
“கௌதம், படிப்படி என்று தொண்டைத் தண்ணி வற்றுகிற அளவுக்குக் கத்துறேனே! கொஞ்சமாவது இந்த அம்மா மீது கரிசனை இருக்கா?”
“ம்மா.. ஏம்மா சும்மா இதையே சொல்றீங்க, நான் எப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்ப நீங்க கத்திக்கிட்டே இருக்கீங்க. இந்த அம்மாவுக்கெல்லாம் எங்கிருந்துதான் இந்தக் கடவுள் மூன்றாம் கண்ணைக் கொடுத்தாரோ! இப்பதான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு இந்த மடிக்கணினியை எடுத்து ஃபிரெண்ட்ஸோட வாட்ஸ்அப்பில் பேசிட்டு இருந்தேன். ம்மா, கொஞ்ச நேரம்தான் இப்படிப் பேசுறேன், இது உங்களுக்குப் பொறுக்காதா? இவ்வளவு நேரம்தான் படிச்சுக்கிட்டே இருக்கிறேன். கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுக்கணுமல்ல, அதான்.”
“ஏன்டா, அதுக்குன்னு வாட்ஸ்அப்பில் பேசணுமா? தினமும்தான் ஸ்கூல்ல பேசுறீங்க, திரும்பவும் வீட்டுக்கு வந்து அந்தப் பேச்சு தொடரணுமா? சரி, அப்படி என்னன்னுதான் பேசுவீங்க? எனக்கும் சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்ல.”
"நாங்க சின்னப் பசங்க ஏதாவது பேசிக்கிட்டு இருப்போம்! அதையெல்லாம் எப்படி உங்ககிட்ட சொல்றது? நீங்க சொன்ன மாதிரி ஸ்கூல்ல எல்லாம் நாங்க இந்த மாதிரி பேசுறதெல்லாம் இல்லை. உங்களுக்கு நல்லாவே தெரியும், ஸ்கூல்ல ஆங்கிலம்தான் பேசணும், மீறி நாம தமிழ் பேசினோம்னா பனிஷ்மென்ட்தான். அப்படி இருக்க, எப்படி நீங்க சொல்லலாம் நாங்க ஸ்கூல்ல பேசிக்கிட்டே இருக்கோம்னு? ஏதாவது பேசணும்னு பேசக்கூடாது. நான் இப்போ இதை நிறுத்திட்டு என்னோட புத்தகத்தை எடுத்துக்கிட்டு உட்காரணும், அவ்வளவுதானே?"
“இல்லடா, நான் அப்படிச் சொல்ல வரல. உனக்கு ரெஸ்ட் தேவைதான், நான் இல்லைன்னு மறுக்கலை. உன்னோட கண்ணுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் தேவைதான். அப்படி இருக்க, மீண்டும் நீ மடிக்கணினியை எடுத்துக்கிட்டு அந்த ஸ்கிரீன்ல கேம்ஸ் விளையாடினேன்னா, எப்படி உன்னோட கண்ணுக்கு ரெஸ்ட் கிடைக்கும்? அதான் உன்னை இதை மூடி வைக்கச் சொன்னேன்.”
“சரி, ஒரு பத்து நிமிஷம் விளையாடு. பிறகு அதை எடுத்து வைத்துவிட்டுக் குளி. நல்லாத் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளி, உடம்பில் உள்ள உஷ்ணமெல்லாம் போய்விடும். நான் வேண்டுமானால் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிடட்டுமா?”
“இல்லம்மா... நானே தலைக்கு எண்ணெய் வச்சுக்கிறேன். நீ சொன்ன மாதிரி ஒரு பத்து நிமிஷம் அவங்களோடு பேசிட்டு மடிக்கணினியை மூடி வைக்கிறேன்.”
காயத்ரி, கௌதமிடம் இதைக் கேட்ட பிறகு, மதிய உணவுக்காக சமையலறைக்குச் சென்றவள், காய்கறிகளை நறுக்கிக்கொண்டே மீண்டும் மகனைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்தாள்.
கௌதம் தன் அம்மாவிடம் பத்து நிமிஷம் என்று சொன்னவன், மீண்டும் அவள் குரல் கொடுக்கும் வரையில் அந்த மடிக்கணினியை வைத்துக்கொண்டு தன் நண்பர்களுடன் மீண்டும் பேசிக்கொண்டுதான் இருந்தான். என்னதான் காயத்ரி சமையலறைக்குச் சென்று சமைத்தாலும், அவளது எண்ணமானது கௌதமிடமே சுற்றிச் சுற்றி வந்தது. பத்து நிமிஷம் என்று சொன்னவள், பின் முப்பது நிமிஷம் கழித்துச் சமையலறையிலிருந்து கத்தினாள், "கௌதம் குளிச்சுட்டியா?" என்று. அவளுக்குத் தெரியும், அவன் இன்னும் குளிக்கப் போகவில்லை என்று. அதனாலேயே அவள் மீண்டும் குரல் கொடுத்தாள்.
அம்மாவின் குரல் கேட்டவுடன், கௌதம் தன் நண்பர்களிடம், "சரிடா, நான் இப்ப குளிக்கப் போகணும், அம்மா சத்தம் போட்டுக்கிட்டே இருக்காங்க, பிறகு பார்க்கலாம்" என்று கூறித் தனது பேச்சைத் துண்டித்தான். உடனே வேகவேகமாகத் தலைக்கு எண்ணெய் வைத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்று தண்ணீரை மொண்டு தலைக்கு ஊற்றும் சத்தம் கேட்ட காயத்ரிக்குக் கொஞ்சம் மனது அமைதியாச்சு, 'பிள்ளை இப்ப குளிக்கப் போயிட்டான்' என்று.
என் மகன் கௌதம்.. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் ஃபர்ஸ்ட் குரூப்தான் எடுத்திருக்கிறான். அதில் கணிதமும் அறிவியலும் (Maths & Science) கட்டாயம் இருக்கும். கௌதமுக்கு விமானம் ஓட்ட வேண்டும், அவன் ஒரு விமானியாக ஆக வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான். அவன் படிக்கும் மேஜையின் மீது விமான பொம்மை, விமானம் சம்பந்தமான புத்தகமெல்லாம் வச்சிருப்பான். காயத்ரி, அவன் சயின்ஸ் குரூப் எடுத்தால் ஏதாவது மெடிக்கல் காலேஜில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால், அவனை ஃபர்ஸ்ட் குரூப்பை எடுக்கச் சொன்னாள். அதற்கு ஒரு காரணமும் உண்டு, அதுவரையில் அவர்களது குடும்பத்தில் யாரும் மருத்துவராக வரவில்லை. அதனால் அவளுக்கு ஓர் ஆசை தன் மகன் மருத்துவருக்குப் படிக்கணும்னு.
காயத்ரி அடிக்கடி அவனிடம் சொல்வதுண்டு, “விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறாயே. எல்லா விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக்கொள்கிறாயே. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். ஆனால், அவனோ அவன் போக்கில்தான் இருக்கிறான். அவனிடம் ஆசை இருக்கிறது, அதே சமயத்தில் அந்த ஆசையை எப்படி மெய்ப்பட வைக்க வேண்டும் என்பதை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.”
அதனாலேயே அடிக்கடி அவனுக்குப் புரியும்படி நான், "படிப்புதான் வாழ்க்கை. படிப்பு இல்லை என்றால் ஒருத்தனும் சீண்டக்கூட மாட்டான். இப்போது சாதாரண டிகிரியெல்லாம் வேலைக்கு ஆகாது. குறைந்தபட்சம் மாஸ்டர்ஸ் முடித்திருக்க வேண்டும். அப்படி மாஸ்டர்ஸ் முடித்தால் மட்டுமே நல்ல வேலை, கை நிறைய சம்பளம் எல்லாம் கிடைக்கும். உன்னுடைய வாழ்க்கையை நீ பார்த்துக்கொள்ளலாம். எங்களுடைய வாழ்க்கை இன்னும் கொஞ்ச காலம்தான். நீயே சொல்லு, அப்பா நீ கேட்டதை வாங்கித் தராரு, உனக்கு எதுல விருப்பம் என்று குறிப்பறிந்து அவர் நடந்துகொள்கிறார்."
“ம்மா.. நான் இல்லைன்னு மறுக்கல, அப்பா என் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செஞ்சதில்ல. அவருக்கு நானுன்னா ரொம்பப் பிடிக்கும்.”
"சரிடா, அப்பா ரிட்டையர் ஆவதற்குள் உனக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்துக் கட்டிக் கொடுக்கணும். இன்னும் நீ நாலு வருஷம் நன்றாகப் படிக்கணும், அதற்கப்புறம் மாஸ்டர்ஸ் வேண்டுமென்றால் அதில் கவனம் செலுத்தலாம், இல்லை என்றால் நல்ல வேலையில் அமர்ந்துகொண்டு கரஸ்பாண்டன்ஸ் (Correspondence) / டிஸ்டன்ஸ் எஜுகேஷனில் (Distance Education) படிக்கலாம். எல்லாம் உன் கையில்தான் உள்ளது" என்று கௌதமிடம் விளக்கினாள்.
"என்னடா, அம்மா இப்பவே இவ்வளவு சொல்கிறாளே என்று நீ எண்ண வேண்டாம். இப்போது உன் வேலை படிப்பது மட்டும்தான். அதை நீ ஒழுங்காகச் செய்தால் மற்றதெல்லாம் தானாக நடக்கும். அதனால், அம்மா சொன்னதை மனதில் ஒரு ஓரத்தில் வைத்துக்கொண்டு படிப்பில் கவனத்தைச் செலுத்து."
"வாழ்க்கையில் நண்பர்கள் தேவைதான், ஆனால் உனக்காக அவன் படிக்க முடியுமா? உனக்குப் பதிலாக அவன் வேலை செய்ய முடியுமா? அவனவனுக்கு வேண்டியதை அவனவன்தான் செய்துகொள்ள வேண்டும். இப்போது புரிகிறதா நான் என்ன சொல்ல வருகிறேன் என்று?" என்றாள் காயத்ரி கௌதமிடம்.
“ம்மா, போன மாசம் நம்ம வீட்டுக்கு உன்னோட சொந்தக்காரர் வந்தாரே, இல்லையா? அவர் உங்கிட்டயும் அப்பாகிட்டயும் பண உதவி கேட்டுத்தானே வந்தாரு."
"ஆமா, அதுக்கென்ன இப்போ? அவர் நல்லா படிச்சிருந்தா, நல்ல வேலையில இருந்திருப்பாரு. அவர் படிக்காததால, பிழைக்கிறதுக்காக வேலைக்குப் போயிட்டு தன்னோட வாழ்க்கையை நடத்துறாரு. அவருக்குப் பணத்தேவைன்னா, அவர் மற்றவங்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டியிருக்கு."
“நீ சொல்றதும் சரிதான் ம்மா. நானே பார்க்கிறேன், நம்ம சொந்தத்திலே படிக்காதவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தங்களது வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்று. சரியான சம்பளம் இல்லாம, மாதாமாதம் எவ்வளவு போராடுகிறார்கள். ஏதாவது எமர்ஜென்ஸினா அவர்களிடம் சேமிப்பு இல்லை. மற்றவர்களிடம் வந்து நிற்கிறார்கள்.”
"இதையெல்லாம் விடு, நம்ம அப்பா டிகிரிதான் படிச்சிருக்காரு, அவர் எப்படி கஷ்டப்படுறாருன்னு நான் பார்க்கிறேன். அவர் தன் வேலையைத் தக்கவைத்துக் கொள்ள மணிக்கணக்கா ஆஃபீஸில் வேலை செய்கிறார். எனக்கென்ன தெரியாதுன்னு நினைச்சியா! எல்லாம் நல்லா தெரியும்."
“இந்த நிலைமை உன் பிள்ளைக்கு வரக்கூடாதுன்னு நீ நினைக்கிற, அதில் ஒண்ணும் தவறில்லை. நல்லதுதானே சொல்ற, நான் அதை கேட்டு நல்லா படிச்சு உனக்கும் அப்பாவுக்கும் நல்ல பேரு சம்பாதிச்சு கொடுக்கணும். நீ இனிமேல் என்னைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். எனக்கு இப்ப நல்லாவே புரிஞ்சுடுச்சு.”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* [டிஜிட்டல் ஓவிய (Google Nano Banana) உதவி: வநகி]