1

என் தங்கை கலையரசிக்கு திருமணமான கையோடு , அவளும் கணவரும் கனடாவுக்கு குடிவந்து விட்டார்கள். அவர்களது வீட்டின் மூன்றடுக்கு மாளிகையின் மொட்டை மாடியில், வெற்றுத் தரையில், அகலக் கால்பரப்பி, ஆகாயத்தைப் பார்த்தபடி, மல்லாந்த நிலையில் படுத்திருக்கின்றேன். காற்றின் தாலாட்டால் கண்கள் சுழலக், கடந்துபோன நினைவுகளின் தாலாட்டால் நெஞ்சம் சுழன்றது.

சுமணாவதி கண்டியிலே சிங்களப் பள்ளிக்கூடம் ஒன்றில், வரலாறு (சரித்திர) பாடம் கற்பிக்கும் ஆசிரியை. நானோ தமிழகத்தில் திருநெல்வேலியில் வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியன். முகம் பார்த்துப் பேசும் அலைபேசியோ, அல்லது சாதாரண அலைபேசியோ புழக்கத்துக்கு வராதிருந்த காலம் அது. முன்பின் அறிமுகமில்லா உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுடன் தொடர்புகொண்டு, உள்ளப்பரிமாற்றம் செய்கின்ற கருவியாக, “பென் பிரெண்ட்” என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற “பேனா நண்பர்” தொடர்புக் கலாச்சாரம் அன்றய நடைமுறையில் அமோகமாக இருந்தது. தொடர்புகொள்ள விரும்புபவர்கள், தமது பெயர்,விலாசம் மற்றும் படிப்பு, தொழில் போன்ற இதர சூழல்பற்றிய விபரக் குறிப்புக்களை பத்திரிகை, சஞ்சிகை போன்ற ஊடகங்களின்மூலம் தெரியப்படுத்துவார்கள். அவற்றில் தமக்குப் பிடித்தமான விபரங்கள் கொண்ட நபரை, மற்றய நபர் தொடர்புகொண்டு தனது பேனா நண்பராக ஆக்கிக்கொள்வார். இந்த வகையில்தான் வரலாற்றுப்பாட ஆசிரியர்கள் என்னும் முறையில், என் முகவரிக்கு முதன்முதலில் கடிதம் அனுப்பினாள் சுமணாவதி.

எழுத்துக்கள் எல்லாமே முத்துமுத்தாக இருந்தன. சொற்குற்றம் ஏதுமில்லாமல் இத்தனை அழகாக தமிழில் , ஒரு சிங்களப் பெண்ணால் எப்படி எழுத முடிகிறது? ஒருவேளை, தமிழ் நண்பர்கள் யார்மூலமாவது எழுதுவிக்கின்றாளோ என்ற சந்தேகம் உள்ளிட, இருப்புக்கொள்ள முடியாமல் கடிதத்தில் கேட்டேவிட்டேன். பத்தாம் வகுப்புக்கான தமிழ்பாட பரீட்சையில் திறமையான பெறுபேறு பெற்ற சான்றிதழைப் போட்டோ எடுத்து, தனது குடும்பப் போட்டோவையும் சேர்த்து தபாலில் அனுப்பியிருந்தாள்.

நடுவிலே நாற்காலியில் அப்பா அமரதுங்க, பின்னால் அண்ணி கீதா, அவரது கையில் ஐந்து வயதுக் குழந்தையாக ராகுல, அடுத்து அண்ணன் நிசங்க மல்ல, அடுத்து சுமணாவதி. அப்பாவின் நெஞ்சோடு அணத்தபடி அம்மாவின் படம்.பெயர் : மெனிக்கா. இதிலே, அண்ணன் நிசங்கமல்ல, கனடாவில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகின்றான். அப்பா கண்டியிலே பில்டிங் கன்ராக்டராக இருக்கின்றார். தவிர, தங்களின் வீட்டிலுள்ள தொலைபேசியின் எண்ணையும் குறிப்பிட்டு, தன்னோடு தமிழிலே பேசும்படி எழுதியிருந்தாள்.

எங்கள் வீட்டிலும் தொலைபேசி வசதி இருந்ததனால், தொலைபேசிச் செயலகத்தில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து, அப்போதெல்லாம் அரைமணி நேரமல்ல…. ஆறுமணி நேரம் காத்துக்கிடந்துகூட பேசினேன்…. பேசினோம். அதனை ட்ரங் கால் என்பார்கள். ஐயம் தீர்ந்தது. அது சுமணாவதிதான். எங்களைப்பற்றிய விபரங்களுடன் எங்கள் குடும்ப போட்டோவையும் அனுப்பினேன். பிறந்த காலத்திலிருந்து, கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்புவரை தாங்கள் கொழும்பில் குடியிருந்ததாகவும், தங்களுக்குப் பக்கத்து வீட்டுக் குடும்பம், தமிழகத்து கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுடன் நெருங்கிப் பழகியதால், தானும், அண்ணனும் தமிழில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்துகொண்டதாகவும், தெரிவித்தாள்.

சுமணாவதியைப் பொறுத்தவரையில், தமிழ் இலக்கியம், தமிழகத்து வரலாறு, சம்பந்தமான நூல்கள் பலவற்றை நூலகத்தில் தேடித்தேடி எடுத்துப் படிக்கின்றாள்.படிப்பதோடு மட்டுமல்ல, என்னிடமும் அதுபற்றி விவாதிப்பாள். அப்போது, நான் ஏதாவது மாற்றுக்கருத்து தெரிவிக்கும் பட்சத்தில், அதன்பொருட்டு என்னோடு தொலைபேசியில் சண்டையும் போடுவாள். எங்கள் சம்பளத்தில் பாதிக்குமேல் தொலைபேசிக்குத் தீனி போட்டே தீர்ந்துபோயின.

சிங்கள சமூகத்தில்……. தமிழை நேசிக்கும் ஒருத்தியா என நினைக்கும்போது, அவளின்மீது என்னையறியாமல் ஒரு பெருமதிப்பு எழுந்ததைத் தடுக்க முடியவில்லை. சுமணாவதி ஆசிரியைப் பணியில் சேர்ந்து, ஆண்டுகள் ஆறுதான் ஆகின்றன. இந்த ஆறு ஆண்டுகளுக்குள் எட்டுப் பள்ளிகளுக்கு மாற்றம் பெற்றுவிட்டாள். சுமார் ஐநூறு மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் தமிழ் மாணவர்கள் பதினைந்து பேர்தான் இருந்தனர். எனைய சிங்கள மாணவர்கள், மற்றும் சில ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த மாணவர்களை அடிமைபோல நடத்தினார்கள். சுமணாவதி இதனை எதிர்த்துப் போராடி, தவறுகளை சரிசெய்தாள். தினசரிப் பத்திரிகைகளிலும், வானொலியிலும் இச் செய்தி இலங்கை முழுவதும் பரவியது.

வேறொரு தடவை, சுமணாவுடன் வேலைபார்த்த ஜெயஸ்ரீ என்ற ஆசிரியையிடம், அதேபள்ளி ஆசிரியர் தவறான முறையில் நடக்க எத்தனித்தபோது, அதை நேரிலே கண்ட சுமணாவதி அந்த ஆசிரியரின்மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவைத்தாள். தவறுசெய்த ஆசிரியரை மன்னிப்புக்கேட்க வைத்தாள். அந்த ஆசிரியருக்கு அரசியல் செல்வாக்கு உண்டாம். விளைவு : இடமாற்றம்! இடமாற்றம்!! இடமாற்றம்!!!

பள்ளியில் மட்டுமல்ல…..! வெளியுலகிலும் அதிகமான ஏழைக் குடும்பங்களுக்குத் தன்னாலான உதவிகள் புரிந்தும், திறமை இருந்தும் வசதியில்லா மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் எடுத்தும் உதவினாள். அத்தனை சமாச்சாரங்களும் பத்திரிகைகளில் வரும்போதெல்லாம், அதனைக் கவனமாகக் கத்திரித்து சேமித்து அவற்றை ஒன்றுபோல திரட்டி “செய்தி ஆல்பம்” ஆக தயார் செய்தாள்.

“ஓ….. சுமணாவதி டீச்சர் இத்தனை சர்வீசும் செய்யிற காரணம் இப்பத்தான் புரியிது…. எல்லாமே பத்திரிகையில வரணும்….. அதைக் “கட்”பண்ணி எடுத்து, இப்பிடி எல்லாருக்கும் காட்டித் தம்பட்டம் அடிக்கணும்….. சமாதானப் புறா ன்னு காட்டிக்கணும்….. அதுதானே…..”

அவள்மீது பொறாமைகொண்ட ஆசிரியர்கள் பொரிந்து கொட்டினார்கள். சுமணாவதி அசரவில்லை. ஆத்திரம் அடையவில்லை. பள்ளியின் ஆண்டுவிழாவின்போது, பகிரங்க மேடையில் அனைத்துக்கும் பதில் கூறினாள்.

“என்னைப் பொறுத்தவரையில் சிங்களவர், தமிழர் எல்லாம் ஏற்கனவே கேட்டுவெச்சுப் பொறக்கிறதில்லை.... மனிசனுக்குள்ள பேதங்கள் முட்டாள்தனமானது….. ஒவ்வொரு மனிசனுக்கும் தனித்தனிய சட்டப்படி குடுக்கப்பட்ட உரிமைகளை அவுங்க யூஸ்பண்ணணும்….. அதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை…. என் கண்ணுக்கு முன்னால எங்கே எங்கே மனித உரிமைகள் பறிக்கப்படுகிறதைப் பாக்கிறேனோ அங்கங்கை பீல்டில இறங்கி, அவங்களுக்காக என்னோட தார்மீக போராட்டத்தை செய்யத் தயங்க மாட்டேன்….. இதையெல்லாம் ஒரு சேவையாகத்தான் செய்யிறேனே தவிர, எனக்காக ஒரு பப்ளிசிட்டி தேடவோ, அதுக்கான அவசியமோ எனக்கில்லை….. தமிழில அவ்வையார்ங்கிற ஒரு லேடிபொயற் பாடியிருக்காங்க….. மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி, இருந்தழைப்பார் யாருமங் கில்லை……

மரத்தில பழம் நல்லபடியா பழுத்தால், வவ்வால் தானாகவே தேடி வரும்…… அதுபோல நாம செய்யிற சேவையை நல்லபடியாக செய்தா ஜனங்களோட ஆதரவுங்கிற வவ்வால் தானாகவே வரும்….. அப்ப கிடைக்கிறதுதான் உண்மையான பப்ளிசிட்டி…..

அடுத்து, என்னயபற்றி பத்திரிகையில வாறதெல்லாத்தையும் சேத்து கட்டிவெச்சு ஆல்பம்போல வெச்சுக்கிறது , தம்பட்டம் பண்ணிறதுக்காக இல்லை….. மனசு எப்பவாச்சும் தளர்ச்சியாகிறப்போ அதைப் பாத்தா போதும்….. அட அப்போ இம்புட்டு செஞ்சிருக்கிறோமே….. இப்பமட்டும் ஏன் சும்மா இருக்கோம்னு….. ஒரு பீலிங் உண்டாகும்…. தளர்ச்சி போயிடும்…. சர்வீஸ் எண்ணம் தலைதூக்கும்……பின்னால வரக்கூடிய சொசைட்டிகிட்ட இதை ஒரு புரூபாக காட்டி அவங்க மனசிலையும் சர்வீஸ் எண்ணத்தை தூண்டிவிட முடியும்….

சிலபேரு சொல்ராங்க, சமாதானப் புறான்னு காட்டிக்கிறதுக்காகத்தான் சுமணாவதி இந்தப்பாடு படுறான்னு….. அப்பிடி ஒரு பேரு எனக்குக் கிடைக்கும்னா வாழ்க்கையில அதைவிட்ட பெருமை எனக்கு வேற எதுவுமே வேண்டாம்….. இன்றய உலகத்தில எதை குடுத்தாலும், ஈக்குவலா வாங்க முடியாம தேடிக்கிட்டிருக்கிற ஒண்ணே ஒண்ணு, சமாதானம் மட்டுந்தாங்க…..

எதுக்காக சமாதானத்தை தேடணும்….. அடிக்கடி சண்டை வர்ரதால….. சண்டை எதுக்கு வரணும்….. ஒருத்தரோட உரிமையை அடுத்தவரு பறிக்கிறதால….. ஒடுக்கிறதால….. அதனாலதான் சொல்றேன்….. ஒரு சமூகத்தோட உரிமையை இன்னொரு மனிசனோ, குரூப்போ, அடுத்த சமூகமோ, அடுத்த இனமோ, அல்லது அரசாங்கமோ புடுங்க நெனைக்காம இருக்கிறவரைக்கும் சமாதானமும் இருக்கும்….. ஒருபக்கம் உரிமைகளை புடுங்கிகிட்டும், இன்னொருபக்கம் சமாதானத்தை தேடிக்கிட்டும் இருப்பாங்கன்னா, சம்பந்தப்பட்டவங்க லூசா இருக்கணும்….. இல்லே இருக்கிறவங்க எல்லாத்தையும் லூசா ஆக்கிக்கிட்டிருக்கணும்…..”

இவையெல்லாம் ஆதாரபூர்வமாகப் பத்திரிகைகளில் வந்ததன் நகல்பிரதிகள். சுமணாவிடமிருந்து எனக்கு அனுப்பிவைக்கப்பட்டவை.

பார்க்கும் ஒவ்வொரு குறிப்புகளும், அவளை எனக்குள் ஆழமாகப் புதைத்துக்கொண்டிருந்தன.

மேலும், என் அம்மா, மற்றும் தங்கை கலையரசி ஆகியோரிடமும், சுமணாவதி போனில் பேசிப் பழகியிருந்தாள்.

ஒருதடவை நான் எங்கள் வீட்டுக்கு வெளியே வேலையாக நின்றபோது, சுமணாவதியின் போன் வந்தது. கலையரசிதான் எடுத்தாள்.

“ஹலோ…….”

“ஹலோ கலை……. நான் சுமணா பேசிறேன்……. நல்லா இருக்கியளா……”

“ம்……. நாங்க எல்லாம் நல்லா இருக்கோம்…… முக்கியமா எங்க அண்ணன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்காங்க……. சந்தோசமா…….” சிரித்தபடி கேட்டாள்.

மறுபுறத்திலிருந்து சுமணாவதியும் சிரிப்பது இலேசாகக் கேட்டது.

“சரிதான்….. நீ பெரிய வாலுன்னு உங்கண்ணன் ஏற்கனவே சொல்லியிருக்காங்க…..”

“ஆமா…… பெரீரீரீரீய வாலு…… புள்ளா நீட்டினா இலங்கை வரைக்கும் வந்து விழும்……”

“வேணாம்மா….. ஏற்கனவே அங்கயிருந்து இங்க வந்து தன்னோட வாலில இருந்த தீயை வெச்சு, இலங்கையையே கொழுத்திட்டுப் போயிட்டாரு ஆஞ்சநேயரு……. அடுத்து நீ ஏதாச்சும் பண்ணிடாத தாயே……”

“நல்லா சொன்னீங்க போங்க..... ஆஞ்சநேயரு இங்கயிருந்தே தீயை பத்தவெச்சுக் கொண்டுவந்தமாதிரியில்லியா பேசிறிய…… அங்கை இருந்த அரக்கப் பயலுவ கொழுத்திவிட்ட தீயைத்தான், வஞ்சகம் பண்ணாம எல்லாருக்கும் பிறீசப்பிளை பண்ணீட்டு வந்தாரு……” கூறியபடி சிரித்தாள் கலையரசி.

“நெசந்தான் கலை….. தீயை வெக்கிற அரக்கப்பயலுவ அப்பமட்டும் இருக்கல்ல…. இன்னும் இருக்கத்தான் செய்யிறாங்க….. அவங்க பண்ணிற அநியாயத்தால இனங்களுக்குள்ள இருந்த பரஸ்பர அன்பு மாறி, ஒருத்தருக்கொருத்தர் சந்தேகம், பயம், வன்மம்ன்னு தானும் நொந்து, அடுத்தவனையும் நோகடிச்சு……”

வாட்டமாகவும், காட்டமாகவும் பேசினாள் சுமணாவதி.

“என்ன சுமணா….. நீங்களே இப்பிடிப் பேசிறிய…….”

“நீங்களேண்ணா….. ஓ….. ஒரு சிங்களத்தியாய் இருந்துகொண்டு , அவங்க இனத்தில இருக்கிற ரவுடிகளைப்பத்தி பேசிறாள்ணு சொல்ல வர்ரியா….. ரவுடிசம் பண்ணிக்கிறவன் எந்த இனத்தில பொறந்தாலும், ரவுடி ரவுடிதான்….. அதே நேரம் இவனுக எல்லாம் இனப் பற்றில எதுவும் பண்ணிறதில்ல…. வெறி…. வெறி….. மிருக வெறி…. இன்னும் வாயால சொல்ல முடியாத வேறவேற வெறிகள்…. நினைச்சுப் பாக்கிறப்போ நெஞ்சே எரியிது…. ”

சுமணாவின் வேதனை வேகத்தைக் கட்டுபடுத்தவேண்டும் என்னும் முடிவோடு குறுக்கிட்டாள் கலை.

“உண்மைதான் சுமணா….. இங்கையும் அப்பப்போ ஜாதிச் சண்டை, மதச் சண்டைன்னு எங்கேயாச்சும் ஒரு மூலையில நடந்துகிட்டுத்தான் இருக்கு….. சல்லிக்காசு பெறுமதியில்லாத சமாச்சாரத்துக்குக் கூட , ஜாதியை கேடயமா வெச்சுகிட்டு கலவரம் பண்ணிறாங்க….. மைனாரிட்டிக்கு உள்ள அடிப்படை உரிமைகளைக்கூட மெஜாரிட்டி தடுக்கிறாங்க…… வெட்டிக்கிட்டு சாவுராங்க….. உக்காந்து இதைப்பத்தி யோசிச்சா, இந்தக் கன்றாவிகளை பாக்காம செத்திடலாம் போல இருக்கும்….. இல்ல மனிசனாப் பொறக்காம மாடாப் பொறந்திருந்தாலும் பரவாயில்லை போல இருக்கு சுமணா…..”

“இல்லை கலை….. மனிசனால மட்டுந்தான் சிந்திக்க முடியும்….. தப்பான எண்ணங்களோடை வாழுறவங்களை நம்மால முடிஞ்சவரை திருத்துவோம்ங்கிற ஒரு எண்ணம், ஒவ்வொரு மனிசன் மனசுக்குள்ளையும் வந்தாலே போதும்….. முதல்ல அவன் தன்னையறியாமலே , தன்னைத் திருத்த ஆரம்பிச்சிடுவான்…..”

“எல்லாத்துக்கும் காரணம் படிப்பறிவு சரியாக இல்லாததுதான் சுமணா…. இன்னும் சரியான படிப்பறிவு இல்லாத ஜனங்க இருக்கிறவரையில , எங்கயுமே பிரச்சினை தீரச் சான்ஸ் இல்லை…..”

“தப்பு கலை….. நீ கொஞ்சம் பொறுமையா யோசனை பண்ணிப்பாரு….. இப்போயிருந்து மூணு நாலு அஞ்சு தலைமுறைக்கு முன்னால, நம்ம பாட்டன், பூட்டன் , ஓட்டன் காலத்திலயெல்லாம் எத்தனபேரு படிச்சிருக்காங்க….. ஜாதிமத பேதங்கள் இருந்தாலும், அவுங்க அவுங்க ஜாதியை, அவுங்கவுங்க கட்டுக்குள்ளதானே வெச்சிருந்தாங்க….

இப்பிடி வெட்டிக்கவும், குத்திக்கவும், வெடிகுண்டு வீசவும் கனவிலயாச்சும் நெனைச்சிருப்பாங்களா சொல்லு….. படிப்பறிவும், அதுக்கேத்த தொழில் நுட்பமும் உலக முன்னேற்றத்துக்காக உருவாக்கினாங்க….. ஆனா, இவங்க அதை உலக அழிவுக்கு யூஸ்பண்ணிக்கிறமாதிரி பிளான் பண்ராங்க , செய்யிறாங்க….. படிப்பறிவு கொறைஞ்சவங்க இதில ஈடுபடுறாங்கன்னு வெச்சுக்க….. ஆனா அவங்களை வெச்சுச் செய்யிறவங்க படிப்பறிவு நிறைஞ்சவங்களாயெல்லா இருக்காங்க……”

எடுத்ததுக்கெல்லாம் படிப்பறிவைக் காரணம் சொல்லக்கூடாது கலை….. நான் தமிழ்நாட்டுக்கு வந்ததில்லை…… ஆனா, புக்ஸ்சிலை படிச்சிருக்கேன்…..ரெண்டு பிரைமினிஸ்டர்களை ரெடிபண்ணி, கிங்மேக்கர்னு பேருவாங்கின உங்க காமராஜர் படிச்சவரா சொல்லு….. அந்த மனுசன் தமிழ்நாட்டுக்கு சி.எம்.ஆக இருந்த காலத்தில தமிழ்நாட்டுக்கு பண்ணின சாதனைகளையும், இந்தியாவுக்கு அப்பப்போ பிரச்சினைங்க வந்த நேரத்தில, பிரைம்மினிஸ்டர் ஜவகர்லால் நேரு க்கு பக்கத்துணையா இருந்து சாதிச்சதை வேறை யாரு பண்ணியிருக்காங்க சொல்லு…..

நான் ஸ்கூல்ல படிக்கிறப்போ , மீட்டிங் ஒண்ணில எங்க ஏச்.எம் ஜயசேகர சார் பேசினாரு….. பேசுறப்போ இடையில ஒருவார்த்தை சொன்னாரு….. உலகத்தில எந்தவொரு ஜனநாயக நாட்டிலயானாலும் சரி, ஒருவர் அரசியல்வாதியாக ஆகவேண்டுமென்று விரும்பினால் , முதலில் அவர் ஒரு மாபெரும் தலைவர்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்….. அவர்தான் காமராஜர்…..! பெற்ற அன்னைக்குக்கூட அரசுச் சலுகைகளை தர மறுத்தவர்….. வருங்கால சந்ததியின் படிப்புக்காக தெருவிலே இறங்கிப் பிச்சையெடுக்கவும் துணிந்தவர்….. அவர்போல ஒரு தலைவர் எந்த நாட்டில் இருந்தாலும், அந்தநாடு பெரும் சிறப்படையும்…..

இப்பிடிப் பேசிட்டார்ன்னு ஜயசேகர சாருக்கு இடமாற்றம் குடுத்திட்டாங்க….. ஆனா, சார் அதுபத்தி கவலையே படல்லை….. அந்த சம்பவம் என்னை ரொம்பவும் பாதிச்சிரிச்சு…. வந்தா ஒரு டீச்சரா வரணும் , நியாயத்துக்குப் பக்கபலமா எப்பவும் இருக்கணும்….. னு அப்ப பண்ணின முடிவுதான் இந்த டீச்சர் வேலை……”

“உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தாலே டைம் போறது தெரியல்லை…. உங்களை மாதிரி ஒரு டீச்சர் எங்களுக்குக் கிடைக்கலியேன்னு கவலையா இருக்கு சுமணா….”

“என்ன செய்ய….. தமிழ்நாட்டில பொறக்கத்தான் எனக்குக் குடுத்து வைக்கலியே….”

இனம்புரியாத ஏக்கம் ஒன்று அவளிடம் தெரிந்தது.

“சுமணா….. உங்ககிட்ட ரகசியமா ஒண்ணு பேசணும்….. காதை நல்லா தீட்டி வெச்சிருக்கேளா….”

“ரகசியமா…. என்ன ரகசியம்….. சொல்லு சொல்லு…..”

ஆவலோடு கேட்டாள் அவள்.

மறுகணம் கலையின் குரல் மெதுவாக வெளிவந்தது.

“தமிழ்நாட்டில பொறக்கத்தான் உங்களுக்கு குடுத்து வைக்கல….. தமிழ்நாட்டுக்கு மருமகளா ஆகிறதுக்கு குடுத்து வைக்கலாமில்லையா…..”

“…………………………………..”

“என்ன சுமணா….. சத்தத்தையே காணோம்…..”

மறுகணம் தொலைபேசியில் அடுத்தடுத்து முத்தங்கள் பதிக்கப்படும் சத்தம் மட்டும் வந்துகொண்டேயிருந்தது.

எதிர்பாராத அதிர்ச்சிக்கு ஆளானபோதிலும், தன்னைச் சுதாகரித்துக்கொண்ட கலையரசி சிரித்துக்கொண்டே பேசினாள்.

“போதும்…. போதும்….. முழுசா காலி பண்ணிடாதீங்க….. மிச்சம் வெச்சிருங்க….. இதுக்குமேல நான் இங்க நிண்ணா என்னய டமேச்சு பண்ணிடுவிய….. ஆளை விடுங்கம்மா சாமீ…..”

அப்போது நானும் வீட்டுக்குள் நுழைய……

“அண்ணன் வந்தாச்சு….. பேசுங்க…… நாம அப்புறமா பேசுவோம்……..” கூறியபடி ரிசீவரை மேசையில் வைத்துவிட்டு என்னைப் பார்த்து மெதுவாக,

“வா…. வா……. சிலோன்லயிருந்து உன் ஆளு…….”

“ஏய்….. என்னடி பேசிறே….. லூசுத்தனமா பேசாத….. நம்மைப்பத்தி என்ன நெனைப்பாங்க…..இரு இரு…. அப்புறமா ஓங்கிட்ட பேசிக்கிறேன்……”

குரலைத் தாழ்த்தியபடி கண்டித்துவிட்டு, ரிசீவரை எடுத்துக் காதிலே வைத்தேன்.

[தொடரும்]

பகுதி இரண்டு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.