டிஜிட்டல் ஓவியத் தொழில்நுட்ப (Google Nano Banana)  உதவி - VNG

சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.

மாடி வீடு. கை நிறையக் காசு. பெட்டி நிரம்ப நகை. ஏன், சீட்டுக்காசைப் பற்றிய யோசனைகூடக்கிடையாது. ஆச்சியின் யோசினையெல்லாம் அந்தப்பெட்டியைப்பற்றித்தான். ஆசைப்பேரப்பிள்ளை கேட்டுவிட்டாள் என்பதற்காக அந்தப்பாசத்தை தனது கைகளால் கோர்த்துப்பின்னிப்பகிர்ந்துகொண்டிருக்கின்றா அந்த மூதாட்டி. அந்த அழகை ரசித்துக்கொண்டிருக்கின்றாள்.  அவரதுகடைசி மகளின் இரண்டாவது குட்டி. ஆச்சியைப்பார்க்கவேணும் என்று ஆசையாய்ப்பறந்துபோய் ஊரில நின்றவள் நாளைக்கு மீண்டும் ஜேர்மனிக்குத் திரும்பப்போறாள்.

போகும்போது "என்ர அம்மம்மாவுக்கு என்று நல்ல சாறி வாங்கினனான் அம்மா"என்று அந்த வடிவான 'முகதலை'யையும் விரித்துக்காட்டிச் சந்தோஷப்பட்டாள் தாரிணி.

இங்கிருந்து பறந்து, அந்தமண்ணில, ஆட்சியின்ர முத்தத்தில போய்நின்றவுடன் ஆச்சியை வெள்ளைக்கதிர்ச்சேலையுடன் பார்த்த அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது..

"எத்தனை கதைகளை அம்மா சொல்லிச்சொல்லி ஊட்டிவிட்டவா.அதில அம்மம்மாவின் கதைகள்தான் எனக்கு நல்லாய்ப்பிடிச்சிருந்தது.அதுதான் அந்த அளவிட முடியா இரத்தபாசமோ! எப்படி வாழ்ந்தவா? இன்று சிவனேயென்று தானும்,தன்பாடுமாய் ஒரு சின்னக்கூட்டுக்குள்ள வாழுறா.கேட்டால், "நல்லாய் வாழ்ந்திற்றன்,இனியென்ன,"காடு வாவாண்டுது,வீடுபோபோ எண்டுது.இருக்கிற
கொஞ்சக்காலத்தில,எனக்குப்பிடிச்ச இந்தப் பெட்டிகள் இளைக்கிறதில பிராக்காய்ப்போயிடும் என்ர பொழுது"என்று சொல்லி அவளைக்கொஞ்சினா.

அவள் ஆசையாய் வாங்கிவந்த சாறியைக்கொடுத்தாள். சிரிச்சா.அவளைக்கட்டிப்பிடிச்சா. அவள் நெற்றியில் அவரது முழுப்பலத்தையும் அழுத்தி முத்தமிட்டா.அவள்நெற்றியில அந்த உயிரின் பாசம்கண்ணீராய் உகுந்து குளிர்ந்தது. அவளின் பரவசம்.அது வானைப்பிளந்தது. அவள் இலட்சியத்தில் ஒன்று இப்போது நிறைவேறியது என்பதில் அவள் சிறகடித்துப்பறந்தாள். "எப்படியாவது என்ர ஆச்சியைப்பார்க்கவேணும் என்று எத்தனைமுறை அப்பாவுடன் நான் சண்டைபிடித்திருப்பேன். 'அங்கே நீ தனியாகப்போகமுடியாது,போறதெண்டால் நம்பிக்கையா யாரும் போகேக்க அனுப்பிறன்'என்று கடைசியா ஒருமுடிவுக்கு வந்தார் அவளது அப்பா.அப்பாவின் மச்சாள் குடும்பத்துடன் வந்துசேர்ந்தாள்  தாரிணி.

"உங்களுக்குப்பிடிச்சிருக்கா ஆச்சி? ப்ளீஸ்,எனக்காக மட்டும் ஒருக்கா இந்தச்சாறியைக்கட்டி,நீங்களும், நானும் சேர்ந்து ஒரு படமும் எடுக்கவேணும்.சரிதானே?" என்றாள்.

"ஏன் பிள்ளை என்னை வற்புறுத்திற? படம் வேணுமெண்டால் எடு.இதுகளெல்லாம் எனக்கு இப்ப சரிப்பட்டுவராது என்ர ராசாத்தி. சொன்னாக்கேள்"என்று அவாவும் அடம்பிடிச்சா. அதையும்தாண்டி அவாவைக்கஷ்டப்படுத்த அவள் விரும்பவில்லை. கடைசியில ஒருமுடிவுக்கு வந்தா ஆச்சி.

" நீ ஆசையா வாங்கி வந்திட்ட. சரி தா என்னட்ட" என்று அதை வாங்கி,அவாவின் ரங்குப்பெட்டிக்குள்ள வைச்சா. அவா ஆசையாய்க்குந்திற திண்ணையில் இருந்தபடி அவாவை இருக்கச்சொல்லி வடிவாய் ஒரு படம் எடுத்தாள் பேரப்பிள்ளை. தன்னையும்,ஆச்சியையும் வைத்து இன்னும் சிலபடங்கள் அங்குள்ள அயலவர்களின் உதவியுடன் எடுத்தாள்.

ஆச்சியின் முகத்தில் ஒதோ ஒரு பிரகாசம். புன்னகையில் அளவிடமுடியாத வண்ணங்கள். கண்களில் குழந்தையைப்போன்ற பரவசம். பார்த்த அவளுக்கு 'இந்தக்குழந்தையைவிட்டு நாளை நான் எப்படிப்பிரிவது' என்ற ஏக்கம்.

'எத்தனைதடவை நாங்கள் கூப்பிட்டிருப்போம்?'

" என்ர உயிர்போனாலன்றி,இந்த மண்ணைவிட்டு  ஒருநாளும் நான் வரன்"என்று சொன்ன அந்தத்தேசப்பற்றுத்தான் அவளுக்கும்,ஆச்சிக்குமான இறுக்கமான பற்றுவரக்காரணம்.

இப்ப கூனிப்போய்,சின்னக்குட்டியாய்,குழந்தைமனசுடன் இருக்கும் என்ர இந்த உலகத்தை விட்டுவிட்டு.."சீ,எப்படி நாளைக்கு நான் பிரியப்போறன்?"என்று நினைத்த அவளுக்கு,அவளின் வாழ்க்கையே வெறுத்தது.

ஊர் விடியும் அழகு. பூக்கள்விரியும் பாங்கு. குயில்கள்கூவும்சத்தம். கோயில் மணிகளின் ஒலிகள். அழகான அந்தப்பனைமரங்கள். பூத்துக்குலுங்கிய பூவரசம்பூக்கள். எல்லாம் பார்த்த அவளது கண்கள்
இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது.

அழகாக இடையிடையே கத்தரிப்பூ நிறங்களைச்சேர்த்துப்பின்னிய அந்தப்பெட்டியை அவளிடம் கொடுத்தாள் பேர்த்தி. 'என்ர நினைவா இதை பவுத்திரமா வைச்சுக்கொள்.' பெட்டியைத்திறந்தாள்.என்ன ஆச்சரியம்! அதற்குள் ஆச்சியின் அந்தக்காலத்து மூக்குத்தியும் இருந்தது.

"ஏன் ஆச்சி?இது உங்கட.எத்தனைபேர் இருக்கீனம் உங்களுக்கு.இதையேன் எனக்குத்தாரீங்கள்."என்றாள்.

'எத்தனைபேர் இருந்தாலும், என்னைப்பார்க்க ஓடிவந்தியே என்ர ராசாத்தி.இதுபோதும் எனக்கு. இந்தாப்பிடி.இதை வைச்சிரு. நீ கல்யாணம் முடிக்கேக்க நான் இருப்பேனோ தெரியாது.இந்தா இதை நீ எனக்காக வாங்கித்தான் ஆகவேண்டும்'என்று அவளது வலது கைக்குள்ள திணிச்சா.

அந்த உயிர் தனக்குள்ளே வந்தமாதிரி உணர்ந்தாள் தாரிணி. பொழுதும் மஞ்சளாய் கரைகளை வெளுத்தபடி நின்றது. அவளது அன்பான உயிரைக்கட்டிப்பிடிச்சு அழுதாள்' அந்த மூச்சுக்குள் இருந்து பிரிய அவளால் முடியவில்லை. ஆச்சியும் விம்மி,விம்மி அழுததைப்பார்த்து எல்லோரும் அழுததை அன்று பார்த்தபடி பிரிந்தாள் தாரிணி.

மீண்டும் விமானம் உயர்ந்து பறந்தது. அவள் நினைவுகள் மட்டும் ஆச்சியைச்சுற்றியே நின்றது. அவளது நாட்குறிப்பை விரித்தாள்.

"ஆச்சி பாய் இளைக்கிறா"எனும் தலைப்பில் தனது கதையை எழுத ஆரம்பித்தாள்..

ஜேர்மனிக்கு வந்து இறங்கினாள். மூன்று மாதங்கள்கடந்தன. அவள்கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி செய்தியாய் வந்தது.

" எங்கட ஆச்சி எங்களவிட்டுட்டுப்போய்ட்டா"என்ற செய்தியது.

அவள் கொடுத்த சீலையை உடுத்தி அவளது அன்பு மகாலட்சுமி  நிம்மதியாய் இப்ப உறங்குறா.