கண்விழித்த விக்ரமின் முகத்துக்கு முன், இரண்டு கோடுகளுடன் இருந்த test kitஐ ஊசலாட்டியபடி மலர்ந்து சிரித்தாள் வர்ஷி. “Oh, my god!” என்றவண்ணம் குதித்தெழுந்தான் அவன். எழுந்தவேகத்தில், உணர்ச்சிப்பெருக்குடனான முத்தங்களை அவள் மேல் மழையாகப் பொழிந்தான். அவளின் நரம்பு முனைகள் ஜில்லிட்டன. பரவசமாகிப்போன அவளுக்குள் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. அவனின் இதயம் சலங்கைகட்டி ஆர்ப்பரித்தது. அந்த மகிழ்வின் உச்சம் மிகுந்த நெகிழ்ச்சியுடனான கலவிக்கு அவர்களை அழைத்தது. முதல் கலவியைவிட இது இத்தனை மகிழ்ச்சியானதாக இருக்கிறதே என அவர்கள் கிறங்கிப்போனார்கள். உள்ளங்காலிலிருந்து உச்சம்தலைவரை அவளுக்குச் சிலிர்த்தது.

“எனக்குள்ள ஒரு உயிர்! நம்பேலாமலிருக்கு. I love you so much… Oh, my darling, we made it happen!” அவனுக்குள் தன்னை அவள் இறுகப் பிணைத்துக்கொண்டாள்.

“சாத்தியமில்லை எண்டார் டொக்டர், ஆனா, நாங்க சாத்தியப்படுத்தியிருக்கிறம்! I am ecstatic! We will celebrate it the whole day!” மீளவும் கலவிக்குத் தயாரானான் அவன்.

அப்போது அவளின் தொலைபேசி சிணுங்கியது. அவர்களோ மீண்டும் மீண்டும் முத்தமிடுவதும், கட்டியணைப்பதுமாகக் கட்டிலில் புரண்டுகொண்டிருந்தார்கள். ஆனால், தொலைபேசியோ ஓய்வதாய் இல்லை. கடைசியில், விக்ரமைத் தனது இடது கையால் அணைத்தபடி, வலது கையால் தொலைபேசியை எட்டியெடுத்தவள், “அப்பா!” என்றாள் குதூகலமாக.

“வர்ஷி, அம்மாக்குச் சூலகத்திலை... கான்சராம்...,” சொற்களிடையே இடைவெளி விட்டுவிட்டு அப்பா சொன்னார்.

“என்ன? கான்சரோ?...” அவளின் குரல் அதிர்ந்தது.

“நாலைஞ்சு நாளா சரியான முதுகு வலியில அவதிப்பட்டுக்கொண்ட்டிருந்தா, ஒண்டும் சாப்பிடுறதுமில்லை. என்ன ஏதெண்டு பாப்பமெண்டு ஆஸ்பத்திரிக்குப் போனனாங்க. Ultrasound செய்தவை. அதிலை கான்சரெண்டு காட்டுதாமெண்டு டொக்டர் சொல்றார்,” எதற்கும் அழாத அப்பா அழுதார்.

“ஓ, அப்பா… அம்மாட்டைப் போனைக் குடுங்கோ? அம்மா, இண்டைக்கே நான் வெளிக்கிடுறன், ஒண்டுக்கும் யோசிக்காதேயுங்கோ.” அம்மாவின் விம்மல்தான் அவளுக்குக் கேட்டது.

“கான்சரா இருக்கலாமெண்டுதானே சொன்னவை. நல்லதை நினைப்பம். கொழும்புக்குக் கூட்டிக்கொண்டுபோய்ச் சோதிச்சுப் பாப்பம்.” அவளின் கண்ணீரைத் துடைத்தபடி அவளை அணைத்து ஆறுதல் சொன்னான், விக்ரம்.

X X X

வருகிறேன் எனச் சொல்லிவிட்டாலும், அதிசயமாகக் கருக்கட்டியிருக்கும் தன் நிலையைப் பற்றி யோசிக்க வேண்டாமா என்ற குழப்பத்திலான திரிசங்கு நிலை அவளை ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்தது. அடுத்த கணம் கண்ணீர் நிறைந்திருந்த கண்களுடனும், கனத்த மனத்துடனும் பயணப்பையை ஆயத்தம்செய்யத் தொடங்கினாள் அவள்.

வாழ்க்கையின் இடுக்குகளுக்குள் ஒளிந்திருந்த விசித்திரங்களின் பாதிப்பிலிருந்து மீளமுடியாத இரண்டும் கெட்டான்நிலையில், அன்றிரவு மெல்பேர்னிலிருந்து இலங்கை நோக்கிப் புறப்படும் விமானத்தில் இரண்டு ரிக்கற்றுக்களைப் பதிவுசெய்து கொண்டான், விக்ரம். பொறுப்பின் கனம் அவன் தோள்களை அழுத்தியது.

சிறிதுசிறிதாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கீரை, peppers, mushroom கலந்திருந்த பாத்திரத்துக்குள், நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றினான். பின்னர் அந்தக் கலவையைக் குண்டுத்தோசைச் சட்டியில் ஊற்றிக் குண்டுத்தோசைகள்போலச் செய்தான். வர்ஷிக்குப் பிடித்தமாதிரி நிறையச் சாயமும், இஞ்சியும், ஏலக்காயும் போட்டுத் தயாரித்த பால்த் தேநீருடனும், கிழக்கும் மேற்கும் சந்திக்கும் புள்ளி என வர்ஷி விரும்பிச் சாப்பிடும் அந்த உணவுடனும் அவளிடம் வந்தான் விக்ரம்.

சூட்கேஸ் திறந்தபடியே இருக்க, சட்டை ஒன்றைக் கையில் பிடித்திருந்தபடி சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் வர்ஷி. விக்ரம் அவளின் தோளை மெதுவாகத் தொட்டான். திடுக்கிட்டுத் திரும்பியவள், “தாங்ஸ் விக்ரம். ஆனா, எனக்குப் பசிக்லேல்லை, நீங்க சாப்பிடுங்கோ.” என்றாள்.

“வர்ஷி, பிஸீஸ், எனக்காண்டி ஒரு வாய் சாப்பிடும்,” என்றபடி அவளுக்கு அவன் அவற்றை ஊட்டிவிட்டான்.

“நான் சந்தோஷமாயிருக்கிறது கடவுளுக்குப் பொறுக்கேல்லையா?” சத்தமாக அவள் அழுதாள்.

“எனக்கு நம்பிக்கையிருக்கு, வர்ஷி. கான்சர் எண்டவுடனை முந்திமாரிப் பயப்படத் தேவையில்லை, இந்தக் காலத்திலை அதற்கான சிகிச்சைகள் இருக்கு.”

“இன்னொரு அதிசயம் நடக்கலாமெண்டு நம்புறியளா?” கண்கள் அகல அவனைப் பார்த்தாள் அவள்.

“Yes! அதோடை அங்கையிருக்கேக்கை virtualஆக வேலைசெய்யக்கூடியதா எல்லாத்தையும் தயார்படுத்திக்கொண்டு போவம். அப்பிடியெண்டால் கனநாள் நிக்கவேண்டி வந்தாலும் உதவியாயிருக்கும்.”

கொரோனா வந்ததன் பின் கிடைத்ததொரு வரப்பிரசாதமான வீட்டிலிருந்தும் வேலைசெய்யலாம் என்பதற்கான முன்னேற்பாடுகளில் அன்றைய நாள் போனதே தெரியவில்லை. அப்படியே எப்படி யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கினார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. எல்லாமே ஒரு கனவுபோல இருந்தது.

X X X

விடிந்ததும் விடியாததுமாயிருந்த அந்தப் பொழுதில், தெரு நாய்கள் ஒன்றையொன்று துரத்தியபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தன. தன் வீட்டின் முற்றத்தில் சடைத்திருந்த வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்திருந்த காய்ந்த இலைகளைப் பக்கத்து வீட்டு அன்ரி சரோ கூட்டி அள்ளிக்கொண்டிருந்தா. வர்ஷியைக் கண்டதும், “ஓ, வர்ஷியே, நீ வாறாயெண்டு எனக்குத் தெரியாது, எப்படியிருக்கிறாய் பிள்ளை,” குண்டுகள் தகர்த்திருந்த அந்த வீட்டின் முன்னிருந்த பிய்ந்த வேலிக்குகூடாக ஆச்சரியத்துடன் கேட்டா அன்ரி, “இருக்கிறன் அன்ரி, நீங்க எப்படியிருக்கிறீங்க, நினைச்சாப்போல ஒழுங்குசெய்த பயணம்தான், பின்னேரம் உங்களிட்டை வாறன்,” என்றாள் அவள்.

வீட்டுக்குள் காலடிவைத்த வர்ஷிக்கு மனம் திக்கென்றது. அவளின் மனதின் அடியில் பேணிப் பாதுகாத்துக்கொண்டு வந்திருந்த நம்பிக்கைக் கீற்றின் ஒளி மங்கியது. எதிர்பார்த்ததைவிட அதிகமாக அம்மா ஒடிந்துபோயிருந்தா. அவளைக் கண்டதும் எழுந்தோடி வந்து கட்டிக்கொள்ளும் அம்மா, சாய்மனைக் கதிரையிலே இருந்தபடி உயிர்ப்பின்றிச் சிரித்தா. அந்தச் சிரிப்பின் பின்னிருந்த வேதனையை அவவின் முகம் காட்டியது. அவவின் அடிவயிறு வீங்கியிருந்தது.

அப்பா, அம்மாவின் முதுகை மசாஸ் செய்துகொண்டிருந்தார். சூட்கேசைக் கீழே போட்டுவிட்டு, “அப்பா, விடுங்க, நான் செய்யிறன்,” என மசாஸ் செய்ய ஆரம்பித்தவளின் கண்ணீர் அம்மாவின் முதுகிலும் பட்டுத் தெறித்தது.

“அம்மா, சலமும் அடிக்கடி போகுதே?” பயணத்தின்போது, சூலகப் புற்றுநோய் பற்றி அவள் இணையத்தில் நிறைய வாசித்திருந்தாள்

“பிள்ளை, சலரோகமிருந்தா சலம் அடிக்கடி போகும்தானே, ஆனா கான்சராயிருந்தால் என்ன செய்யிறது? அப்பிடி ஏதெணுமெண்டால் நான் உயிரோடை இருக்கமாட்டன்,” என்றா குரல் தழுதழுக்க.

“அம்மா… நாளைக்கு நாங்க கொழும்புக்குப் போறம், ஸ்பெசலிஸ்ற்மாரைப் பாக்கிறம். அவை சொல்லுறதெல்லாம் செய்கிறம். உங்கடை வருத்தம் மாறும்வரைக்கும் நான் திரும்பிப் போமாட்டன்.” அம்மாவின் கண்கள் கசிந்தன. உதடுகள் விம்மின.

“மாமி, தேவையெண்டா இந்தியாக்கும் போகலாம், பயப்படாதேயுங்கோ,” விக்ரமும் அம்மாவை ஆசுவாசப்படுத்தினான். இருந்தாலும், அம்மாவின் கண்ணீர் நிற்கவில்லை.

“அம்மா, இங்கை என்னைப் பாருங்கோ. ஆறு வருஷமாய் அலைஞ்சம், பாக்காத டொக்டர் இல்லை, செய்யாத சிகிச்சையில்லை. இனிப் பிள்ளை தங்கிறது சாத்தியமில்லை, வேறை வழிகளைத்தான் பாக்கோணும் எண்டினம். ஆனா, அதிசயம் நடந்திருக்கம்மா. உங்களுக்கு இன்னொரு பேரப்பிள்ளை பிறக்கப்போகுது!”

அம்மாவின் முகம் சட்டென மலர்ந்தது.

“ஆ, அப்படியே! அம்மன் எங்களைக் கைவிடமாட்டா.”

“எங்களுக்கு இப்ப நல்ல காலம் அம்மா. உங்களுக்கும் ஒண்டும் நடக்காது.”

“அப்ப, நாளைக்குக் கொழும்புக்குப் போவேண்டாம், அம்மனுக்கு ஒரு அபிஷேகம் செய்யோணும். உன்ர பிள்ளையைப் பாக்கிறதுக்கு முதல் நான் போயிடக்கூடாதெண்டும் நேத்தி வைக்கோணும். ரண்டு மூண்டு நாளிலை போவம், என்ன?”

“சரி, உங்கட விருப்பப்படியே செய்வம்.”

அமாவாசை இருள் வானத்தை அப்பியிருந்தது. படுக்கைக்கு வந்த விக்ரம் “கான்சர் பரவுற வருத்தமெல்லே. கொழும்புக்குப் போறதை ஏன் தள்ளிப்போடுவான்?” என்றான்.

“அம்மான்ர நம்பிக்கையை ஏன் கெடுப்பான், ஏதோ நடக்கிறதுதான் நடக்கும்... எங்களுக்குப் பாராமாயிருக்கக்கூடாதெண்டு அம்மா எவ்வளவு கவனமாயிருந்தா. நேரத்தோடை சாப்பிடுறது, நடக்கப்போறதெண்டு தன்னைக் கவனிச்சுக்கொண்ட அவவுக்கு இப்பிடி ஒரு நிலைமை வந்திருக்கே.”

விக்ரம் வர்ஷியின் தலையை ஆதரவுடன் வருடிக்கொடுத்தான். “அதிகமாய்க் கவலைப்பட்டால் எங்கட குட்டியுமெல்லோ கவலைப்படும். பொசிற்றிவ்வாக நினையும்,” என்றான். சற்று நேரத்தில் அவனின் இதமான அணைப்பில் அவள் உறங்கிப்போனாள்.

அடுத்த நாளிலிருந்து நெல்லண்டை அம்மனுக்கு பால் அபிஷேகம், தும்பளை முருகனுக்கு சகஸ்ராம அர்ச்சனை, பருத்தித்துறை ஞானவைரவருக்கு வடை மாலை, வல்லிப்புரக் கோவிலில் அன்னதானம் என்று சூழவிருந்த கோவில்களை எல்லாம் அம்மா மெதுமெதுவாகச் சுற்றிவந்தா. ஐந்தாம் நாள் வெளிக்கிட முன்பாக, மாமியைக் கூப்பிட்டு, தான் வரும்வரைக்கும் தென்னைக்கு, வாழைக்கு, தோடைக்கு, பூக்கன்றுகளுக்கெல்லாம் இரண்டு நாளுக்கொரு தடவை தண்ணீர் பாய்ச்சும்படி கேட்டுக்கொண்டா.

X X X

வர்ஷியின் அண்ணா தீபன் குடும்பத்துடன் கொழும்பில் இருந்தான். அங்கு புற்றுநோய் நிபுணர் ஒருவரைச் சந்திப்பதற்கு அவர்களுக்கு இரண்டு வார காலமானது. அம்மாவின் நிலை மெல்ல மெல்ல மோசமாகிக்கொண்டிருந்தது, இருந்தாலும் அந்தச் சிங்கள டொக்டரின் செந்தளிப்பான முகமும், சாந்தமான சிரிப்பும் அம்மாவுக்குப் பிடித்துக்கொண்டன.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் தன் பரிசோதனைகளை முடிந்த அந்த நிபுணர், கான்சர் சூலகத்திலிருந்து ஈரல்வரை போய்விட்டது, எனக் குண்டைத் தூக்கிப்போட்டார். நான்காம் கட்டத்துக்கு வந்துவிட்டது என்பதால் சூலகத்தை அகற்றுவதில் இனிப் பயனில்லை. கீமோதிரெபி கொடுத்துப் பார்க்கலாம். ஆனால், அதுவும் எவ்வளவுதூரம் பயன்படுமெனத் தெரியவில்லை என்றார். பரவாயில்லை, செய்துபார்ப்போமென முடிவெடுத்த அவர்கள் அம்மாவுக்கு நோயின் தீவிரம் பற்றி எதுவும் தெரியவேண்டாம் என்றும் தீர்மானித்துக் கொண்டனர்.

வெளியில் பெளர்ணமி நிலவு ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் நட்சத்திரங்களும் தகதக என்று மின்னிக்கொண்டிருந்தன. சென்ற வருடம் இலங்கைக்கு வந்திருந்தபோது பெளர்ணமி நிலவிலிருந்து அம்மாவுடனும் அப்பாவுடனும் தானும் விக்ரமும் கார்ட்ஸ் விளையாடிக்கொண்டிருந்தது வர்ஷிக்கு நினைவுக்கு வந்து கண்களை நனைத்தது.

கீமோ கான்சரை விரைவில் குணமாக்கிவிடுவாவென வர்ஷி அம்மாவுக்கு ஆறுதல் சொன்னாலும், அம்மா ஓயாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருந்தா.

“ஏன் பிள்ளை எனக்கு ஒரே நித்திரைத் தியக்கமாக இருக்குது?”

“நீங்க சாப்பிட்டால்தானே, சாப்பிடாட்டில் களைப்பாயிருக்கும்தானே.” அவள் விளக்கம் சொன்னாள்.

“உனக்கு ஆசைப்பண்டம் ஏதாவது செய்துதரோணும். கொஞ்சம் இனிப்பா, கொஞ்சம் காரமா ..., அதுக்கிடையிலை நான் சுகமாயிடவேணும்” அம்மா கண்ணை மூடிப் பெருமூச்செடுத்தா.

முதலாவது கீமோதிரெபி, மார்ச் 1ம் திகதி, அம்மாவின் திருமண நாளன்று நடந்தது. வழமைபோல் அன்று கோவிலுக்குப் போகமுடியாதது, கீமோதிரெபியைவிட அதிகமான வேதனையை அம்மாவுக்குக் கொடுத்தது. கீமோ முடிந்து மூன்றாம் நாள் வயிற்றைப் பிரட்டுகிறது, கைகள் எரிகின்றன, பாதங்களில் ஊசிகுத்துவதுபோல வலியாயிருக்கிறதென அம்மா துடிதுடித்தா. அந்தப் பக்கவிளைவுகள் இரண்டு மூன்று நாள்களில் போய்விடுமென அவள் அம்மாவுக்கு தேறுதல் சொல்லிக்கொண்டிருந்தாலும், தன் கண்ணீரை வர்ஷியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இரண்டாவது கீமோவின்போது பக்கவிளைவுகள் மேலும் மோசமாக இருந்தன. கான்சரின் பெருக்கத்துடன் கீமோதிரெபியால் போட்டிபோட முடியவில்லை. நாளடைவில் நடக்கும் சக்தியையும் அம்மா இழந்துபோனா. அவவின் வயிற்றில் தேங்கும் திரவத்தை துவாரம்போட்டு எடுக்கவேண்டியிருந்தது. அதற்காக அன்றிரவு அம்மாவை ஆஸ்பத்திரிக்கு சக்கரநாற்காலியில் கூட்டிச்சென்றார்கள். இப்படியாக ஹொஸ்பிற்றல் பில்லுடன் போட்டிபோட்டுக்கொண்டு நோயின் தாக்கமும் அவவில் கூடிக்கொண்டேயிருந்தது.

“மெல்பேர்னுக்குப் போகோணுமெண்டு அடம்பிடிச்சுப் போனாய். பிறகு கலியாணம் நடந்தாப்போலை இனி எங்கை என்னோடை இருக்கப்போறாயெண்டு எனக்குக் கவலையாயிருந்துது. ஆனா, இப்ப அதாலைதான் இப்பிடிச் செலவழிக்கேலுது. எல்லாத்துக்கும் ஏதோவொரு காரணமிருக்குத்தான்,” என்றபடி அம்மா நித்திரையாகிவிட்டா.

எதிர்பாராமல் கொட்டிய பெருமழையும், சுழன்றடித்த காற்றும் வெளியே ஓலமிட்டுக்கொண்டிருந்தன. மழையை ரசிக்கும் வர்ஷிக்கு அந்த மழை எரிச்சலைத்தான் கொடுத்தது.

அடுத்த நாள் காலையில் அவர்களின் யாழ்ப்பாண வீட்டில் தென்னை மரங்கள் சில சாய்ந்து விழுந்துவிட்ட கதையைத் தொலைபேசியில் சொன்ன மாமி, அம்மாவுடன் கதைக்கலாமா எனக் கேட்டபோது, அம்மா நித்திரை கொள்கிறா என வர்ஷி அவவுக்குச் சாட்டுச்சொன்னாள்.

முடிவில் கீமோதிரெபி பயனளிக்காததாலும், வேறு சிகிச்சைகளுக்கான தெரிவில்லாததாலும் நோயறிகுறிகளைத் தணிப்பதற்கான மருத்துவரிடம் அம்மாவை ஒப்படைப்பதாக முடிவானது. சில நாள்கள்தான் அம்மாவுக்கு மிஞ்சியுள்ளன என்ற அதிர்ச்சியான செய்தியைக் கூறிய அந்த மருத்துவர், அம்மாவை வீட்டுக்குக் கூட்டிச்செல்லலாம் என்றார்.

வீட்டுக்கு வந்த அம்மாவுக்கு, ஆஸ்பத்திரியில் இல்லாமல் இருப்பது பெரும் ஆறுதலாக இருந்தது. வலி நிவாரணிகளின் செயற்பாடும் உதவியாக இருந்தது. நீண்ட நாள்களின் பின் வர்ஷியின் உதவியுடன் அவவால் கதிரையில் இருக்க முடிந்தது. அன்று மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் மேசை விளக்கின் அருகில் தீபனின் குடும்பத்தினரும், வர்ஷியும் விக்ரமும் அம்மாவைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். அப்பா அருகிலிருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்தார்.

“உனக்குக் குழந்தை பிறக்கேக்கை ஒத்தாசையாக இல்லாமல் போயிடுவனோ? பிள்ளையைப் பாக்கத்தன்னும் கிடைக்குமோ எண்டெல்லாம் எனக்குப் பயமாயிருக்கு,” அம்மா கலங்கினா.

“உங்களுக்குக் கெதியிலை சுகம் வருமம்மா. சும்மா அதை இதையெல்லாம் யோசிச்சுக் குழம்பாதேயுங்கோ,” வர்ஷியும் தீபனும் ஒரே நேரத்தில் கதைத்தனர்.

பின்னர், தன் அறைக்குப் போய் விக்கி விக்கிக் குரலெடுத்து அழுத வர்ஷியை எப்படி ஆற்றுவதென விக்ரமுக்குத் தெரியவில்லை. நிலைமை அவனுக்கு அசெளகரியத்தைக் கொடுத்தது. இரண்டு நாள்களில் அம்மாவுக்கு வலி மீளவும் அதிகரித்தது. தண்ணீர் குடிக்கக்கூட அவவால் முடியவில்லை. ஜேர்மனியில் நர்ஸ் ஆகவிருந்த அம்மாவின் தங்கை நிர்மலாவுக்கு, அம்மாவுக்கு நிலைமை தெரியவேண்டாமென வேண்டுகோளுடன் நிலைமையை அறிவித்து ஆலோசனை கேட்டார்கள்.

வட்ஸ்அப் வீடியோவில் வந்த நிர்மலா அம்மாவைப் பார்த்ததும் “அக்கா! எனக் கத்தியழுதா. கண்கள் உள்ளுக்குப் போய், தோலெல்லாம் இறுகி அம்மாவின் கோலம் அத்தனை மோசமாக இருந்தது. அம்மாவும் சேர்ந்து அழுதா.

“அழாதை அக்கா. நாளைக்குக் காலைமை நான் கோல் பண்ணேக்கே சிரிச்சுச் சிரிச்சுக் கதைக்கிற, பகிடி விடுற பழைய அக்காவை நான் பாக்கோணும். நல்ல மனிசனும் அன்பான பிள்ளையளும், கரிசனைமிக்க மருமக்களும் கிடைத்திருக்கினமெண்டு ஆறுதல்கொள்,” என்ற நிர்மலாவுக்கே தான் சொன்னதன் அர்த்தமென்னவெனத் தெரியவில்லை.

“கடவுள் என்னை வாழவிடுறார் இல்லை! நான் ஆருக்கும் எந்தத் துரோகமும் செய்யேல்லையே. நிர்மலா, நீ என்னைக் காப்பாத்தமாட்டியோ?”

அம்மாவின் அழுகையைப் பொறுக்கமுடியாத அப்பா இணைப்பைத் துண்டிக்கச் சொன்னார். மிகுந்த ராங்கியுடன் வாழ்ந்த அம்மா, அப்படிக் கெஞ்சியதை வர்ஷியாலும் ஜீரணிக்க முடியவில்லை.

‘அக்கா கேட்ட அந்தக் கேள்விக்கு, அந்தப் பரிதாபமான இரங்கலுக்கு அர்த்தம்தான் என்ன? அப்பிடிக் கேட்கிறளவுக்கு அவ்வளவு நிர்கதியாகவா இருக்கிறா?’ குழம்பிய நிர்மலா, கணவர் காணாமலாக்கப்பட்ட நாட்டுக்கு வாழ்க்கையில் போவதில்லை என்ற தீர்மானத்தைக் காற்றோடு கலக்கவிட்டுவிட்டு இலங்கைக்கு வந்திருந்தா. ஆனால், அவ பார்த்ததோ ஜடமாகிப் போன அம்மாவைத்தான். இயல்புகடந்த ஆழ்ந்த உறக்கநிலையின் தொடக்கத்துக்கு போயிருந்த அம்மாவைப் பார்த்து, “ஆர்தான், இந்தச் சொல்லைக் கண்டுபிடிச்சினமோ? புற்றெடுத்தமாரிப் பரவி அக்காவைக் கொண்டுபோயிட்டுதே!” அரற்றினா, நிர்மலா.

X X X

படுக்கையில் உழன்று கொண்டிருந்தாள் வர்ஷி. புதனும் ஞாயிறும் காலையில் எழுந்தவுடன் அம்மாவை அழைப்பது அவளின் வழமை. மெல்பேர்னுக்கு வந்ததன் பின்பான முதல் புதன்கிழமை, அது. குளித்துவிட்டு வந்த விக்ரம், “வர்ஷி, இண்டைக்கு வேலைக்குப் போகேல்லையா? என்றான். கண்ணீர் நிறைந்த விழிகளுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.

“வர்ஷி, மாமி கஷ்டப்படாமப் போயிட்டா, உம்மட கடமைகளைச் செய்யமுடிஞ்சிருக்கெண்டு கொஞ்சம் ஆறுதல்படும்.”

விக்ரமின் அந்த அன்பான வார்த்தைகள் வர்ஷியைச் சற்று வருடிக் கொடுத்தன. கான்சருடன் மாதக்கணக்காய்ப் போராடுபவர்களின் பரிதாபத்துடன், வாழ்வின் சாபங்களுடன் அலைக்கழிவோரின் நிலைமையுடன், காணாமலாக்கப்பட்ட கணவர்மார்களை எண்ணித் தினமும் துடிக்கும் நிர்மலாச் சித்தி, பொம்மருக்கு பலியான மகனால் வாழ்வில் நிர்கதியாக்கப்பட்ட சரோ அன்ரி போன்றோர் அனுபவிக்கும் வேதனையுடன் பார்க்கும்போது, அம்மா பெரிதாகக் கஷ்டப்படவில்லத்தான் என நினைத்தபோது ஒரு கணம் அவளுக்குள் அமைதி ஏற்பட்டது.

அம்மாவுடன் சேர்ந்து இறந்துவிட்ட அவளின் ஒரு பகுதி எப்போதுமே வெற்றிடமாகத்தான் இருக்கப்போகின்றது, மீதி வாழ்க்கையை அந்த வெற்றிடத்துடன் வாழ்ந்துதான் ஆகவேண்டுமென்ற யதார்த்தம் அவளுக்குப் புரிந்தது. விக்ரமின் வலக் கையைப் பற்றி அவளின் வயிற்றில் வைத்தவள் தன் வயிற்றை அவனின் குளிர்மையான கையால் ஆதரவாகத் தடவிக்கொடுத்தாள்.

“இன்னும் பத்துக் கிழமையிலை பிள்ளை துடிக்கிறது தெரியுமெல்லோ?” என்றவன் அவளின் வயிற்றில் மென்மையாக முத்தமிட்டான்.

அறை யன்னலுக்கூடாக தெரிந்த பிறைநிலவில் அம்மாவின் முகம் அவளுக்குத் தெரிந்தது. 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி