ஆறுமுகத்தாற்றை முகம் பெருத்த யோசனையில் ஆழ்ந்திருந்தது. தலையை பக்கவாட்டில் குலுக்கிக் கொண்டார். எதுவும் தோன்றவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்து யோசித்தார். அதுவும் சரிவரவில்லை.ஒழுகும் மூக்கைப் துடைப்பதற்கு என்று கைகாவலாக வாயில் கவ்வும் கை லேஞ்சியையும் வழமை போல கவ்விக் கொண்டார். அவனிட்டையாவது கேட்டுப் பாப்பம்.

''டேய் தர்மா...தர்மா'' என்று அதட்டலாகக் கூப்பிட்டார். வேலையில் இருந்த செருக்கு இன்னும் மறையவில்லை.

கழிவறையில் இருந்து அவனும் அதே தொனியில் பதில் சொன்னான்.

''கொஞ்சங் இருக்க மாத்தையா. இந்தா வாறேங். இப்பதா வந்தது. நா கக்கூஸ் போ வாணாமா'' ?

 ''சரி சரி இருந்திட்டு வடிவா கையை கழுவிக் கொண்டு வந்து சேரு''என்று நக்கலாய் சொன்னவர் சிந்தனையைத் தொடர்ந்தார்.

அங்கை என்னை கூட்டிக் கொண்டு போவினமோ மாட்டினமோ. என்னட்டை ஊர் புதினங்கள் சொல்லவும், எங்கையும் கூட்டிக் கொண்டு போகவும் யார் இருக்கினம். எல்லாருக்கும் அவரவற்றை வேலை. இந்தக் கலி காலத்திலை அவையையும் குறை சொல்ல ஏலாது. ஓடியாடி நாலு காசு பாத்தாத் தானே இங்கத்த விலைவாசியிலை சீவிக்கலாம். எனக்கு ஏலுமான காலத்திலை அவைக்கு இவைக்கெண்டு எல்லாருக்கும் தானே ஓடித் திரிஞ்சனான். எத்தினை கியூவிலை நிண்டு சொந்த பந்தங்களுக்கு தேவையானதை செய்து குடுத்திருப்பன். எல்லாற்றை அன்பும் நான் ஓடித் திரியுற மட்டும்தான் போல. இப்ப என்னைக் கூட்டிக் கொண்டு போக கெஞ்ச வேண்டி இருக்கு.

இவன் பாவி தர்மா என்னோட கூட வந்தாத்தானே எங்கையும் போக ஏலும் எண்டாகிப் போச்சுது. இல்லாட்டி இடுப்பால கழண்டு விழப் போறன் எண்டு நிக்கிற களுசானை யார் டக்கெண்டு பிடிப்பினம். அண்டைக்கு ஒருநாள் பாங்குக்கு போகேக்குள்ளை அருந்தப்பு. மானம் போகப் பாத்துது. கைத்தடியைக் கொண்டு போனாலும் கால் தடுக்கி விழத்தான் பாக்குது. அவன்தானே பிடிக்க வேணும்.

 சரி சரி விடுவம். என்னைக் கொண்டு போய் வேறை எங்கையாவது வெளி இடத்திலை தள்ளாமை, பாத்துக் கொள்றதுக்கு ஆளையும் கூட வைச்சு தங்களோட வைச்சிருக்கினம் தானே. பிள்ளையளை குறை சொல்லப்படாது.

அலுப்போடும் ஆதங்கத்தோடும் நினைத்துக் கொண்டார். முன்னால் யாரோ இருப்பது போல ஒன்றிரண்டை வாய்விட்டு சொல்லியும் கொண்டார். முந்தி மாதிரி தனிய நாலு இடத்துக்கு போய் வர விடுகினம் இல்லை என்பது அவரது ஆதங்கம். இன்னும் தான் ஒரு இளந்தாரி என்ற நினைப்பு முழுசாகப் போகவில்லை.

 பாலனுக்கு சுகமில்லையாம். நானும் ஒரு மாதமாக கேட்டுக் கொண்டு இருக்கிறன்.  அங்கை இங்கை வெளிக்கிட்டுப் போய் ஏதும் வருத்தத்தை வாங்கிக் கொண்டு வந்தால் தங்களுக்கு கரைச்சலாம் எண்டு சொல்லுகினம். தர்மாவோடு தனிய அனுப்பிறதும் இல்லை. விழுந்தாலும் பிடிக்க இன்னொரு ஆளும் வர வேணுமாம். அவன் பாலன் மச்சான்ரை மகனெண்டாலும் கலியாணம் கட்டும் வரைக்கும் என்னோடை இருந்து வளந்த பெடியன். மாமா எண்டு சொல்லாமல் தாத்தா எண்டுதான் செல்லமாயும் பகிடியாயும் கூப்பிடுவான். என்ன சொன்னாலும் பக்குபக்கெண்டு செய்து தருவான். கடைசியா ஆறு மாசத்துக்கு முதல் என்ரை பிறந்தநாளுக்கு வந்தபோது கண்டது. எனக்கு ஹோர்லிக்ஸ் மாவும் இரண்டு சேர்ட்டும் வாங்கிக் கொண்டு வந்தவன். அப்பவே ஆள் கொஞ்சம் வாடிப் கறுத்துப் போய்த்தான் இருந்தவன்.

 என்னடாப்பா எண்டு கேட்டால் 'எனக்கும் டயபிடிக் எல்லோ வந்திட்டுது. கொலஸ்ரோலும் கூடத்தானாம். இந்த டொக்டர்மார் உழைப்புக்கு சொல்லுறதுகள் தானே. நான் அவை சொல்றதை கணக்கெடுக்க மாட்டன்'. எண்டு வலு பெருமையாய் சொன்னான். குலகெளரவம் போல பாவனை. இங்கை எல்லாருக்கும் உப்பிடியான கொழுப்பு கூடத்தான்.  அதால தான் மெலிஞ்சு போனானாம்.

  ''கவனம் ராசா. சீனி, கொலஸ்ரோல் கண்ரோல்ல இல்லாட்டி பிறகு பெரிய பெரிய பிரச்சனைகள் வரும். அடிக்கடி செக் பண்ணி குளிசையளை ஒழுங்கா போடு'' எண்டு புத்திமதி சொல்லித்தான் அனுப்பினனான். கேட்டாத் தானே?

ஒரு பத்து இருபது வருசம் முந்தி நீங்கள் அவனைப் பாத்திருக்க வேணும். நல்ல சிவலையும் வடிவும். கட்டுமஸ்தான இளந்தாரி எண்டதால கன பெட்டையளும் அவனைப் பாத்துக் கொண்டு திரிஞ்சது எனக்கும் தெரியும். அவளவை எழுதின ஒன்றிரண்டு கடிதங்களை கள்ளமா வாசிச்சும் இருக்கிறன். இவன் நல்ல கண்ணியமான பெடியன். பிடி கொடுத்து எழுத மாட்டான். ஆனா இதெல்லாம் எனக்குத் தெரியுமெண்டு அவனுக்குத்தான் தெரியாது. ஒண்டும் தெரியாதெண்டுதான் நினைச்சுக் கொண்டு இருந்தவன். சின்னனிலை நாங்கள் செய்யாத விளையாட்டோ, சேட்டையோ...உதுகள் எங்களுக்கு விளங்காம இருக்கிறதுக்கு...?

இளமையின் சில நினைவுகள் மனவோரம் துளிர்க்க ஒன்றிரண்டு பல் மட்டுமே மிச்சமிருந்த பொக்கை வாயால் சிரித்து வெட்கமாக தலையைக் குனிந்து கொண்டார். பதினைஞ்சு வருசத்துக்கு முதல் தன்னை விட்டுப் பிரிந்த காதல் மனையாள் யோகத்தையும் நினைத்துக் கொண்டார். அவள் இருந்திருந்தா அவளோட சண்டை பிடிச்சுக் கொண்டாவது பொழுது போயிருக்கும். டாக்குத்தர்மாருக்கும் பிடிபடாத தன்ரை வருத்தங்களைப் பற்றி விலாவாரியாக சொல்லவாவது அவரோட கதைச்சுக் கொண்டிருப்பாள். மனப்பயத்திலையே அவளுக்கு காலம் கழிஞ்சுது.  

 ''உங்களுக்கு வருத்தம் ஒண்டும் இல்லை அம்மா.வருத்தம் எண்டு கடுமையாய் யோசிக்கிறதாலைதான் மண்டை விறைக்குது '' எண்டு சொல்லுற டாக்குத்தர்மாரை அவளுக்கு சுத்தமாய் பிடிக்காது. ''அப்பிடி என்ன ஒருத்தருக்கும் பிடிபடாத வருத்தம். மெய்யே சொல்லுங்கோவனப்பா'' என்று அவரை போட்டு அரித்தெடுப்பாள். கரைச்சல் தாங்கேலாமல் ''நான் செத்தா நேர மோட்சம் தானப்பா. இப்ப இருக்கிறது நரகம்" எண்டு தான் பகிடியாய் சொல்லுவது ஞாபகத்தில் வர சோகமாக புன்னகைத்துக் கொண்டார்.

என்னை விட்டுட்டு அவள் ஒரு இடமும் போனதில்லையே. என்னையும் எங்கையும் போகவிட மாட்டாள். அவ்வளவு அன்பெண்டு நீங்கள் பொறாமைப் படுகிறியளோ? ச்சாச்சா...நவீன சாவித்திரி அவள். நான் இல்லாத நேரம் பாத்து பாசக்கயித்தோடு யாராவது வந்திட்டாலும் எண்ட பயந்தான். அந்தாளை வரவிடாம பண்ண கனகாலமா வீட்டுக் காவலில் தான் நான் இருந்தது. அந்தாளுக்கும் என்னிலை சரியான பயம். இருந்தாப் போல ஒருநாள் நெஞ்சுவலி எண்டு அவள் சொல்லேக்குள்ளை ஒருத்தரும் அதைக் கணக்கிலை எடுக்கேல்லை. ஏனெண்டா அவளுக்கு நெஞ்சுவலி வராட்டித்தான் புதினம். முப்பது நாப்பது வருசமா உதைத்தானே சொல்லிக் கொண்டு இருந்தவ.

கடைசியிலை புலி வரும் போது ஒருத்தரும் கணக்கிலை எடுக்கேல்லை . அதிஸ்டக்காரி பொசுக்கெண்டு ஏகாதசித் திதியிலை போய்ச் சேந்திட்டாள். நேர சொர்க்கம் தானாம் எண்டு யாரோ சொல்லிச்சினம். சரி அப்ப எனக்கு சொர்கத்துக்கும் இனிப் போகேலாது...பிறகு அங்கையும் சண்டை வந்திடுமோ தெரியேல்லை.ஆனா நான் அவளுக்கு ஒரு குறையும் வைக்கேல்லை எண்ட நிம்மதி எனக்கிருக்கு. உடுப்பு கூட நான் தானே கழுவிக் குடுத்தனான்.வாய்க்கு இதமாக குழைஞ்ச சோறு புட்டு எண்டு ஏலுமானதெல்லாம் செய்தும் குடுத்தனான். இப்ப நான் அரிசி அவியேல்லை எண்டு சொன்னாலும் சமைக்கிற மனிசிக்கு பிடிக்குதில்லை. இந்தாளோடை பெரிய கரைச்சலெண்டு முறைச்சு முறைச்சுப் பாக்குது.

 அவரது நினைவுகள் தாறுமாறாக அலைந்தன.மீண்டும் நினைவு பாலனிடம் வந்து நின்றது. அவனுக்கு கிட்னியும் லிவரும் நல்லாப் பழுதாப் போச்சுதாம். கண்ணும் பார்வை மங்கலாய் தான் தெரியுதாம். கால் மரத்துப் போச்சுதாம். அவனைப் பாத்திட்டு வந்தவை சொல்லிச்சினம்.தாய் தகப்பன் இரண்டு பேருக்கும் சீனி வருத்தம் இருக்கெண்டால் இவன் முதலே கவனமாக இருந்திருக்க வேணும். வெளி ஊருகளுக்கு வேலை வேலை எண்டு ஓடித் திரிஞ்சான். சாப்பாட்டிலை கவனம் இல்லை. அவன்ரை மனிசி வீட்டிலை கொண்ட்ரோலா இருந்தாலும், இடாச்சுக் கொண்டு வெளியிலை போய் கண்டதையும் சாப்பிட்டுட்டு கமுக்கமாக ஒண்டும் தெரியாத அப்பாவி மாதிரி இருப்பான். அப்ப தெரியேல்ல. கால் கை வீங்கி உடம்பெல்லாம் சிரங்கு போல வந்த பிறகுதான் விசயம் இன்னதெண்டு தெரிஞ்சுது. உதுக்கு நாங்கள் என்ன செய்யிறது.

என்னை ஓடி ஓடி வந்து பாக்கிற பெடியன். சுகமில்லாம இருக்கிறான் எண்டால் நான் போய் பாக்கத்தானே வேணும். நாளைக்கு என்ர காலம் முடிஞ்சு அந்த மனக்குறையோட நான் போகக் கூடாதெண்ட விசயம் இந்தப் பிள்ளையளுக்கு விளங்கினாத்தானே? இண்டைக்கும் ஒருதரம் கேட்டுப் பாப்பம் எண்டால் காலையிலை இருந்து ஒருத்தரையும் காணேல்லை. ஒருத்தற்றை முகமும் சரியாக இல்லை. பதற்றமாய் தான் இருக்கினம். எப்பவும் சில்லுக்கட்டின மாதிரி ஓட்டம்தான்.சூடு பட்ட நாயள் தோத்துப் போயிடும்.

இந்தா மகன் வந்திட்டான். ''தம்பி வேலையோ? என்னை ஒருக்கா பாலனை பாக்க கூட்டிக் கொண்டு போறியோ ? எத்தினை நாள் கேட்டிட்டன். ஆஸ்பத்திரி என்ன அவ்வளவு தூரமே....''

தம்பி வழக்கம் போல அதிகம் பேசேல்லை. ''சரி சரி பின்னேரம் போவம்''

அப்பாடி...சந்தோசம் தாங்கவில்லை ஆறுமுகத்தாருக்கு. "பாலனுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு போக வேணும். பாவம்." என்று அனுங்கிக்கொண்டாா்.

பின்னேரம் போறதுக்கு இப்பவே ரெடியாகத் தொடங்கினார்.

''டேய் தர்மா. மீசை தாடியெல்லாம் வளந்து போச்சுதடா. வடிவா ஷேவ் பண்ணி தலைமயிரையும் கொஞ்சம் வெட்டி விடு. உச்சியிலை இருக்கிற மயிரை கூட வெட்டிப் போடாதை. அது இருந்தாத் தான் எனக்கு வடிவு''

தர்மா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டான். ராங்கியாகக் கதைச்சாலும் ஆறுமுகத்தாரை நல்ல கவனமாகத்தான் பார்த்துக் கொண்டான். அவரைக் குளிக்க வைத்து நல்ல சேர்ட்டும் போட்டு விட்டான். ''டேய் பம்பேர்சை கட்டி விடடா. ஆஸ்பத்திரியிலை அவசரத்துக்கு போகேலுமோ தெரியாது.எனக்கு ஒண்டுக்கு வந்தால் அடக்க ஏலாது.பறபறவெண்டு கீழாலை போயிடும்'' .

சரி. எல்லாம் ஆயத்தம். புது கைலேஞ்சி ஒன்றை எடுத்து வாயில் கவ்விக் கொண்டார். போற வழியிலை தர்மாட்டை சொல்லி அப்பிள் வாங்குவம். மற்றதுகளை விட சீனி வருத்தக்காரருக்கு அப்பிள் நல்லது.மனதுக்குள் சொல்லிக் கொண்டார். மகன் வான் கொண்டு வந்திட்டான் போல இருக்கு. கைத்தாங்கலாக தர்மேயுடன் எழுந்தார். களுசானை கவனமாக மேலே இழுத்து விட்டுக் கொண்டார்.

'' சரி தம்பி வெளிக்கிடுவம்''.

காலி வீதியை நோக்கி வான் ஓடத் தொடங்கியது. கார்கில்ஸ் பூட் சிட்டியைக் கண்டதும் ''தம்பி கொஞ்சம் வானை நிப்பாட்டு. அப்பிள் வாங்க வேணும்''

தம்பிக்கு காதில் கேட்டதாகத் தெரியவில்லை.

அது சரி .ஏன் வான் இந்தப் பக்கமா போகுது ?

அவருக்கு கொழும்பு அத்துபடி. 'கொழும்பிலை நான் சுத்தாத இடமோ ? அதுவும் வயசு போன காலத்திலை எட்டுப் போட்டுக் காட்டி எடுத்த லைசன்சிலை C.T.B பஸ்ஸை அறம்புறமா ஓவர்டேக் பண்ணின ஆள் நானெல்லோ. இப்ப தம்பியிட்டை வான் எங்கை போகுது எண்டு கேக்க பயமாக் கிடக்குது.' பலத்த யோசனையில் இருந்த ஆறுமுகத்தார் வான் பிரேக் அடிக்க நனவுக்கு வந்தார்.

வான் பாதை மாறிய குழப்பத்தில் மலங்க விழித்த ஆறுமுகத்தாருக்கு பகீர் என்றது. இதென்ன மலர்ச்சாலைக்கு முன்னால் வான் நிக்குது. அவருக்கு தொண்டை உலர்ந்தது. உடல் அதிகமாக நடுங்கத் தொடங்கியது.

''அப்பா கவனமா பாத்து இறங்குங்கோ''

சுற்றும்முற்றும் பார்த்து மிலாந்திய கண்ணுடன் இறங்கினார். வலது கையில் கைபிடி. இடது பக்கமாக தர்மே பிடிக்க தள்ளாடி தள்ளாடி நடந்தார். அவர் மெளனத்தில் உறைந்திருந்தார். மலர்ச்சாலையில் நிறைசனம்.

அறிந்தவர்கள் நண்பர்கள் உறவினர்கள் நிறைந்திருக்க பாலன் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தான். முகம் செழுமையாக முன்பு பார்த்த பாலன்போல இருந்தான். அவனுடைய மனைவி இடப்பக்கமும் தாய் வலப்பக்கமும் பிள்ளைகள் கால்மாட்டிலும் தலைமாட்டிலும் நிற்பது தெரிந்தது. தர்மா கைத்தாங்கலாகப் பிடிக்க மெதுவாக அடிமேல் அடி வைத்துப் பக்கத்தில் சென்றார். இவர் வந்ததும் கனத்த மெளனத்தில் ஆழ்ந்திருந்த இடம் அழுகையும் விசும்பலும் கதறலுமாய் நிறைந்தது. அவரால் அசைய முடியவில்லை. கால்கள் சோர நடுங்கினார். பாலனின் உடல் கிடத்தப் பட்டிருந்த பெட்டியின் பக்கங்களில் இருந்த கம்பிகளை இறுகப் பிடித்தார். மேலே வெள்ளை கட்டுவதற்காகப் போட்டிருந்த கம்பிகள் ஆடத் தொடங்க, யாரோ பக்கத்தில் இருந்த கதிரையில்அமர்த்தினார்கள். பாலனின் தாய் ஒருபக்கம் மனைவி ஒருபக்கமாக தோளில் சாய்ந்து கதறத் தொடங்கினார்கள். பாலனின் அம்மாவின் குரல் காதுக்குள் அறைந்து தாக்கியது.

''ஐயோ தம்பி, அம்மா நான் குத்துக்கல்லு போல இருக்க ஐம்பதிலை நீ போயிட்டியே ராசா...நூறு வயசிலை தாத்தா உன்னை இந்தக் கோலத்தில் பாக்க வைச்சிட்டியே அப்பு.இனி நான் என்னடா செய்வன். பெண்சாதி பிள்ளைகளை விட்டிட்டு இப்பிடி அகாலத்திலை போயிட்டியே ராசா. உனக்கு இருதயம் நிண்டு போச்சாமே. எனக்கு நிண்டு போயிருக்கக் கூடாதோ...?

மனைவி செத்ததுக்குக் கூட அழாதவர் ஆறுமுகத்தார். யாரும் பாக்கினமோ என்று நாலு பக்கமும் பார்த்தார். என்ன நினைத்தாரோ...? மூக்காலும் கண்ணாலும் நீர் பெருக, அழுகையும் சிரிப்புமற்ற விநோத குரலில் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.