சுலாவும், அவனது கனவு மெய்ப்பட தன்னம்பிக்கையுடன் மீண்டும் பயிற்சிக்கு திரும்புவதைப் பார்த்து, மனதளவில் பெருமிதம் கொண்டு நின்றனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - செயற்கை நுண்ணறிவு சாட் ஜிபிடி.