சிறுகதைஅமுதா போட்டிருந்த செருப்பை ரோட்டில் தேய்த்து கொண்டே அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்த முயன்றாள். கைகளில் பிடித்து நிறுத்தும் பிரேக் இருந்தும் அமுதாவிற்கு கால்களால் நிறுத்துவதே பரிச்சியமான ஒன்று.

வண்டியை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வேகமாக நடந்தாள் “நானே அவசரத்துல வேகமாக போய்கிட்டு இருக்கேன் ! நீயாவது ஞாபகப்படுத்த மாட்டியா? எத்தனை தடவை உனக்கு சொல்றது.” என்று தன் அம்மாவிடம் பேசிக் கொண்டே அவள் மறந்து வைத்துவிட்டுப் போன மதிய உணவை எடுத்து பையில் வைத்துக் கொண்டால். “சரி, சரி போயிட்டு வரேன்” என்று அவசரத்தில் அவள் அம்மாவின் முகத்தை கூட பார்க்காமல் சுவரைப் பார்த்து கூறிவிட்டு வெளியில் நடந்தாள்.

அமுதா ஒரு பிரபலமான கால் சென்டரில் வேலை செய்கிறாள். அந்த வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அது ஒரு பழைய காலத்து ஓட்டு வீடு சென்னையில் இதுபோன்ற ஒரு வீட்டை பார்ப்பது மிகவும் அரிது. அமுதா கடைக்குட்டி என்பதால் அவள் அம்மா அவள் எது செய்தாலும் மௌனமாய் மட்டுமே இருப்பாள் அவ்வப்போது மகிழ்ந்தும் கொள்வாள். சுந்தரி ஏதும் பேசாமல் மகளை வழி அனுப்பி வைத்தாள்.

சுந்தரி மீண்டும் வீட்டிற்குள் வந்து அவளுக்கான அடுப்படி பணிகளை மேற்கொண்டாள் இது தினமும் சுந்தரியின் வீட்டில் நடக்கும் படலம் தான்.

வீட்டின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தனது கணவரின் புகைப்படத்தை துடைத்து அதற்கு பூவும், பொட்டும் வைத்து விடுவாள். அந்த புகைப்படத்தை துடைக்கும் போதெல்லாம் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைப்பாள் ஆனால் அவைகளை தொண்டைக் குழியில் போட்டு புதைத்து விடுவாள்.

அதனருகில் சுந்தரியின் மூத்த மகள் ரம்யாவின் திருமண புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும் அதில் ரம்யாவும் அவள் கணவரும் சிரித்துக் கொண்டே இருப்பது போல அந்த புகைப்படம் ஒரு கேண்டிட் ஷாட்டாக எடுக்கப்பட்டது, அதுவும் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது.

சுந்தரி தன் வீட்டின் பின்புறம் உள்ள கொல்லைபுரத்தில் தோட்ட பயிர்களுக்கு களை எடுப்பது வழக்கமான ஒரு வேலை அன்றும், அப்படித்தான் களை எடுத்துக் கொண்டிருந்தாள். திடீரென வீட்டின் முன்பக்க கதவுகளை யாரோ ஓங்கி அடிப்பது போன்ற சத்தம் இவள் பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாள் நீண்ட நேரமாக யாரோ கதவுகளை டமார், டமார் என தட்டிக் கொண்டு இருந்தார்கள் சிறிது நேரம் கழித்தே சுந்தரி அதை கவனித்தாள். யார் என்பதை அறிந்திட முன் வாசல் நோக்கி நகர்ந்தாள் வாசலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கதவுகளைத் திறந்து பார்த்தபோது வெளியில்

தனியார் வங்கி ஊழியர் முருகன் நின்றுகொண்டிருந்தார் “எங்கம்மா ஆறு மாசமா இஎம்ஐ கட்டாம இருக்கீங்க?”

“நாங்களும் எத்தனை வாட்டி தான் வீட்டுக்கு வந்து வந்து போகிறது எப்ப வந்தாலும்? எந்த பதிலும் சொல்ல மாட்டிக்கிறீங்க எங்களுக்கு வேற வேல பொழப்பே இல்லையா? தேனமும் உங்க வீட்டு வாசலில் வந்து நின்னு காத்து கிடக்கனுமா? ஒழுங்கா இஎம்ஐ கட்டுற வேலைய பாருங்க சொல்லிட்டேன். அடுத்த வாட்டி அதெல்லாம் நல்லா இருக்காது.” என கடுகாய் பொரித்து விட்டு வண்டியை நோக்கி வேகமாய் கிளம்பினார்.

சுந்தரி மௌனம் காத்து நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் வாடிய மல்லிப் பூவாய் வதங்கிப் போய் இருந்தாது.

முருகன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு தான் கூட்டி வந்த சக ஊழியர் சிவாவையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒரு டீக்கடையை நோக்கி வண்டி கிளம்பினான். முருகன் ஆறு மாதங்களுக்கு முன்பு சர்வீஸ் செய்த வண்டி ஊரடங்கு பின்னால் இன்று தான் வெளியில் எடுத்துள்ளான். அது சாலையெங்கும் கரு நிற புகைகளை வீசச் செய்தது.

சிவா முருகனிடம் “என்ன மச்சான், அந்தம்மா பார்த்தாலே பாவமா இருக்கு.  புருசன் வேற இல்ல.  அவுங்க வீட்டுக்காரர் வாங்கின கடனுக்கு தான் லோன் இன்சுரன்ஸ் கிளைம் பண்ணிட்டோமே ! இன்னும் என்னடா அந்த அம்மாகிட்ட வசூல் பண்ணுறோம்?.”

“டேய் அவங்க வீட்டுக்காரர் ஆர்மில இருக்கும் போது கடன் வாங்கினார். அவங்க முத்த பொண்ணு கல்யாணத்துக்கு. அவரு ஆர்மீலையே செத்து போயிட்டாரு. அதுல வந்த செட்டில்மெண்ட் பெனிஃபிட், லோன் இன்ஸ்சுரன்ஸ் வச்சு பாதிதான் அடக்க முடிஞ்சது. அவங்க வீட்டுக்காரரோட பென்ஷன் வைச்சு தான் இவங்க இஎம்ஐ கட்டிக்கிட்டு இருந்தாங்க. இப்போ ஆறு மாசம இந்த ஊரடங்குல இருந்து அக்கவுண்ட்ல அவங்களோட வீட்டுக்காரர் பென்ஷன் ஒன்னுகூட வரவில்லை என்ன ஆச்சுன்னு தெரியல.  அதனால அவங்களுடைய இஎம்ஐ எல்லாம் அப்படியே நிக்குது.”

“ஏன் இந்த மாதிரி கத்துறனா? நான் என்னடா செய்யுறது. நீங்க வசூலுக்குப் போயி ஒரு பேமெண்ட் கூட வரலைன்னு மேனேஜர் காட்டுபுச்சி நம்மளத்தான் கத்துறான். எனக்கும் பாவமா தான் இருக்கு அவங்கள பாக்கும் போது, எங்க அம்மா மூஞ்சி மாதிரியே இருக்கு என்ன செய்ய?.” வண்டியை டீ கடையை அடைந்ததும் ஓரம் நிறுத்தி விட்டு இருவரும் கடைக்குள் சென்றார்கள். கல்லாவில் நின்றுகொண்டு வருபவர்களை கவனித்துக் கொண்டிருந்தார் கடை முதலாளி சேட்டா. கடை முழுவதும் பிரஷ்ஜுஸ் இன் வாசமும், சூடாக ஒரு பக்கம் போடப்பட்டு கொண்டிருக்கும் தேநீர் வாசமும், லேசாக சிகரெட் புகையின் நாற்றமும் நிறைந்திருந்தது.

“சேட்டா ரெண்டு பிளாக் டீ, ஓரு பிரட் ஆம்லெட்.” முருகன் ஆர்டர் செய்தான்.

“பாஈ பிளக்சாயி லென்?” என்று கடையில் வேலை செய்யும் சோட்டு அழைக்க. கண்ணாடி குடுவையில் பிரவுன் நிறத்தில் தேநீரும் அதன்மீது புதினா இரட்டை இலையும் மிதந்தது. தேனீர் அருந்திக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இன்னைக்கு வேற தேதி ஏழு ஆகிப்போச்சு சேட்டு வேற என்ன தேடி வீட்டுக்கு போய் இருப்பான்.

ஹவுஸ் ஓனர் வேற வீட்டிலேயே இருக்காரு, கடன்காரனெல்லாம் ஏம்பா வீட்டுக்கு வராங்கனு அந்த ஆளு வேற கூட கொஞ்சம் கத்துவான்”

“ஏன்டா என்ன ஆச்சு”

“பைக்குக்கு இன்னும் பைனான்ஸ் இருக்குதில்லடா”

“ஆமா, அது இன்னும் முடியலையா?”

“முடிஞ்சதுடா, வைஃப் ஹாஸ்பிடல்ல டெலிவரிக்காக சேர்த்தோம்ல்ல, அதுல கொஞ்சம் அதிகமா காசு செலவு ஆயிடுச்சு அதான் பைக்க ரிபைனான்ஸ் போட்டேன்.” என்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் அருந்திக் கொண்டிருந்த டீ காலியானது.. பிரெட் ஆம்லெட் வந்து சேர்ந்தது ஆளுக்கு பாதியாக சாப்பிட்டார்கள். டீ கண்ணாடி குடுவையையும், சிகப்பு நிற பிளாஸ்டிக் தட்டையும் மேஜை மீது வைத்து விட்டு கிளம்பினார்கள்.

“சேட்டா எவ்ளோ ஆச்சு”

“அறுபது ரூபாய்..குடுக்கு..”

“சேட்டா அக்கவுண்டுல வச்சுக்கோங்க! சம்பளம் வந்தவுடனே தாரேன்..”

“சேரி போய்கோடா..” என சேட்டாவின் மனசு கல்லாவின் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த மில்க் சாக்லேட்டின் வாசனையுடன் விசாலமாய் வீசியது.

கடையில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு,வேறொரு வீட்டிற்கு கடன் வசூல் செய்ய கிளம்பினார்கள் முருகன் ஹெல்மெட்டை தலையில் மாட்டிக் கொண்டே சிவாவிடம்.

“சரி நீ ஹோம் லோன் வாங்கினியே என்ன ஆச்சு, வீட்டை கட்டினியா?”

“இல்லடா லோன் வாங்கி முணு வருஷமாச்சு வீட்டுவேலை பாதிதான் முடிஞ்சது!”

“இன்னும் 17 வருஷம் இஎம்ஐ கட்டனும் டா! வாங்குன காசுக்கு பாதிக்கு மேல கட்டிட்டேன் அப்போ கூட கொஞ்சம் கூட குறைய மாட்டேங்குது! என்ன செய்யுறாதுன்னே தெரியல? ஏன்டா லோன் எடுத்தோம்னு இருக்கு.” சிவாவின் பதில் சலிப்புடனும், கண்களில் ஏக்கம் நிறைந்த பயத்துடன் இருந்தது.

பல இடங்களுக்கு லோன் வசூல் செய்ய சென்றுவிட்டு. மாலை 5 மணி ஆனதும் இருவரும் அன்று மதிய உணவு கூட அருந்தவில்லை மீண்டும் வேறு ஒரு டீ கடைக்கு சென்றார்கள். அந்த டீக்கடையில் நுழைவுவாயிலில் அன்றைய மாலை செய்தி தலைப்பு இதழ்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதில் முக்கிய செய்தியாக அஜய் மல்லையாவும், நரவ் மோடி வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி என போடப்பட்டிருந்தது. இருவருக்கும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதின் காரணமாக தள்ளுபடி என்று அதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.

சிவா அந்தக் கடையில் டீ சொல்லிவிட்டு பெஞ்சில் வந்து அமரும் பொழுது முருகனுக்கு ஒரு அலைபேசி வந்தாது.

“ஹலோ, சொல்லுங்க.” என்று முருகன் போனில் பேச ஆரம்பிக்கும் பொழுது காவி நிறத்தில் போடப்பட்ட டீ மேஜையை வந்தடைந்தது.

“வணக்கம் சார், நான் ஆப்பு பேங்க்ல இருந்து அமுதா பேசுறேன். நீங்க பாதி நாங்க பாதி அப்படிங்கிற ஒரு லோன் ஆஃபர் வந்திருக்கு. இதைப் பத்தின முழு விவரம் தெரிஞ்சுக்க உங்களுடைய அருகில் இருக்கக்கூடிய ஆப்பு கிளையை அணுகவும்.”

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.