* ஓவியம் - AI


கூட்டங்கூட்டமாகநின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்னையே இப்பிடி உலுக்கியிருக்கெண்டால் லக்கியாவின்ர குடும்பத்துக்கு எப்பிடியிருக்கும்?’ உள்ளங்கை வியர்த்துக்கொட்டுகிறது. பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தபோது, என் சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தைவிட என் இதயம் அதிக சத்தத்தில் அலறுகின்றது. யார், யார் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பீதி கடந்துசெல்வோரை நிமிர்ந்து பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கிறது.

“Instagram, twitter எண்டு எல்லாத்திலும் படம்போடுற, கருத்திடுற வேலை எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடு! ஆர் என்ன சொன்னாலும் சொல்லிப்போட்டுப் போகட்டும். பள்ளிக்கூடம் போறனா, வாறனா எண்டிருக்கவேணும். படிப்பைத்தவிர வேறையொண்டும் உன்ரை வேலையில்லை, விளங்கிச்சுத்தானே?” விடிந்ததிலிருந்து குறைந்தது ஐஞ்சு தடவையாவது அம்மா சொல்லியிருப்பா.

‘பீற்றரைப் பாத்தால், கொலைசெய்வான், அதுவும் துடிக்கத்துடிக்கக் கத்தியாலை வெட்டிக்கொலைசெய்வான் எண்டு சொல்லேலுமே?’ மீளமீள எனக்கு அதே நினைப்பாகவிருக்கிறது.

இலக்கியாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியிருக்கிறோம். அவளின் படம் மேடையின் கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பப் பாடசாலை graduation உடுப்பில், தடித்த உதடுகள் மெல்லப் பிரிந்த புன்சிரிப்பும், இரு தோள்களிலும் படர்ந்திருந்த சுருட்டைத் தலைமயிருமாக இலக்கியா மிக அழகாக இருக்கிறாள்.

“நேற்றுவரை எங்களோடை இருந்த லக்கியா இண்டைக்கு உயிரோடை இல்லை எண்ட செய்தி எங்கள் எல்லாரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கு. உங்கடை சக மாணவி ஒருத்தி கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டிருக்கிறா. கோரமான இந்தச் செய்தி தரக்கூடிய மன அழுத்தத்தையும் சோகத்தையும் சமாளிக்கிறது லேசான விஷயமில்லை.

இதைக் கடந்துசெல்கிறதுக்கு ஏதாவது உதவி தேவைப்படுறவை தயவுசெய்து எங்கட கவுன்சிலர் மிசிஸ். ஜோனோடை கதையுங்கோ. லக்கியான்ரையும் பீற்றரின்ரையும் குடும்பங்களுக்கு எங்கடை ஆழ்ந்த அனுதாபங்களைச் சொல்லுறதைத்தவிர வேறை என்னத்தைச் செய்யலாமெண்டு எங்களுக்கும் தெரியேல்லை.

இப்பிடியான கோரச் செயல்களின் விளைவுகள் எங்கட முழுச் சமூகத்தையும் பாதிக்குது…

உங்கட வெறுப்பை, கோபத்தை, ஏமாற்றத்தை எல்லாம் எப்பிடி ஆரோக்கியமான முறையில வெளிப்படுத்தலாமெண்டு நீங்க எல்லாரும் அறிஞ்சிருக்கிறது அவசியம்,” தாழ்ந்த குரலில் சொற்களிடையே இடைவெளி விட்டுவிட்டுப் பிரின்சிப்பல் பேசுகின்றார். அவரின் கண்களும் கலங்கியிருக்கின்றன.

“லக்கியாவுக்கு நிகழ்ந்த சோகம் தங்களுக்கும் நிகழலாமோ எண்டு அஞ்சுறவை, அப்பிடி நிகழாமலிருக்கிறதுக்கு என்னெல்லாம் செய்யலாமெண்டு சொல்ற சில கையேடுகளை அலுவலகத்தின்ர முன்பக்கத்தில வைச்சிருக்கிறம். அப்படிப் பயப்படுகிறவையும் தயவுசெய்து என்னை வந்து சந்தியுங்கள்.” பிரின்சிப்பலுக்குப் பக்கத்தில் நின்றிருந்த மிசிஸ். ஜோன் தொடர்கிறார்.

அஞ்சலி முடிந்து வகுப்புக்கு அமைதியாய்போன எங்களைப் பார்த்து, “படிக்கிற மனநிலை இண்டைக்கு ஒருத்தருக்கும் இருக்காது. உங்கட கரிசனைகளைப் பற்றிக் கதைக்கிறதுக்கு ஆராவது விரும்பினா, என்னோடை கதைக்கலாம். அல்லது நாங்க லைபிரரிக்கும் போவம்,” என்கிறார் சயன்ஸ் ரீச்சர் மிஸ்ரர் ரைலர் ஆதரவானதொரு குரலில்.

இங்கிலிஸ் ரீச்சர் மிசிஸ் நிமாலும் லைபிரரிக்கே வருகிறா. பிறகு ஜிம்மிலை விளையாட்டுப்பாடத்தை முடித்துக்கொண்டு லஞ்சுக்குப் போகிறோம். “AIஇன்ர உதவியோடை எங்கட படங்களையும் உடுப்பில்லாமல் பண்ணித் தங்களுக்கை பகிர்ந்துகொள்ளுவினமோ எண்டு எனக்குப் பயமாய்க்கிடக்கு! இவங்க எவ்வளவு அருவருப்பான விஷயங்களைச் செய்யிறாங்க.” பக்கத்திலிருந்த கிரிஸ்ரினா குசுகுசுக்கிறாள். அவளின் தொண்டை கட்டிப்போயிருக்கிறது.

“பீற்றருக்கு லக்கியாவிலை சரியான விருப்பமிருந்தது, அதாலை அவளுக்கு அவனைப் பிடிக்கேல்லை எண்டதை அவனாலை ஏற்றுக்கொள்ள முடியேல்லை. அதுதான் இத்தனை பிரச்சினை,” தலையைக் குனிந்தபடி சொல்கிறான் ஈதன்.

“அவை விரும்பினா, நாங்க சம்மதிக்கோணும், எங்களுக்கெண்டு விருப்பு வெறுப்பு ஒண்டுமில்லையெண்டு அவை நினைக்கினம்.” பெருமூச்செறிகிறாள் அக்சயா.

“ஓம், ஆம்பிளையளுக்கு வாயிருக்கு, பொம்பிளையளுக்குக் காதுமட்டும்தானிருக்கு. என்னைத்தை அவை சொன்னாலும் நாங்க கேட்டுக்கொள்ள வேண்டியதுதான், திருப்பிக் கதைக்கக்கூடாது. கதைச்சால் எல்லாவகையாலும் எங்களைத் துன்புறுத்துவினம், பிறகு கொலையும்செய்வினம்” பல்லை நெருமுகிறாள் ஆர்த்தி.

“வகுப்பிலை பீற்றர் இருக்கிறதே தெரியாது. இந்தப் பூனையும் பால்குடிக்குமோ எண்டமாதிரி அத்தனை அமைதியாய் இருந்தான்.” தலையை வலமும் இடமுமாக ஆட்டுகிறாள் திரேசா.

“இனி அம்மா பார்க்கிலை விளையாடப்போறதுக்கும் விடமாட்டா.” கவினின் முகம் வாடிப்போயிருக்கிறது.

“கேட்டவுடனை லக்கியாவின்ர அம்மா மயங்கிப்போனாவாம். பாவம் லக்கியா. பெரிய சிங்கரா வரவேணுமெண்டு கனவுகண்டவள். எனக்கிப்ப பீற்றரைக் கொல்லோணும் போலையிருக்கு!” மேசையில் முஷ்டியால் அடிக்கிறாள் மரியா. அவளின் கண்களிலிருந்து வடிந்தோடிய கண்ணீர் அவள் கன்னங்களை முழுமையாக நனைக்கிறது.

“பீற்றரின்ர தாயும் தகப்பனும் ஆள் மாறிவந்திட்டியள், அவன் அப்பிடியான ஆள் இல்லையெண்டு பொலிஸ் காருக்குப் பின்னாலை ஓடினவையாம், பாவம் அதுகள், அதுகளுக்கு மகனைப் பற்றித் தெரியேல்லை,” அலெக்ஸ் சொல்ல, “ஓமோம், அவன் எங்கே செய்தவன், பிழையாய்த்தான் கைதுசெய்து போட்டினம்!” கோவமாக எள்ளல் செய்கிறாள் லீசா.

எனக்கு என்னத்தைச் சொல்வதென்று தெரியவில்லை. பீற்றரின் அம்மாவும் அப்பாவும் தங்கைச்சியும் எனக்கு முன்னால் அழுதுகொண்டு நின்றிருப்பதுபோலவும், இலக்கியாவின் அம்மா தற்கொலை செய்வதற்கு முயற்சிப்பதுபோலவும் எனக்குப் பிரமையாக இருக்கிறது. கண்களைக் கண்ணீர் மறைக்கிறது. சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கமறுக்கிறது. லஞ்சுக்குப் பின் வகுப்புக்குப் போகிறோம், கவுன்சிலர் மிசிஸ். ஜோன் எங்களுக்காக அங்கு காத்திருக்கின்றா.

“என்னோடை கதைக்க விரும்புறவை என்ர அலுவலகத்துக்கு வரலாமெண்டது உங்களுக்குத் தெரியும். இப்ப நான் சிலதைப் பொதுவாய்க் கதைக்கவிரும்புறன்,” குரலைச் செருமிக்கொண்ட அவ ஆரம்பிக்கின்றா. “உங்கட வகுப்பிலை இருந்த ஒரு மாணவி கோரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள், ஒரு மாணவன் அதற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறான், இது ஜீரணிக்கமுடியாத பெரிய சோகம்... உங்களுக்குள்ளை பலவிதமான உணர்ச்சிகள் அலைமோதிக் கொண்டிருக்கும். அவை எதுவுமே தப்பானதில்லை. எங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுறதுக்காக நாங்க எல்லோருமாய்ச் சேர்ந்து ஒரு மூச்சுப்பயிற்சி செய்துபாப்பமா? பாதங்களை நிலத்தில வைச்சிருந்தபடி, கதிரையில பின்னுக்குச் சாய்ந்து செளகரியமாக இருங்கோ.

முதலில 1 2, 3, 4 என மனசுக்குள்ளை எண்ணினபடி ஆழமா மூச்செடுங்கோ. பிறகு 1 2, 3, 4 என மெதுவாக எண்ணிமுடிக்கும்வரைக்கும் மூச்சைப் பிடிச்சிருங்கோ. அதுக்குப் பிறகு 1 2, 3, 4 என மனசுக்குள்ளை சொல்லிக்கொண்டு மூச்சை மெதுவா வெளியேற்றுங்கோ. பிறகு 4 செக்கன் காத்திருந்திட்டுத் திரும்பவும் இப்பிடி மூன்று முறை செய்வம், சரியா?”

மிசிஸ். ஜோனுடன் சேர்ந்து அப்படிச் செய்தபோது இதயம் படபடப்பது சற்றுக் குறைந்திருப்பதுபோல எனக்குத் தோன்றியது.

“கொஞ்சம் ரிலாக்ஸாவிருக்கா? மன அழுத்தத்தை எப்போதாவது உணரும்போது இப்படிச் செய்துபாருங்கோ. 13 வயசு - கொஞ்சம் கஷ்டமான காலகட்டம்தான். தங்கியிருத்தலிலிருந்து விலகிச் சுயாதீனமா இருக்க முயற்சிக்கிற இந்தக் கட்டத்தில நிறையக் குழப்பங்கள் இருக்கும். அதோடை பருவமடைகிற காலம் இது, உங்கட உடம்பிலை சுரக்கிற ஓமோன்களின்ர தாக்கத்தையும் நீங்க சமாளிக்க வேண்டியிருக்கும்.

ஆரம்பப் பாடசாலை ஒன்றிலையிலிருந்து இந்த இடைநிலைப் பாடசாலைக்கு வந்திருக்கிறீங்க. உங்களில் சிலருக்கு நெருக்கமான ஒரு நட்பு இன்னும் கிடைக்காமலிருக்கலாம். தனிமையை, வெறுமையை நீங்க உணரக்கூடும். பாடங்கள் சிரமமானதாக இருக்கலாம். வீட்டில உங்களிட்டை எதிர்பாக்கிறதுகளை உங்களால செய்யமுடியாம இருக்கலாம். இந்த அழுத்தங்கள் எல்லாத்தையும் தாங்கிற சக்தி உங்களுக்கு இல்லாமலிருக்கலாம்... தயவுசெய்து உங்கட உணர்ச்சிகளைப் பற்றிப் பெற்றோரோடையோ, ஆசிரியர்களோடையோ அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்களோடையோ மனம்விட்டுக் கதையுங்கோ. என்ர கதவு உங்களுக்காக எப்பவும் திறந்திருக்கும். வார விடுமுறை கழிஞ்சு பாடசாலைக்குத் திரும்பிவரேக்கை எல்லாருக்கும் கொஞ்சமாவது அமைதி கிடைக்குமெண்டு எதிர்பாப்போம்.”

மிசிஸ் ஜோன் போனதும், மீளவும் லைபிரரிக்குப் போகிறோம்.

பள்ளிக்கூடம் முடிந்ததும், பீற்றரின் வீட்டருகில் என்ன நிகழ்கின்றதென அறியும் ஆர்வத்தில் வழமையில் வீட்டுக்குப் போவதுபோல எங்களின் தெருவில் திரும்பாமல், அதற்கு முன்பாகவிருந்த தெருவில் திரும்புகிறேன். பின் அங்கிருந்து எங்களின் தெருவை நோக்கி நடக்கிறேன். எங்களின் தெருவின் தெற்குப் பக்கத்தில்தான் பீற்றரின் வீடிருந்தது. அவனின் வீட்டுக்கு அண்மையில் செல்லச்செல்ல என் உடல் நடுங்குகிறது, நெஞ்சடைக்கிறது. ஆனால், அவனின் வீட்டுக்கு வெளியில் எந்தச் சஞ்சாரமும் இருக்கவில்லை. அவனின் வீட்டைக் கடந்து எங்கள் வீட்டுக்கு எப்படிப் போனேன் என்றே தெரியவில்லை, கால்கள் தடுமாறுகின்றன.

எங்களின் வீடு வழமைவிட அதிக நிசப்தமாக இருப்பதுபோலிருந்தது. எதைச் செய்யவும் எனக்குப் பிடிக்கவில்லை. சோபாவில் படுத்துக்கொள்கிறேன். மனம் எங்கெல்லாமோ அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. நேரம்போகப்போக மேலும் துக்கமாகவும், களைப்பாகவும், பசியாகவும் இருக்கிறது. குளிரூட்டியில் இருந்த பீசாவை மைக்கிரோவில் சூடாக்கியபடி instagramஐப் பார்ப்போமா என நினைத்தாலும், அதைப் பார்க்கப் பயமாகவும் இருக்கிறது. இந்தக் கொலையைப் பற்றி அதிலை என்னவெல்லாம் பேசிக்கொள்வார்களோ என்ற என் நினைவைத் தொலைபேசியின் ஒலி குழப்புகிறது. FB messangerஇல் லீசாதான் அழைக்கிறாள்.

“ஹாய் லீசா”

மறுமுனையில் விசும்பல் ஒலி. “ஏய் லீசா, என்ன நடந்தது?” எனக்குள் ஆயிரம் கேள்விகள். “என்ர போனைப் பறிச்சுப்போட்டினம், சுவேதா. கொம்பியூட்டரும் இனி லிவ்ங் ரூமிலைதான் இருக்குமாம். லக்கியா பீற்றருக்குப் போட்ட கொமன்ற்ஸ் பற்றி எனக்குத் தெரியுமோ? அதைப் பற்றி நானும் ஏதேனும் எழுதினேனா? ஏன் அதுகளைப் பற்றி ரீச்சர்மாரிட்டை சொல்லேல்லை எண்டு ஒரே அறுவை.”

“ஓ, சொறி லீசா. பீற்றர் ஒரு incel, அவனாலை கேர்ள்ஸ் ஐக் கவரமுடியாதெண்டு லக்கியா அவனை bully பண்ணேக்கை, நீரும் அதைப்பற்றி ஏதாவது எழுதினீரா?”

“இல்லை, நான் ஒண்டும் எழுதேல்லே, ஆனா லக்கியான்ர கொமன்ற்றுக்கும், மற்றவை சொன்னதுகளுக்கும் லைக் போட்டனான். அதுதான் வீட்டிலை பெரிய பிரச்சினை”

“இங்கையும் என்ன நடக்கப்போகுதோ தெரியாது. பீற்றரின்ர வீட்டுக்காரரைத் தெரியுமெண்டதாலை, நான் அதுக்கொரு கொமன்றும் எழுதேல்லை. ஆனா வேறை ஆக்களுக்கு என்னெல்லாம் எழுதியிருக்கிறன், எதையெல்லாம் லைக் பண்ணியிருக்கிறன் எண்டு பாக்கோணும். அம்மா வாறதுக்கிடையிலை எல்லாத்தையும் அழிச்சுப்போடோணும். சொறி, லீசா, உமக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்கேல்லை.”

“இது பொலிஸ் கேஸ் எண்டதாலை என்ன பிரச்சினையெல்லாம் வருமோ தெரியாது எண்டு அப்பா பயப்படுத்துறார். என்ர Instagram எக்கவுண்டையும் அழிச்சுப்போட்டார். அத்தையோடை கதைக்கிறதுக்காண்டி FBஐ விட்டிருக்கினம். போன் இல்லாமல் எனக்கு ஒரே விசராயிருந்துது. ஆரோடையாவது கதைக்கோணும் போலையிருந்து... கடைக்குப் போனவை வருகினம்போலை இருக்கு, பிறகு கதைக்கிறன்.”

ஒரு மணித்தியாலத்துக்குள் அப்பாவும் அம்மாவும் வந்திடுவார்கள். எனக்குப் பதற்றமாகவிருக்கிறது. ‘கையும் ஓடேல்லை, காலும் ஓடேல்லை’ என்று இந்த நிலையைத்தான் சொல்கிறவைபோலும்.

“சுவேதா, இதென்ன லஞ்சுக்குக் கொண்டுபோன சாப்பாடு அப்படியேயிருக்கு, Microwaveக்குள்ள பீசா கிடக்குது. நீ ஒண்டுமே சாப்பிடேல்லையே? கீழை வா!” வந்ததும் வராததுமாக அம்மா சத்தமாகக் கூப்பிடுகிறா. அப்பா மேலே வந்து என் அறைக்கு முன்னால் நிற்கிறார்.

“சுவேதா, என்ன செய்யிறாய்?"

“ஒண்டுமில்ல, எனக்குத் தலையிடிக்குது"

“சாப்பிடாட்டிலும் தலையிடிக்கும், வா, வந்து முதலிலை சாப்பிடு"

போய்ப் பீசாவை எடுத்துக்கடிக்க ஆரம்பித்தபோது, “கொத்துரொட்டி வாங்கிக் கொண்டுவந்தனான். உதை வைச்சிட்டு அதைச் சாப்பிடு,” என்று அம்மா சொல்ல, அப்பா அதை எடுத்துக்கொண்டுவந்து தருகிறார்.

எனக்குப் பிடித்த சிக்கன் கொத்து. ஆனால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. “சாப்பிட்டு முடி, உன்னோடை ஆறுதலாய்க் கதைக்கோணும்,” அம்மா சொல்ல என் மனம் குறுகுறுக்கத் தொடங்குகிறது.

“சும்மா பீடிகை போடாம நேரடியாய்க் கேளும்,” என்ற அப்பா, அவரே ஆரம்பிக்கிறார்.

“வகுப்பிலை எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சியாயிருந்திருக்கும். பாவம் அந்தப் பிள்ளை லக்கியா! என்ன பாடுபட்டிருக்கும். நினைச்சுப்பாக்கவே முடியேல்லை. மனசுக்குப் பெரும் கஷ்டமாயிருக்கு. சமூக ஊடகமெண்டு ஒண்டு வந்ததும் வந்தது, அந்தக் காலத்திலை எங்களுக்கிருக்காத பிரச்சினைகளெல்லாம் உங்களுக்கு வந்திட்டுது.” சொல்லிமுடித்துவிட்டு என்னையே உற்றுப்பார்க்கிறார், அவர்.

“13 வயசிலை மூளை முழுசா வளர்றதில்லை. அதாலை சிந்திச்சுச் செயலாற்றுறது கஷ்டம்தான்... உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நாங்க இருக்கிறம் எண்டது உனக்குத் தெரியோணும், எங்களோடை நீ என்னத்தையும் கதைக்கலாம், என்ன?” என்கிறா அம்மா, உறுதிதரும் குரலில்.

‘ம்ம், திட்டம்போட்டு நல்லாய்த்தான் கதைக்கினம். இப்பிடிக் கதைச்சால் நான் விட்ட பிழையெல்லாம் சொல்லுவன் எண்டு நினைக்கினம்போல, ஆனா சொன்னா என்ன நடக்குமெண்டு தெரியும்தானே,’ என்ர மூளை என்னை எச்சரிக்க, நான் எதுவுமே பேசாமலிருக்கிறேன்.

“இண்டைக்குக் கதைக்கிறது உனக்குக் கஷ்டமாயிருகெண்டா நாளைக்கு ஆறுதலாய்க் கதைப்பம்,” என்ற அம்மாவைத் தொடரவிடாமல், “லக்கியாவோடை எனக்குப் பழக்கமில்லை. பீற்றரோடையும் ஒரு நாளும் கதைச்சதில்லை. நடந்ததுகளைப் பற்றிக் கதைக்கோணுமெண்டால் கவுன்சிலரோடை கதைக்கலாமெண்டு பள்ளிக்கூடத்தில சொன்னவை,” இந்தக் கதை மீளவும் தொடராமல் இருப்பதற்காக அவசரப்படுகிறேன் நான்.

“எங்களோடை கதைக்கேலாதெண்டால். கவுன்சிலரோடையாவது கதை, என்ன? கதைப்பியோ?” என்ற அம்மாவைப் பார்த்து தலையை மேலும் கீழும் ஆட்டுகிறேன். பின்னர் என்னுடைய அறைக்குப் போன நான் படுக்கையில் விழுந்து குப்புறப் படுத்துக்கொள்கிறேன். அடக்கமுடியாமல் அழுகை அழுகையாக வருகிறது.

கொஞ்ச நேரத்தில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வது கேட்கிறது. “நாங்களும் வேலையாலை பிந்தித்தான் வாறம். வீட்டிலை அவள் கதைக்கிறதுக்கும் ஒருத்தருமில்லை. சின்னப்பிள்ளையிலை நீந்துறதுக்கு, சொக்கர் விளையாடுறதுக்கு அதுக்கு இதுக்கெண்டு கூட்டிக்கொண்டுபோனமாதிரி கூட்டிக்கொண்டு போறதுக்கும் எங்களுக்கு இப்ப நேரமில்லை.”

“தனியப் போய்வாற வயசு அவளுக்கு இப்ப வந்திட்டுத்தானே. அவளை பிஸியாக்கோணும், விருப்பமான புரோகிராம்களிலை சேத்துவிடோணும். அல்லது Instagram, twitter எண்டு நேரத்தைச் செலவழித்து வீண்பிரச்சினைகளைத்தான் விலைக்கு வாங்கினதாயிருக்கும்.”

“ம்ம், வேலையாலை வந்து நீர் சமைக்காட்டிலும் பரவாயில்லை, அவளோடை மனம்விட்டுப் பேசப்பாரும். ஒன்றாய் நேரத்தைக் கழிக்கப்பாரும். தேவைப்பட்டால் சாப்பாட்டைக் கடையிலை வாங்குவம். சமூக வேலை அது இதெண்டு ஓடித்திரியிறதை நானும் குறைக்கிறன்.”

“ஓமப்பா, நாங்க வேலையாலை வந்த களைப்பிலை, ‘வா சாப்பிடு’, ‘சாப்பாடு காணுமோ’, ‘homework செய்துபோட்டியோ’, ‘நேரமாகுது படு', எண்டு சும்மா பேருக்குக் கதைச்சால் என்ணெண்டு பிள்ளையள் மனம்விட்டுக் கதைக்கிறது. ஆறுதலாயிருந்து கதைச்சாத்தானே அதுகளும் கதைக்கலாம்.”

“அவள் சின்னப்பிள்ளையாயிருக்கேக்கை நீர் அப்பிடிக் கதைச்சனீர்தானே. அப்ப அவள் உமக்கெல்லாம் சொல்லுறவள்தானே. திரும்பவும் அப்பிடியொரு ஐக்கியத்தை உருவாக்கப் பாருமப்பா. இந்த வயசிலை பிள்ளைகளுக்கு வாற உணர்ச்சிகளையும் ஆசைகளையும் நாங்க விளங்கிக்கொள்ள முயற்சிக்கோணும். மனம்விட்டுக் கதைக்கோணும். அப்பிடியில்லாம நெடுகப் பிழைகண்டுகொண்டிருந்தம் எண்டால் எங்களுக்கு ஒண்டும் தெரியவராது.”

“ஓம், இதை நாங்க ஒரு wakeup call மாதிரி நினைக்கோணும், பிள்ளை வழிமாறினா, என்னத்தைச் சம்பாதிச்சும் பயனில்லை. இண்டைக்கு முழுக்க வேலையிலை எனக்கு இதே நினைப்பாய்த்தானிருந்துது? லக்கியாவின்ர பெற்றோரின்ர நிலையிலைருந்து யோசிச்சுப்பாருங்கோ, எப்பிடியிருக்கும்?”

“ம்ம், பீற்றரின்ர குடும்பமும் பாவம்தான். அவையும் பிசியாக இருந்திட்டினம். இப்ப அவைக்கும் பெருங்கஷ்டமாயிருக்கும்.”

“அவனுக்குச் சுயமதிப்பு இருக்கேல்லை. ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தத் தெரியேல்லை. போதாதற்கு எப்பிடிப் பழிவாங்குறது எண்டதைத்தானே ரீவி புரோகிறாம்களும் சினிமாவும் பிள்ளையளுக்குச் சொல்லிக்குடுக்குது. நாங்களும் பிஸியாயிருந்தால் யார் அதுகளுக்கு வழிகாட்டுறது?”

அம்மா விசும்புவது கேட்கிறது.

“பிள்ளையள் பாதுகாப்பாய் இருக்கோணுமெண்டு போனை வாங்கிக்குடுத்தால், இப்ப அதாலை வேறை பிரச்சினையாய்க்கிடக்கு… அந்தப் பிள்ளை எங்கை போய்வாறள் எண்டதையெல்லாம் கண்காணிச்சுத் திட்டமிட்டுக் கொலைசெய்யிறளவுக்கு மனசிலை அவன் வன்மத்தை வளத்திருக்கிறானே…” அப்பாவின் குரல் உடைகிறது.

“சூழலின்ர பாதிப்பிலிருந்து எவ்வளவு தூரம் எங்களாலை பாதுகாக்க முடியுமெண்டு எனக்குத் தெரியேல்லை, எண்டாலும் எங்களாலை ஏலுமானதை நாங்க செய்யோணும்!” அம்மா நா தழுதழுக்கச் சொல்கின்றா.

அம்மாவின் விசும்பலும் அப்பாவின் கரிசனையும் என்னையும் விம்மச்செய்கின்றது. படுக்கையில் புரண்டுபுரண்டு படுக்கிறேன். நித்திரைவருவது மாதிரித் தெரியவில்லை. இருந்தாலும், வருமென்ற நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொள்கிறேன்.

:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.