1

அளவில்லாத ‘எம்மெ’ அவரையின் இளங்கொழுந்துகளை உண்டிருந்த அந்த எருமைக்கு நிற்காமல் கழிந்துகொண்டிருந்தது. அது எவ்வளவோ அடக்க முயன்றது போலும். பயனில்லை. அதன் கட்டுப்பாட்டையும்மீறி விரிந்த குதம் இடைவிடாது கக்கிக்கொண்டிருந்தது.

அதன் கழிசலில் எழுந்த நாற்றமோ குடலைப் பிரட்டியது. இன்னும் நேரம் தாழ்த்தாமல் அதை சலசலத்து ஓடும் ‘ஜோனி’ ஆற்றிற்கு ஓட்டிச் செல்லவேண்டும். அருகிலேயே ‘தாட்டமொக்கெ’ ஆறு இருந்தலும் இதற்கு ஜோனிதான் சிறந்தது. மண்டிகிடக்கும் புதரிலிருந்து ஓடிவரும் ஜோனியின் நீரிற்கு ஆதியிலிருந்து பல மூலிகைகள் பரிச்சயம்.

உவர்ப்பிற்காய் ஆங்காங்கே பரவியிருந்த பிங்கசப் பாறைகளை வெள்ளைப்படிந்த தன் நாவால் நக்கிக்கொண்டிருந்த அவ்வெருமையை அவசர அவசரமாக ஓட்டிச் சென்றான் மாதன். அந்த அவசரம் அதற்கும் புரிந்திருந்தது. எனினும், அதன் அசமந்த பார்வையில் மேலும் இளஞ்கொழுந்துகளை உண்ணும் எண்ணமே மிஞ்சியிருந்தது.

கோக்கைப் பிடித்து சலிப்புடன் தள்ளினான். சிறிது தூரத்திலேயே மீண்டும் நின்றுக்கொண்டது. ‘அன்னோடைக்குச்’ செல்லும் அந்த ஒற்றையடிப் பாதைக்குக்கீழே ஒரு சால் தள்ளி பிஞ்சு விட்டிருந்த பச்சைப் பட்டாணித் தோட்டத்தைக் கண்டு தலையைத் தூக்கி தன் ஆர்வத்தைக் காட்டியது. தன் பற்கள் தெரியும்படி வாயை அசைத்துக்கொண்டே தோட்டத்தையும், அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது. மீண்டும் அதன் கோக்கினைப் பிடித்து அவன் வேகமாகத் தள்ளினான். அது கழிந்துகொண்டே ஜோனியை நோக்கி ஓடியது.

சலசலத்து ஓடும் ஜோனியைத் தொட்டு வணங்கி, அதனை அதில் இறக்கினான். அந்நொடிக்குக் காத்திருந்ததுபோல, அவ்வாற்றையே உரிஞ்சித் தீர்த்துவிடும் வேட்கை அதற்கு. அது நீரை உரிஞ்சியது. அதன் உஷ்ணகாற்றுப்பட்டு மேலெழும்பும் ஆற்றுநீரில் ஆகாயத்தின் சில்லுகள் மிதந்தன.

அது வயிறுமுட்டக் குடித்ததும் அவன் எதிர்பார்த்திருந்தது போலவே அந்த நேரம் வந்தது. அவ்வாற்றிலிருந்து அதனை வெளியேற்றிட அவன் கவனமாக இருந்தான். இடைவிடாத கழிசலால் தொடர்ந்து அதன் குதம் நமைத்துக் கொண்டிருந்தது போலும். அதிலிருந்து சற்றுமீள எண்ணிய அதன் நோக்கம் அதன் கண்களில் தெறித்தது. அவன் அதைத் தடுக்க எவ்வளவு முயன்றும் முரண்பட்டு நடு ஆற்றில் தொப்பென அமர்ந்து கொண்டது. இனி எழுப்புவது வீணென்று அவனுக்கு நன்கு தெரியும். அது அமரும்போது தாங்கி பிடித்திட முயன்றவன் என்றும்போல் தோற்றுத் தலையைச் சொரிந்தான்.

அவ்வூரில் அதனைத் திட்டாத ஆட்களில்லை. எருமைகளைத் திட்டுவது அவர்களின் மரபுபடி பாவம். அதிலும், இறந்த பெண்களின் நினைவாக விடப்படும் ‘ஜன்னிகெ’ எருமையைத் திட்ட எண்ணுவதே பெரும்பாவம். இருந்தும், அவர்கள் எத்தனைமுறைதான் அதன்மீது பாவம் பார்ப்பது. இதுவரையில் பார்க்கப்பட்ட பாவங்கள் அடுக்கி அடுக்கி இன்று வெறுப்பாய் குவிந்திருந்தன.

அது அவ்வாற்றில் இவ்வாறு அமர்ந்து கொண்டால் அவ்வளவுதான். அருகில் மண்டியுள்ள பசித்த இலை தழைகளைச் சிரமமின்றி உண்டுக்கொண்டு குறைந்தது ஒருவாரம் அங்கிருந்து எழும்பாது.

பிட்டத்தில் கழிந்ததின் சுவடே இல்லாமல் அது எழுந்துசெல்லும் நாள்வரை ஜோனியின் கழிமுகப்பில் கலங்கல் நீரே திரண்டோடும். ஊரார் வாடிக்கையாக துவைக்கும் அந்த இடத்தில் துவைக்கவியலாது எழும் வசவுகள் மாதனுக்கும்தான்.

“ஏய் மாதா, இது உனக்கே பொறுக்குமா?

வீட்டுக்கு முன்னாடி இருக்குற, இதோ இந்த ஆத்துலே தொவைக்கமுடியலே...

பாவம் புஜிகி, முழங்கால் வலியோட ‘பிக்கெதாடா’ ஆத்துக்குபோயி இந்த ஒருவாரமா தெவச்சிட்டிருக்கா….

அந்தச் செவிடிக்கு சொன்னாலு கேக்கமாட்டா? தெனமும் தொவெக்கனூனு நிப்பா….”

“ஏய் மாத, மாசத்துக்கு ரெண்டு தடவெ இப்படி நடந்தா என்னதா பண்ணுறது…

இத விட்டுட சொன்னாலு நீ எங்கே கேக்குறே…”

“ஏய்… உனக்கே தெரியாதா? இந்த ஜன்னிகெய நீ வச்சிக்கிறது எவ்வளவு பெரிய தப்பு… இது முறையா?

சரி விடு… உனக்கு என்ன சொன்னாலும் தெண்டம்… நீ எவ்வளவு சொன்னாலு கேக்கரவ இல்லெ…”

“இன்னு முடியாது மாதா…

ஒரு முடிவுக்கு வா….”

“ஏய் மாதா… உனக்கென்ன அவ்வளவு நெஞ்சு…

உனக்கு எத்தனவாட்டி சொல்றது…

இது ரெண்டாவது வாட்டி….

மறுப்படியு எம் பட்டாணி தோட்டத்துலே புகுந்து, குருவிக்கு கண்மொளச்சதபோல காச்சிருந்த பட்டாணி பூராத்தையு தின்னுறுக்கு….

ஏ வயிறு எரியுது…

தெனமும் கலையிலே உசுர திங்குற பனியிலே தண்ணியூத்தி வளர்த்தது…

அடுத்த மொரெ இப்படி நடந்தது… நடக்குறதே வேறே பாத்துக்கோ…

எவ்வளவு சொன்னாலும் சொரண இல்லெ….”

ஒருவாரமாக ஜோனிக்கு அருகில் வசிப்பவர்கள் சேர்த்தி வைத்திருந்த வசவுகளையெல்லாம் தலையசைத்தே கடந்தான். “ம்மெ…. ம்மெ… ம்மெ….” என்றவாறு திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டே ஆடி அசைந்து செல்லும் அந்த எருமைக்கும் அவ்வசவுகள் பழகிப்போயிருந்தன.

2

“ஏய்.. நாசமாபோன முருவா….

இத கூட்டிட்டு இனி வீட மிதிச்சே…

நா மனுஷியா இருக்கமாட்டே பாத்துக்கோ…

நாங்கெல்லா இருக்கோமா? இல்லெ, செத்துட்டோமானுகூட யோசிக்க மாட்டேயா?

இதுகள கறந்து ஒரு வாராமாச்சி நியாபகம் இருக்கா...

வக்கத்தவனுக்கு எதுக்கு இந்தப் பொளப்பு…. ஆ…

ஊரே காரித் துப்புது… வெவஸ்தெ கெட்டவனே….”

இறுதி வார்த்தையின் கனம் கெப்பிக்கு நன்கு தெரியும். திரும்ப பெறமுடியாத வார்த்தையது. அது மனதில் தோன்றியபோதே அவளின் அடிமனது பதறியது. இதற்குமுன்பு பலமுறை அவளின் மனதில் நின்றுவிட்ட இவ்வார்த்தை இன்று வாய்தாண்டி வென்றிருந்தது.

அந்த எருமைக்குத் தண்ணீர் அளிக்க, கல்குழிக்கு அருகில் இழுத்துச் செல்ல எண்ணினான். சாணம் படிந்த முண்டுடன் கெப்பி அவனை மறித்து நின்றாள். அவளின் பார்வையை எதிர்கொள்ளவியலாது தலைகுனிந்தான். கெப்பியின் அடிவயிறு மேலும் பதறியது. அடுத்து அவன் செய்யப்போவது அவளுக்கு நன்கு தெரியும்.

இப்படித்தான் கடந்தமுறை அந்த எருமையைக் கூட்டிக்கொண்டு ‘கரடிக்கொரெக்குச்’ சென்றவன்தான் ஒருவாரம் வரை திரும்பவில்லை. வார்த்தைகளில் கோபத்தை வெளிப்படுத்தி அறியாதவன் அவன். வெளிப்படா அவனின் கோபம் பலநாட்கள் நீளும்.

யாரும் நுழைவதற்கு அஞ்சும் அந்த அடர்க் காட்டிற்குள் அவன் நுழைந்துவிட்டால் அவனைக் காண்பது பெரும் சவால். அந்தப் புலிக்காட்டில், ‘அரெபெட்டு’ பாறையில் அவன் ஏறிவிட்டால் போதும், அங்கு தம் முன்னோர்கள் எருமைகாத்த ‘எம்மட்டி’ உண்டு. அங்குத் தேனையும், காட்டுக் கிழங்குளையும் உண்டு பலநாட்களை ஓட்டிவிடுவான்.

சீண்டப்படும் அவனது கோபத்தை அசைபோட, தணிக்க அந்த அடர்தனிமையே அவனுக்கான ஒரேவழி. ஒரு வகையில் இது தப்பித்தலும்கூட. தன் தாய் தவறிய இந்த இரண்டு ஆண்டுகளில் அவனின் இந்தச் செய்கை பெருகிவிட்டது.

கெப்பியின் மீதான அதீத புரிதலிருந்தாலும்கூட, மாதன், கெப்பியெனும் இரு சிக்கிமுக்கிக் கற்களும் உரசாமல் இருப்பதில் நியாயமில்லை. உரசி, கங்கெழுந்து வாழ்க்கைக் காட்டினை எரித்து விடாமல் இருக்க இருவரிடமும் வாழ்க்கை பலமுறை தனிமைக்காவு கேட்பதுண்டு. இதுநாள்வரை அடர் மௌத்தை மட்டும் தன் கூறாய் கொண்டிலங்கிய தனிமைக்காவு, இப்போதெல்லாம் தொலைதூரத்தைக் கைக்கொண்டுவிட்டது.

“நாலு பொட்டப்புள்ளெங்களே வீட்லே வச்சிகிட்டு அவ செய்யுறது சரியா சொல்லுங்க?..

‘கம்பட்டிக்கு’ கட்டிக்கொடுத்த பெண்ணு வாயு வயிறுமா இருக்குவேற…

நாலஞ்சு தடவக்கு மேலே தங்காமா, இப்பத்தா நாலு மாசத்த தாண்டி நிக்குது…அவள இன்னிக்கு அவங்க வீட்டிலிருந்து இந்த ஊர மிதிக்குற சடங்குக்காக கூட்டிட்டு வர்றாங்கவேற..

வர்றவங்கள வான்னு சொல்லவேணா… வர்ற மகளுக்கு ஆசிர்வாதம் செய்யகூட அவனுக்கு மனசில்லையா? என்ன அப்ப இவ…

பொறுப்புக் கெட்டவ..

எவனாது ஜன்னிகெ எருமையோடு அலைவானா…. எல்லா தலெவிதி......

அவனுக்கென்ன, அந்த ஜன்னிகெய கூட்டிட்டு கம்பிய நீட்டிடுவா..

அவ கட்டிக்கிட்டது எம் பொண்ணயா? இல்லெ, அந்த எருமையையா?

ஏய் போஜா! இனி பொறுத்தது போது…

இனியு, பெரிய மனசு பண்ண நாங்க ஒண்ணு ‘அப்பெ’ கெடெயாது…

அங்க எம் பொளப்ப விட்டுட்டு இங்கே வந்து கெடக்குற…

இது என்ன கேவலம்… மாமா வந்து மாப்பிள்ளெ வீட்லெ உக்காந்து சேவகம் செய்யுறது….

எல்லா, இவள சொல்லுனு…

அவன விட்டுட்டு வந்து தொலென்னா…. இவ வேறே…. பொட்டி… பொட்டி

போது போஜா… இன்னியோட ஒரு முடிவு காட்டுற…

அவள கூட்டிட்டுப் போறே..”

கடந்தமுறை வீடு திரும்பியபோது மாதனுக்கு நேரிட்ட நினைவுகள் அந்த ஜன்னிகெ எருமையின் மெல்லும் வாயைப்போல பல்லிளித்துக் கொண்டிருந்தன.

கோபமோடி வந்ததும் மாதன் தவத்திற்கோடிய அசுரன். காடோடிவந்த அவனின் மனதின் ஆற்றல் மலைப்பானது. தான் இல்லாமல்போன இந்த நாட்களின் கடமைகளைச் சிலமணி நேரங்களில் சரிகட்டுபவன். முளைவிட்ட பூண்டின் விதையாய் நீளும் அவனது ஊக்கத்தை கடந்த இரண்டாண்டுகளாக அந்த ஜன்னிகெயே அளந்து கொண்டிருந்தது.

வீட்டின் சமையல்முதல், துவைப்பதுவரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் செய்வான். அவன் வீட்டோடு இருக்கும் காலத்திற்கு அந்த ஊரே எதிர்பார்க்கும். அப்பாவின் சமையலுக்கு ஏங்கும் பிள்ளைகள், அரவணைப்பிற்கு ஏங்கும் மந்தைகள் என்று நீளும் அந்தக் காலம் இப்போதெல்லாம் அந்த ஜன்னிகெக்குக் கழியும்வரைதான்.

எவ்வளவோ பாதுகாத்து வைத்தாலும் பச்சைப் பட்டாணியின் பருவத்தில் அது தவறாமல் இதை வரவழைத்துக்கொள்ளும். அது ஜோனியில் அமர்ந்துவிட்டால்போதும். மாதனின் இயல்பிற்குக் கண்பட்டுவிடும். நீர் அருந்த புலி வரும் அந்த இடத்தைவிட்டு அவன் துளியும் நகரமாட்டான்.

இயல்பாகவே குளிர்மிகுந்த அந்த ஆற்றுப்பகுதியில் நெருப்புக் காய்ந்துகொண்டே தங்கிவிடும் அவனை அந்த ஊரே மூளைக் குழம்பியவன் என்றே உறுதி செய்தது. அவ்வெருமை உண்டிருந்த கடலைத் தோட்டத்தவரும், மாதனிடமிருந்து பால் வாங்குபவர்களும் அவனை ஜோனிக்கே தேடிவந்து திட்டுவதுண்டு.

3

எருமை கல்குழியில் வாய்வைத்தது. எதையோ நினைத்து வீட்டிற்குள் அவசரமாய் வந்தவனைக் கெப்பி தடுத்தாள். “ஏய் என்ன விடு…” என்றவாறு அவளை இடக்கரத்தால் விலக்கி உள்ளே நுழைந்தான். வீட்டின் முன்னறையில் எழுந்த சாணிநெடி அவனது பார்வையைத் தூண்டியது. அவ்வறையின் மேல்மூலையில் அவன் எண்ணிவந்த உப்புக்கூடை சாணமிட்டு மெழுகி வைக்கப்பட்டிருந்தது. ஆண்டில் ஆநிரைக்கு உப்புச் சடங்கு செய்யும் நிகழ்விற்காக இரண்டுமுறை அக்கூடையைச் சாணமிட்டு மெழுகவேண்டும்.

தன் தாய் இருந்தபோது இந்த நாட்களில் வீட்டிற்குள் எவருக்கும் அனுமதியில்லை. ஏன், இரண்டாம் மழிப்பிற்குப்பின்பு முற்றத்தில் காயவைக்கும்போது அந்தத் தெருவிற்கே யாருக்கும் அனுமதியில்லை.

தெருவில் எவரேனும் நுழைந்தால்போதும்,

“ஏய் கண்ணு கண்ணு கொஞ்சநேரந்தா… இந்தச் சுள்ளெங்கெற வெயில் இருக்கிற வரக்கி”

என்று வரவேண்டாம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமலே மறித்துவிடுவாள். பொதுவாக அந்த நேரங்களில் அவ்வூரில் பெரும்பாலானோர் அந்தத் தெருவிற்குச் செல்வதையே தவிர்த்துவிடுவதுண்டு. மாறாக, ஏதேனும் விருந்தினர்கள் வந்துவிட்டால்போதும் ‘அய்யோ’ என்று மிச்சியின் மனதில் எழும் வார்த்தைகள் உதடு தாண்டாது.

“மிச்சிக்கா எப்படி இருக்கீங்க…. உப்புக்கூடையா…. சரி.. சரி.. பரவாயில்லே.. உங்கள் பாத்துட்டுபோக வந்தோம்…

சரி அடுத்தமொரெ வர்றப்ப வர்றோ…”

“ஏய்.. பாரேன்… அதனாலென்ன.. வாங்க வாங்க…”

“பராவாயில்லெ அக்கா…”

“ஏய் சொன்ன கேளு… இதா வா..”

என்று கையைப்பற்றி அழைத்துச்சென்று விருந்தோம்புவாள். தயங்கி தயங்கி நிற்பவர்களும் அவளின் அன்புக் கட்டுக்குத் தப்பிக்கலாகாது. விருந்தினர்கள் சென்றவுடன் உப்புக் கூடையை மீண்டும் சாணமிட்டு மெழுகுவாள். இதுபோல சிலநேரங்களில் நான்கைந்துமுறை நடந்ததுண்டு.

பொதுவாக அந்த நாட்களில் மாதன் காலையில் ஓரூரண்டை களியைக் கூடுதலாக சேர்த்துண்பதுண்டு. அன்று அவன் எருமைகளோடு சென்றுவிட்டால் மாலைவரை வீட்டிற்கு வரமாட்டான். மந்தைகளை மேயவிட்டுவிட்டு மேய்ச்சல் நிலத்தில் படுத்திருப்பான்.

“மாதந்தா பாவமில்லே.. இருந்தாலும் மிச்சி ஒளெவெக்கு இந்தளவு ‘பில்லி’ தேவெயில்லெ…”

“அய்யோ.. நம்மாள இதெல்லா முடியாதுப்பா…”

“மாதன் சாமர்த்தியம்தான்… ஆனா, அந்தக் கெப்பியிருக்காளே…… பாவம் மிச்சி ஒளவெ…”

“இன்னிக்கி காலையிலே நா ஒன்னுக்கு போக எழுந்தப்பவே அவ கௌம்பிட்டா… இனி ஒருவார வரமாட்டா…

புள்ளங்களகூட கூட்டிட்டு போறதில்லெ டா…

என்ன ஜென்மமோ…”

“அதான், அதுல அவ பேசுற பேச்சுக்கு… காத பொத்திக்க வேண்டியதுதா…”

“பாவம் கெப்பிக்கா….. அந்த முதுக்கி, மறுத்து ஒத்தவார்த்தே பேசுறதில்லே..”

“அப்பா, கொடுமெடா…

கொடிசுத்துன கொழந்தயாட்டோ….”

“ஏய், ஆனாலும் மாதன மெச்சனு…

மத்தவனா இருந்த பொண்டாட்டி வார்த்தைய கேட்டுக்கிட்டு என்னிக்கோ தனியா போயிருப்பா…”

“ம்… மிச்சி ஒளவெயு அவன அனுப்ப என்னென்னவோ செய்யுறா…. அவ கொஞ்சகூட பிசகாம நிக்குறப்பா….”

“பின்ன சும்மாவா….. அவ பொறந்த ஆறு மாசத்துலேயே அவ முண்டச்சி... அவன நொந்து வளத்தவளாச்சே”

“என்னானாலு கெப்பிக்குதா லொள்ளு…”

“ஏல்லா, அவ அப்பன் தர தைரியம்… அவே பொண்டாட்டி சொல்றத கேட்டுகிட்டு வாரத்துல மூனுநாளு இதே பஞ்சாயத்து தா..

ஆத்திரம் தாங்க முடியலப்பா… அன்னிக்கெல்லா அவ பேசுன பேச்சுக்கு… அவன பொடணியிலே அடிச்சிருப்பே… பெண்ணு குடுத்தவனா போயிட்டா….”

“அவனெல்லா ஒரு மனுஷனா… அவ பேசுற பேச்சுக்கெல்லா மறுக்கா ஒத்தவார்த்தே பேசாத மிச்சி ஒளவெய போயி, வெலெ வாங்க கொடுமெபடுத்தறானு ஊர் பஞ்சாயத்துக்கூட்ட பணம் கொடுத்தவனாச்சே..”

அந்த மேய்ச்சல் நிலத்தின் சுற்றுப்பாதையில் கடந்துசென்றவர்களின் வார்த்தைகள் அவன் காதுகளில் இறங்காது, முடிந்தவரை இறுக்கமாக முக்காடிட்டுக்கொண்டு உறங்குவதுபோல் இருப்பதே அவனது வாடிக்கை.

4

சாண நெடியை நுகர நுகர அவனுக்குக் கோபம் கூடியது. அது பசுமாட்டின் சாணம். பல்லை நற நறவென கடித்தான். நினைவுகளும் நறநறத்தன.

“ஏய் கெப்பி உன்னையாரு இத செய்யச்சொன்னா…

அதுவு பசுஞ்சாணம் போட்டு மெழுகியிருக்கே…

அப்படி செய்யக்கூடாதுனு உனக்கு தெரியாதா…

நாளைக்குக் காலையிலே மொதல்லெ நம்ம கூடெதா போகுனும்னு தெரியுமில்லே….

இப்ப, கூடைக்கு என்ன செய்யுறது…

நா உனக்கு எத்தனமொறெ சொல்லியிருக்கே…

எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கு இந்த வீட்லே இப்படி நடந்ததில்லே…

இத செய்யுறதுக்கு முன்னாடி என்ன ஒருவார்த்தே கேக்கலா இல்லெ..”

“ஓ… எல்லாத்துக்கு உங்கள கேக்குனுமோ…

நா என்ன அடிமேயா…

ஏய்…. உங்க அம்மா கேக்குறத கேட்டெயா… ஏய்.. சொரணெ கெட்டவனே..

இதுக்குமேலே ஒருநிமிஷகூட இங்கே இருக்கமாட்டே…

அய்யோ.. அப்பா… ‘மொட்டெ அவரெபோல’ பொத்தி பொத்தி வளர்த்தீங்களே…

ஏய் குனிக்கிக்கா… இத கேட்க ஆளில்லையா…”

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நாளின் அடர் இருட்டு அவ்வீட்டிலிருந்து புலரவே இல்லை. உறவை வெட்டிவிட அம்முறை மாமன் வரவில்லை. மாமனார் ஊரின் சபை வந்திருந்தது.

மிச்சியோ, ‘என்றும்போல பேசாமல் விட்டிருக்கலாமோ’ என்று மௌனமாய் சிந்தித்துக் கலங்கி இறுதியில் மௌனமாகிபோன நடுஅறையின் மேல்விளிம்பின் மௌனம் நீடியது. மௌனித்த நேரத்தில் மகிழ்வுடன் மீண்டும் வந்தவளின் நோக்கம் பொலிந்தது.

கடந்தாண்டு குனிக்கியோடு பேசிக்கொண்டே தெரிந்தே மாட்டுச் சாணத்தால் அக்கூடையை மெழுகிக்கொண்டிருந்தவள் அவன் வீட்டிற்குள் நுழையும்போதே,

“அக்கா அந்த வெள்ளமாடு நாரஞ்சித் தழைய சாப்ட்டிருக்குபோல.. சாணி நாத்தம் வயித்த பொரட்டுது…வ்வே..”

அவனை சீண்டினாள். தொடர்ந்து பார்வைச் சீண்டலும் விடாது கன்றது. அது அவனுக்குப் புரியாமலில்லை. முதல்முறையாக தன் தாயை வென்ற அவளின் பெருமிதம் அது. மூவாண்டின் வெஞ்சினமும்கூட.

அவனின் தலை குனிந்தது. அவளைச் சுவற்றோடு முட்டி அழுத்திட கைகள் பரபரத்தன. முகத்தைச் சுழித்து, வெகுண்ட கோபத்தை விழுங்கிக்கொண்டு, தன் தாயின் நினைவாக விடப்பட்ட அந்த ஜன்னிகெ எருமையோடு சென்றவன்தான்.

அது எலும்பை உருக்கும் அடர்பனிக்காலம். அந்த ஜன்னிகெயோடு அடர் கானகத்தில் போர்வையின்றி இருந்த நாட்கள் அவன் கண்களில் ஈரமேறி திரண்டன.

5

உரலில் புடைக்க இட்ட உப்பை எடுக்கச் சென்றவன் அடர் மௌனத்தோடு திரும்பினான். மணிக்கட்டில் வழியும் சாணியுடன் கெப்பி வாசலை மறித்து நின்றாள். அவளின் பார்வையில் வெற்றியின் களிப்பு உறுமியது. வாடிக்கையாக கிடைக்கும் உப்பிற்காக அந்த ஜன்னிகெ எக்காளமிட்டது. நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அழுக்கு உடையுடனேயே வெளியேறினான் அவன். அவளின் ஆழ்மனம் அரற்றியது.

“த்தூ… வெக்கங்கெட்டவனே…

உங்கம்மாவுக்கு நேர்ந்துவிட்ட ஜன்னிகெய கூட்டிக்கிட்டு அலையுறேயே..

பொட்டா… பொட்டா… உனக்கு அறிவில்லே…

உனக்கெல்லா எதுக்கு பொண்டாட்டி புள்ளங்க…

அந்தக் கெழுவி போயும் நீ திருந்தலில்லே...”

வசவுகள் தொடர்ந்தன. மென்மையாய் எக்காளமிட்டபடி அந்த ஜன்னிகெ ஒதுங்கிநின்றது. அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்தான். தொடர்ந்து இளஞ்சிவப்பேறியிருந்த அதன் கழுத்து மயிர்களை வருடிக்கொடுத்து கருத்த தன் விரல்களை மேலும் நிறமேற்றிக் கொண்டான்.

அது அவனைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது. ‘ஊநேரி’ மரத்தில் கனிந்த நாவல் பழத்தைப்போன்ற அதன் கண்களைக் கூர்ந்தான். அதேதான். தன் தாயின் கண்களேதான். உப்புக் கூடையைக் காயவைக்கும் நேரத்தில் தெருவிற்குள் நுழைந்து மறித்தவர்களைத் தேடிச்சென்று, வலிந்து வீட்டிற்கு அழைத்து வயிறுமுட்ட மோரினை அளிக்கும் தன்தாயின் அதே கனிவுநிறைந்த பார்வை.

இந்த வேனில் காலத்தில் கரடிகொரெயில் பூத்திருக்கும் ‘ஹுலிபிக்கெ’ மரத்தின் மஞ்சள் மலர்களும், நீர் சுரக்கும் ‘கோங்கு’ செடியை வயிராற உண்டுவிட்டு அசைபோடும் அந்த ஜன்னிகெயும், அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தாய்மடியில் உறங்கும் பரிஷமும் காட்சிகளாய் அவனை அலைத்தன. இந்தக் காட்சிக்காய் தன் நடையைத் துரத்தினான். உற்சாகமாய் கரடிக்கொரெயை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அந்த ஜன்னிகெ அந்த அடர்காட்டின் முகப்பில் நின்றது. தன் வாலை உயர்த்தியது. நீண்டநாள் கழித்து ஓரளவுக் குழைந்து இட்ட அதன் சாணத்தின் நெடியில் மணந்து கொண்டிருந்தாள் மிச்சி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.