அவன் கன்னங்கள் இரண்டிலும் வழிந்த கண்ணீர் உதட்டில் விழுந்து உப்பு கரித்த போதுதான் அது கண்ணீர் என்பதை, உணர்ந்தான் ஏகாம்பரம்.

அவன் நினைவுகள் உணர்வுகளற்று உதிரியாக ஆங்காங்கே திட்டுதிட்டாய் நிற்கும், மேகக்கூட்டங்கள் போல திசைமாறி நின்ற இடத்தில் நின்றன. அப்பப்ப உணர்ச்சிகள் உரசப்படும்போது. மேகம் கறுத்து மழை பொழிவதுபோலத்தான் அவன் கண்களும் .

வாழ்வின் நீள அகலங்களை அளந்தவன் ஏகாம்பரம். ஆனாலும், எதிலும் மனம் ஒட்டிக் கொள்ளாமல் வாழை இலையில் விழும் தண்ணீரைப் போல எந்த சந்தோசத்தையும் ஏற்க மறந்தவனாய் விரக்தியின் விளிம்பில் நின்று வாழ்வைக் கடந்து கொண்டிருந்தான்.

வேளாவேளைக்குசாப்பாடு, நேரம்தவறாமல் தண்ணிவண்ணி , கூல்றிங்க்ஸ்..  சாப்பாட்டுக்குப் பிறகு, நொட்டு நொறுக்குகள், பழங்களென ... எந்தக் குறையுமில்லாத வாழ்வுதான் ஏகாம்பரத்தினுடையது.

இதை விட பணிவிடை செய்ய பணியாட்கள் .. வெளியேசென்றுவர வாகன வசதிகள் என, எல்லாம் இருந்தும் எதுவுமில்லாத உணர்வுடன் தான் ஏகாம்பரத்தின் வாழ்வு கரைந்து கொண்டிருந்தது.

எப்பவும், முப்பது நாற்பது பேர் அவனைச் சுற்றியிருந்தாலும், யாருடனும் அனாவசியமாகப்பேச விரும்பமில்லாமல். புன்னகை ஒன்றை மட்டும் வீசிவிட்டு, கடந்து சென்று விடுவான். அவனுக்கென்று இருக்கின்ற பிரத்தியேக அறையில் தானும் தன்பாடுமாய் தனிமையில் இருப்பதையே அவன் விரும்புவான்.

அங்கு வேலை செய்யும் பணிப்பெண்கள் வந்து வலுகட்டாயமாக வெளியே அழைத்தால் மட்டும் சென்று விட்டு, எவ்வளவு கெதியாய் முடியுமோ அவ்வளவு கெதியாக தன்அறைக்குத் திரும்பிவிடுவான்.

சக்கர நாற்காலியில் இருப்பதினால் அவனால்அதிக தூரத்துக்கு தனியாகபோகமுடியாது. சில வேளைகளில்அவனுக்கு தோன்றும் இப்படியே எங்கயாவதுதிரும்ப முடியாத இடத்துக்குபோய்விட்டால் என்ன என்று.

அப்படிப் போயும் பல தடவைகள் பலரால் அந்த இடத்துக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டுமுள்ளான்.

கடைசியாக பொலிஸ் மூலம்கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பின்தான் இவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது என, விஷேட பாதுகாப்பும் போடலப்பட்டுள்ளது.

அந்த வயோதிப மடத்திலே இவன் மட்டும்தான் தமிழன். அங்குள்ளவர்களில் இவன் மட்டும்தான் வயதில்குறைந்தவன். முப்பத்து மூன்று வயதுதான் இருக்கும் அவனுக்கு. டென்மார்க்கில் “விதோ” என்னும்நகரத்தின் வயோதிபமடத்தில் கடந்தஇரண்டு வருடமாக வாழ்ந்து வருகிறான்.

அன்று அதிகாலை வேளைக்கே கண் விழித்து விட்டான் .

அதற்குக் காரணம் “தொடர்ந்து இரண்டுமூன்று நாட்களாகக் கொட்டியபனி நேற்றிரவுடன் விட்டிருந்தது.” அதனால் விஷேட இயந்திரங்கள் மூலம் வெளியே பனியகற்றும் சத்தம் கேட்டுகொண்டிருந்தது.

டென்மார்க்கில் பனிக் காலங்களில் பனி அகற்றுவதற்கென, விஷேடபணியாளர்களும் நியமிக்கபட்டு, இரவுபகலாய் வீதிகள், நடைபாதைகள் என அனைத்தும் உடனடியாகத் துப்பரவு செய்யபட்டுவிடும்.

வீதியிலுள்ள பனிகளெல்லாம் அள்ளி மலைபோல குவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

வெண்மலர்ப்பூக்கள்போல பார்க்க அழகாக இருக்கும். சிறுவர்கள்அதில் சிலைகள் செய்தும், ஒருவருக்கொருவர் எறிந்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். .

அந்தப் பனியையே பார்த்துக்கொண்டு நின்ற ஏகாம்பரத்தின் நினைவு பல ஆண்டுகளுக்குமுன்பொரு பனிக்காலத்துக்கே போய்நின்றது.

இப்படியொரு பனிப் பொழிவில்தான் ....

‘ வின்ர டெக் ‘ மலர் ஒன்றைத் தவிர எந்தமலரும் உயிர்க்காத பனியுறைந்தபொழுதொன்றில் ஐரோப்பியக் கண்டத்தின் நடுக்கடலில் நகர்ந்து கொண்டிருந்த “பெருங்கப்பலொன்று” நுற்றுக்கணக்கான உயிர்களை பிரசவித்துக் கொண்டிருந்தது. அத்தனைபேரும் தமிழர்கள்.

சிறுசிறு வள்ளங்களில் கும்பல் கும்பலாக விழுந்தவர்கள் விழுந்ததவர்காக எழுந்தவர்கள் எழுந்தவர்களாக “கங்காரு தவறவிட்ட குட்டிகள்போல .. ”

திரும்பி பார்க்காமலே நகர்ந்து மறைந்தது அந்தக் கப்பல். ஆண்கள் மட்டுமில்லை பெண்கள் குழந்தைகளென கடலேதரையாக உறைந்துவிட்ட நிலையில் நீரெல்லாம் க்ட்டி கட்டியாய் .. ஆனால் வள்ளம் எப்படி நகரும்? நகராத வள்ளத்தில் எப்படி கரைசேர்வது என்ற ஏக்கம் ! நடுச்சாமம் ! அனுபவமில்லாத பனித்தேசம் . கரை வந்திட்டுதாக்குமென சில துணிவுள்ள இளைஞர்கள் வள்ளத்தை விட்டு வெளியே நடக்கத் தொடங்கிவிட்டார்கள். அதிலே நடந்தவர்கள் சிலரை காணவில்லை. வள்ளத்தை நோக்கி மீண்டும்ஓடி வந்தவர்கள் திடீரென மாயமாய் மறைந்துபோக எங்கும் அவலக்குரல்கள் ..

யார் போனவர் ? யார் வந்தவர்களென யாருக்கும்தெரியாத இராப்பொழுது எல்லோருக்கும் புதுசு . பயம் மெழுகிய விழிகள். அப்போதுதான் எல்லோரும் உசாரானோம் இது தரையல்ல நடுக்கடல் எனபுரிந்தது .

அழுகுரல்கள் வானைப் பிளக்க ... விடிந்தும் விடியாப் பொழுதொன்றில் கூடவந்தவர்கள் யாரை விட்டோம் யாரைத் தேட என வள்ளத்துக்கு வள்ளம் கத்தினார்கள். கதறினார்கள் திக்குக்கு ஒரு வள்ளமாய் திசைமாறியபடி ஏற்றிய வள்ளங்களில் இருந்தபடியே ... நேராத கடவுளிடமெல்லாம் தமக்குத்தானே ஒவ்வொருத்தரும் நேர்த்திகள் .

முருகா ! நல்லூர் கந்தா ! நாகதம்பிரானே ! திருப்பதி எழுமளையானே ! இயேசு பாலா ... அன்னை மரியாளே ! என புலம்பிகொண்டிருந்தார்கள்.

உயிரை காக்கவென்று தங்களை அடகுவைத்து ... காணிவித்தும் .. போதாதென்று, அம்மா தன்தாலிக்கொடியை அடகு வைத்து எத்தினை இலட்சத்தை கட்டிஇந்த பெயர் தெரியாததேசத்தில.. மாண்டுபோகப் போகிறேனே என்று ஏகாம்பரம் தன் பங்கிற்குதன் குலதெய்வமான முருகனை மனதார வேண்டியபடி “கந்தசட்டிகவசத்தை மனதுக்குள் பாடினான்”

“காக்க காக்க கனகவேல்காக்க, நோக்க நோக்கநொடியினை நோக்க , பார்க்கப் பார்க்கபாவம் பொடிபட பில்லிசூனியம் பெரும்பகை அகல ...”

கொஞ்ச நஞ்சமல்ல ஏச்செஞ்சிக்கு ‘மூன்றுஇலட்சம்’ சுளையாகக் கொடுத்தது. தானும்கூட வந்து வெளிநாட்டில உன்னை விட்டிட்டுத்தான் வருவன்என்று சொல்லித்தான் காசுவாங்கினவன் கொழும்போடு ஏஜெஞ்சியை காணவேயில்லை.

வெளிநாடு போகாட்டியும் பரவாயில்லை உயிரோடு ஊருக்குத்தன்னும் போய்ச் சேரவேணும் என்ற ஏக்கம் தான் இப்ப ஏகாம்பரத்துக்கு.

கத்திக்கதறி தொண்டைத்தண்ணி வற்றி எல்லோரும்சோர்ந்து போனார்கள் “பூச்சியதுக்கும்கீழான மைனஸ் பதினேழு பாகைஇருக்கும் “ விறைக்கும் குளிரில் நடுங்கியபடி ... இவர்களைத் தவிர, மனிதசஞ்சலமற்ற அந்த சூனியப்பரப்பிலே விடிந்து கொண்டிருந்த ஒருபொழுதில்...

புள்ளிபோல் ஒரு வெளிச்சம்தெரிந்தது. பயம் ஒருபுறம் இருந்தாலும் மனதுக்குள் ஒரு புத்தொளி ... “அது நேவிக்கப்பல் ... “ மனித நேயத்தோடுஅருகில் வந்தவர்கள் பேசும்பாசை புரியாத போதும் “உதவி உதவி .. என்றும்கெல்ப் கெல்ப் ... என்றும், தமிழிலும் ஆங்கிலத்திலும் எலோரும் சேர்ந்து கத்தினார்கள்.

இமைக்கும் பொழுதில் “கேலிகொப்டர்கள்” அந்த இடத்தை வட்டமிட்டது. வள்ளத்தில்இருந்த அத்தனைபேரும் காப்பாற்றப்பட்டு “டென்மார்க் சண்கோலம் அகதிமுகாமில்” அகதியாக ஏற்றுக்கொள்ளபட்ட நாள் மறுபிறப்பாய்மீண்ட வாழ்வின் தொடக்கம் ஏகாம்பரத்தின் நினைவில் வந்து போனது.

******

கதவை தட்டிக்கொண்டு அறையினுள் நுழைந்தாள் சுசேனா . சுசேனா என்கின்றவள் அங்கு வேலை செய்கின்ற ஓரு டேனிஸ் பெண். அவளுக்குபின்னால் முன்னுக்கு பாதி வெளிச்சபடி தலையில்பின்னுக்கு கொஞ்சம் கருமுடி, அடர்ந்த கருந்தாடியுடன் நடுத்தர வயதுடையவர் பார்த்தால் எங்கள்நாட்டவர் போல தான்தோற்றம் ஆனால், ஏகம்பரத்துக்குமுன்பின் தெரியாத முகம். இவனுக்கு முன்னமே “வணக்கம் அண்ணா !” என்றபடிவந்தார் .

அப்போது தான் சுசேனா டெனிஸில்சொன்னாள் இவர்தான் இன்றைக்கு உனக்கு மொழிபெயர்ப்பாளர். இவர்பெயர் ராம் என்று , ஏகாம்பரமும் வணக்கம் சொன்னபடி அதற்குத் தயாரானான்.

மனநல வைத்தியருடனான சந்திப்புத்தான் அன்றுநடந்தது. வழமையாக வருகின்ற மொழிபெயர்பாளருக்குஅன்று நேரமில்லாததினால் தான் ராம்அழைக்கப்பட்டிருந்தான்.

அந்தச்சந்திப்பு முடிந்த பிற்பாடு சக்கரநாற்காலியில் தானே சுயமாகத் தன் அறைக்கு வந்து அறைக்கதவை சாத்தியகையுடன் கதவு தட்டப்பட்டது.

ஏகாம்பரம் தன் கையில் இருந்த “ ரிமோட்டினால் ” கதவை திறந்தான். ராம்தான் வாசலில் நின்றுகொண்டிருந்தான். "உள்ளவரலாமோ ? "என்று, கேள்வியைக் கேட்டுக் கொண்டே பதிலைஎதிர்பாராமல் ராம் வந்து கதிரையில் உட்கார்ந்தான்.

"நீங்கள் இங்க வந்துகனகாலமா ?"என ராம்கேட்க, இந்தநாட்டுக்கா ! இல்லை இந்தவீட்டுக்கா ? என, மறுகேள்விளை தொடுத்தான் ஏகாம்பரம். சிரித்தபடி இல்லைமுன்பொருதரமும் உங்களைபார்கவில்லை அதுதான்டென்மார்க் வந்து கனகாலமோஎன்று கேட்டேனென ராம்முடிக்க முன்னம் "இருபதுவருசங்கள் இருக்கும் " என ஏகாம்பரம்சொன்னவுடன் “அப்ப காலுக்கு என்ன நடந்தது ஏகாம்பரம் ? இஞ்சவந்த பிறகா இல்லாட்டி சின்ன வயசில இருந்தா ?" என .ராம் கேட்டுமுடிக்க

"எல்லாம் இஞ்ச வந்தபிறகுதான். கடும் குளிரில பல மணித்தியாலங்கள் போராடித்தான் இந்த நாட்டுக்குள் வந்தனான் அதன் தாக்கமாகத் தான் இருக்கும். கொஞ்சநாளிலேயே தெரிஞ்சிட்டுது. சோக்கான அந்த நாட்டைவிட்டு வந்ததால தான்இந்த வினை" என்றான்ஏகாம்பரம் .

"என்ன அண்னைசொல்லுறிய"லென ராம் கேட்டான் .

"கம புலமென்று பெரிய விவசாயக்குடும்பம் எங்களது . நான் இஞ்சவந்திருக்கத் தேவையில்லை ஆசை யாரைவிட்டுது. நண்பர்கள் எல்லாரும் வெளிநாடுபோகிறார்கள் என நானும்ஆசைபட்டு வெளிக்கிட்டன் ம் .... இயற்கை தந்த வனப்பு ,காலநிலை, காற்று சூரியஓளி எல்லாம் எங்கடநாட்டில எவ்வளவு கொடைதெரியுமா ? நான் வெளிநாடு வாறது ,அம்மாஅப்பாவுக்கு துண்டா விருப்பமில்லைஇப்ப கடைசியில அப்பாவின்ரஇறப்பில கூட கொள்ளிவைக்கக்கூட போகேல்ல . பத்துப் பதினைச்சு வருஷம் எந்தக்குறையுமில்லாமல் தான் டென்மார்க்கில வாழ்ந்தேன் . அம்மா அப்பா கலியாணம் கட்டச் சொல்லி வற்புறுத்தியும் வேண்டாமென தனிச்சு வாழ்ந்தாலும் நிம்மதியாகத்தான் வாழ்ந்தேன். ஒரு பிடி சோறு காப்புக் கையாலசப்பபிட ஆசைப்பட்டுக் கடைசியில ஒருவாய் சோறு கூட சாப்பிடமுடியாமல் ஆகிப்போய்விட்டது . "

தேம்பித்தேம்பி அழத்தொடங்கிவிட்ட ஏகாம்பரத்தை அருகில் சென்று ராம் ஆசுவாசப்படுத்தினான்.

"கவலைப்படாதேங்கோ அண்ணை ! இந்த உலகத்தில பிறந்த எல்லாருக்கும் ஏதாவதுஒரு குறை இருந்துகொண்டுதான் இருக்கும் . ஆனால் நம்போன்ற ஈழத்தமிழன் வாழ்வில்புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பொதுவா ஒருதீராத சாபமோ ! என, நான் எண்ணுவதுண்டு. இராவணன் சீதையை கடத்திக்கொண்டுவந்து இலங்கையில சிறைவைத்திருந்தப்போ அவள் என்னபாடு பட்டிருபாள் எனநானும் உணர்ந்திருக்கிறன். குற்றமேதும்செய்யாத போதும் தமிழன்என்கிறதால இலங்கையிலும், சிறிலங்கன் என்றதாலஅரம்பத்தில இஞ்சயும் சிறையில இருந்திருக்கிறன். பல வலிகளை கடந்ததுதான் வாழ்வு. எல்லாத்தையும் சகித்துக்கொண்டு வாழ்ந்துதானே ஆகவேண்டும் "என, கதையை மாற்றி “இஞ்ச ஓரிடத்திலதமிழ்ப் படம் ஓடுதுவாறிங்களா போவம் ? நல்ல படமென்றுசொல்லுறாங்கள் விஜய் சேதுபதியின்ர 96 . நானே உங்களை கூடிக்கொண்டுப்போய் கூடிக்கொண்டு வாறன் எனசொல்லிய ராம் “எழுந்துசென்று ஒப்பிஸ்சில் அதற்கானபெமிசனையும் எடுத்துக் கொண்டு வருகிறேன். வெளிக்கிடுங்க போவம்" என்றான் ராம் !

இஞ்சயெல்லாம்நினைச்சவுடன தமிழ்ப் படம் பார்க்கமுடியாது அருமை பெருமையாய்எப்பவாவது நல்ல படங்கள் ஓடும் . பல வருடங்களாகத் தமிழ்ப்படம் தியேட்டரில பார்க்காத ஏகாம்பரம் ராமின் வற்புறுத்தலால் அரை மனதுடன் சம்மதித்தான்.

இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த தியேட்டருக்குக் கார் பறந்தது. அந்த வயல் வெளிகள் ஊடகஇயற்கையை இரசித்துக்கொண்டு அமைதியாக இருந்தான் ஏகாம்பரம் .

பார்வைக்கு கிராமப்புறமாக இருந்தாலும் வாழ்வுக்கு ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால் முன்னணியில் நிற்கின்ற நாடு டென்மார்க். மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் மக்கள் நலத்திட்டங்களில் ஏனைய பல நாடுகளையும் விஞ்சி நிற்கின்ற நாடு , சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வதற்கு சிறந்தநாடு என்ற பட்டியலில்டென்மார்க் முதலிடம் பெற்றிருக்கிறது , இந்தநாட்டில் தான் இருக்ககொடுத்து வைத்திருக்க வேண்டும் என, மனதுக்குள் எண்ணியவாறு ஏகாம்பரம் இருக்க தியேட்டர் வாசலை அடைந்தது இவர்களது கார்.

சனங்களைக் காணவில்லை படம் தொடங்கிவிட்டதுபோல என, அந்தரப்பட்டபடி ராம் இவரை வண்டியில் வைத்து தள்ளியபடி இருவரும் உள் நுழைந்தார்கள். ஹவுஸ்புல் என்று சொல்லமுடியாது. சுமாரான சனம்தான்.

படம் முடிந்தபிறகு ஏகம்பரத்துக்கு முன்னுரிமை கொடுத்தபடியினால் ராம் ஏகாம்பரத்தை வண்டிலோடு தள்ளிக்கொண்டுவந்து வாசலோடு நிறுத்திவிட்டு காரை எடுத்துக்கொண்டு வருவதக்கு கார் நிறுத்தும் இடத்துக்கு சென்று விட ஏகாம்பரம் வாசலில் வண்டியிலேயே இருந்தபடியால் வெளியே வருபவர்கள் எல்லாரையும் பார்க்ககூடியதாக இருந்தது.

அழகான ஒரு பெண் நடுத்தர வயதிருக்கும் வட்டக் கண் வாட்டசாட்டமான தேகம் கருமயிருக்கு கொஞ்சம் சாயம் தடவிசெம்படைக் கோடுகள் .. சனங்களுக்குநடுவில் வந்தஅந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் அதிர்ந்துபோனான் ஏகாம்பரம். கூடவே ஐந்து , ஆறு மதிக்கத்தக்க இரண்டு பெண்பிள்ளைகள் ; யாருடனோ டெலிபோன் கதைத்துக்கொண்டு வந்தவள் இவனைக்கண்டவுடன் ஒருகணம் வெருண்டு விட்டாள் . டெலிபோன் கதைத்ததையும் நிற்பாட்டிவிட்டு அருகிலேயுள்ள பாத்துரூமுக்குள் நுழைந்தவள் போன வேகத்தில் திரும்பிவந்தாள். அவசரத்தில் மாறி ஆண்கள் பாத்துரூமுக்குள் நுழைந்துவிட்டாள் போல வெளியேவந்தவள் மீண்டும் பெண்கள் பாத்துரூமுக்குள் நுழைந்தாள் .

எதுவுமே பேசாமல் தன் சக்கரநாக்காலியில் இருந்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான் ஏகாம்பரம் . இதைக் காரில் இருந்தவாறு ராமும் கவனித்திருக்க வேண்டும்.

“அம்மா அம்மா “என்று பிள்ளைகள்அழைத்தும் மாயமாய்அந்தப் பெண் மறைத்துவிட அந்தஇடத்துக்கு அவசரமா வந்த நடுத்தரவயதுடையவர் கலவரப்பட்டபடி "எங்ககொம்மா ? " என அந்தப்பிள்ளைகளிடம் கேட்க பாத்ரூம் பக்கமாக கையைக் காட்டினார்கள் இருவருமே ஒருமித்தமுகமாக.

"காரை எடுத்துக்கொண்டு வரச் சொல்லிபோட்டு உதுக்குள்ள போய் கிடக்கிறாள். அங்க காருக்குத் துண்டேழுதி வைக்கப்போகிறாங்கள் வாங்கோடி" என அந்த இரு பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அந்த நபர் ஓடி மறைந்தார்.

“அவளின் கணவனாக இருக்கக்கூடுமென ஏகாம்பரம் மனதுக்குள் எண்ணிகொண்டான் “

********

ஏகம்பரத்தின் சக்கர நாற்காலியைத் தள்ளியபடி இருவரும் காருக்குள் ஏறிக்கொண்டார்கள் . மீண்டும் அந்த வயல்வரப்புகளை ஊடறுத்து போடபட்ட வீதிகளில் இருவரையும் சுமந்தகார் வளைந்துநெளிந்து புழுதிகளின் மேலே மிதந்துகொண்டிருந்தது .

ராம்தான் முதலில் அந்த மெளனத்தைக் கலைத்தான். " அந்தபெண்ணைஉங்களுக்கு முதல்லையே தெரியுமா ? " எதுவுமே பேசாமல்இருந்த ஏகாம்பரம் பேசத்தொடங்கினான் .

"இவளாலதான் எனக்குஇந்த நிலை இவள் பெயர் நிரோசா ! கலியாணம் வேண்டாமென நிம்மதியாய் இருந்த என் வாழ்வில் ருசியாய் ஒருவாய் சோறு சாப்பிட நினைத்ததால வந்தவினை .. " விக்கி விக்கிஅழத் தொடங்கிய ஏகாம்பரத்தை தேத்தி அவன் அழுகையை நிறுத்த முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தான் ராம் .

என்னுடைய வீட்டுக்கு அடிக்கடி வந்துபோய்க்கொண்டிருந்த சுப்புறு இடைக்கிடை தன்வீட்டில் இருந்து எனக்குச் சாப்பாடு கொண்டுவந்து தருவான். நான் தனியாக இருப்பதினால் டேனிஷ்சாப்பாடுகளே அதிகம் சாப்பிட்டுகொண்டு இருந்த எனக்கு அவன் வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாடு உறைப்பாகவும் ருசியாகவும் இருந்தது. மனம் நிறைந்து நன்றி சொன்னேன்அவனுக்கு, தேனமிர்தம்போலிருக்கிறது நீதான் சமைத்தாயா ? எனகேட்டும் வைத்தேன் . இது நான்சமைக்கவில்லையடா மனைவிதான் சமைத்தது .. என்று சொன்ன அவன் அடிக்கடி தன் வீட்டில்இருந்தும் நல்ல சாப்பாடுகள் செய்யும்போதெல்லாம் எனக்குகொண்டு வந்து தர தவறுவதில்லை . நாக்கு செத்துப்போய் இருந்த எனக்கு, அந்த உறைப்புச் சாப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டேன் .சில வேளைகளில் நானே வாய் விட்டும் கேட்டுபோடுவேன் உங்கள்வீட்டில இன்றைக்குஎன்ன சாப்பாடு ? என்று, ஒருநாள் திடீரென அவன்கேட்ட கேள்விக்கு என்னால் பதில்சொல்ல முடியவில்லை .என் மனைவியின் தங்கை ஊரிலஇருக்கிறா, கனகாலமாக கலியாணம்பேசிறம் குழம்பிக்கொண்டேபோகுது சீதனம்குடுத்து செய்வதற்கும் அவயளிட்ட அவ்வளவு வசதியில்லை ஆனால் , பொம்பிளை டென்மார்க்வரத்தான் விரும்பிரா நீ ஓமண் டால் இஞ்சகூப்பிடலாம் என்று என்ர மனைவி சொல்லுறா என்ர மனைவியை விட அவ நல்ல ருசியா சமைப்பா

ஏகாம்பரம் தன் பலவீனத்தை சுட்டிக்காட்டியும் சுப்புறு அதைத்தான் தம் பலமாக எண்ணிக்கொண்டான் .

சொல்லிவைச்சாப்போல மறுநாள் அவளிடமிருந்துதொலைபேசி அழைப்பு ! அத்தான் உங்கள் நம்பர்தந்தவர் உங்கள்போட்டவும் பார்த்தனான் எனக்குஉங்களை நல்லாப் பிடிச்சிருக்கு உங்கள் கால் ஒருகுறையே இல்லை நீங்கள் சம்மதித்தால் உங்கள் ஒருகாலாக நான் இருக்கவிரும்புகின்றேன் .

விதம் விதமாக சமைப்பன். என ஏகம்பரத்தை பேசவிடாமல் தொடந்துபேசினாள் அவள் . அசைப்பார் அசைத்தால் அம்மியும்நகரும் என்பது போலத்தான் நிரோசாவின்தேனொழுகும் பேச்சில் ஏகாம்பரத்தின் இதயமும் அசைந்தது

மீண்டும் மீண்டும் நிரோசா டெலிபோனில்பேசினாள். ஒருநாள் அவள்பாடிய பாடல் ஏகம்பரத்தை அவள்மீது பைத்தியமாக்கிவிட்டது

“ தங்கத்திலே ஒரு குறைஇருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ - உங்கள் ! அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்அன்பு குறைவதுண்டோ !" என்ற பாடலுடன் ஏகம்பரத்தை அவள்மீது பைத்தியமாக்கிவிட்டது என்றுசொல்லலாம் திரும்பத்திரும்ப ஏகாம்பரத்தின் மனதில்ரிங்கத்ரோனாய் அந்தப்பாடலின் பல்லவி ....

“ஏகாம்பரத்தின் மெளனப்புன்னகையே சாட்சியாய் “ சம்மதமென ஏற்றுக்கொண்ட சுப்புறு குடும்பம் துரித கெதியில்விசாவுக்கான ஏற்பாடுகள் செய்ய பார்வையாளனாக இருந்த ஏகாம்பரம் கனவில் மிதந்தபடி தன் கையெழுத்தை சுப்புறு காட்டியஇடமெல்லாம் இட்டும் வைத்தான்.

அவர்கள் எதிர்பார்த்ததை விட விரைவாக நிரோசவுக்கு விசா ஒக்கே என்ற கடிதம் ஏகாம்பரத்தின் வீட்டு வாசலில் வந்து கிடந்தது, இறக்கை கட்டிப் பறந்தான் ஏகாம்பரம். முதன்முதலில் அன்றுதான் அவளுக்கு இவனாக டெலிபோன் எடுத்தான் .

தன் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றத்தை ஐம்புலங்களிலும்உணர்ந்தான் ஏகாம்பரம்

ஏகாம்பரத்தின்வங்கியில் இருந்த பணமெலாம் நிரோசாவின்வங்கிக்கு இறக்கையில்லாமலே பறந்துகொண்டிருந்தது. வேகவேகமாக பயன ஏற்பாடுகளுடன் டென்மார்க்குக்கு பறந்துவந்தாள் நிரோசா !

ஏகாம்பரத்தை எயாபோர்ட்டுக்குக் கூட அழைக்கவில்லை நிறோசவை அழைத்துக் கொண்டு நேரே ஏகாம்பரம்வீட்டுக்குத்தான் வந்தார்கள் “முப்பது கிலோசூக்கேசை அப்படியே கொண்டுஇறக்கிவிட்டு” ஏகாம்பரத்தை நிரோசாவோடு தனியாகக்கூடபேசவிடவில்லை சுப்புறு, அவன் மனைவி சரோயாஎல்லாரும் சேர்ந்தேவந்திருந்தார்கள் .

கலியாணம் செய்யாமல் அவள் இஞ்சை இருப்பதுஅவ்வளவு நல்லதில்லை நாலுசனம்நாலுவிதமாக பேசும் என்று சரோ சொல்லுறா ... நாங்கள் நிரோசாவை எங்கட வீட்டுக்கு கூட்டிக்கொண்டுபோகிறம் கெதியில நாளைவைச்சு கலியாணத்துக்கு ஆயத்தப்படுத்துவம் என்று சொன்னபடி எல்லோரும் வெளிக்கிட்டார்கள் நிரோசாவும்தான்

அவளையே அப்பாவித்தனமாய் ஏகாம்பரம்பார்த்துக் கொண்டு நின்றாலும் எதுவுமே தெரியாதமாதிரி அவர்கள் பின்னால் நிரோசா ...

பெண்ணல்லவா அச்சம்மடம் நாணம் பயிர்ப்பு இருக்கும்தானே .. என்றுதனக்குதானே சமாதானம் சொல்லி மனதைத் தேத்திகொண்டாலும், அப்ப எப்படி டெலிபோனில் அப்படிக் கதைத்தாள் ? என தனக்குள்உள்ள கேள்வியை மனதுக்குள் புதைத்துக்கொண்டு எல்லோருக்கும் சேர்த்து கைகாட்டி அனுப்புவித்தான் ஏகாம்பரம் .-

"அன்று போனவள்தான் மீண்டும் இன்றுதான் பார்க்கின்றேன் போட்டோவில் பார்த்துப்பார்த்து மனமுருகிப்போன அவளுருவம் இப்போது நேராகப் பார்த்தபோது இதயம்உடைந்து போனது .."

"அப்ப பிறகு " என்றான் ராம் ?

"பிறகென்ன அடுத்தநாள் வருவாஎன நினைத்தேன் பலநாளாகவே வரவில்லை அவர்கள்வீட்டில் இருந்து யாருமே வரவில்லை ஒரு டெலிபோன்கூட எடுக்கவில்லை நானும் டெலிபோன் எடுத்துப்பார்த்தேன் யாருடனும்பேச முடியவில்லை சில வாரங்களுக்கு பிறகு சுப்புறுமட்டும் வந்தான் . நிரோசாவுக்குஉன்னைப் பிடிக்கவில்லையாம் இப்ப அவள் கலியாணமே வேண்டாமென்று நிற்கிறாள். தன்னை திருப்பி ஊருக்கு அனுப்பிவிடட்டாம். அதுதான் எனக்கு ஒரே குழப்பமாகஇருக்குது. அவளின்ர விருப்பத்துக்கு மாறாக நாங்கள் என்னசெய்கிறது. திருப்பியனுப்பி விடுவம் என்ற முடிவோடு இருக்கிறம் என்றுசொல்லிவிட்டு சென்றான் சுப்புறு . "

திரும்பி வருவாள் என நம்பிக்கையோடு அவள் கொண்டுவந்த சூக்கேசை திறக்காமல் வைத்திருந்த ஏகாம்பரம் சிரமப்பட்டு திறந்தான் . அதற்குள்அல்வாவும் ,மிக்சரும் இவன் சொல்லிவிட்ட நாலைஞ்சு பென்ரரும் மட்டும்தான் இருந்தன. அவளின்ர எந்தச் சாமானும்அதற்குள் இல்லை அதற்குப் பிறகு அவன் அவளைப் பார்க்கவேயில்லை ஊருக்குபோய்விட்டாள் ஆக்குமென நினைச்சேன் அவளின் டெலிபோனுக்காக காத்தும்இருந்தான். நிரோசா அவனுக்கு அல்வா கொடுத்துவிட்டாள் என்பது மட்டும்புரிந்தது .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.