1975ஆம் வருடம்.

யாழ்ப்பாணத்தில் ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிந்த காலம். அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மாற்றலாகி வந்து பத்து நாட்களேயாகின்றன. எனது ஊரான கட்டுவனிலிருந்து, பேரூந்து ஏறித் தெல்லிப்பளைக்கு வந்து, அங்கிருந்து தொடரூந்தில் யாழ்ப்பாணம் வருவேன். யாழ்ப்பாணம் தொடரூந்துத் தரிப்பிடத்துக்கு அண்மையில்தான் நான் பணிசெய்யும் பள்ளிக்கூடம் இருந்தது. ஐந்து நிமிடத்தில் நடந்தே போய்விடலாம்.
பள்ளிக்கூடம் முடிந்து, தொடரூந்துக்காக காத்துநிற்கின்றேன். நேரமோ பிற்பகல் நான்கு ஐம்பத்தைந்து.

“கொழும்புக் கோட்டையிலிருந்து, காங்கேசந்துறை நோக்கிச் செல்லும் யாழ்தேவி புகையிரதம் இன்னும் சிலநிமிடங்களில் முதலாவது மேடைக்கு வரும்.....”

நிலைய ஒலிபெருக்கி அலறியது. நெற்றிக் காயம் சிறிது வலித்தது. ஒட்டியிருந்த பிளாஸ்திரிமீது இலேசாகத் தடவிக்கொண்டேன்.

”வணக்கம் டீச்சர்....”

அவசரமாக சொல்லிவிட்டு என்னைக் கடந்து சென்றான் ஒரு பையன். ஆளை அடையாளம் தெரியவில்லை.ஏற்கனவே என்னிடம் படித்த மாணவனாக இருக்கலாம். அடுத்து செல்லம்மா ஆச்சியின் தரிசனம்.

“என்ன பிள்ளை..... நெத்தியில காயம்...... காலம்பிறை வந்த ரயிலைவிட்டு நீ இறங்கையிக்கை நான் உன்னைப் பாத்தனான்..... அப்ப காயம் இல்லை....இப்ப இருக்குது.... பள்ளிக்கூடத்தில பிள்ளையளோடை ஓடிப்பிடிச்சு விளையாடி விழுந்தெழும்பினனீயோ....”

ஆச்சியின் கடைசிமகள் கிளிநொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றாள். காலையில் நான் வந்து இறங்கும் ரெயிலில்தான் அவள் ஏறிப் பணிக்குச் செல்வாள். இப்போது நான் ஏறப்போகும் ரெயிலில்தான் அவள் வந்து இறங்குவாள். அவளை வீட்டுக்கு கூட்டிச் செல்லத்தான், ஆச்சி வந்திருக்கிறார்கள்.

“ஒண்டுமில்லை ஆச்சி.... பள்ளிக்கூடத்து ஸ்ராப் ரூமில அலுமாரிக்கு மேலை பழைய றீப்பையள் அடுக்கி வைச்சிருந்தவை.... அதிலையிருந்து ஒரு கம்பு எடுக்கிறத்துக்காக கதிரையை வைச்சு ஏறினேன்…. இறங்கையிக்கை கால் இடறி கீழை விழுந்திட்டேன்…..”

“என்ன செய்ய..... படவேணுமெண்டு விதி இருந்தா, பட்டுத்தானே ஆகவேணும்..... கவனமா பாத்து நடவுங்கோ.....இந்தா ரயிலும் வந்திட்டுது.... நான் என்ரை மோளைப் பாக்கப் போறன்.... நீ கவனமாய் பாத்து ஏறு பிள்ளை.....”

சொல்லியபடியே ஆச்சியும் நகர்ந்தார்கள்.

பொதுவாக காங்கேசந்துறை செல்லும் ரெயில், யாழ்ப்பாணத்தைக் கடந்துவிட்டால் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். மிஞ்சிப்போனால், ஒவ்வொரு கம்பாட்மெண்டிலும் பத்துப் பேர்வரைதான் இருப்பார்கள்.
 நான் ஏறியிருந்த பக்கம் யாருமில்லை. வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதும், என் நினைவுகளெல்லாம் அன்று பள்ளியில் நடந்த சம்பவத்தைச் சுற்றியே நின்றது…………………………………. பதினோராம் வகுப்புக்கான தமிழ் இலக்கிய பாட ஆசிரியைாக என்னை நியமித்திருப்பதாக அதிபர் தெரிவித்தார். என்னுடன் பணியாற்றும் ரஞ்சனி டீச்சர் வாழ்த்துரை தந்தார்கள்.

“அந்தக் கிளாசுக்கா…. நீ செத்தாய்….. அங்கை இருக்கிற பொடியளில பாதிக்கு மேல வப்புக்காலிக் கூட்டம்….. அவங்களில பாலாஜி எண்டு ஒருத்தன்….. வெளியூர்காறப் பொடியன்…. வாத்திமாருக்கெண்டு ஒரு மட்டுமரியாதை இல்லை….. இங்கை அவன்ரை சித்தப்பாவோ ஆரோ ஒரு சொந்தக்காரர் வீட்டிலயிருந்து வாறானாம்……"

“ஏன் அவன்ரை தாய்தேப்பனோ,சித்தப்பனோ சரியாய் கண்டிச்சு வளக்காமை விட்டிட்டினமோ….”

கேட்டேன் நான்.

“அதுகளைக் குறைசொல்லிப் புண்ணியமில்லை….. அவனுக்கு அண்ணன்காரன் ஒருத்தன் இருக்கிறான்….. நல்லாப் படிச்சவன்….. ஒருத்தியை லவ் பண்ணினானாம்…. அவளுக்கும் இவனிலை விருப்பமாம்…. கடைசி நேரத்தில தாய்தேப்பன் ரண்டுபேருமாச் சேந்து தங்கடை சொந்தத்துக்கை வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருத்தனுக்கு கலியாணம் பேசியிருக்கினம்….அவள் மாட்டேன் எண்டிட்டாள்…. ரண்டுபேருமா சேந்து செத்திடுவோம் எண்டு அவளை வெருட்டி சம்மதிக்க வைச்சுப்போட்டினம்…..அவள் வேறை ஒருத்தனைக் கட்டச் சம்மதிச்சிட்டாள் எண்டதைக் கேள்விப்பட்ட உடனை இவனாலை தாங்க ஏலாமல் போச்சு….. யோசிச்சு யோசிச்சு கடைசியில விசர் ஆக்கிப்போட்டுது….. நேரா மந்திகையில இருக்கிற ஆஸ்பத்திரியில சேத்துப்போட்டினம்…..இப்ப சுகமாகி அவையின்ரை வீட்டுக்குக் கூட்டிப்போய்ட்டினமெண்டு அறிஞ்சேன்……  அதிலையிருந்து இந்தப் பொடியன் பாலாஜிக்கு லேடீசையே பிடிக்காது….. துப்பரவா மதிக்கவே மாட்டான்….. அந்த பொம்பிளைக்கும் கலியாணம் நடக்கையில்லையாம்…. பேசிவந்த மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கலியாணமாகியிட்டுதெண்டு கடைசிநேரம் தெரியவந்து, இனி எனக்கு கலியாணமே வேண்டாமெண்டு வெறுப்பாய் சொல்லிப்போட்டாளாம்….”

நான் எதுவுமே பேசவில்லை.

ரஞ்சினி டீச்சர் சொல்லச் சொல்ல எனக்கு நெஞ்செல்லாம் பதறியது.

இதே சம்பவம் என் வாழ்க்கையிலும் நடந்தது.

பாலகிருஷ்ணன் என்ற ஆசிரியப்பயிற்சி மாணவனும் நானும் கோப்பாயிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும்போதுதானே காதலித்தோம்….! கட்டுண்டோம்….!! கனவுகள் பல கண்டோம்…….!!! கைப்பிடிக்கக் காத்திருந்தோம்…..! மணநாளைப் பாத்திருந்தோம்!!

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் ஆடிமாத தேரோட்டத் திருவிழாவுக்கு பாலகிருஷ்ணனை வரவைத்து, அங்கு என் பெற்றோருடன் பேசவைத்து அவர்களுக்கும் அவரைப் பிடித்துக்கொண்டதைக் கண்டு மகிழ்ந்தேன். கடைசிநேரத்தில், வெளிநாட்டில் வாழும் என் உறவுக்காரப் பாவியொருவன் கட்டுக்கட்டாக காட்டிய பணத்திலே சுருண்டுபோன என் பெற்றோர் அவனுக்கே என்னைக் கொடுக்க முடிவு செய்தனர்.
என் பெற்றோரின் கட்டளை என்னும் கரைகாணமுடியாத ஆசையினால், நெஞ்சிலிருந்த கனவுகள் எல்லாமே கரைந்து போய்விட்டன.

நான் கல்யாணத்துக்கு சம்மதித்த பின், பாலகிருஷ்ணனைப் பற்றிய தகவல் ஏதுமில்லை. இப்படியொரு சூழ்நிலைதான் பாலாஜியின் அண்ணன் வாழ்விலும் நடந்திருக்கின்றது. அண்ணனுக்கு வரும்போது, அதனைப் பாசமுள்ள தம்பிகள் யாரால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்….? அந்த சூழ்நிலைக்குள் அடிமையாகிவிட்டான் பாலாஜி. அதற்காக பெண் சமூகத்தின்மீதே ஒட்டுமொத்தமான வெறுப்பினைக் காட்டுவது ஏற்புடையதல்ல. இதனைத் தவறென்று தெளிவுபடுத்திப் புரியவைத்துவிட்டால், அந்த நிமிடத்திலிருந்து அவனும் ஒரு நல்ல மாணவன் ஆவதற்கு சந்தர்ப்பம் உண்டல்லவா!

செழிப்பாக வளரும் பயிருக்குள்கூட களைகள் இருக்கத்தான் செய்யும். சிரமத்தைப் பாராமல் அவற்றை நீக்கினால்தான், பயிருக்குச் சரியான வளர்ச்சி கிடைக்கும்….. வளர்கின்ற மாணவப்பருவத்தில் மாணவரின் எண்ணத்தில் தோன்றும் தப்பான எண்ணங்களைக் கருணையுள்ளத்தோடு அணுகிக் கனிவாலும்,பண்பாலும்,பொறுமையோடு பழகும் அறிவாலும், களைந்தெறிந்துவிட்டால்,கற்ற கல்வியின் மேன்மை மேலும் பெருமையுறும்….

அதுதான் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தத்தமது மனச்சாட்சியால் தரப்படுகின்ற நல்லாசிரியர் விருது….! திருத்துகின்றேன்….பாலாஜியைத் திருத்துகின்றேன்….. அந்த வகுப்பின் வழியாகப் போய்வந்திருக்கின்றேனே தவிர, வகுப்பினுக்குள் போகவுமில்லை….. அந்த மாணவனையும் தெரிந்துகொண்டதுமில்லை….. பரவாயில்லை….அதற்குச் சற்றுக் காலதாமதம் ஆகலாம்….. இதைஒரு சவாலாக ஏற்கின்றேன்….

புதிதாக வரப்போகும் ஆசிரியருக்கு மாணவர்கள் எத்தகைய  'மரியாதைச் செயல்ப்பாடு'களைச் செய்வார்கள் என்பது எனக்கும் தெரியும். ஒருகாலத்தில் நானும் மாணவியாக இருந்தவள்தானே.
போனதும் எல்லா மாணவர்களும் எழுந்து மரியாதை தந்தார்கள். பரவாயில்லையே…. ரஞ்சினி டீச்சர் சொன்னமாதிரி ஏதும் தெரியவில்லையே….பார்க்கலாம். நினைத்தபடி நாற்காலியை ஆட்டிப்பார்த்தேன். கால்கள் நான்கும் உறுதியாகவே இருந்தன.

“என்ன டீச்சர்…. கதிரை நல்லாத்தான் இருக்கு….. நீங்க பயப்பிடாமை இருங்கோ….”

ஒரு மாணவனின் குரல் சற்று பலமாக எழுந்து தணிந்தது. அந்தக் குரலிலே உண்மை இருந்தபோதும், அது அதிகாரத் தோரணையில் வெளிப்பட்டது.

“அந்தப் பாலாஜி இவனாகத்தான் இருக்க வேணும்…பாப்போம்…”

வகுப்புக்கு வந்த முதல்நாள் என்னும்போது, ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நடக்கும் சம்பிரதாய பூர்வமான அறிமுகம் நலமே நடந்தது. ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் வரிசைக்கிரமமாக எழுந்து தத்தமது பெயர்களைச் சொல்லும்போதும் நான், அழகானபெயர் என்று பாராட்டுக் கொடுத்து அந்தந்தப் பெயருக்கான அர்த்த-விளக்கங்களை அவர்கள் மகிழும்படி, எடுத்துச் சொன்னேன். நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாணவனின் முறை வந்தபோது, அவன் எழவில்லை. தனது நாற்காலியில் நன்கு சாய்ந்தபடி தனக்கான மேசையை வெறித்துப் பார்த்தபடி இருந்தான். எதுவுமே நடவாததுபோல நான் கேட்டேன்.

“தம்பி….. உன் பேரைச் சொல்லயில்லையேயப்பா……”

அவன் நிமிர்ந்து என்னை எரிப்பதுபோல பார்த்தபடி எழுந்தான்.

“பாலாஜி”

சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டான்.

“அருமையான பேர்….. நியாயத்துக்கும், தர்மத்துக்கும் வெற்றி கிடைக்கிறத்துக்காக, பாரதப் போரை நல்லபடியாக வழிநடத்தின கிருஷ்ணபகவானின்ரை பேர்…..”

“இருக்கலாம்….அந்த வெற்றிக்காக அவர் கையாண்ட முறையள் சூழ்ச்சியள்தானே……”

தூக்கிவாரிப் போட்டது எனக்கு. நான் எதிர்பார்க்கவில்லை. வாயடைத்து நிற்க முடியாது. நான் ஆசிரியை அல்லவா!

“கெளரவர்கள் சூழ்ச்சியால்தான் பாண்டவரை பலவீனமாக்கினார்கள்.

பாண்டவருக்குத் துணையா நிண்ட கிருஷ்ணர் அதே சூழ்ச்சியால எதிரியளை பலவீனப்படுத்தினார்…..”

“அவங்கள் சூழ்ச்சி செய்தமாதிரி இவரும் செய்தார் எண்டால், அவங்களும் இவரும் ஒண்டா…..அப்பிடியெண்டால் ரண்டு தரப்புக்கும் வித்தியாசம் இல்லை…. வஞ்சகத்துக்கு வஞ்சகம்…. பழிக்குப் பழி…..

இந்த வார்த்தையளை மகாபாரதம் உறுதிப்படுத்துதா?”

எனக்கு ஒன்றுமட்டும் புரிந்தது. இவன் என்னோடு சண்டை இழுக்கவேண்டுமெனத் திட்டமிட்டு, அதேவேளை யாருமே தன்னைக் குறைசொல்லாதபடி இருப்பதற்காக, மஹாபாரத விவாதத்தைத் துணைக்கு இழுக்கின்றான். அப்படியானால், எந்தச் சூழலிலும் தற்காத்துக்கொள்ளும் எச்சரிக்கை உணர்வும், அதேவேளை எந்தவொரு குறை,குற்றம் புரிந்தாலும் பழிமட்டும் தன்மீது சூழாமலும், தண்டணைக்கு ஆளாகமலும் இருக்கவேண்டும் என்னும் பய உணர்வும் அவனிடம் இருக்கின்றன. அவன்மீது நான் கொண்டிருக்கும் சவாலான அக்கறைக்கு இது முதலாவது படிக்கல்லாகத் தெரிந்தது. அதற்குள் மாணவிகள் பக்கமிருந்து ஒரு குரல்.

“டீச்சர்….. கதைக்கத் தொடங்கினா இவன் விடாமல் கதைச்சுக்கொண்டே இருப்பான்….. நீங்க இவனுக்கெண்டு தனியா ஸ்பெசல் கிளாஸ் வைச்சு சொல்லிக்குடுங்கோ….. இப்ப எங்களுக்கு பாடத்தை எடுங்கோ….”

நான் பாடத்தை எடுக்கத் தொடங்கினேன். தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்கநிலையான சங்ககாலம் பாடமாக அமைந்தது. காதலும், வீரமும் களைகட்டும் சங்க இலக்கியத்தில், ஐவகை நிலங்களுக்கான காதல் ஒழுக்கங்கள்: புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகிய பகுதிகள் கடந்து, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஒருதலைக் காமம், பொருந்தாக் காமம் ஆகிய பகுதிகள் வருமிடத்தில், காதல் கைகூடாத சூழலில் ஆண்கள் மேற்கொள்ளும் மடலேறுதல், வரைபாய்தல் பற்றிய தற்கொலை முயற்சிகள்பற்றி நான் பேசும்போது,

பாலாஜியின் முகத்திலே கோபம் கொப்பளிப்பதையும், சிரமப்பட்டு அதை அவன் அடக்கிக்கொண்டு தனது மேசையையே பார்த்துக்கொண்டிருப்பதையும் நான் கவனித்தேன். இப்போது அவன் மனத்திலே தனது அண்ணனது காதல்தோல்வி நிகழ்வே ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதையும், அதேவேளை மற்றவரைவிட அவனே பாடத்தை உன்னிப்பாய் கவனிக்கின்றான் என்பதையும் என்னால் உணரமுடிந்தது.
திடீரென எழுந்தான் அவன்.

“ஒரு சந்தேகம் கேக்கலாமா……?”

“சொல்லப்பா….”

“காதல் தோல்வியாலை அந்தக்காலம் மாதிரி வரைபாய இந்த யாழ்ப்பாணப் பகுதிகளில மலையும் இல்லை….. மடலேறும் பழக்கமும் நடைமுறையில இல்லை…..இந்த வசதியள் இப்ப இருந்திருந்தால், காதலிச்சு தோல்விகண்ட ஆம்பிளையள், அதையே நினைச்சு நினைச்சு விசரன் ஆகாமல் செத்திருக்கலாமெல்லே…..”

ஏற்கனவேஇடையில் பேசிய மாணவி எழுந்தாள்.

“ஏன்? இல்லாத வழியளுக்கெல்லாம் ஆராச்சி செய்யவேணும்….? போய் ரெயிலுக்கை தலையை வைக்கவேண்டியதுதானே…!”

மறுகணம் பாலாஜி முகத்திலே தெரிந்த கோபத்துக்கு அளவேயில்லை.

“உன்னை எவன் லவ் பண்ணுறானோ, இல்லையெண்டால் கட்டித் துலையிறானோ….. அவன் கட்டாயம் ரெயினுக்கைதான்ரி தலைவைச்சு சாவான்….. இல்லையெண்டால், நீயே தள்ளிவிடுவாய்…உங்களை மாதிரிப் பொண்டுகளையெல்லாம் நம்புறவங்கள் நாசமாய்த்தான் போவங்கள்….. உங்களையெல்லாம் நிக்கவச்சு சுடவேணும்….”

இதற்குமேல் இருவரையுமே பேசவிட்டால் விபரீதம் ஆகிவிடும். சத்தமாகப் பேசினேன்.

“கதையை நிப்பாட்டுங்கோ…..”

எனது பேச்சுக்கு கட்டுப்பட்டு அந்தப் பெண் உட்கார்ந்தாள். இவன்மட்டும் உட்காரவில்லை.

“பாலாஜி…. பொண்டுகளையெல்லாம் நம்புறவங்கள் நாசமாய்த்தான் போவாங்கள் எண்டு சொன்னியே…. உனக்கும் வீட்டிலை அக்கா,தங்கச்சிமார் இருப்பினமெல்லா…… அதை யோசிக்காமல் கதைக்கலாமா…….”

நான் கேட்டு முடிக்கவும் இடைவேளைக்கான மணியடிக்கவும் சரியாகத்தான் இருந்தது. வகுப்பைவிட்டு மாணவர்களெல்லாம் கலையத் தொடங்கிவிட்டனர். இடைவேளையை அடுத்து, பாடவேளை எனக்கு ஏதுமில்லை. ஆசிரியர்கள் தங்கும் அறையில் உட்கார்ந்திருந்தேன். அந்த வேளையில், வேறு எந்த ஆசிரியரோ, ஆசிரியையோ பக்கத்தில் யாருமில்லாததால், என் கைவசமிருந்த நூல் ஒன்றை வாசிக்கத் தொடங்கினேன். வாசல்புறம் யாரோ நிற்கும் சாயல் தெரிந்தது.திரும்பினேன்.

அது பாலாஜி.

“பாலாஜி….. என்னப்பா, உனக்கு இப்ப வகுப்பு இல்லையா……”

நான் கேட்கும்போதே “நிறுத்து” என்னும் பாணியில் சைகை காட்டிவிட்டு, எதுவுமே பேசாமல், என்னருகே வந்தான்.

அவனின் கண்கள் அனலைக் கக்கின.

“வீட்டில அக்கா,தங்கச்சிமார் இருப்பினமெல்லோ எண்டு கிளாசில வைச்சு என்னட்டைக் கேட்டியெல்லா….. என்ரை அக்கா, தங்கச்சிபற்றிக் கதைக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கு….”

அதிர்ந்தேன் நான்.

“என்ன கதைக்கிறாய் பாலாஜி…..நான் உன்ரை டீச்சர்….அதோடை உன்ரை அக்காமாதிரி…..”

அவன் ஒருகணம் வாசலை அணுகி யாரும் வருகின்றார்களா என்று பார்த்துவிட்டு வந்தான். அவனது குரல் கோபமாகவும், அதேவேளை வெளியே கேட்காதபடி தணிந்த குரலிலும் வெளிவந்தன.

“நீ எனக்கு அக்காமாதிரியா….. என்ரை அக்கா எப்பிடியானவ எண்டு உனக்குத் தெரியுமா….. எங்க அத்தானை லவ் பண்ணினா…..என்ரை அம்மாவும்,அப்பாவும் எதிர்ப்பாய் இருந்தும், உதறித்தள்ளிப்போட்டுப் போய் கலியாணத்தைப் பண்ணிக்கொண்டா….. இண்டைக்கு நல்லாத்தான் இருக்கிறா….…………”

எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிந்துவிட்டது.

“அப்பிடியெண்டால் நீ பாலகிருஷ்ணனோடை………..”

நான் பேசி முடிக்கவில்லை.

“ஓம்(ஆமாம்)….. பாலகிருஷ்ணனோடை தம்பிதான்டீ….உன்னாலை ஏமாந்துபோன பாலகிருஷ்ணன் தம்பிதான்……”

சொல்லியபடியே அருகேயிருந்த நாற்காலிமீது ஏறி, அலுமாரியின் மேலே அடுக்கியிருந்த றீப்பெர் கட்டை ஒன்றினக் கையினால் உருவி என்மேல் வீசினான். அது எனது இடதுபுற நெற்றிக்குச் சற்று மேலே வந்து மோதி பலத்த சத்தத்துடன் போய் விழுந்தது. அடி பலமாக விழுந்ததனால், வலிதாங்க முடியாமல், இடது கையினால் நெற்றியை அழுத்திப் பிடித்தேன்.

“அம்மா……..”

வேதனையால் வெளிவந்தது என் குரல். கையின் அழுத்துதலின் ஊடாக இரத்தம் வேகமாக வழிந்தது. இரத்தத்தைப் பார்த்தவுடன் செய்வதறியாது நாற்காலியிலேயே நின்றுகொண்டான் அவன்.
அவனது உடலெங்கும்  'வெட வெட'  என நடுக்கம் கண்டது. வெளியே ஹால்வழியாக ஆட்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது. அவர்கள் உள்ளே வரும்போது நடைமுறைக் காட்சிகள் இப்படியே இருந்துவிட்டால், நடந்த சமாச்சாரத்தைச் சட்டென்று அனைவருமே புரிந்துகொள்வார்கள். அடுத்து, அவன் தண்டிக்கப்படுவான். பள்ளியைவிட்டு, குற்றத் தரத்துடன் நீக்கப்படுவான். வேறு பள்ளியில் படிக்கவோ, நல்ல வேலைகளில் சேரவோ முடியாத நிலைகூட உருவாகலாம். அப்படியானால், நான் அவன்மீது தனிப்பட்ட முறையில் சவாலாக எடுத்துக்கொண்ட முயற்சி, அரும்பிலேயே கிள்ளப்படும். பாலகிருஷ்ணனுக்கு நான் செய்கின்ற இரண்டாவது துரோகமாக இது அமையும். பாலாஜியைக் காப்பாற்றவேண்டியது இப்போது எனது கடமையாகவும் தோன்றியது. அடுத்தகணம் எனக்குள் எப்படி அந்த வேகம் வந்ததோ தெரியவில்லை.
சட்டென்று அவனது கையைப் பிடித்து இழுத்துக் கீழே இறங்கவைத்து வாசல் மூலைக்குத் தள்ளிச்சென்று நிறுத்தினேன்.

“உன்ரை கனநாள் கோவம், இப்ப தணிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறேன்….. வெளியில உண்மை தெரிஞ்சா உன்ரை எதிர்காலமே வீணாப் போயிடும்…… பயப்பிடாதை…… எது நடந்தாலும் வாயைத் திறக்கப்பிடாது….. நான் கதைக்கிறேன்….. தேவைப்பட்டா மட்டும் நீ தலையாட்டினாப் போதும்……”

அவனது கண்கள் இரண்டும் இலேசாகக் கலங்கியிருந்ததைக் கவனித்தேன்…… நான் அலுமாரிக்குச் சமீபமாக நின்றுகொண்டேன். பள்ளி அதிபர் உட்பட இரண்டு ஆசிரியைகள், சில மாணவர்களும் இருந்தனர். நல்லவேளை…. ரஞ்சனி டீச்சர் வரவில்லை. நான் முந்திக்கொண்டேன்.

“நோட்டுக் கொப்பியில கோடுபோட அவசரமா புற்ரூளர் ஸ்கேல் தேவைப்பட்டுது….. கைவசம் இல்லை…. அலுமாரிக்கு மேலை அடுக்கிவைச்சிருக்கிற கட்டிங்பீஸ் றீப்பெர் ஒண்டு எடுத்துக் கோடு போடலாமெண்டு கதிரை வைச்சிட்டு ஏறி எடுத்திட்டேன்…. கீழை இறங்கிறத்துக்குள்ளை கால் இடறி நிலத்தில விழுந்திட்டேன்…. விழுந்ததாலை தலையிலை அடிபட்டிட்டுது….. சத்தம் கேட்டு முதல்லை ஓடிவந்து, என்னை எழுப்பிவிட்டது பாலாஜிதான்….. தலையில ரத்தத்தைப் பாத்த உடனை பயந்து நடுங்கியிட்டான்…. பாருங்கோ நடுங்கிறதை….. மயக்கம் ஒண்டுதான் வராத குறை…….”

சொல்லியபடி சிரித்துச் சமாளித்து அனைவரையும் நம்பவைத்தேன். எனக்குப் பக்கத்தில் நின்ற ஆசிரியைகள் இருவரையும் பார்த்து அதிபர் பேசினார்.

”நீங்க ரண்டுபேரும் கூட ஹெல்ப்புக்கு வாங்கோ….. டீச்சரை கூட்டிப்போய் பெரியாஸ்பத்திரியிலை மருந்தைக் கட்டிப்போட்டு, அப்பிடியே கட்டுவனுக்குப் போய் அவவின்ரை வீட்டில விட்டிட்டு வந்திடுவோம்…..நான் போய் என்ரை காரை எடுத்துக்கொண்டு வந்திடுறேன்….”

அப்போது நான் குறுக்கிட்டேன்.

“சேர்…. தயவுசெய்து குறை நினைக்காதையுங்கோ….. ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்தைக் கட்டிப்போட்டு என்னை இங்கை ஸ்கூலுக்கே கூட்டிக்கொண்டுவந்து விட்டிடுங்கோ…..நான் பின்நேரம் அஞ்சுமணி யாழ்தேவி ரெயினில ஊருக்குப் போயிடுவேன்…..பிளீஸ் சேர்…..”

யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. வாசல் மூலையில், நான் விட்ட இடத்தைவிட்டு நகராமல் நின்றான் பாலாஜி. உடல் நடுக்கம் குறைந்து, கண்களில் மட்டும் மிரட்சி தெரிந்தது.

“பயப்பிடாதை….”

கண்களால் ஜாடை காட்டித் தைரியமூட்டினேன். இயல்பாகப் பேசினேன்.

“ஓகே….. பாலாஜி….. நீ கிளாசுக்குப் போப்பா……”

“சரி” என்பதுபோல் தலையை ஆட்டினான்.

சொல்லிவிட்டு சக ஆசிரியைகள் இருவருடனும் வெளியே நடந்தேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------

நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த நான், யாழ்ப்பாணத்தை அடுத்து “கொக்குவில்” தரிப்பிடத்தில் வண்டி நின்றபோதுதான் சுயநிலைக்குத் திரும்பினேன். ஓரிருவர் இறங்கினரேயன்றி, யாரும் ஏறியதாகத் தெரியவில்லை. அடுத்துவரும் தரிப்பிடங்கள் கோண்டாவில், இணுவில், சுன்னாகம், மல்லாகம் ஆகிய நான்கு தரிப்பிடங்கள் கடந்துதான், ஐந்தாவதாக நான் இறங்கவேண்டிய தெல்லிப்பழை வரவேண்டும்.
அருகே யாருமே இல்லாததால், கால்களை தூக்கி முன்சீட்டில் போட்டபடி, யன்னல் மூலையோடு முதுகைச் சாய்த்தபடி சோம்பல் முறித்துக்கொண்டேன்.

அருகே பாலாஜி.

நினைவுகளின் பிரமையா என எண்ணியபடி கண்ணைக் கசக்கினேன். நிஜந்தான். எதிர்சீட்டில் நீட்டியிருந்த கால்களை மடக்கி கீழே வைத்தபோது, என்முன்னே மண்டியிட்டு விழுந்து, எனது பாதங்களில் தனது முகத்தை அழுத்தியபடி கதறி அழுதான். என்னையறியாமலே நானும் கதறினேன்.

“என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ டீச்சர்….. நான் செய்யக்கூடாத பெரிய பாவத்தைச் செய்துபோட்டேன்…. நான் இவ்வளவு பெரிய பிழைவிட்டும் என்னைக் காட்டிகுடுக்காமை காப்பாற்றி விட்டிருக்கிறியள்…..”

மற்றவர்போல சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி கோபப்பட்டுச் சினக்காது எனக்குள் கையாண்ட பொறுமைக்குக் கிடைத்த பரிசு இது.

“அடுத்தவர்களால் புரிந்துகொள்ள முடியாத பொறுமை என்னும் பெருமைமிக்க கல்வியைக் கற்றுள்ளவர், மற்றவரால் முழுமையாக உணரமுடியாத நிலத்துக்கு உவமேயம் ஆகின்றார்…..”

என்கின்றது நன்னூல்.

“தெரிவரும் பெருமையும் : திண்மையும் பொறையும்,
பருவம் முயற்சி : அளவிற் பயத்தலும்,
மருவிய நன்னில : மாண்பு ஆகு(ம்)மே….”

”பாலாஜி….. எழும்பு தம்பி…..நீ இவ்வளவு வேகமாய் மனம் மாறுவாய் எண்டு நான் நினைக்கையில்லை….. எனக்கு உன்னிலை கோவமில்லை…… உன்ரை அண்ணருக்குச் செய்த துரோகத்துக்குக் கிடைச்ச தண்டணையெண்டு நினைச்சுக்கொள்ளுறேன்….”

நான் பேசியதைக் கேட்டுத் துடித்துப் பதைத்து நிமிர்ந்தவனான அவன், மண்டியிட்ட நிலையிலேயே என்னிடம் கைகூப்பினான்.

“என்ரை அக்கா, தங்கச்சிமாரோட உங்களை நீங்கள் சேத்துச் சொன்னதுக்கு கோவப்பட்ட நான், இப்ப சொல்லுறேன்….. என்ரை கூடப்பிறந்த அக்காவைவிட, நீங்கள் நூறு படி மேலானவ டீச்சர்….. என்னை உங்கடை கூடப்பிறந்த பிறப்பா நினைச்சு என்னை…….”

சொல்லி முடிப்பதற்குள் அவன் வாயை என் வலக்கரத்தால் பொற்றினேன்.

“அப்பிடி நினைச்சதாலைதானப்பா உன்னிலை அக்கறையெடுக்க முடியிது…….”

“நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போய் வாறத்துக்குள்ளை நான் அறிஞ்சேன் : உங்கடை அப்பாவும்,அம்மாவும் காசுக்காக ஆசைப்பட்டு, செத்துப்போவோமெண்டு உங்களை வெருட்டித்தான் கலியாணத்துக்கு சம்மதிக்க வைச்சினமாம்….. இந்த விசயம் தெரியாமை, நீங்களாத்தான் சம்மதிச்சதா நான் பிழையா நினைச்சுப்போட்டேன்…. அந்த சூழ்நிலையில நீங்கள் பாவம்……. என்ன செய்வியள்…. அதுமட்டுமில்லாமல் இனி கலியாணமே வேண்டாமெண்டு சொல்லிப்போட்டியளாம்…..”

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவனது தோளிலே தொட்டுத் தூக்கி, எதிர் சீட்டில் உட்கார வைத்தேன்.

“நீ அறிஞ்சதெல்லாம் உண்மைதான்…..எனக்கு கலியாண வாழ்க்கையே வெறுத்துப்போச்சு…..ஆசைப்பட்ட வாழ்க்கையும் போச்சு…… அம்மா,அப்பா பேசிவந்த வாழ்க்கையும் போலி ஆச்சுது…..”

என்னையறியாமலே பெருமூச்சு எழுந்தது.

“நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை போகையில்லை…..இன்னும் உங்கடை நினைப்பிலையே அது காத்துக்கொண்டிருக்குது….. எனக்கு ஒரு நல்ல டீச்சராகவும், பாசத்தைக் காட்டிறதில ஒரு அக்காவாகவும் இருக்கிற உங்களை என்ரை அம்மாவுக்கு அடுத்தபடியான அண்ணியாய் பாக்க ஆசைப்படுறேன்….. அதுக்காகத்தான் யாழ்ப்பாணத்தில சித்தப்பா வீட்டுக்கு நேராகப் போகாமல், உங்களோடை கட்டுவனுக்கு வந்து, இண்டைக்கு நடந்த சம்பவங்களுக்காக உங்கடை அம்மா,அப்பாட்டை மன்னிப்புக் கேட்டிட்டு உங்களை என்ரை அண்ணனுக்காக பேசிற முடிவோடை வாறேன்…..”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அவனுடைய மனமாற்றங்கள், ஆசைகள் எல்லாம் சரிதான். ஆனால், பெரிய மனிதன்போல செயல்படும் முறை எனக்குப் பெரிய திகைப்பையும், சிறிது சிரிப்பையும் தரத் தவறவில்லை.
அதேவேளை, எனது பெற்றோர் எனக்குத்தெரியாமல் மாப்பிள்ளை பார்க்கும் பணியில் இப்போதும் ஈடுபட்டிருப்பதையும் அறிந்தும், தெரியாதவள்போல் இருக்கின்றேன். அதுமட்டுமன்றி, பாலாஜியின் வீட்டிலுள்ள பெரியவர்கள் செய்யவேண்டிய வேலையை இவன் கையிலெடுப்பதை சமூகத்தில் யார் ஏற்றுக்கொள்வார்?

“அவசரப்படாதையப்பா….. முதல்லை உங்கடை அண்ணர் என்ன முடிவிலை இருக்கிறார்…. அம்மா, அப்பா என்ன யோசனையிலை இருக்கினம் எண்டதை தெரிஞ்சுகொள்ளவேண்டிய தேவை இருக்கு…..”

“அவையின்ரை முடிவையும்,யோசனையையும் தூக்கி குப்பையில போடுங்கோ…… என்ரை அப்பா ரிட்டயட் வாத்தியார்…..சலரோக வருத்தக்காரர்……. அம்மாவும் காலிலை வாதப்பிரச்சினை உள்ளவ…… ரண்டுபேருமே வீட்டைவிட்டு வெளியில வராயினம்……. அக்காவுக்கு கலியாணமாகி திருகோணமலையில இருக்கிறா……. அண்ணன் இவர் ஒருத்தர்தான், அவரும் மந்திகை ஆஸ்பத்திரியில இருந்த நேரம்…… வெளித் தேவையளுக்கு போய்வர நான் ஒருத்தன்தான்……. பாத்த உடனை சிரிச்சுப்பேசிக் கதைக்கிற ஆக்களெல்லாம், நான் அங்காலை போனபிறகு விசரன்ரை தம்பி போறானெண்டு என்னைப் பகிடி பண்ணிச் சிரிக்கிறதைக் கேட்டிருக்கிறேன்….. எக்ஸாம் டைமிலயெல்லாம் இரவுஇரவா கஷ்டப்பட்டுப் படிச்சிட்டு காலையில எழும்பி, பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிட்டால் போறவழியில இருக்கிற, வப்புக்காலி கூட்டங்கள்,…..

“அண்ணன்காரனும் இப்பிடித்தான் விழுந்து,விழுந்து படிச்சான்…. ஆரோ ஒருத்தி, கூடப் பழகி, விசராக்கி மந்திகையில படுக்கவைச்சிட்டாள்….. அடுத்தது இவனை விசராக்க எவள் வரப்போறாளோ……..”

இப்பிடியெல்லாம், பகிடிபண்ணிச் சிரிப்பாங்கள்…… சில நேரங்களிலை அவங்களோடை சண்டையும் போட்டிருக்கிறேன்….. பள்ளிக்கூடத்துக்கு போனால்,பாடத்தில கவனத்தை வைக்க ஏலையில்லாமல்(முடியாமல்) கிடக்கும்…… உன்னோடை படிச்சவனெல்லாம் பெரிய டொக்டர், இஞ்ஜினியர், கவுண்மெண்ட் ஏஜெண்ட் பதவியளுக்குப் போக நீமட்டும் தெருவில விசரனாய்த் திரி எண்டு சில வாத்திமார் திட்டுறதுக்கும்…… கிளாசில கவனமில்லாமல் எவளை நினைச்சு நினைச்சு விசராகப்போறாய்…… எண்டு டீச்சர்மார் கேட்டுச் சிரிக்கிறதுக்கும் நான் எத்தினையோநாள் பள்ளிக்கூட கக்கூசுக்குள்ளைபோய் அழுதிருக்கிறேன்…. அப்பிடியான சிற்றிவேசனிலை நான் பொறுமையை இழந்துபோய் வாய்துறந்து என்னத்தையெண்டாலும் சொல்லிப்போடுவேன்….. பேர் என்னண்டா பாலாஜி வாத்திமாருக்கு மதிப்புக் குடுக்கமாட்டான்……..”

அவனால் தாக்கப்பட்டபோது, எனது தலையிலிருந்து வழிந்த இரத்தம், இப்போது அவனின் பேச்சைக் கேட்கக் கேட்க என் கண்களின் வழியே கண்ணீராக வழிந்தது. ஆமாம் : இரத்தக் கண்ணீர் என்பார்களே ! அதுதான் இது !! இத்தனைக்கும் அடிப்படைக் காரணம் நான். அதற்குக் காரணம் என் பெற்றோரின் கரைகாணமுடியாத பணத்தாசை!

ஒரு நிமிடம் கண்களை மூடிச் சிந்தித்தேன்.

“பாலாஜி…..நான் சொல்றதைக் கவனமாய் கேளப்பா…..நான் இப்ப சொல்லப்போற விசயம், சாதாரணமா ஒரு டீச்சரும், மாணவனும் கதைக்கக்கூடிய விசயமில்லை……. ஆனால், அதையும் மீறின ஒரு றிலேசன்சிப்பை உண்டாக்கிறத்துக்காக ஆலோசனை பண்ணுறோம்….. நீயும் சின்னப்பிள்ளை இல்லை…… அதே நேரத்திலை உன்ரை குடும்பத்திலை இப்ப உனக்கிருக்கிற வலி எப்பிடியானதெண்டு இப்பதான் எனக்கு விளங்குது(புரிகிறது)….. இப்ப நான் உன்னட்டை மனம்விட்டுச் சில விசயங்கள் கதைக்கப்போறேன்…… முக்கியமாக, இண்டைக்கு எங்களுக்குள்ளை நடந்த ஸ்ராப்ரூம் பிரச்சினையோடை உண்மை, கடைசிவரைக்கும் யாருக்குமே தெரியக்கூடாது…… கடைசிவரைக்கும் எண்டு நான் சொன்னது, நாளைக்கு உனக்கு கலியாணமாகி பிள்ளைப்பெத்த பிறகும்கூட….. ஏனெண்டா(ஏனெனில்), என்ரை அப்பன், என்ரை பேரன் அந்தக் காலத்திலை பள்ளிக்கூடத்தில வைச்சே வாத்திக்கு அடிச்சவன் எண்ட வரட்டுவீர செய்கையளில அதுகளும் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பத்தை நாங்களே உருவாக்கிக் குடுத்தமாதிரி ஆகியிடும்……. அதனால, இண்டைக்கு நான் என்ன பொய்யைச் சொன்னேனோ……. அதை அப்பிடியே நீயும் பலோ பண்ணு……. நீ ஒருவேளை நினைக்கலாம் : டீச்சரே பொய் சொல்லிப்போட்டு அதை அப்பிடியே என்னையும் சொல்லச் சொல்லுறா எண்டு……… குற்றமில்லாத நன்மையைத் தருமெண்டால், அதுக்காகச் சொல்லுற பொய்யும்,உண்மைக்குச் சமம் எண்டு திருக்குறளிலை படிச்சிருப்பாய்……. பள்ளிக்கூடத்திலை நான் உண்மையை சொல்லியிருந்தா, பாதிப்பு உனக்கு……. பாவங்கள் எனக்கு……. ஆனால், பொய்யைச் சொன்னதாலை, தகரமாய் இருந்த நீயும் தங்கம் ஆகினாய்….. நீ அறியாமல் இருந்த உண்மையை அறிஞ்சுகொண்டாய்…….”

பேசிமுடிப்பதற்குள் அவன் குறுக்கிட்டான்.

“அதுமட்டுமில்லை…. பிரிஞ்சிருந்த ரண்டு இதயங்கள் ஒண்டுசேரப் போகுதுகள்…..”

கேட்கும்போதே நெஞ்சுக்குள் நிலவு காலித்தது(உதித்தது).

“சொல்லுறதைக் கவனமாய்க்கேள் பாலாஜி…… என்னைப் பெத்ததுகளும், சொந்த பந்தங்களும் எனக்கு வில்லங்கமாய் நிக்கிதுகள்…… இந்த நேரத்தில நீ எங்கடை வீட்டுக்கு வந்து உன்னை அடையாளம் காட்டினா, என்ரை அம்மாவும்,அப்பாவும் உசார் ஆகிடுவினம்…… இவள் கலியாணமே வேண்டாமெண்டு சொல்லிப்போட்டு இரகசியமாய் தொடர்பில இருக்கிறாள்…. கதைக்கிறத்துக்கு மைச்சான்காரனையும் கூட்டிக்கொண்டு வந்திட்டாள்….இனி விட்டுவைக்கக்கூடாது எண்டு நேரடியா களத்தில இறங்கியிடுவினம்…… ஆனபடியால், இப்ப நீ என்னோடை கட்டுவனுக்கு வரவேண்டாம்….. என்னோடை தெல்லிப்பழையில இறங்கி நில்லு…. இதே ரெயின் காங்கேசந்துறைக்கு போயிற்று அரைமணித்தியாலத்தில திரும்பி வரும்…..ஏறி யாழ்ப்பாணம் போயிடு…… வீட்டிலைபோய் முதல்லை அண்ணனிட்டைக் கதை…….”

சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டான்.

“அண்ணனும், அம்மா, அப்பாவும் வவுனியாலை இருக்கினம் அண்ணி….. நான் யாழ்ப்பாணத்தில என்ரை சித்தப்பா வீட்டிலை தங்கித்தானே பள்ளிக்கூடம் வாறேன்……."

தன்னைமீறி  “அண்ணி” என அவன் உரைத்த வார்த்தை என்னை ஆகாயத்துக்குத் தூக்கிச் சென்று இறக்கியது.

அதனைக் கவனிக்காததுபோல இருந்தேன். அவனே பேசினான்.

“வாற சனிக்கிழமை வவுனியாவுக்குப் போய்ட்டு, ஞாயிற்றுக்கிழமை திரும்புறேன்…… வரையிக்கை முழு முடிவோடைதான் வருவேன்….. அதுவரைக்கும் என்ரை சித்தப்பா வீட்டுக்கோ, இல்லாட்டி என்ரை ஆத்தையப்பனுக்கோகூட, எதையும் சொல்லமாட்டேன்……. குறிக்கிற நாளில அண்ணனைக் கூட்டிவந்து, அவன் சார்பில நானும், உங்க சார்பில ஆராவது ஒரு டீச்சரையும் சாட்சிக்கு கூட்டிக்கொண்டுபோய்………
முதல்லை யாழ்ப்பாணம் பொலிஸ் ஸ்ரேசனில ஆஜராகி, அவைக்கு முன்னாலையே மாலை மாத்தி போட்டோ எடுத்து நியூஸ் பேப்பருக்குக் குடுத்து எல்லாருக்கும் தெரியிறமாதிரி பப்ளிக் பண்ணுவோம்….. விசரன் எண்டு என்ரை அண்ணனையும், அவனை விசரன் ஆக்கினவள் எண்டு உங்களையும் ஆராரெல்லாம் சொன்னாங்களோ அவங்களெள்ளாம் பாத்துத் திகைக்கட்டும்….. அடுத்தபடியா றெஜிஸ்டரை என்ரை சித்தப்பா வீட்டுக்கு வரவைச்சு உங்கள் ரண்டுபேருக்கும் றெஜிஸ்டரை முடிப்போம்….. இதைக் கட்டாயம் செய்து முடிக்கவேணும்…… நான் முடிப்பேன்……!
பிறகு கலியாணம் கச்சேரியள்பற்றி யோசிப்போம்…….”

“அதுவரைக்கும் பள்ளிக்கூடத்தில என்னை அண்ணியெண்டு கூப்பிட்டுப்போடாதை……”

“அப்ப மட்டுமில்லை….. பள்ளிக்கூடத்திலை வைச்சு எப்பவுமே அண்ணியெண்டு கூப்பிடமாட்டேன் டீச்சர்……”

சொன்னதும் இருவரும் சேர்ந்து சிரித்தோம்.

----------------------------

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.