டெலிபோன்மணி விடாமல் அடித்துக்கொண்டு இருந்தது.  நல்ல தூக்கக் கலகத்தில் இருந்த சகுந்தலா, திடுக்கிட்டு எழுந்து டெலிபோனை தூக்கினாள் . அது யாழ்ப்பாணத்தில் இருந்து வாசுகி " நான்தான் அக்கா" என்றாள் .

"என்ன இந்த நேரத்தில என்று"  மணிக்கூட்டை பார்க்காமலே சகுந்தலா கேட்க , " என்னக்கா  !   இஞ்ச  இப்ப ஒன்பது மணியாப் போச்சுது  உங்க  இன்னமும்  விடியேல்லையோ ? "என்றாள்.

அப்பதான்  சகுந்தலா 'லைற்'றை போட்டு நேரத்தைப் பார்த்தாள்  அதிகாலை ஐந்து மணியை அது காட்டியது .

டென்மார்க்கில் கோடை காலங்களில்  இரவெல்லாம் பகலாகவும் பகலெல்லாம் இரவு போலவும் இருக்கும். கோடை காலங்களில் இரவு ஒன்பது பத்து மணிக்கே சூரியன் வானில்  தெரியும். பனி காலங்களில்  விடிந்தாலும்  இராவகத் தான்  இருக்கும் .  

அப்படி ஒரு பனிக்காலம் தான் டென்மாக்கில் இப்போ ....  

வேலை வெட்டிக்கு போகாததினால் இரவிரவா  நாடகத் தொடரும் ...  பேஸ்புக்கு மாக ...  மேஞ்சு போட்டு  படுக்க சமமாகிப்  போகும்.  பேந்து  விடிய விடிய படுத்துக் கிடப்பாள் சகுந்தலா . இப்ப அவள்  வேலை இல்லாமல் வீட்டோடு தான் . டென்மாக்கில் வீட்டோடு இருந்தாலும் அரசாங்கம் பணம் கொடுக்கும்.  அவள் வந்து கொஞ்சக்காலமாக  வேலை செய்தவள். செய்து கொண்டிருக்கேக்க நாரியை பிடிச்சுப் போட்டுது என்று,  ஒரு நாள் வேலைத் தளத்தில  விழுந்தவள்  தான்  எழும்பவேயில்லை. மனைவியை அம்புலன்சில ...   ஹோல்பேக் வைத்தியசாலைக்கு கொண்டுபோவதாக அறிவித்தல் வர துடிச்சுப் போன கணவன் சிவசாமி அலறியடித்துக் கொண்டு வைத்தியசாலைக்கு போனபோது, அரை மயக்கமாக கிடந்த  சகுந்தலா   கணவனின் குரல் கேட்டவுடன்  கடைக் கண்ணை திறந்து  கண்ணடித்தாள்.  அப்போதான் சிவசாமிக்கு நிம்மதியாக இருந்தது .

சிவசாமியும்  சகுந்தலாவும் காதலித்து  திருமணம் செய்தபடியினால்  சகுந்தலாவின் கண்ணடிப்புக்களின் அர்த்தம் சிவசாமிக்கு விளங்கும்.  இரண்டு வயது சிவசாமியை விட சகுந்தலா மூப்பாக  இருந்தாலும்,  பள்ளிக்கூடம் போகேக்க வரேக்க,  கோவிலுக்கு போகேக்க வரேக்க  சகுந்தலாவின் கண்ணடிப்புத்தான்  சிவகாமியை  நிலைகுலைய செய்தது.  அவள் மீது காதல் கொள்ள வைத்தது .  

அவளுடைய வயதையும், வறுமையையும் காட்டி சிவசாமி வீட்டில்  எதிர்த்த போதும்,  அத்தனையையும் எதிர்த்து  அவளைக் கூடிக்கொண்டு  ஒருத்தருக்கும் தெரியாமல்  அளவெட்டியில்  போய்  நண்பன்  அழகேசன் வீட்டில்  ஒளிந்திருந்து வாழ்வு தொடங்கியதும்  இருபது வருடங்களுக்கு பின்னரும் தேனாக  இனித்தது சிவசாமிக்கு      

மீண்டும்  ஒரு தடவை  எட்ட நின்று தன் காதல் மனைவியை  அவதானித்தான்  ...    

டாக்குத்தரும்  நேசும்  அந்த  வாட்டிலேயே  நின்று கொண்டிருந்ததினால்  நோயாளியைப் போலவே  சுருண்டு படுத்திருந்தாள்  சகுந்தலா! அன்று அவளை தூக்கிக் கொண்டு  ஓடும் போது  ஒற்றக் கையாலே  தூக்கும்  பலம் இருந்தது சிவசாமிக்கு !  அவளும் நாற்பது  கிலோவுக்குள்ளே தான்  இருந்திருப்பாள். சின்ன இடை, நளின நடை  அழகிய காந்தக் கண்ணின்   கடைக் கண் பார்வையில்  தன்னையே இழந்த  பொழுதுகளில்  ... வறுமையான  வாழ்வு கூட வசந்தமாக  இனிக்க, மனதுக்குள் இன்ப நினைவுகள்  பூத்தூவ , தன்னையே மறந்து கற்பனையில் நின்ற சிவசாமி  டாக்குத்தரின் சத்தம் கேட்டு  சுய  நினைவுக்கு வந்தான் . இருபது கிலோவாக  இருந்தவள்  இந்த  இருபது வருடத்தில்  எண்பது கிலோவாக  மாறியிருந்தாள்   ...   எத்தனை  தரம் சிவசாமி சொன்னாலும்  உணவு முறைகளில்  கவனமில்லை சகுந்தலா தேகாப்பியாசம் செய்வது கிடையாது.  எந்த நேரமும்  அவளது வாய் வேலை செய்துகொண்டே  இருக்கும்.  உடம்பு  வேலை செய்யக் கள்ளம் ...   தொடர்ந்தும்  வீட்டில்  நிரந்தரமாக இருப்பதற்காகத்தான்  “இந்த நாரி நோ  நாடகம் “ என தனது மனதுக்குள்  நொந்து கொண்டான் சிவசாமி . . நாலைஞ்சுநாட்கள் வைத்திய சாலையில்  இருந்து, பின் வீடு வந்து ஆறுமாசம் மசாஷ் .. என  அலைந்து திரிந்து, குடும்ப வைத்தியரின் புண்ணியத்தில தொடர்ந்து வீட்டிலேயே  இருக்க , அரசாங்க பணம் கொடுப்பதாக தீர்ப்பு வந்த பிற்பாடுதான் சகுந்தலாவுக்கு நிம்மதி.     

"உன்ர  நடிப்பால நீ நடிகர் திலகத்தையும் வென்றிட்டாய் ஆனால், வீட்டுக்குள்ள  இருந்திருந்து  இன்னும்  கள்ள உடம்பு  வைச்சு  ஒண்டுக்கும்  பிரயோசனம்  இல்லாமல்   பூவரசம் குத்தியாக போகப் போகுது  உன்ர உடம்பு என்றான் சிவசாமி “

"உங்களுக்கு எப்ப பார்த்தாலும்  என்னை குறை சொல்வதே வேலையா போச்சுது.  சொன்னாலும் விளங்காது இருபது வருசமா வேலை செய்து என்னத்தை கண்டியள் .  சக்கை பிழி பிழிஞ்சு போட்டு தான் உங்களை வெளியே விடுவங்கள் வேலைத்தளத்தில... இப்படியேவேலையை கட்டிப்பிடித்து கொண்டு அழுங்கோ !  உங்களுக்கு வாழத் தெரியாது.  இந்த நாட்டில நடிக்க தெரியவேணும்.  “என்றாள்  சகுந்தலா .”

அன்றில் இருந்து சகுந்தலாவும்  தன் விருப்பப்படிதான் படுக்கை.  இரவிரவாக இருந்து தொடர் நாடகங்களை  பார்த்துவிட்டு நேரம் சென்று  படுக்கப் போனதால ...  விடியக் காத்தால  டெலிபோன் வந்து எழுப்பினது  எரிச்சலாக இருந்தது அவளுக்கு .

"சொல்லுங்கோ  பிள்ளை  என்ன ஏதேனும் அவசரமே" என்றாள் சகுந்தலா !

"ஓமக்கா  செலவுக்கு காசுகள் இல்லை அதுதான்  எடுத்தனான் “என்று அவள் சொன்னதன்   தான் தாமதம் .”என்ன பிள்ளை  கதைக்கிறாய் !  இப்ப  இரண்டு கிழமை தானே    இருக்கும் ஒரு இலட்சம்  அனுப்பி ,  அதுக்குள்ளே காசு கேட்டால்  ஒரு மனச்சாட்சி வேண்டாமே”  

“ அம்மா  என்ன  அவ்வளவுக்கு  சாப்பிடுகிற ஆளா  ...   “

அவ ஒரு நேரம் கஞ்சி குடிக்கிறதே பெரும் பாடு  “பாவங்கள்  அம்மாவையும்  பாக்குதுகள் என்று , பார்த்துப் பாராமல் காசையும்  அனுப்பி,  வாடக்கையில்லாமல் வீட்டையும்  உங்களிட்டை  சும்மா  இருக்கத்  தந்தா  எங்கட காசில நீங்கள்  சுக போகம் அனுபவித்துக் கொடிருக்கிறியள போல  ..

"என்ர மனுஷன் வேலைக்கு போகிற காசிலதான்  சோரோ  கஞ்சியோ   நாங்கள் சீவியம் நடத்துறம்.  முந்தி நான்  பக்கத்தில  தோட்ட வேலையளுக்கு  கூலி வேலையளுக்கு போனனான்.  இப்ப,  உங்கட அம்மாவோட  எப்பவும் பக்கத்தில இருக்க வேணும் என்பதற்காகத்தான்  நான் வேலைக்கு போறதில்லை. உங்கட அம்மாவுக்குத் தான்  நேரத்துக்கு நேரம் பால்  , மா  , பழங்கள்,  விதம் விதமான சாப்பாடுகள் செய்து கொடுக்கிறம் . டாக்குத்தர்  எழுதித் தருகிற மருந்துக்கே  நிறையக் காசு செலவாகுது .உங்கட அம்மா படுத்த படுக்கையோடுதான்  எல்லாமே  நடக்குது  .... அடிக்கடி அவவுக்கு இயலாமல் போவதால  .. பெரிய ஆசுபத்திரியில  வரிசையில நின்று காட்டிறத்துக்கே பெரும்பாடாக போய்விடும் .   ஆட்டோவில  கூட்டிக்கொண்டு போய் வருவதுக்கே  கனக்க செலவாகுது ... " என,  அடுக்கிக் கொண்டு போன  குமுதினியை  பாதியில் நிறுத்தி  ...     

"ஒக்கே பிள்ளை  உங்களுக்கு கஸ்ரமேன்றால்  விடுங்கோ  இனி நீங்கள் அம்மாவை பார்க்க வேண்டாம். ஒரு கிழமைக்குள்ள  நான் ரிக்கற் போட்டுக்கொண்டு நேர வாறன் .    ஒரு மாச அவகாசமும் தாரன் அடுத்த  மாசத்துக்குள்ள நீங்கள்  வேற வீடு பார்த்துகொண்டு போங்கோ"   என, கூறியபடி  டெலிபோனை  வைச்சாள் சகுந்தலா  !

'விட விட இவையளுக்கு  சேட்டை கூடிப் போச்சுது.  வீடு வாசலில்லாமல்  திரியுதுகள்  என்று,  எங்கட வீட்டில இருந்தால் அம்மாவுக்கும் உதவியாக இருக்குமென  இருத்தினால்,  இப்ப  எங்களுக்கே  கணக்கு காட்ட வந்திட்டினம்.  இவயளுக்கு  அனுப்பிற காசுக்கு  அம்மாவை  கொண்டு போய்  எங்கயாவது வயோதிப மடத்தில  விட்டாலும் பரவாயில்லை போல' என  தனக்குத் தானே ...  புறுபுறுத்துக் கொண்டாள்  சகுந்தலா ..

வேலைக்கு நேரமாகிவிட்ட பதைப்போடு பாத்துறுமால்  வெளியே வந்த  சிவசாமியிடம் " இப்ப உடனடியா  நான் ஊருக்கு போகவேணும்  ரிக்கர்  ஒண்டு பாருங்கோ". என்றாள்.     

"என்னப்பா  !  விடிஞ்சதும் விடியாததுமாக  புறுபுறுத்துக் கொண்டு நிற்கிறாய் ?  உன்னால நாட்டுக்கும் பிரயோசனமில்லை  வீட்டுக்கும் பிரயோசனமில்லை  .... போய் ஒரு தேத்தண்ணி போடு"  என , தான் வேலைக்கு போற  ஆயத்தத்தில  கவனமானான் .

"ஓ ......   இனி சொல்லுவியள் தானே   என்ர  நாரி போனதே  உங்களால தான் "  என்றாள் சகுந்தலா .                                                          

"எல்லாம் முடிஞ்சு இப்ப என்னில வந்திட்டியே  ?  நான் என்ன டென்மார்க் அரசாங்கமே  உன்ர கதையை  நம்பிறத்துக்கு ,  நீ அரசாங்கத்துக்கு நடிச்சு நடிச்சு  உண்மையில  சுகையீன மான  ஆளைப் போலவே  வந்திட்டாய்"

"காத்தால  எழும்பினால் என்ன பிரச்சனை எடுக்கலாம் எண்டு  நினைச்சுக்கொண்டு தான் எழும்பிறனி   போல"  என்று  சொல்லியபடி  தன் ஒற்றைக் காலை  மற்றக் காலின் மேல் வைச்சு  'சொக்சை'  காலுக்குள்  மாட்டிகொண்டிருந்தான் சிவசாமி.   

"எனக்கு வாச்ச  புருசனும் சரியில்லை  வந்த சொந்தமும்  சரியில்லை"  என்று சொல்லியபடி  சுடச் சுட  ரீயை  .ரீப்போவின்  மேலே வைச்சுவிட்டு,  பாத்துருமுக்குள்  நுழைந்தாள் சகுந்தலா.    

தன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த யூலி  “விடியக் காத்தால   படுக்க வழியில்லாமல் கிடக்குது.   ஏன் இரண்டு பேரும்  கலவாக் குருவி போல  கத்திக்கொண்டு இருக்கிறியள்  ? வெளில எங்கயாவது வீடு பார்த்துக்கொண்டு  போறன் என்றாலும் விடுகிறியள் இல்லை  என்று,  சொல்லியவாறு"   மீண்டும்  கதவை அடிச்சு சாத்திவிட்டு  அறைக்குள்  போய் படுத்துவிட்டாள் .

“ஜக்கேற்றை”   எடுத்து   மாட்டிக்கொண்டு   கார் சாவியை  எடுத்துக் கொண்டு சிவசாமி  வெளிக்கிட ,   "இஞ்சரப்ப !  உங்களைதான் " என்று சகுந்தலா குரல் கொடுக்க ..

என்னப்பா  வேலைக்கு வெளிக்கிட  பிறத்தல  கூப்பிடுகிறாய்  ? என்று  கோபத்தோடு  கார் திறப்பையும் மேசை மேல எறிஞ்சு போட்டு,  சொபவில போய் அமர்ந்தார்  சிவசாமி  

"உதில நாலு நிமிசத்தில   கார்  ஓடி போற  வேலைக்கு  பெரிய பந்தா  காட்டிறியள். "

சிவசாமி முழுவியளம்  பார்ப்பதில  முதல் நம்பர்.   யாரும் இப்படி பிறத்தால   கூப்பிட்டா ஒரு  ஐந்து நிமிஷம்  போய் ஓரிடத்தில் இருந்து விட்டுத் தான்  அடுத்த வேலை பார்ப்பார். அதனாலோ என்னவோ  வேலை தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னமே உசாராகி விடுவார் .  

 
 ஓரிரு நிமிஷம் கழிச்சு,  "ஏனிப்ப  கூப்பிட்டனி"  என  சிவசாமி  கேட்க ,  

  “அம்மாவை இஞ்ச கூப்பிடப் போகிறன்"  என்றாள்   சகுந்தலா !

“இந்த வயசு போன நேரத்தில  அவவை இஞ்ச  கூப்பிட்டு கஸ்ரப்படுத்தப் போகிறியோ  ? அதுகள் வடிவா பார்க்குதுகள் தானே  ..உன்னையே  இஞ்ச  பார்க்க  இரண்டு பேர் வேணும்  இதுக்குள்ள  அவவும் வந்தால்" ஒன்றுமே புரியாமல் விழி பிதுங்கி நின்றார் சிவசாமி .  

ஏனென்றால்  சகுந்தலாவின் சுய ரூபம்  சிவசாமிக்கு  தெரியும்.  ஒன்றை முடிவெடுத்தால்   தான் நினைச்சாலும் மாற்றமாட்டாத சுபாவம். தான் பிடிச்ச  முயலுக்கு  மூன்று கால் என்பது  தான் அவள் வாதம் .

"என்ன கதைக்கிறியள் நீங்கள் ?  உங்களுக்கு தெரியாது அவையளின்ர குணம்.  மாசா மாசம்  அம்மாவிற்காக ஒரு இலட்சம்  அனுப்பியும் போதாதாம்  அவைக்கு ,  இப்ப விடியக்காத்தால அவள்  வாசுகி  டெலிபோன்  அடிச்சிட்டாள்.  அவவுக்கு எழும்பெலாதம் , நடக்கேலாதாம் , படுக்கையோடுதான்  எல்லாமாம்.  இவவால தான்  அவ வேலைக்கு போக இயலாமல் கிடக்காம் ... காசுக்காக  இல்லாது பொல்லாது எல்லாம் சொல்லிக் கொண்டு நிக்கிறாள் "  என்றாள் சகுந்தலா.  

 “அவையள  வார மாசம் வீட்டை  விட்டு எழும்பச்   சொல்லிபோட்டன்" என சகுந்தலா முடிக்க முன்னம்,  "அப்ப  மாமியை  யார் பார்க்கிறது?" என்றான் சிவசாமி.

"அம்மாவை நான் இஞ்ச பொன்சரில கூப்பிடப் போறான்" . என்று  சகுந்தால  முடிக்க முன்னம் கூப்பிட்டிட்டு  என்றான் சிவசாமி .

"இஞ்ச  அகதியாக பதிஞ்சு விட்டால்  அம்மாவுக்கு அம்மா !  காசுக்கு காசு ! "என்ற  சகுந்தலா ."அதுதான்  இப்ப ஊருக்கு  போக ரிக்கர்  போடச் சொன்னனான்.   என்றவுடன் , “ என்ன பதில் சொல்வது  என்று தெரியாமல்  சுவர் கடிகாரத்தையே  பார்த்துக் கொண்டு நின்ற சிவசாமி அதன் பெரிய முள்  இருபது நிமிடம்  சுத்தியதே  தெரியாமல்  மலைச்சுப் போய்  நின்றவர் “

அவசரமாய் எழுந்து எதுவுமே பேசாமல் மீண்டும்  மேசை மேலே கிடந்த தன் கார்ச் சாவியை  எடுத்துக் கொண்டு  கதவை திறக்க  ...    

"அப்பா ! " என்று  கத்திக்கொண்டு ஓடி வந்த யூலி   "இந்தாங்கோ ....   டெலிபோன் " என்றாள்.   மீண்டும் முழுவியளம்  பிழைச்சு போச்சுதே  என்று தனக்குள்ளே  நினைசுக் கொண்டு திரும்பிய சிவசாமிக்கு  அவளின் படபடப்பு  ஏதோ விபரிதம் நடந்து விட்டது என்பதை உணர்த்தியது .  

சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்  அவள்  "அம்மம் மா .........  " என்றபடி  “டெலிபோனை  சிவசாமியிடம்  கொடுத்தாள் .

டெலிபோன்  யாழ்ப்பாணத்தில் இருந்து தான் வந்திருந்தது  

அவன் டெலிபோனை வாங்கிக் கதைப்பதற்குள்  சகுந்தலா விடம்  யூலி  சொல்லியிருக்க வேணும்  சகுந்தலா  கத்திக்கொண்டு மயங்கி விழுந்தாள் .

"ஐயோ  ... என்ர அம்மாவை கொண்டிட்டான்கள்  ... "

மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு  போன் எடுத்த  சிவசாமி  "உங்களுக்கு தெரியும் தானே  தற்போதைய சூழ்நிலை  நாங்கள் வர முடியாத நிலை.. நீங்கள் தான்  பிள்ளைகள் போல நின்று எல்லாக் காரியமும் செய்து முடிக்கவேணும்  
எவ்வளவு செலவு  முடிஞ்சாலும்  ....   " என்பதற்கு முன் .. "பணமொன்றும்  நீங்கள்   இஞ்ச அனுப்பத் தேவையில்லை  ஐயா !  நாங்கள் கஸ்ரபட்டாலும் மானத்தோடதான்  வாழ விரும்பிறம்.  பெற்றால் தான்  அவ எங்க தாயில்ல ..   நாங்களும் தாய் மாதிரித்தான் அவவை வைச்சு பார்த்தனாங்கள்.  அது போதும் எங்களுக்கு ,  ஒரு பிள்ளையின் ஸ்தானத்தில் நின்று அவவின்ர கடமையெல்லாம் முடிச்சு, உங்களுக்கு வேணுமென்றால்  சாம்பலை அனுப்பி வைக்கிறம்.  காசியில  கொண்டேக் கரைச்சு  புண்ணியத்தை தேடிக்கொள்ளுங்கோ !  அவவின்ர எல்லாக் கடமையும் முடிச்சு  உங்கட விருப்பபடி அடுத்த மாசம்  நாங்க இந்த வீட்டை  விட்டு வெளியேறுகிறம்" என  சொல்லியபடி  இவரின்  பதிலுக்கு காத்திராமல்  டெலிபோனை  துண்டித்து  கொண்டான்  வாசுகியின் கணவன் மணி .