கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -இந்த நாட்டில் இரவில் வானில் நட்சத்திரங்களைப் பார்க்க முடியாது.தவிர பகலில் முகில்கள் வரையும் பல்வேறான அழகிய தோற்றங்களைப் பார்க்க முடியும்.இருள் பிரியாத காலைவேளையில் மணி,இடையிடையே வானில் முகில்களின் அழகையும் பார்த்தவாறு அவசரமில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தான்.சில நாட்களாக முன்னால் நடந்து போற அண்ணர்,பார்த்தாலேயே தெரியும்,ஈழத்தமிழர் என்று.அணியிற ஆடையிலே துப்பரவாக அக்கறை இல்லை.தோய்த்து தூய்மையாய் அணிந்தாலே போதும் என்ற மாதிரி சிறு கசங்கலுடன் சேர்ட்,காற்சட்டைக்குள் விடாது பறக்க விச்ராந்தியாக கை விரலில் ஒரு சிகரட் புகைய ...யாராய் இருக்கும்?மணிக்கு அறியும் ஆவல் கிளரவேச் செய்தது.அவன் இன்னும் சிறிய தூரம் நடக்க வேண்டும்.அவர் ஓடுற சிற்றூர்ந்து கராஜ்ஜுக்குள் நுழைந்தார்.ஓடு பாதையிலும்,பக்கத்திலிருந்த சிறு காணித்துண்டிலும் இறுக்கமாக சில சிற்றூர்ந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.இவனுடைய கராஜ்ஜுக்கு பெரிய‌ வளவு இருந்தது.தவிர இருபதுக்கு மேலே ...நிற்பது வழக்கம்.

இவர் சிற்றூர்ந்து ஓட்டுனர் ,தெரிகிறது.இவன் ஓரே இடத்திலேயே நீண்ட காலமாக எடுத்து ஓடுறதாலே மற்றவற்றுக்குள் போய் பார்த்திருக்கவில்லை.அவன் வரும் பேருந்திலே சிலவேளை வருவார். முதலிலும் வந்திறங்கி இருப்பார்.விறு விறு நடை.அடிக்கடி ஒரு சிகரட் புகைகிறது.சங்கிலியாக‌ புகைப் பிடிப்பவரா?நடக்கவிட்டு பின்னால் துரத்தி வருகிறான். ஒரு நாளும் எட்டி நடைப் போட்டு அவருடன் கதைத்ததில்லை.நடைப் பயிற்சி நடை பெறுகிறது.அவனுக்கு உடல்ப் பயிற்சி தேவை என வேளைக்கே இறங்கி நடக்கிறான்.தவற விட்ட போது அவர் விடுப்பில் நின்றிருக்கலாம்.நடந்த பிறகு ஓடுறது புத்துணர்ச்சியாக இருக்கிறது.நம்ப மாட்டீர்கள்.இப்படி இரண்டு,மூன்று மாசங்கள் ஓடி விட்டன.வாழ்க்கையில் தான் எத்தனைப்பாடங்கள்?உயர் வகுப்பைப் போல பாடங்களைக் குறைத்து விட வேண்டும் தான்.தலையில்.... கொதிக்கிற பிரச்சனைகளை இலேசிலே இறக்கி வைக்க முடியிறதில்லை.நிதானமும் வேண்டும் என்று நடக்கிறான்.வேலை முடிந்த பிறகும் இரவில் தூங்கி ஒரு விழிப்பு வருகிற போது பத்மாசனமும் போட்டு கையில் சிறிய றபர் உருண்டைகளை வைத்து 'சாந்தி,சாந்தி"என உருவும் போடுறான் .சிந்தனைகள் ஒழுங்காய் வர போராட வேண்டியிருக்கிறது.

பிறகு , மனமும் சுனாமி போலில்லாமல் அராலி அமைதிக்கடல் போல தணிந்து புதுக் குளியல் போடுகிறது .அந்த நேரம் சிங்களவர் முகம் கூட அழகாய்த் தெரிகிறது. பிறகு செய்திகளை வாசிக்க பழையபடி அழுக்கு ஒட்டி விடுகிறது. ஒவ்வொரு நாளுமே ...கச்சாமி போட வேண்டிய வேலை. நிஜத்தைப் பார்க்கிற போது, நடக்க முடியாததை எல்லாம் மனம் பிடிவாதமாக நடந்து விடுவதாகக் காட்டுற மாயமும் கூட ஒரு  மாயையா ?பாரதியார் நாடு விடுதலையடைய முதலே விடுதலை அடைந்து விட்டது எனப் பாடினார்.அதே போல நாமும் தமிழீழத்தில் வாழ்கிறோம்.

மணி ஓடுற கராஜ்ஜிலே இருந்து 1302 நம்பர் சிற்றூர்ந்தை எடுத்து ஓடுற பகிர்  அலம்புற நண்பனாக இருந்தாலும் கூட ஓர் புத்திசாலி.திட்டமிட்டுக் காரியமாற்றும் திறமை உடையவன்.எல்லாத்திற்கும் மேலே அவனும் இவனும் ஒரே இயக்கத் தோழர்கள்.தாமரையிலே இயங்கியவர்கள்.ஊரிலே இவனைத் தெரியாது.உறும்பிராயோ,உடுவிலோ..பிரிவு.சிலவேளை பிந்தளத்தில் பயிற்சியிலும் கூட இருந்திருக்கலாம்.இவன் சங்கானைப் பிரிவு.தளத்தில் ஒரே நேரத்தில் கூட இருந்திருக்கிறார் போல இருக்கிறது.ஆனால் தெரிந்ததில்லை.ஓராயிரம் தோழர்கள், அசாதாரண முறையில் சாவைத் தழுவுற செத்த வீடுகளில் சேர்ந்திருக்கலாம்.தெரியவா போகிறது?

இந்த கராஜ்ஜிலே ஏற்பட்ட நட்பு,இயக்கம் எனத் தெரிந்த போது ...கூடுதலாகிக் கிடந்தது. தாமரையினர் வாய் வீச்சிலேயே தமிழீழம் காண்பவராச்சே. இந்தா போராட்டம் முடிந்த பிறகும் ஈழம் கிடைக்கும் என்று எழுதிக் கொண்டிருக்கிறானே,மற்ற‌வர்களிற்கு தெரியாத நம்பிக்கைகள் எல்லாம் இவர்களிற்கு மட்டும் அதிசயமாக தெரிகின்றதே.

பகிரீன் கதை துண்டு துண்டாய் இவனுக்குத் தெரியும்.சிறு வயதிலே தாய்யை இழந்தவன்.பாட்டியம்மாவின் அரவணைப்பிலே ,அப்பாவின் பார்வையிலே இவனும் இவனுடைய மூன்று அண்ணைமாரும் வளர்ந்தவர்கள்.வீட்டிலே எல்லாருமே பெடியள்கள்.அப்பா,சமைப்பார்.பார்த்தீர்களா சூழல் ஆட்களை மாற்றி விடுகிறது. பகிர்,குட்டிப்பையன்.மூத்தவர்,பல்கலைக்கழகப் பட்டதாரி.நல்ல வேலையும் கிடைத்து கொழும்பிலே வேலை பார்த்து வந்தார்.மற்ற இருவர் ...நெற்காணிகளையும் ,ஒரு கடையும் பார்த்ததாகப் படுகிறது. அப்பர்,இளைப்பாரியவர்.பள்ளி ஆசிரியரா?தெரியவில்லை.

இளைய அண்ணர் கொழும்பிற்கு போய் விட்டு திரும்புற போது ரயில் வைத்து ஜே.வி.பி இன் ஆள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்.முதல் கிளர்ச்சியின் போதே தமிழ் இளைஞர்கள் சிலர் இவ்வாறு அடைக்கப்பட்டார்கள்.அவனுடைய கிராமத்திலும் ...தோழர் எனப்படுறவரை சிறிது தெரியும்.இனக்கலவரத்திற்குப் பிறகு நடந்த இரண்டாவது கிளர்ச்சியின் போதும் ..பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது என கேள்விப்பட்டிருக்கவில்லை.இலங்கை தானே முரண்படுற நாடாச்சுதே!. பயங்கரவாதச்சட்டத்தை துஸ்பிரயோகம் பண்ணி சில சிங்கள நகரக்காவலர்கள்,எந்த சம்பந்தமும் இல்லாத அண்ணரைப் பிடித்து அடைத்து விட்டார்கள்.சிங்களச் சதிகள் மேலிடத்திலிருந்தே வருகின்றன .நூலக எரிப்பும்..அப்படி நடந்த ஒன்று.அதை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர்,ஜனாதிபதிகளில் ஒருத்தராய் இருந்த பிரேமதாசா தான். சிங்கள எம்ஜிஆர். இவரைப்  போல‌ கலவர நிகழ்வுகளை .... கொண்டு வந்தர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த சரத்முத்துவெட்டுகம என்பர். தற்போதைய போர்ச்சதிகளை சிறிது வெளிப்படுத்தியவர் லசந்தா...என்ற‌ ஊடகவியலாளர்.இவர்களைப் போன்றவர்களால் தான் எங்களாலும் சிங்களவர்களை எதிரியாக பார்க்க முடியவதில்லை;வெறுக்க முடிவதில்லை .

அந்த‌ இனமும் இன்னமும் உண்மையான கதாநாயகர்களை  இனம்  காணவில்லை

பாட்டியம்மாவிற்கும் பாரிசவாதம் வந்து கையும் காலும் சிறிது இழுத்து விட்டது.வீட்டிலே பெண் இல்லை.பகிர் தான் ஒரு நல்ல நேர்ஸ்ஸாக இருந்து கவனித்து இருக்கிறான்.பகிர் விபரிக்கிற போது ,கடவுள் யாரை,யாரை எல்லாம் தயார் படுத்தி ,துன்பப்படுறவர்களிற்கு உதவி செய்ய அனுப்புகிறார்...என்பது மணியை வியப்பிலேயே ஆழ்த்துகிறது.

.கலவரத்திற்குப் பிறகு வேலையிற்குப் போய்ச் சேர்ந்த பெரியண்ணைக்கும் பிரச்சனை ஏற்பட்டதடா"என்றான்.அரசு நரிகள் இரகசியமாக வேலைப் பார்ப்பவர்கள்.எந்த பயங்கரவாதச் செய்கையிலும் ஈடுபடாத பல தமிழ் இளைஞர்களைப் பிடித்து இன்று காணாமல் ஆக்கி இருக்கிறார்களே. புலனாய்வுப் பிரிவின் வேலை புலனாய்வதில்லை,புதுப் புது வழிகளில் இளைஞர்களைப் பிடித்து பயங்கரவாதச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதே பிரதானமாக  இருந்திருக்கிறது. கர்மவினை அவர்களை சும்மா விடாது,பாரன் "என்றான்.அண்ணைரின்  வசிப்பறையைக்கும் சென்று எதை தேடிக் கிளறினார்கள்.கடவுளுக்குத் தான் வெளிச்சம். கலவரத்தின் போது வைத்திருந்த தேர்த்தல் வாக்குப்பட்டியலை அதற்குப் பிறகும் பாவிக்கிறார்கள் என்றே படுகிறது. அந்த நேரம் அண்ணர் அறையில் இருக்கவில்லை. அறிந்த அண்ணரின் சிங்கள நண்பர் ஒருவர் ,அண்ணரை உடனே கூட்டிக் கொண்டு தன்னுடைய ஊருக்குப் போய் விட்டார்.அண்ணரையும் விடுப்பு கடிதம் எழுதி அவர் மூலமாக சேர்த்த பிறகு , ஏன் பொலிஸ் வந்தது பற்றி விசாரித்திருக்கிறார்கள்.அறிந்தது நல்லாய் இருக்கவில்லை. பிறகு, அண்ணர்,மன்னார் வந்து,யாழ் வந்து கள‌வாய் வள்ளம் ஏறி இந்தியா சென்று விட்டார். இப்படி இயல்பு நிலையை ஒரேயடியாய் குழம்பியடித்து விடுகிறார்கள் "என்றான்.

பாட்டியம்மாவும் இறந்து போனார்.இவனும் இந்தியாவிற்கு அள்ளுப்பட்ட பெடியள்களுடன் இந்தியா வந்தடைந்தான்.பயிற்சி முடிந்த பிறகு ஊர் திரும்புற இவனை "சிறையில் இருக்கும் அண்ணரைப் போய் பார்"என பெரியண்ணர் காசும் கையில் கொடுத்து அனுப்பினார்.இவன் அண்ணைரை  போய்ச் சந்தித்தான்.இந்தியனாமி வந்த பிறகே அண்ணர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.மிக நீண்ட காலம்.வயசும் ஏறி விட்டது. பிறகு அவர் கல்யாணம் கட்டுறதில் நாட்டம் கொள்ளவில்லை.நிலக்காணிகளை விற்று ,பெரியண்ணர் முதலில் பயண முகவர் மூலமாக வெளிநாடு வந்தார்.பிறகு அவர் மூலமாக மற்ற அண்ணர்மாரும் சென்றார்கள்.நான்,ஊரிலே புத்தகக்கடை ஒன்றை திறந்தேன்"என்றான்.அண்ணரின் கடை அனுபவமே அவனுக்கு கை  கொடுத்திருக்கிறது. "புத்தகங்களை யார் வாங்குவார்கள்?" கேட்டான். " பள்ளிக்கூடப் புத்தகங்கள் ,உபகரணங்கள் இருக்கின்றனவே "என்றான். புத்தகக்கடை என்றால் கதைப்புத்தகம் தான் என்று மணியின் தலையிலே கிடக்கிறது." அவை  கணிசமானவை.உன்னைப் போல ஆர்வி,சோமு,எல்லார்வி ட புத்தகம் என தேடுற பிறவிகளுக்கு " என்று சிரித்தான். " முதலில், அதை கொப்பிலே கேட்டு குறித்து வைத்திருப்பேன்.அதை எப்பாடு பட்டாவது எடுத்திடுவேன்.கேட்டவர் வாங்கித் தான் தீர வேண்டும்.திணித்து விற்று விடுவேன் " சிரித்தான்.

புத்தக வாசனையே தெரியாத ஒருத்தன் புத்தகக்கடையும் போட்டிருக்கிறான்.கடையும் இலாபத்தில் ஓடுகிறது .

தாமரை இயக்கம், கழுகின் போக்கில் நின்று நிற்குமா?என்றிருந்த போதிலும் ஆடிக் கொண்டு ...இருந்தது. பவளம் அணி,குபேரன் அணி,தீ அணி...(ஏன்  இந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்?,பொருத்தமாக இருக்கவில்லை)என முற்சிதறல் அடைந்து விடுமோ?என்ற பயமுறுத்தல் வேறு. மற்றையவற்றில் இரண்டு இரண்டாக உடைந்து சீறுநீரகம் பழுதடைந்தவை போலக் கிடந்தன.அதனாலேயே கழுகின் வேட்டை இலகுவாகவும் நிகழ்ந்தேறின.தாமரையில் பாய்ய அவர்களுடைய சாத்திரி நாள் கண்டு பிடிக்கவில்லை போல இருக்கிறது. தடை என்றில்லாமலும் வேட்டையை நடத்தலாம் தானே என கொலைகள் விழுந்து கொண்டிருந்தன. பகிர் பயிற்சி பெற்றிருந்தாலும் சாதாரணத்தோழன்.ஊர் முழுக்க தோழர்களாக இருக்க அவனையா போய்த் தேடப் போறார்கள் ? .இருந்த போதிலும், பின்தளப் பயிற்சி பெற்ற வரிசை ? நெடுகவும் நிற்க முடியாது என்றே பட்டுக்கொண்டிருந்தது.

அவசரத்திற்கு வீட்டால் உடனேயே செயல்பட்டு விட முடிகிறதா,என்ன ?.

அவரவர் தலைவிதியை வேறு எழுகிறார்கள். அது தான் நம்ம ஆள், எந்த யோசனையும் இல்லாமல் புத்தகக்கடையைப் போய்த் திறந்தான்.

இது ஒரு மண்டை கழன்ற பிறவி தான் என ஊரே விமர்சித்தது.வியாபாரம் பரவாய்யில்லை. இதுவும் அரசியல். மற்ற அண்ணர் விளையாட்டுக் காய்ப் போல ஐரோப்பாவில்அங்க,இங்க விழுந்து உருண்டு போய்க் கொண்டிருந்தார். ஸ்பொன்ஸரில்  செல்கிற வயதை எல்லாருமே கடந்தவர்கள். செலவு குறைய மாட்டாது. பெரியண்ணரின் சிமார்டால் நிகழ்கிறது. எல்லா வீடுகளிலுமே மூத்த அண்ணர் தான் சிமார்ட்டாக இருக்கிறார்கள். தம்பிமார் பொறுபற்றவர்களாக இருக்கிறார்கள் .ஊரிலே , கடையை வைத்து பேய்க் காட்டலாம் என்று அவன் போட்ட திட்டம் சரி வரவில்லை.கழுகு அவனை பதுங்குகுழி வெட்டுறது,சாமான்களை எடுத்து பறிப்பது என வைத்திருந்த பல்லியக்கத் தொழிலாளர் அணியில் பிடித்துச் சேர்த்து விட்டிருந்தது.கைதிகள்.கையும் காலையும் கட்டி வைத்திருந்தார்களா?கேட்க மறந்து விட்டான்.அப்படி ஊன்றிக் கவனிப்பதும் சிரமமானது. பிடிபட்டவர்களைக் கேட்க வேண்டிய கேள்வியாக இருக்கிறது. ஜயகரன் போன்றவர்கள் எழுதுகிற தொடர்களை ஒருக்காய் முழுதாய் படிக்க வேண்டும்.

காவலும் பலம்.அப்படி அவன் ஒரு வருசத்திற்கு மேலே... இருந்திருக்கிறான்.கழுகில் அவனிடம் வேலை வாங்கியவர்களில் சிலர் அவனுடன் கூடப் படித்தவர்கள்.உள்ளுக்குள் அனுதாபம் ,பச்சாபம் ..என ஈரம் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது.பதற்றமான சூழ்நிலையில் முகாம் தாக்குதலுக்குள்ளான போது, ஒருத்தன் ,கையில் இருந்த சிறு பணத்தையும் அவன் கையில் திணித்து "டேய் ஓடிப் போய் விடடா"என துரத்தி விட்டான்.தன் பெடியள்களுடன் ஓடி இருக்கிறான்.அப்படியே கொழும்புக்கு வந்து சேர்ந்து ஊர்க்காரர்களுடன் தங்க, உறவுகள் பணத்தை மெல்ல அனுப்ப ,அண்ணர்,"பயப்படாதே,தைரியமாக இரு "எனக் கூறி பலவழிகளில் உதவி புரிய, ஏற்கனவே இந்தியாவில் இருந்தவன்,பயிற்சி முடிந்த பிறகும் அண்ணரோடு தங்கி இருந்தவன், இன்னம் கொஞ்சநாள் நின்றிருந்தால் அங்கேயும் ஒரு கடை திறந்திருப்பான். தோழர்களின் தைரியம். இப்ப சொல்வது இலகுவாக இருக்கிறது. கஸ்டம் எனக்குத் தான் தெரியுமடா"என்றான்.

பயணமுகவர் மூலமாக இவன் பயணமும் (தி)தகைய‌...வந்து சேர்ந்திருக்கிறான்.அவனைப்பற்றி அவனே எழுதினால் தான் அதிலே உயிர் இருக்கும்.அவன் எழுத நினைத்தான் என்றால் எழுதி விடுவான்.கல்வியிலே,பள்ளியிலே ஒரு ஊக்கம்,ஒரு பாடமாக ..இருந்திருந்தால்,இப்ப, சிங்கள அரசின் சுயரூபம் வெளிப்பட்டு கதறிக் கொண்டிருக்கும்.அடக்குமுறை புரிகிற‌ கெட்டவர்கள் வாழ்ந்ததாக உலகில் சரித்திரமே இல்லை !.சிங்கள அரசாங்கம் என்றுமே மக்களுக்குரியதாக‌ இருந்ததில்லை.பொறுப்பற்ற அலுப்புகளால் நடத்தப்படுற ஒன்று தான். இவர்களால், கொடுக்கப்படுற நிலங்கள் உண்மையில் சொந்தமானதில்லை.வழங்கப்படும் சலுகைகள் ,வாய்ப்புகள் உண்மையானதில்லை.ஒரு எல்லாமே ஒருநாளில் கழன்று போய் விடும்.சுய சம்பாதியத்தாலும்,சுயத்தாலும் பெறப்படுபவையே நிரந்தரமாக நின்று நிலைப்பவை.மற்றவை ஊழல் இரத்தம் ஏற்றப்பட்டவை போன்றவையே.சோரம் போனவை.

பகிர் இங்கே வந்த போது,அண்ணருக்கு கடமை முடிந்தது என சீறுநீரக வருத்தம் ஏற்பட்டு விட்டது.அவரின் வளர்ந்த மகளின் சந்தோச நிகழ்வுகளைக் காண முதலே கடவுளும் டிக்கற்றைக் கிழித்து விட்டார்.‌கண்ணை மூடி விட்டார். மற்ற அண்ணர், வியாபார மூளை உடையவரல்லவா.கட்டுத்தறி போன்ற நம்மவனையே புத்தகக் கடையை வைத்திருக்கிறது என்றால்...,இங்கே ஒரு உணவகத்தின் உரிமையாளராக இருந்தார். அவரே பெரியண்ணையின் செத்தவீடு முழுதையும் நடத்தியவர் .அவர் உணவகத்தில் வேலையில் சேராமல் பகிர் கொலிடே இன் கொட்டேலில் காலை பதித்தான்.  ஓரளவு செவ் போல உயர்ந்தான்.சலிப்புத் தட்ட சிற்றூர்ந்துக்கு வந்திருக்கிறான்.வந்ததாலேயே மணியும் அவனை சந்திக்கிறான்.

பகிருக்கும் அந்த நேரம் மூன்று பிள்ளைகள்.நீரழிவு நோய் சிறிது இருக்கிறது.மாத்திரைகளை வாங்கும் செலவைக் குறைக்க ...திரில்லியம் என்று..ஏதோ ஒரு காப்புறுதிச்சேவா அமைப்பும் இயங்கி வருகிறது.அதையும் அறிந்து உறுப்பினராகி இருக்கிறான்.கோடைக்கால விடுமுறைகளில் 'பிள்ளைகள், கட்டாயமாக இந்த நாட்டின் பகுதிகளிற்கு பயணப்பட வேண்டும்;வெளியுலக அனுபவம் சிறிதாக வேண்டும்'என நினைத்தான்.சிற்றூர்ந்துப் பிழைப்பில் கையில் ஒரேயடியாய் பணம் சேராது.பரவாய்யில்லையாய் இருந்தாலும் இது தான் நிலைமை.வெறும் தண்ணீரீலேயே மோட்டார் சைக்கிள் ஓடுபவனாச்சே.சிந்தித்தான்.வயசாகிறது.இந்த வயதில் பிள்ளைகள் இடங்களைப் பார்க்கா விட்டால் ...பார்க்கவே மாட்டார்கள்.சிற்சில குடும்பங்களில் அடைத்து வளர்த்ததால்...அனுபவமில்லாததால் அங்கொன்று இங்கொன்றாக தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன.

மூத்தவன் பொடியன்.அடுத்து சிறுமி,கடைசி பொடியன்.மூன்று பேரையும் கூட்டி வைத்து " எங்க போகலாம்? " என முக்கிய கூட்டம் வைத்தான்.ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றைச் சொன்னது.சிற்றூர்ந்துக்காரன் இல்லையா?,பெரிய வரைபடத்தை வைத்து "இங்க போவோமா?"கேட்டான்.அத்திலாண்டிக் கடற்பகுதி.அதுகளுக்கு விளங்கவில்லை.ஆனால் கூச்சல் போட்டன."என்னடப்பா ,கூட்டிப் போக பணமிருக்கிறதா?" என்ற‌ மனைவி " ஏமாற்றக் கூடாது " என எச்சரித்தாள்."எல்லாத்தையும் வெல்லுவோம்"என்றான்.கிரடிட் கார்ட் இருந்தது.அதை அவன் பயன்படுத்துவதே இல்லை.அண்ணரிடம் போய்க் கடன் வாங்க விரும்பவில்லை.ஏற்கனவே நிறையச் செய்து விட்டார்கள்.திரும்பி சிறிது சிறிதாய் கொடுக்க முயன்ற போதிலும் வாங்க மறத்து விட்டவர்கள்."டேய் ,நீ குடும்பம்.சிறிது பெருத்தும் கிடக்கிறது.அவர்களைப் பார்" என ஒரு சாட்டு சொல்லி தவிர்த்தார்கள்.

சிற்றூர்ந்து உரிமையாளர் பாகிஸ்தானியர்.ஹஜ்ஜுக்கு போய் வாரவர்.அவரிம் கூறி "கடனாய் தர முடியுமா?"எனக் கேட்டான்.நல்ல மனம்."எவ்வளவு வேண்டும் ?" கேட்டார்."ஒரு ஐய்யாயிரம்"தயங்கிக் கேட்டான்.கூடவே "ஓடுற போது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் க‌ழிப்பேன்"என்றான்."நல்ல நாள் பார்க்கிறவயள் நீங்கள்.வெள்ளியை விட வேற நாள்"என்று சிரித்துக் கொண்டு சொன்னார்.அவன் கூற அந்த நாளே கையிலே கொடுத்து விட்டார்.பணத்தை நாமும் பெருந்தொகை,சிறுந்தொகை என்றில்லாமல் மற்றவர்களுக்கு கொடுத்துப் பழக வேண்டும்.மணிக்கு சீட்டுப் பிடித்து போனிலே சண்டை போடுகிறவர்கள்...  ஞாபகம் வந்ததன.அவன் ஒரு கிழமைக்கு மேலே விடுப்பு எடுத்தான்.வான் ஒன்றை வாடைக்கு எடுத்தான்.எல்லாச் செலவுகளையும் ஒரு கொப்பியில் எழுதுற பழக்கமும் அவனுக்கு இருக்கிறது.கொப்பிலே எழுதுற‌ வேலையை மூத்த பொடியனிடம் கொடுத்தான். எல்லோரும் நாய்யுடன்... பயணத்தைத் தொடங்கினார்கள்.கவனமாகவும் வாகனத்தைச் செலுத்துறவன். அந்த நம்பிக்கை முதலில் பெரும் பயணங்களில் அவசியம்.மற்றவை கடவுள் விட்ட வழி.ஏற்கனவே, கல்யாணம் கட்ட முதல் மொன்றியல் போன அனுபவம் இருக்கிறது.'டே இன்னில்' தங்கிக் கொண்டு ஒரு நாள் முழுதும் வாகனத்திலும் இரவில் நடந்தும் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிக் காட்டினான்.பணத்தில் அரைவாசியை மனைவியிடத்தும் மீதியை தன்னிடத்திலும் வைத்திருந்தான்.பிள்ளைகளின்  கைகளிலும் விரும்பியதை வாங்கச் சிறிது பணத்தையும் கொடுத்திருந்தான்.வாடகை ,சாப்பிடுற ,இதரச் செலவுகளை எல்லாம் தானே கொடுத்துக் கொண்டிருந்தான்.மூன்று பிள்ளைகளும் அறையிலே தங்குற‌ போது செலவுகளை கேட்டும்  எழுதுவார்கள். தனிய வருகிற போது சமாளிக்கிறது தெரிய வேண்டும் என்பதற்காக இந்த முறை.

அப்படி கியூபெக் போய் ,நியூபுரவின்ஸ் போனான்.கையில் வைத்திருந்த ஜிபிஎஸில் பிள்ளைகளுடன்  தங்கும்  இடங்களைத் தெரிந்து..தங்கி,ஒய்வெடுத்து,அங்கேயே பார்க்க வேண்டியவையைத் தெரிந்து பிள்ளைகளுடன் சேர்ந்து " ஹாய், கூய் " என  கூச்சல் போட்டான் . குடும்பத்தைப் பார்த்தும் வெளிநாட்டவர்களுக்கு ....சிங்களவரசைப் போலில்லாமல் நல்லக் குணங்கள் பொங்கி வருகின்றன‌.அவனுடைய விளங்கா ஆங்கிலம் ஒரு தடையாய் இருக்கவில்லை.அவனால் ஓரளவிற்கு விளாங்கப்படுத்த முடியும்.பிள்ளைகள் தெளிவாகவே பேசுவார்கள். பிறகெனன்ன.வானிலே கருவியின் உதவியுடன் சொல்லப்பட்ட .எல்லா இடங்களிற்கும் போய்ப் பார்த்தார்கள். " பயணத்திற்கு பிறகு, ஒரு ஒய்வு. ஒரு பியர்.சாப்பாடு .தூக்கம். ஒரு நாள் முழுதும் திரியல். இந்தியாவில் முகாமிருந்து பயிற்சி எடுத்த மாதிரி ஒரு ஒழுங்கை வைத்திருந்தேன்...பிள்ளைகளும் பழகி விட்டார்கள்."என்று சிரித்தான்.

" நோவோகோர்சியோவில் ஓரிடம் மட்டுமே பார்த்தேன். பிறகு நியூபவுண்லாண்ட்க்கும் வானையும் ஏற்றிக் கொண்டு சென்றேன்.அங்கே ஒரு மீனவரைப் பிடித்து ஒரு நாள் முழுதும் மீன் பிடிக்கிறதை அவர்களோடயே தங்கி இருந்து பார்க்கிறதுக்கு வாடகை பேசி படகில் ஏறினோம். வாடகைப் பணத்தையும் சிறிது குறைத்தே வாங்கி இருந்தார்கள். சகோதரர், குடும்பமாகவே படகை ஓட்டுகிறார்கள் அப்படி நடைமுறை இருக்கிறதை 'டே இன்ன் 'காரர்களே தெரிவித்திருந்தார்கள். நாய் படகில் பயந்து போய் ஒடுங்கி நின்றது. எம்ஜிஆர் படங்களிலே வார வில்லன்கள் போல மல்லன்களாக அவர்கள் நாங்கள் குள்ளர் போல இருந்தோம். குடும்ப சகிதம் என்ற போது அவர்கள் பார்வையில் அன்பைக் கண்டோம்.பொடியனுக்கும் பெட்டைக்கும் ஒவ்வொன்றாக‌ எப்படி மீன் பிடிக்கிறோம்? என வலு அக்கறையாக‌ இவர்களைக் கொண்டும் இயக்கியும் விளங்கப்படுத்தினார்கள். நாங்க கூட இப்படி செய்யிறதில்லை .ஆச்சரியமாக இருந்தது .நாய்க்கு சாப்பாடு.எங்களுக்கும் அவர்கள் நாளாந்தம் எதைச் சாப்பிடுகிறார்களோ ருசி பார்க்கவும் சிறிது தந்தார்கள்.நாம் சன்விச் என எமக்கு வேண்டியதை கூலரில் கொண்டு போய்யே இருந்தோம். நல்ல அனுபவம். நாங்கள் கடலில் மிதந்த அனுபவம் பிள்ளைகளுக்கு கிடைக்காமலே போய் விடுமோ?எனப் பயந்திருந்தேன்.கிடைத்திருக்கிறது.எனக்கே குளிர் நீரில் புது அனுபவமாய் இருந்தது"அவன் விபரித்துக் கொண்டிருந்தான்.படகை விட்டு இறங்குற போது அவன் மீனவரிடம் டிப்ஸாக ஐம்பது டொலரையும் கொடுத்தான்.அது அவருக்கு சந்தோசத்தைக் கொடுத்தது."ஹாய்,குட் மான்"என முதுகிலே ஒரு தட்டு தட்டி வெளிப்படுத்தினார்.குத்துச்சண்டை வீரர் முகமதலி தட்டியது போல பலமான தட்டு , ரொம்ப‌ வலித்தடா " என்று சிரித்தான். பகிர், படுபுத்திசாலி என்ற மணியின் எண்ணம் நிருபணமாகியது.வாகன ஓட்டி அவன் மட்டும் தான்.வெற்றிகரமாக பயணத்தை முடித்து வர கிழமைக்கு மேலே இரண்டு நாள் கூடுதலாகி விட்டிருந்தது.உண்மையிலே அது ஒரு அசாயகசூரப் பயணம் தான்.

பழையபடியே ஓட்டம் தொடங்கியது.மொத்தச் செலவு ஐயாயிரம் ஆகி இருந்தது.ஆனால,அவன் அந்தப்பணத்தை  நாலைந்து மாசத்திலேயே முழுதாய் திருப்பிக் கொடுத்து விட்டிருந்தான்.சின்னண்ணரும் அவனுக்கு சிறிது கொடுத்து உதவி இருக்க வேண்டும்.பிள்ளைகளைப் பார்க்க வாறவர் சிறிசுகள் போய் வந்த பயணத்தை குதூகலமாக விபரிக்கவே நடந்திருக்கிறது.அவனைப் பார்த்தும் கேட்டார்.இப்படி போறதென்றால் கேட்க வேண்டாமா?சரி ,இனி, போறதென்றால் கேள் "என்று விட்டுச் சென்றார்.

அவனிடம் "இப்படி ஒருத்தரைச் சந்திக்கிறேன்.யார் எனத் தெரியவில்லை?"என்று சொன்னான்."டேய் ,போனால் போகட்டும் சிவாஜி மாதிரி நடப்பார் இல்லையா?"எனக் கேட்டான். ஓம் என தலையை ஆட்டினான்."உனக்குத் தெரியும் தானே,காளிகோவிலே உண்ணாவிரதம் இருந்தானே?, குமணன், கழுகைச் சேர்ந்தவன்.அவன்ர சொந்த அண்ணாவடா அவர்"என்றான்.ஆச்சரியமாய் இருந்தது .இவனுக்கு அவரை முதலேத் தெரியும்.அடுத்த நாள் அந்த விறு விறு காரரை எட்டிப் பிடித்து "நீங்கள் குமணனின் அண்ணரா?"என நேரிலேயேக் காட்டான்.'ஓம்'எனத் தலையை ஆட்டினார். அவருக்கு அவனை சிற்றூர்ந்து ஓட்டி என கண்டு அறிந்தே இருக்கிறார்,பிறகு எட்டி நடந்து அவருடனே ...கதைத்து வருகிறான்.நண்பரும், அண்ணருமாகி விட்டார்.ஒருமுறை பயணிகளுக்காகக் காத்திருந்த போது பகிர்,அவன் அந்த அண்ணர் மூவரும் கூட சந்தித்துக் கதைத்துக் கொண்டார்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.