* ஓவியம் AI

கோர்ட், சூட் சகிதம் கூலிங்கிளாசுடன் காரிலிருந்து ஒய்யாரமாக இறங்கிய விமலனைப் பார்த்ததும், பக்கத்து வளவில் வியர்க்க விறுவிறுக்கப் புல் வெட்டிக்கொண்டிருந்த பாஸ்கரனின் கரங்கள் அவனையறிமாலேயே புல்வெட்டும் மெசினை நிறுத்தின.

“அடேயப்பா, பென்ஸ் எண்டால் பென்ஸ்தான். சொக்கான கார்! உங்கட பிஎம்டபிள்யூவுக்கு என்னாச்சு?” பாஸ்கரனின் கண்கள் அகல விரிந்தன.

“சும்மா, ஒருக்கா மாத்துவமெண்டு நினைச்சன். வாழ்க்கையை அனுபவிச்சு வாழோணும்!” சாவிக்கொத்தைத் தனது வலது கைச் சுண்டுவிரலில் சுழற்றியபடி, தோள்களைக் குலுக்கினான் விமலன்.

“குடுத்துவைச்சனீங்க,” என்ற பாஸ்கரன், “சொகுசான கார் மட்டும்தான் வாழ்க்கையெண்டு இல்லை” எனத் தனக்குள் முணுமுணுத்தபடி முகத்தை மறுபக்கம் திரும்பிக்கொண்டான். அங்கே, அவனின் பழைய ரொயாற்றோ கொரலா, அதன் நெளிந்த இடது பக்கம் இன்னும் திருத்தப்படாத நிலையில், கறள் கட்டிய முன்பக்கம் தெரியப் பரிதாபமாக நின்றிருந்தது.

புல்வெட்டும் இயந்திரத்தை அவன் மீளவும் இயக்கினான். அது பெருத்த ஒலியுடன், புற்களைத் தனக்குள் மீளமீள வாரிக்கொண்டது. வரிக்கணக்குச் செய்துகொடுத்து எப்படித்தான் விமலன் இப்படி உழைக்கின்றானோ - அவனுக்குள் கிளர்ந்த பெருமூச்சின் வெப்பம் அவனைத் தகித்தது. ஏற்கனவே தொந்தரவுசெய்து கொண்டிருந்த அவனின் முதுகுடன், இணைந்துகொண்ட அவனின் கனத்துப்போன தோள்களும் அவனைப் பெரிதும் இம்சைப்படுத்தின.

வீட்டுமுன்றலில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, செம்மஞ்சள், ஊதா எனப் பல்வேறு நிறங்களில் அழகாக மலர்ந்திருந்த ரோஜாப் பூக்களையும், ரியூலிப்புக்களையும் ரசித்தவாறு தன் வீட்டு வாசல்கதவைத் திறந்தான் விமலன்.

அவனைக் கண்டதும் டக்கென்று ரீவியை நிறுத்திப்போட்டு, வாங்கோ என்றபடி மனைவி லதா குசினிக்குள் போனாள். ஆர்த்தியும் கஜனும் வரவேற்பறைத் தரைவிரிப்பில் உட்கார்ந்திருந்தபடி, அவர்களின் புதிய பொமேரியன் நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

வரவேற்பறையின் வலது மூலையில் வைக்கப்பட்டிருந்த, கால்களை முன்னால் நீட்டி வைத்திருந்தபடி, பின்னால் சாய்ந்துகொள்ளக்கூடிய லெதர் சோபாவில், தன் கால்களை நீட்டிவைத்துக்கொண்டு ஆயாசத்துடன் சாய்ந்துகொண்டான் விமலன்.

பால் தேநீருடனும், சற்று முன்பாகப் பொரித்த மொறுமொறுப்பான கடலை வடைகளுடனும் வந்த லதா, “எப்படியிருக்கு, உங்கடை புதுக் கார்?” என்றாள்.

“ஓ, சுப்பர்! ஓடேக்கை மிதக்கிறமாதிரி இருக்கப்பா. போய்ப்பாருமன். பாஸ்கரனுக்குப் பத்தியெரிதுது. கார் மட்டும்தான் வாழ்க்கையில்லையாம், ஏதோ அது மட்டும்தான் எங்களிட்டை இருக்கிறமாதிரி…” எனக் கூறியபடி லதாவைத் தன்னருகே இழுத்து அன்புடன் அவளின் தோள்களை அழுத்தினான்.

லதா புன்னகைத்தாள். “உண்மையிலையே நாங்க அதிஷ்டக்காரர்தான்! பிள்ளையள் வாங்கோ, அப்பான்ர காரைப் பாப்பம்”, அவசர அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் போனாள் அவள்.

அவளுக்குப் பிடித்த அடர்சிவப்பு நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்த காரைப் பார்த்தும் அவளின் கண்கள் மின்னின, இதயம் குளிர்ந்தது. காரைச் சுத்திச்சுத்தி ரண்டுதடவை நடந்தாள். முகத்தில் புன்னகை படர்ந்தது. கையால் மெதுவாக அதனை வருடினாள். உள்ளே எட்டிப்பார்த்தாள். எதையும் அவளால் முழுமையாகப் பார்க்கமுடியவில்லை, இருட்டாக இருந்தது.

முகமலர்ச்சியுடன் உள்ளே வந்தவள், “அப்பா, நாங்க உங்கட காரிலை ஒருக்கா ஒரு சுத்துச்சுத்தி வருவமோ? அதோடை எப்ப என்ரை காரை மாத்தப்போறியள்? எனக்கும் ராவோ ஓடிஓடி அலுத்துப்போச்சு,” என்றாள். “சரி, சரி மாத்துவம். உம்மடை பேர்த்டே பிறசன்ற் ஆகத்தாறனே,” என்றவன் தொடர்ந்து, “முதலிலை நான் ஒரு குட்டித் தூக்கம் போடோணும். அதுக்குப் பிறகு எல்லாருமா ஒரு ரவுண்ட் போவம்,” என்றான்.

அப்போது, தேநீர் வைக்கப்பட்டிருந்த மேசையிலிருந்து தேர்ச்சியறிக்கைகள் அவன் கண்களில் தென்பட்டன. “ஓ, றிப்போட் வந்திருக்கா.... பிள்ளை நல்லாய்ச் செய்திருப்பாள், கஜன், நீ என்னமாரி, இந்தமுறையும் அதே கதைதானோ, அல்லது ஏதாவது முன்னேற்றமிருக்கோ?”

காரை ரசித்துவிட்டு, அப்போதுதான் ஆர்த்தியுடன் வீட்டுக்குள் காலடியெடுத்து வைத்த கஜன் செருப்பை மெதுவாகக் கழற்றிவிட்டு, அப்பாவின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் தலையைக் குனிந்தபடி, கூனிக்குறுகி வாசல் கதவருகிலேயே நின்றான்.

“இந்த முறையும் கொஞ்சம் குறைவுதான் ...” இழுத்தாள் லதா.

“உனக்கென்னடா பிரச்சினை?” சோபாவிலிருந்து வேகமாக எழும்பிய விமலனின் குரல் உச்சஸ்தாயில் ஒலித்தது. கஜனின் இதயம் ரிதம் மாறிப் பலமுறை பலமாக அடித்துக்கொண்டது. அவனின் கால்கள் விறைத்துப்போயின. வீட்டுக்குள் வந்த அவனிடம் ஓடிச்சென்ற அவர்களின் நாய்க்குட்டி ரைகர் விமலனின் கத்தலில் பயந்துபோய், தன் முகத்தைத் தொங்கபோட்டபடி அவனின் கால்களைச் சுற்றிச்சுற்றி வந்தது.

“நாங்க படிக்கிற காலத்திலை தோட்டத்துக்குத் தண்ணிறைச்சு, பாத்திகட்டி, களைப்போடைதான் பள்ளிக்கூடம் போனனாங்க. இங்கை நீ என்னத்தை வெட்டிமுறிக்கிறாய்? எழுப்பிச் சாப்பாடுதந்து, பள்ளிக்கூடத்துக்குக் காரிலை கூட்டிக்கொண்டுபோய் அம்மா விடுறா. பிறகு கூட்டிக்கொண்டுவாறா. நினைச்சதெல்லாம் செய்துதந்து சொகுசா வளக்கிறம். படிக்கிறதைத் தவிர உனக்கு வேறையென்ன வேலை? அடுத்தவருஷம் 10ம் வகுப்புக்குப் போகப்போறாய்!”

எப்போதும் கேட்கும் அதே ஏச்சுக்கள்தான் என்றாலும், கண்ணீர் வழிந்தோடப் பேச்சற்று நின்றான், கஜன். ஆர்த்தி அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். “சரி, போய்ப் படி, அடுத்த முறையாவது நல்ல மாக்ஸ் எடுக்கப்பார்,” என்ற லதா கஜனை அங்கிருந்து வெளியேறும்படி அவனுக்குக் கண்காட்டினாள். கஜன் தன் அறைக்குப் போக, கஜனின் காலருகே நின்ற ரைகரும் தன் வாலைச் சுருட்டிக்கொண்டு தன் படுக்கையில் போய்ப்படுத்துகொண்டது.

கோபத்துடன் அங்குமிங்குமாக நடந்தான் விமலன். பின்னர், லதாவைப் பார்த்து, “பாஸ்கரன்ரை சுமி இவனோடைதானே படிக்கிறாள். அதுதான் கார் மட்டும்தான் வாழ்க்கையில்லையெண்டு அவன் எனக்குத் தத்துவம் சொல்லியிருக்கிறான். இவனை என்ன செய்யலாம்?” என்றவன், முற்பிறப்பிலை எதோ பாவம் செய்திருக்கிறன்போலை,” எனத் தனக்குள் முணுமுணுத்தபடி தன் அறைக்குப் போனான்.

குடிக்கப்படாமலிருந்த தேநீரையும், கடிக்கப்படாமலிருந்த வடையையும் எடுத்துக்கொண்டு விமலனைப் பின்தொடர்ந்த லதா அவர்களின் அறைக்கதவைச் சாத்தினாள். பின்னர் கட்டிலிலிருந்த கணவனின் தலையை வருடிக்கொடுத்தாள்.

“சரி, அவனுக்குப் படிப்பு வருதில்லையெண்டா, என்ன செய்யிறதப்பா. இது இலங்கையே? படிப்பில்லாட்டிலும் பிழைக்கிறதுக்கு இங்கை ஆயிரம் வழியிருக்குத்தானே,” எனத் தயங்கித்தயங்கிச் சொன்னாள். அவன் எதுவுமே பேசாமலிருந்தான்.

“சரி, ரீ ஆறப்போகுது குடியுங்கோ,” என்றவள், அந்த அறைக்கதவைச் சாத்திவிட்டுக் கஜனின் அறைக்கு முன்னாள் வந்துநின்றாள். கஐன் விம்மிவிம்மி அழுவது அவளுக்குக் கேட்டது. “கஜன்,” என்றபடி சாத்தப்பட்டிருந்த அவனின் அறைக் கதவின் குமிழியை லதா மெல்லத்திருகினாள்.

“நோ, நோ, மம், டோன்ற் கம்!” அவன் அழுகையினூடு கெஞ்சினான். கவலையாக இருக்கும்போது தனித்திருப்பதுதான் தனக்கும் விருப்பம் என்பதை நினைத்தவள், “ஓகே, சொறி கஜன்,” என்றபடி அந்தக் கதவை முழுமையாக மூடினாள்.

கஜனுக்கு மூச்சுமுட்டியது. அழுகையை நிற்பாட்ட அவனால் முடியவில்லை. அப்பா கஷ்டப்பட்டு உழைக்கிறார், வசதியாய் எங்களை வைச்சிருக்கிறார். ஆர்த்திமாதிரி ஏன் என்னாலை படிக்க ஏலுதில்லை? எனக்கேன் படிப்பு வருதில்லை, நான் என்ன செய்யிறது? அவனுக்குள் எழுந்த கேள்விகள் அவனைப் படபடக்கச் செய்தன. தன் கால்களிலும், கைகளிலும் ரத்தம் வருமளவுக்குப் பலமாக விறாண்டினான். வலது கையை மடித்து தன் வாய்க்கு அருகே கொண்டுபோனவன் அதை இறுக்கிக்கடித்தான். தன் தலையை மேசையில் மீளமீள மோதினான். பின்னர் நிலத்தில் குப்புற விழுந்து படுத்துக்கொண்டான்.

அடுத்தநாள் காலையில் நீண்ட நேரம் தன் அறையை விட்டுக் கஜன் வெளியேறவில்லை. ஆர்த்தியும் விமலனும் வீட்டைவிட்டு வெளியேறும் சத்தம் அவனுக்குக் கேட்டது. றிப்போட் வந்தபின் செய்யும் வழமையான செயலாக, ஆர்த்தியை மட்டும் விமலன் வெளியில் கூட்டிக்கொண்டு போகிறான் என்பது அவனுக்கு விளங்கியது.

“கஜன், வா தம்பி. வந்து சாப்பிடு. பிளீஸ், ராத்திரியும் சாப்பிடேல்லை. 12 மணியாகுது,” லதா மீளவும் கஜனிடம் கெஞ்சினாள். ஒருவாறாக அவன் எழும்பி வெளியில் செல்லவும், அப்பாவும் ஆர்த்தியும் வீட்டுக்குள் வரவும் சரியாக இருந்தது. ஆர்த்தியின் கையில் ஐபோன் பெட்டி ஒன்று இருந்தது. ஏன் இப்ப அவளுக்குப் போன் எனக் கேட்ட லதாவுக்கு படிக்கிற பிள்ளைக்கு ஊக்கம்கொடுக்கிற அன்பளிப்பது என்றபடி, தான் வாங்கிவந்திருந்த பொருள்களை விமலன் மேசையில் வைத்தான். அவற்றில் ஆர்த்திக்குப் பிடித்த, ஆனால் கஜனுக்குப் பிடிக்காத ஸ்ரோபெரி ஸ்கிறீமும், கிறிஸ்பி க்ரீம் டோனட்களும் இருந்தன.

சாப்பாட்டு மேசையில் கரண்டிகளின் சத்தம் மட்டுமே கேட்டது. அப்பா தன்னைப் பார்க்கிறார் எனத் தெரிந்தபோதும், அவரின் முகத்தைப் பார்க்கும் திராணி கஜனுக்கு இருக்கவில்லை. சாப்பாட்டை முடித்து விமலன் எழும்பியபோது, பின்னேரம் கஜனுக்குச் சொக்கர் இருக்கிறதென லதா அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

“இனி அதொண்டுக்கும் போகவேண்டாம். வீட்டிலையிருந்து அவன் படிப்பைப் பாக்கட்டும். ரியூசனுக்கு நான் ஒழுங்குபண்ணுறன்!” என்றான் விமலன்.

“அப்பா, வாறகிழமை அவனுக்கு ஒரு கேம் இருக்கு,” என அவசரப்பட்டாள் ஆர்த்தி. “உன்னைப் போல முதல் அவன் நல்ல மாக்ஸ் எடுக்கட்டும், அதுக்குப் பிறகு பாப்பம்," என கஜனைப் பார்க்காமலேயே விமலன் பதிலளித்தான்.

கஜனின் கண்ணீர் அவனின் சாப்பாட்டுத் தட்டில் விழுந்தது. அவனுக்குப் பிடித்த நண்டுக் கறியும் சோறும் அவனுக்குள் செல்ல மறுத்தன. லதாவுக்கும் கண்கள் கலங்கின.


அந்தக் கோடைகாலம் மெதுவாக நகர்ந்தது. அதைத் தொடர்ந்து வந்த இலையுதிர் காலத்தின்போது, வகுப்பறைகள் மாறின, ஆசிரியர்கள் மாறினார்கள். ஆனால், அவனின் புள்ளிகளில் மட்டும் மாற்றம் எதுவுமிருக்கவில்லை.

நவம்பர் மாதத் தேர்ச்சியறிகைகள் பனிப்புயலுடன் சேர்ந்துவந்தன. இலைகள் யாவற்றையும் இழந்து வெறுமையாக நின்ற மரங்களின் சிறுகிளைகள் யாவும் முற்றாகப் பனியால் மூடப்பட்டிருந்தன. குளிர்காற்றும் அன்று மிக வேகமாக வீசிக்கொண்டிருந்தது. அதற்கு ஈடுகொடுக்கமுடியாத யன்னல் கண்ணாடிகள் எதிரொலி எழுப்பின. கதகதப்புக்காக வீட்டுக்குள் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த சூடாக்கியுடன் சேர்ந்து, fireplaceஉம் வேலைசெய்து கொண்டிருந்தது.

இரவு பத்துமணிக்குப் பின்னரும் படுக்கைக்குப் போகாமல் பல்கலைக்கழக அனுமதிக்கான பத்திரங்களை நிரப்புவதில் ஆர்த்தி மும்மரமாக ஈடுபட்டிருந்தாள். சாப்பாட்டறையில் இருந்தவாறு, ரிவீயில் சொக்கர் பார்த்துக் கொண்டிருந்தான் விமலன். தண்ணீர்குடிப்பதற்காக மாடியிலிருந்து கீழேயிறங்கிவந்த கஜன் அப்பாவைக் கண்டதும், வேகமாகத் திரும்பிச்செல்ல முயன்றான். அதற்கிடையில், அவனைக் கண்ட விமலன் கீழே வரும்படி அவனைக் கூப்பிட்டான்.

“ஒன்ராறியோவில இருக்கிற யூனிவேசிற்றியளுக்கு மட்டுமில்லை, அமெரிக்காவிலை இருக்கிற யூனிவேசிற்றிக்களுக்கும் ஆர்த்தி விண்ணப்பிக்கலாமெண்டது உனக்குத் தெரியுமோ? படிப்பிலை, விளையாட்டிலை எல்லாத்திலும் அவள் முன்னுக்கு நிக்கிறாள். உன்னால ஏன் அப்பிடி இருக்கேலுதில்லை. ஆம்பிளைப் பிள்ளை பிறந்திருக்கிறான் எண்டு பெரிசாய்க் கொண்டாடினன். இப்ப ... என்னத்தைச் சொல்ல? உன்னைப் பத்தி நினைச்சாலே என்ரை பிரஷர் உச்சத்துக்குப் போகுது!” அப்பாவையே பார்த்தபடி கஜன் எதுவுமே பேசாமலிருக்க அவனே தொடர்ந்தான்.

“ரண்டு தங்கைச்சிமாருக்கு கலியாணம் கட்டிக்கொடுத்திருக்கிறன். ஊரிலையிருக்கிற அம்மா, அப்பாக்குக் காசு அனுப்பிக்கொண்டிருக்கிறன். ஆனா, உனக்கு, எந்தச் சோலியுமிருக்காது. எங்களை வைச்சுப்பாக்கவும் தேவையில்லை. ஆர்த்திக்குக் கலியாணம், காட்சியெண்டு எதையும் செய்யத்தேவையுமில்லை. அவளை நல்லபடியாய் வாழவைக்கிறதுக்கு என்னட்டைக் காசிருக்கு... உனக்காண்டிப் படி எண்டுதானே நான் சொல்றன். படிச்சு எனக்கு உழைச்சுத்தா எண்டே கேட்கிறன்? என்னத்தைச் சொன்னாலும் உன்ர மரமண்டைக்கை ஏறினால்தானே! உன்னாலை எனக்கு வெறும் அவமானம்தான் மிச்சம்,” விமலன் எழும்பிய வேகத்தில் அவனிருந்த கதிரை சுற்றிச்சுழன்று நின்றது.

கஜன் மீளவும் தன் அறையை நோக்கி மெதுவாக நடந்தான். பத்தாம்வகுப்புவரை செய்யமுடியாததை, பன்னிரண்டாம் வகுப்பில் திடீரெனச் செய்யலாமெண்டோ, அல்லது ஏதாவது மாயாஜாலமொன்று நடக்குமெண்டோ அவனுக்குத் தோன்றவில்லை. பல்கலைக்கழகம் என்பது தனக்கு எட்டாக்கனி என்பது அவனுக்கு நல்லாய்த் தெரிந்தது. அவனால் நித்திரை கொள்ளமுடியவில்லை. அந்தக் குளிரிலும் அவனுக்கு வியர்த்துக்கொட்டியது.

ஆர்த்தியின் அறையில் லைற் அணையும்வரைக்கும் காத்திருந்தவன், கட்டிலைவிட்டு மெல்ல எழுந்தான். தன் அறைக் கதவை அரை அரை அங்குலமாகக் மிகக் கவனத்துடன் திறந்தான். பெற்றோரின் அறையும் சாத்தப்பட்டிருந்தது தெரிந்தது. தன் ஒவ்வொரு அடியையும் மெதுமெதுவாக வைத்துப் படியிறங்கினான். அரைவட்ட நிலவின் ஒளி வரவேற்பறைக்குள் மங்கலாகத் தெரிந்தது. பதுங்கிப் பதுங்கிக் குசினிக்குள் சென்றவன், இறைச்சிவெட்டுறதுக்கென எப்போதும் கூராகப்பேணும் கத்தியைக் கையிலெடுத்தான். அங்குமிங்கும் கவனமாகப் பார்த்தவாறு மீளவும் தன் அறைக்கு அடிமேல் அடியெடுத்து நடந்துபோனான்.

ரைலனோல் குளிசைப் போத்தலைத் திறந்து ஆறுகுளிசைகளை எடுத்து வாய்க்குள் அடைந்தான். “அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்கள்,” என ஆங்கிலத்தில் ஒரு குறிப்பெழுதினான். முப்பதுநிமிடக் காத்திருப்பின் பின்னர், தன் அறைக்கும் ஆர்த்தியின் அறைக்கும் இடையிலிருந்த குளியறைக்குள் சென்றான். அங்கிருந்த கைதுடைக்கும் சிறிய துவாயைக் கையிலெடுத்துக்கொண்டு குளியல்தொட்டிக்குள் இறங்கினான்.

குளியல்தொட்டிக்குள் தன் கால்களை மடித்துச் சப்பணம் கட்டியிருந்தபடி, அந்தச் சிறிய துவாயைத் தன் வாய்க்குள் அடைந்தான். பின்னர் தன் முழுப்பலத்தையும் சேர்த்து, தன் இடது மணிக்கட்டை அந்தக் கூரான கத்தியால் குறுக்காக வெட்டினான். இரத்தம் குபுக் குபுக் என்று பீறிட ஆரம்பித்தது. அவனின் முனகல்களை அவனின் வாய்க்குள் இருந்த அந்தத் துவாய் தாங்கிக்கொண்டது. சற்றுநேரத்தில் கண்கள் செருக அவன் மயங்கிப்போனான்.

சாமத்தில் கழிப்பறைக்காகப் போவதற்காகக் குளியலறைக்கு வந்த ஆர்த்தி, கஜனையும் அவனைச் சூழவிருந்த இரத்தவெள்ளத்தையும் கண்டதும் பெருங்குரலில் அலறினாள். அவளின் அலறலில் எழும்பி ஓடிவந்த விமலனும், லதாவும், “ஓ கஜன்!” எனக் கதறினர். 911ஐ விமலன் வேகமாக அழைக்க, அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, “கஜன், கஜன் ஏனப்பு இப்படிச் செய்தனி, உனக்கு இங்கை என்ன குறை?” என லதா அரற்றினாள். கஜனின் மூக்குக்கு முன் கைவைத்து மூச்சுவருகிறதா எனப் பார்த்த ஆர்த்தி, “அம்மா, கஜன் இன்னும் மூச்செடுக்கிறான், கஜன், கஜன்,” எனப் பரிதாபமாக கதறியபடி அவனின் நெற்றியை ஆதரவாகத் தடவினாள்.

ஐந்து நிமிடத்துக்குள் அங்கு வந்த அம்புலன்ஸ் அவனை ஏற்றிக்கொண்டு ரொறன்ரோ வெஸ்ரேனுக்கு விரைந்தது. கஜனுடன் லதா செல்ல, விமலனும் ஆர்த்தியும் அவர்களின் பென்ஸில் அம்புலன்சைப் பின்தொடர்ந்தனர். தன்னைத்தானே கொல்ல கஜன் முயன்றிருக்கிறானா - ஆர்த்தியால் ஜீரணிக்கமுடியவில்லை. ‘தன்னைத்தானே இப்பிடிக் காயப்படுத்துமளவுக்கு அவன்ர மனம் பாதிக்கப்பட்டிருக்கிறதென்பதை நான் உணராம இருந்திருக்கிறனே. அவனுக்கு ஏதாவது வகையில் ஆறுதலாக இருந்திருக்கலாமோ,’ என்றெல்லாம் ஆர்த்தியின் மனம் பலவகையிலும் எண்ணியெண்ணித் துன்புற்றது.

“பிளீஸ் கடவுளே, கஜனை எங்களிட்டை இருந்து பிரிச்சிடாதை,” பல தடவைகள் சத்தமாகச் சொல்லிச்சொல்லி அவள் அழுதாள்.

‘என்னத்துக்காண்டி இப்பிடிச் செய்தான். எல்லாம் நாவுறுதான்போல. அல்லது யாரோ எங்கட வாழ்க்கையைப் பாக்க மனம்பொறுக்காமல் செய்வினை செய்திருக்கினமோ?’ விமலனின் மனம் மறுகியது. அவனின் கண்களை மறைத்த கண்ணீரைப் புறங்கையால் அவன் அடிக்கடி துடைத்துக் கொண்டான்.

ஆஸ்பத்திரியில் நேரம் அசைந்துகொண்டிருந்தது. பல மணி நேரக் காத்திருப்புக்குப் பின், கஜன் குணமாகிவிடுவான் என்ற செய்தி கிடைத்தபோது, போன உயிர் திரும்பிவந்தமாதிரி அவர்களுக்கு ஆசுவாசமாக இருந்தது. ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு அவர்கள் அழுதனர்.

“கடவுள் காத்தது, பிள்ளைக்கு ஏதாவது நடந்திருந்தால் ---, ” விமலன் விம்மினான்.

விமலனையும் லதாவையும் தனியே அழைத்த டொக்டர், குறுக்காக வெட்டியதால் அதிக இரத்தப்போக்கு இருக்கவில்லை என்பதை விளங்கப்படுத்திய பின்னர், கஜனுக்கு ஏதாவது அழுத்தங்கள் இருந்ததா, பாடசாலையில் அடாவடித்தனத்தின் பாதிப்பிருந்ததா, வீட்டில் பிரச்சினைகள் இருந்ததா என்றெல்லாம் அவர்களிடம் வினவினார். அவர்கள் அறிந்தவரையில் அவனுக்கு அப்படி எந்தப் பிரச்சினையுமில்லை என்றனர் விமலனும் லதாவும்.

சில பதின்மவயதுப் பிள்ளைகள் எதிர்மறையான கவனிப்பைப் பெறுவதற்கோ அல்லது தாங்கள் தோற்றுவிட்டார்களென உணரும்போது தங்களைத் தாங்களே தண்டிப்பதற்கோ, அல்லது தாங்கமுடியாத உணர்ச்சிகளைக் கையாள்வதற்கோ இப்படியான செயல்களில் ஈடுபடுவதுண்டு. எதற்கும் உளவியல்மருத்துவரிடமும், கவுன்சலிங்கும் போவது நல்லது. நாங்கள் அதற்குப் பரிந்துரைக்கிறோம் என்றபடி டொக்டர் வெளியேறினார்.

“கவுன்சலிங், சைகொலஜிஸ்ற்?“ விமலன் தனக்குத்தானே திரும்பத்திரும்பச் சொன்னான். “அவனுக்கு என்னத்துக்குக் கவுன்சலிங், நாங்க அவனுக்கு என்ன குறைவைச்சனாங்க? எனக்கொண்டுமே விளங்கேல்லை.”

லதா தலையை இடமும் வலமுமாக இரண்டு மூன்று தடவைகள் ஆட்டினாள். “நாங்க அதிஷ்டம்செய்தனாங்க எண்டு நான் நினைச்சன்.” அவளின் கண்களைக் கண்ணீர் நிறைக்க, அவளுக்குக் குரல் அடைத்தது.

“மற்ற ஆக்கள் இனி என்ன நினைப்பினம்.” விமலன் சொல்லிமுடிக்க முன்னர்

“மற்ற ஆக்களைப் பற்றிக் கவலைப்படுறதை விட்டிட்டு, முதலிலை கஜனைப் பற்றி கவலைப்படுங்கோ!” என அவனின் வாயை அடைத்தாள் லதா.

கேள்விகள் தொக்குநிற்க, என்ன செய்வதென்று அறியாத குழப்பத்துடன் கஜனின் அறையை நோக்கி இருவரும் நடந்தனர்.

அங்கே ஆர்த்தி, கஜனின் கையைப் பற்றியபடி அழுதுகொண்டிருந்தாள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.