சிறுகதை:ஒரு வாரத்திற்கு முன்பு அப்பாவின் அலைபேசியிலிருந்து வந்த ஒற்றை வரி ஓராயிரம் முறை கமலக்கண்ணனின் காதுகளில் ஒலித்து மீண்டிருக்கும்.

வேக வேகமாக ஒட்டமும் நடையுமாக பதட்டத்துடன் விமான நிலையத்திற்குள் நுழைந்தான். சிறிது தாமதித்திருந்தாலும் விமானம் அவனைப் புறம் தள்ளிவிட்டுப் பறந்திருக்கும் இறந்துபோன அறிவுநம்பியின் ஆன்மா பயணிக்கும் உயரம் நோக்கி. நல்லவேளையாக வேகத்துடன் செயல்பட்டதால் விமானத்தில் இடம்பிடித்தான். எது எப்படியோ அப்பாவின் சடலத்தையாவது பார்க்க முடியுமா?. அறிவுநம்பியின் முதுகைப்போல் கேள்விக்குறிதான் மிச்சம். இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டான். பெருமூச்சின் சத்தம் அருகில் இருப்பவரைத் திரும்பிப்பார்க்க வைத்தது. சீட்பெல்ட்டை அணிந்து கொண்டு கண்மூடினான். எண்ணங்கள் விழித்துக்கொண்டன.

* கால்க்கிலோ தக்காளியும் கொஞ்சம் மல்லித்தழையும் கொடு குமாரு."

"இதோ தர்றேன் சார்"

" ........................"

"கேரட்டு, கத்திரிக்கா, தேங்கா எல்லாம் இப்பத்தான் வந்து எறங்கியிருக்கு. தரட்டுங்களா சார்."

கேரட்டைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டே "ம்ம்... சரி ரெண்டு கேரட்டும் ஒரு தேங்காயும் கொடு" என்றார் அறிவுநம்பி.

"அது என்னங்க சார் ரெண்டு கேரட்டு. ஒன்னு கால்க்கிலோ கேளுங்க இல்ல அரக்கிலோ கேளுங்க. இல்லேன்னா அப்பா, அம்மா, புள்ளன்னு தலைக்கு ஒன்னு மூனா வாங்குங்க சார். ஒன்னத்துக்கும் இல்லாம ரெண்டு கேட்கறீங்க."

வாய்ஜாலத்தை விற்று வருமானத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தான் காய்க்கடைக்காரன் குமார்.

 

"உன்னோட இதுதான் பிரச்சனை குமாரு. வேண்டாம்னாலும் விடமாட்டே கேக்கறதையும் தரமாட்டே.....சரி சரி கால்க்கிலோவே கொடு. ஆனா கொஞ்சொ .சீக்கிரம் கொடு." அலுத்துக்கொண்டவரின் கைப்பிடியிலிருந்து பிஞ்சு விரல்கள் மெல்ல மெல்ல தளர்ந்தன.

நல்ல மாநிறம். சுருள் முடி. குண்டுக் கண்ணம். கோலி உருண்டைக் கண்கள். துருதுரு நடை...... சாட்சாத் அந்த மாயக்கண்ணனே நேரில் வந்தது போன்ற தோற்றம்.

"ஏய் கண்ணா எங்க போறே... நில்லூ… நில்லூ.."

“…………………..”

"ஏங்க சார் நீங்க…. கொழந்த நாலு எட்டு கூட எடுத்துவைக்கல. அதுக்குள்ள பதர்றீங்க....."

ஓடிவந்து கண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டார் அறிவுநம்பி.

"அப்பா….. அப்பா..."

" என்ன ஆயான்"

ஒவ்வொன்றாக அடுக்கி வைத்திருக்கும் தின்பண்டங்களையும் சாக்லேட்களையும் பார்த்து விட்டு "எனக்கு அது வேணும்" என்றான்.

" அது சாப்டா வயித்துல பூச்சி வந்திடும். அப்பா உனக்கு பழம் வாங்கிக்தாறேன் சரியா…….”

“இல்ல எனக்கு அதுதான் வேணும்”

,ஏ ஆயான்ல சொன்னா கேக்கணும்".

திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த ஒத்தைக்கு ஒரு பிள்ளை என்பதால் தகப்பன் என்றாலும் தாத்தாவைப்போல் கெஞ்சினார்.

"ஊகும் அத வாங்கித் தந்தாதான் வீட்டுக்கு வருவேன்... இல்லாட்டினா இங்கயேதான் நிப்பேன்" பெயர் தெரியாத ஒன்றைக்கேட்டு அடம்பிடித்தான்.

அன்பு மகனின் ஆசைக்கு இனங்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவித்த அப்பாவின் முகம் கண்களை உருத்த விழித்துக்கொண்டான் கண்ணன்.

இந்த ஒரு தருணம் மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் மகனின் பிடிவாதமும் தந்தையின் தவிப்பும் ஒன்றுக்கொன்று போராட கடைசியில் வெற்றி பெறுவது கண்ணனின் பிடிவாதமாகத்தான் இருக்கும். அன்றும் அப்படித்தான் நடந்தது.

"ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்து, பொத்திப் பொத்தி வளத்து, நல்லா படிக்கவச்சு ஆளாக்கினா இவளத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு வந்து நின்னே. சரி போகட்டும்னு விட்டுட்டோம். சின்னஞ்சிறுசுங்க தனிக்குடித்தனம் போறதும் தப்பில்லை. .தாராளமா போய்க்கோங்க. ஆனா அதுக்காக ஆஸ்திரேலியா போவேன், அமெரிக்கா போவேன்னா என்ன அர்த்தம்......"

ஆவேசத்திலும் கோபத்திலும் வார்த்தைகள் வந்து வந்து விழுந்தன. இத்தனை வருடங்களில் அன்றுதான் கமலக்கண்ணன் அப்பாவின் கோபத்தைப் பார்க்கிறான்.

" அப்பா கோபப்படாதீங்கப்பா. நான் படிச்ச படிப்புக்கு இங்க வேலையும் இல்ல வசதியும் இல்ல. புரிஞ்சிக்கோங்கப்பா..."

" கண்ணா நீ என்ன சொன்னாலும் நான் இதுக்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டே. நான் கண்ண மூடினப்பறம் எங்க வேன்னா போய்க்கோ. எப்படி வேன்னா வாழ்ந்துக்கோ………. மீறி என்னோட பேச்சக்கேக்காம போனேன்னா மூஞ்சீலயே முழிக்காத. அப்பறோம் என்னுடைய பொனத்தக்கூட உன்னால பார்க்க முடியாது….. இதுக்கு சம்மதம்னா நீ நெனச்சபடி நடந்துக்கோ..." வழக்கமாக மகன் எடுத்துக்கொள்ளும் ஆயுதத்தைத் தற்போது அப்பா எடுத்துக்கொண்டார் .

எங்கே மகன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்ற பயத்திலும் பாசத்திலும் பல பல வார்த்தைகளையும் பிரவேசித்தார். அப்பாவின் வார்த்தைகள் மிரட்டினாலும் மிரளவில்லைக் கமலக்கண்ணன். முதல் முறையாக அப்பாவின் பிடிவாதம் தோற்றுப்போனது.

இரண்டு மாதங்கள் ஓடியிருக்கும். சர்வமும் சமாதானமானது. மகனுடன் ஆன்ராய்டு போனில் அடிக்கடிப் பேசிக்கொள்வார். இருவரும் நால்வருமாகப் பேச்சுத் தொடர்ந்தது. ஐந்தாவதாக பேரன் வந்த போதும் அவனுடனும் பேச்சுத்தொடர்ந்ததே தவிர போக்குவரத்து இல்லை. அப்பாவின் வயோதிகமும் பிள்ளையின் அயல்நாட்டு மோகமும் அதற்கான வாய்ப்பைத் தரவில்லை.

புதுமனைவியோடு ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்தவன். 11 ஆண்டுகளுக்குப்பின் தாயகத்திற்கு இப்போது தான் திரும்பப் பயணிக்கிறான். அப்பாவின் சொல் பலித்துப்போனதும் அவனுக்குத் தெரியாது. சொல்லாத ஒரு விபரீதமும் அவனை வரவேற்கக் காத்திருந்தது.

கண்களை மூடுவதும் திறப்பதுமாக பலவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தவனின் மனதில் அந்த ஒற்றை வரி மீண்டும் தைத்தது. அந்த வரியைக் கேட்டு இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவன் இரண்டொரு நாளில் திரும்பிவிடுவேன் என்று மனைவியிடம் கூறிவிட்டுக் கிளம்பியவன்.

“நான் கண்ண மூடுறதுக்குள்ள உன்ன ஒரு தடவ பார்க்கனும் ஆயான்”

‘ஆயான்’ அந்த வார்த்தையும் வார்த்தை வந்த தொனியும் இன்னும் அவன் மனதை ஆழமாகத் தைத்தது. தன் மகன் இப்போது ஒரு பிள்ளைக்குத் தகப்பன் என்பதையும் மறந்து 4 வயது குழந்தையிடம் கெஞ்சுவது போல் அந்த வார்த்தை…………… கமலக்கண்ணனின் கண்களிலிருந்து தானாக நீர் வழிந்தது. அக்கம் பக்கம் பார்த்துவிட்டுச் சட்டென கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

அப்பாவைக் காணத்துடிக்கும் வேகத்தில் விமானம் மெதுவாகச் செல்வதாக உணர்ந்தான்.

அழகான தங்கக்கைப்பிடி வைத்த கைத்தடி அப்பாவுக்கு. அம்மாவுக்கு வைரத்தில் மூக்குத்தி. தன்னைக் கண்டால் சந்தோசத்தில் அப்பாவின் ஆயுள் பல்லாண்டு நீளும் என்ற பேராசையோடு ஆபத்தை அறியாமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான்.

விமானத்திலிருந்து இறங்கி அவசர அவசரமாக டாக்ஸியை அழைத்து முகவரியைச் சொல்லி உள்ளே ஏறி அமர்ந்தான். ஆன்ட்ராய்டை எடுத்து அப்பாவை அழைத்தான். அப்பாவின் கைபேசி அழைப்பை இழந்து பல மணிநேரம் கடந்திருந்தது.

வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு தொல்காப்பியர் சொன்ன எண்வகை மெய்ப்பாடும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. ஒன்றும் புரியவில்லை. அப்பா… அப்பா….அப்பாஆஆஆ…………. கண்ணனின் அழுகைக்குரல் அப்பாவின் ஆத்மாவைத் தொடச்செல்வது போல் மேலெழுந்தது. மகனைக் கண்ட தேவகி கதறி அழுவதற்காக வாய்திறந்தாள். ஆனால் சத்தம் எழும் முன்பே சாய்ந்து வீழ்ந்தாள். நிலைதடுமாறிப் போனான் கண்ணன்.

ஆன்ட்ராய்டு போனில் மனைவியின் அழைப்பு..

“டார்லிங் எப்படி இருக்கீங்க?”

“ம்… நீ எப்படி இருக்க ….. அபி…”

“நல்லா இருக்கோம். ஆண்டி எப்படி இருக்காங்க…………..”.

“இப்போ பரவால்ல………..”

நானும் அபியும் கிளம்பி வந்திடட்டுமா”

“………………………”

“டார்லிங்………………”

“எல்லா முடிஞ்சி போச்சு……………..அப்பா சொன்னது பலிச்சுப்போச்சு. அவருடைய பிணத்தைக் கூட என்னால பாக்க முடியல. அவருடைய அஸ்தி மட்டும் தான்………………………” அடுத்த வார்த்தையை முந்தியது கண்ணீர்த்துளி.

“வருத்தப்படாதீங்க…. அப்பா உங்களவிட்டு எங்கும் போகல. அபி ரூபத்ல நம்மொடதான் இருக்காரு. அவனைத்தான் என்னால சமாளிக்க முடியல. டாடி டாடி என நைட்டெல்லாம் அனத்தறான். சீக்கிரம் வந்திடுங்க…………………….”

அறிவுநம்பியைச் சுருக்கித் தன் மகனுக்கு அபி எனப் பெயர் வைத்திருந்தான் கமலக்கண்ணன்.

அகேன் இந்தியாவுக்கு எப்போ வருவேன்னு தெரியாது. அதனால அம்மாவயும் கூட்டிட்டு வந்திடலாம்னு இருக்கேன். ஒரு ஒன்வீக் பொருத்துக்க. வந்திடறேன்.

மருத்துவமனையும் வீடுமாக நாட்கள் ஓடின. அம்மாவைத் தேற்றி தன்னோடு அழைத்துச் செல்ல காத்திருந்தான். அவனுடைய எண்ணம்போல் மூன்றாவது நாளே அம்மா குணமானாள். அம்மாவுக்கும் சேர்த்து அவசர அவசரமாக விமானத்திற்கு முன்பதிவு முடிந்தது. வீடு, பொருள் என அனைத்தையும் கைமாற்றியாயிற்று. வாரங்கள் மாதமாகும். மாதங்கள் வருடமாகும் என்பது காலத்திற்கு மட்டுமே தெரிந்த உண்மை. பாவம் கண்ணனுக்கு மட்டும் எப்படித் தெரியும். உயிரைக் கொல்லும் நுண்ணுயிரி உலகையே ஆட்டிப்படைக்கும் என்று யார்தான் அறிந்திருந்தார். .இரவோடு இரவாக ஊரடங்கும் வந்தது. மகனைப் பிரிந்திருக்கும் சோகம் கண்ணனுக்குள் மெல்ல மெல்ல நுழைந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.