கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -“ பணத் தாள்கள், சில‌ மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து எடுப்பது குற்றம் போல,நிலத்திலிருந்தும் எடுக்கிறதும் குற்றம் தானே?”…என்ற சிந்தனை கலைத்துக்
கொண்டே இருக்கிறது.

வீதியில் கிடக்கிற போது ,வெறுமனே கிடக்கிறதே என்று அதனை கடந்தும் போகவும் முடிகிறதா, முடியிறதில்லையே?.”. கனம் கோர்ட்டார் அவர்களே, இலங்கைப் பயங்கரவாதச் சட்டத்தில் எவை,எவையெல்லாம் குற்றங்கள்?அஸ்கிரியப் பீட தேரர்களிடம் கேட்டு, கேட்டுச் தீராத சந்தேகங்களை….எல்லாம் எங்கே தீர்த்துக் கொள்வது.? என்ற அவசரத்தில் ,கழுத்தும் வாங்கி," அட ,கழுத்திலேயும் ஒரு நோ !

இலங்கை அரச அதிபர்கள்,சொந்த மூளை க‌ழற்றி ,இரவலைப் பொறுத்தி ...நீண்ட நாள்களாகி விட்டன.அந்த மூளையோ துருப் பிடித்து,துருப் பிடித்து,இனப்படுகொலை வரைப் படத்தை பிரதி எடுத்து, கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கி ,புத்தரிசத்தைத்
தொலைத்தும் கனகாலமாகி விட்டன.

"எந்தக் காலத்திற்லும் பயங்கரவாதச் சட்டங்களையும் ,அவசரகாலச் சட்டங்களையும் ...அகற்றி விடாதீர்கள். அவை தான் ...அத்திவாரங்களே!" அசரீரிகள் அவர்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன‌. காலடியில் கிடக்கும் அற்பர்களிற்கு
விளங்கிறதோ, இல்லையோ," அந்தக் கொள்கைகளில் கால் வைத்தவர்களிற்கெல்லாம் அது மீற முடியாத‌ கட்டாய விதி !". இலங்கை அதிபர்கள் ,"என்னால்,இவர்களை மீறி எதையுமே செய்ய முடியிறதில்லையே” என்று கதறுகிறார்கள்.

உண்மையான அதிபர்கள் தேரர்கள் தான் என எல்லாருக்குமே புரிகின்றது. ‘ஜனநாயகம்’ என்பது இந்தத் 'தாச்சி'யில் வைத்து சமைக்கிற‌ சிறிலங்காப் புரியாணி என்பதும் ஏற்கனவே புரிந்தது தான். நல்லக் கொள்கைகளைப் போல ,அல்லாதக் கொள்கைகளும் நடை போடுவதற்கும் சில அத்திவாரங்கள் கிடக்கின்றன‌.ஆனால் இங்கே அவைக்கு மட்டும் ஏராளமான பச்சைக் கொடிகள் பறக்கின்றன.

ஒரு காலத்தில் ,ஜேர்மன் சுவர்கள் போல வடக்கு,கிழக்கு மாகாணங்களின் எல்லைகளிளும் எதிர்காலத்தில் எழ இருக்கிற, தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சுவர் போன்ற ஏதோ ஒன்று தெரிகின்றது . ‘ட்ரம்ப்’ போன்ற ஆட்கள் , அத்திவாரத்தை அசைக்க முடியாதளவுக்குப் பலமாகப் . போடுறவர்கள். நிலத்தை பிடிக்கிறவர்கள் மத்தியில் எல்லைகள் போடப்படுவது … என்ற நியாயம்.. ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றது.

“எவருமே அடுத்தவன் நிலத்திற்கு எவருமே ஆசைப்படக் கூடாது" ஆனால் , உலகில் பறித்தெடுத்து விட்டு , அந்த நிலத்தில் அல்லவா சுவரும் எழுப்பப் பட்டுக் கொண்டுமிருக்கின்றது‌ .

சிறிலங்காக்காரர்களுக்கு, இஸ்ரேல்காரர்களிற்கு எல்லாம் குளிர் விட்டுப் போய் விட்டன. பல‌ தலைவர்கள் அல்லவா அவர்களிற்குப் பின்னால் நிற்கின்றார்கள்.

உலகில் “பாலஸ்தீனார்களின் பிரச்சனைகள் மறந்து விட்டன. ஈழத் தமிழினதுக்கும் அதே கதி தான்.”இனி, அனைத்து நிலங்களும், எல்லாமே நமக்குத் தான் “சிங்கள் இனவாதிகளின் உதடுகளில் ஒரு நம்பியாரின் வில்லன் சிரிப்பு . அவர்களுள் உள்ள‌ அசரீரிகள் பயங்கரமானவை.

புத்தர் மாயா விமானத்தில் இலங்கைக்கு இரகசியமாக‌ வந்து,"மண்,பெண்,பொன்...ஆசைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திரு" என்று தொண்டைத் தண்ணீர் வற்ற கத்திப் பார்த்தார் .தேரர்கள் அவரின் வருகையை லாவகமாக ...மறைத்து விட்டு "தம்மம் ,சரணம், கச்சாமி.." என்று திரிந்தார்கள். இப்பவும் சொல்லிக் கொணடு திரிகிறார்கள். நம்மவ‌ர் ஆட்டம் எல்லாமே நம் உயிர், சுட்டுப் போகும் மட்டும் தானே !

ஈழத் தமிழர்களால் இனச்சார்ப்புகளை விலத்திக் கொண்டு ஓடிப் போய் விட முடிகிறதா ,ஒரு பிரச்சனையாய் வந்து தலைக்காட்டுற போது ஓடி போகத் தான் முடியுமா, என்ன?

பிரச்சனைக்கள், காகிதக் கத்திகளாக இருந்து விட்டால்...பிரச்சனை இல்லை.நாமும்,நீயும் ,எல்லாருமே சேர்ந்து தீர்த்து விடலாம். கூரான கத்திகளாக நின்று, அதன் மொழியில் பேசிக் கொண்டிருக்கிற போது, ஆர்மீனிய மக்களின்
வலியையும்,வேதனையையும் காண்கிறோம். குத்திக் கிழிக்கிற அதனால் காயப்பட்டு இரத்தம் சிந்திக் கொண்டு நாமும் பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இன்று, இனப்படுகொலைகளை பேசிக் கொண்டிருக்கிற நாடுகள் அனைத்துமே , அவை நிகழ்வதற்கான ஆயுதங்களை விற்றுப் பிழைத்த‌ நாடுகள் தாமே,அவற்றின் பேச்சில் ஏதோ அரசியலும் கிடப்பதாகவேப் பட்டுக் கொண்டுமிருக்கின்றன‌. எங்கையிருந்து தான் இவர்களிற்கு கொலைத் தொழிலுக்கான உருக்குகள் ஏற்றப்பபடுகின்றனவோ?

இந்தச் சிந்தனைகள் அப்பப்ப ராசாத்தியையும் சொந்த நாட்டுக்கு துரத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த நாட்டில், ஒரு வீம்புக்காக, நிலத்தில் கிடக்கிற பணத் தாளைக் கண்டால் , எடுத்து ஒரு டபிள்,டபிள் கோப்பியும்,ஒரு சிகரட்டையும் வாங்கி பற்ற வைத்தால் என்ன?” என்று அவனுக்குத் தோன்றுவதுண்டு. அப்படி செய்வது தவறு என்பதை உணர்ந்தும் இருக்கிறான். அற வழியை விலத்திப் போனால்,அதன் சக்தி பெரியது என்ப து அவன் கற்று வரும் பாடம். ஒரு சக்தி, ‘என்ன என்றிருப்பவர்களை…. மெல்ல, மெல்ல புரிதலைக் காட்டி, பழி தீர்ப்ப’தையும் அனுபவத்தால் காண்கிறான் . இப்படி ,அறியப்படாத …சக்திகள் பொருட்களையும் சுற்றிக் கொண்டே கிடக்கின்றன என்றது ஆச்சரியமில்லையா? இவற்றை ஆதர்ச சக்திகள் என ஒரு பேச்சிற்கு நாம வைத்துக் கொள்வோம்.

அரசியலுக்கும் அறத்திற்கும் ஒத்து வராதது போல , இயற்கை அழிவுகளும் அதிகரித்துக் கொண்டு போவதற்கு இந்த மாதிரியான ஆதர்ச சக்திகளை நம்பாததால் தான் போலவும் இருக்கின்றது.

வர வர ராசாத்திக்கு தன்னை ஒரு சாமியார் போக்கு வந்து கவிந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இலங்கைக்கு வந்த புத்தர்க்கு இருந்த மாதிரி தனக்கும் சக்திகள் வந்து விடுமோ? தானும் இந்து சமுத்திரத்தில் பறந்து திரிவேனோ? ...ஒரு தீவில், ஹாய்யாய் போய் இறங்கி," அங்குள்ள மனிதர்களையும், மண்ணையும் இரட்சிக்க வந்திருக்கிறேன்"என்று பேசி ஒரு மகான் வழிபாட்டை தொடங்கி விடுவேனோ? வழிபட்டால் தான் என்ன? வழிபடா விட்டால் என்ன.. இதற்காகவே இருக்கவே இருக்கிறதே,சிறிலங்காப் படைகள்.."மாக்கள்காளே இவர்களையும் வழிபட வைத்து விடுங்கள்"என்று அவர்களிற்கு பொற் கட்டளை இட்டு விடுவேனோ?... என்று பயப்படுகிறான். என்ன செய்வது, இராசாத்தி உட்பட‌ இலங்கையிலுள்ள அத்தனை மனிதர்களையும் அங்கொடைக்குமல்லவா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது.

"இந்த சாமியார் உத்தியோகமே வேண்டாமய்யா "தலையை உதறிக் கொண்டான்.

புத்தரையும் கர்மம் துரத்தியதால் தான் கச்சதீவில் இறங்காமல், நெடுந்தீவு போன்ற குடியிருப்புத் தீவுகளில் இறங்காமல் மூன்று முறையும் போய் சிவனொளி(புத்தர் ஒளி) பாதமலையில் போய் ,ஒரு அசுரன் போல, அட அரக்கர் காலத்தில் போய் இருக்கிறார், இம்மாம் பெரிய பாதச் சுவட்டைப் பதித்து, ஒரு பாதச் சுவடு என்றால் ஒரு யோக முனியாக ஒற்றைக் காலில் நடந்து, இரண்டு சுவடுகள் இருந்தால், பரவாயில்லை புத்தருக்கு காலிலே பிரச்சனை இல்லை.

விதி, ஆதர்சச் சக்திச் சுழல்களில் அகப்பட்டு, திரும்பத் திரும்பக் காலைச் சுற்றுற பாம்பாக கிடந்து, சிப்பிலி ஆட்டுகிறதே, கொத்தி விடுகிற அபாயமும் நிறைய‌ இருக்கிறது கண்ணா .

இந்த முறையும் வித்தியாசமாக அவனுக்கு நிகழவில்லை தான் .தண்ணீர்ப் போத்தல்களையும் வாங்கி பின் பெட்டியில் போட்டிருக்கிறான். எடுத்து தாகம் தீர்க்கிறான் தான்.ஆனால், கோப்பிப் பிரியத்தை விடமுடிகிறதா? சூடான சுக்குக் கோப்பி அடித்தால் என்ன‌ ? கோப்பித் தாகம் எடுத்தது. "மதம் ஒரு அபின்"என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். மதம் மட்டுமில்லை கோப்பியும் கூடத் தான் வந்த புதிசில் ,குளிர் நாடானாபடியால் யூஸ்சிலேயும் நாட்டமிருக்கவில்லை.தண்ணீரும் அப்ப‌ விரும்பிக் குடிப்பதில்லை.சதா,கோப்பி,தேனீர் தான்.மெல்ல, மெல்ல வயிற்றில் ,குடலிலே சிறு துளை விழுவது போல ஒரு உணர்வு பிறந்தது. வையித்தியரிடம் காட்ட ,பரிசோதனைகளைச் செய்து விட்டு "ஒரு பிரச்சனையும் இல்லை,ஆரோகியமானச் சாப்பாடுகளைச் சாப்பிடு"என்றார்.அவர் கேட்ட போது கோப்பி,தேனீர் குடிக்கிறது ஒரு பொருட்டாய் படாததால் அவன் சொல்லாமலே விட்டு விட்டான்.அவன் தவறு தான்.

கன காலத்திற்குப்.பிறகே, ஒருமுறை இரத்த தானம் செய்த போது "கோப்பி குடியாதே,யூஸ் குடி"என்று ஒரு ஈழப் பெண் ஆலோசனைக் கூறினாள் .

."ஏன்?"என்று அவன் கேட்டான்.அவள் சொன்ன போதே,' அது குடலில் உள்ள உள்ள நீரை மட்டுமில்லை ,இரத்தத்தில் உள்ள நீரையும் உறிஞ்சிக் கொண்டிருந்தது'என்றது தெரிந்தது.

இரத்த தானத்திற்குப் பிறகு தண்ணீரையும் குடிக்கத் தொடங்க ஒழுங்காகி விட்டான்,

ஆனால், அவன் நண்பன் நடேசனும், அவனைப் போலவே கோப்பி நிறையக் குடித்து வயித்திலே வலி என்று ஒரு வைத்தியரிடம் கொண்டுப் போய்க் காட்ட ,,அவர் வயிற்றிலே சத்திரச் சிகிச்சையையே செய்து பார்த்து விட்டிருக்கிறார்.அவனை அச்சிகிச்சை இப்பவரை பாதித்துக் கொண்டே இருக்கிறது.

வெறும் தண்ணீர்ப் பிரச்சனை.இங்குள்ள ஒரு வைத்தியருக்கும் ஆசியரைப் பற்றி எதுவும் தெரிவதில்லை . கீழை மருத்துவம் பார்த்தும் பழக்கமில்லை.அதனால் நிறைய தவறுகள் விட்டிருக்கிறார்கள். இங்குள்ள காப்புறுதிகள் அவற்றை வெளியில் தெரிய விடாமல் மறைத்தும் விடுகின்றன.

ஶ்ரீலங்காகள் அரசு, தமிழர்கள் சாவதை கணக்கில் எடுக்கின்றனவா, என்ன‌, அதே போல இவர்களும் ஆசியர்களைக் கணக்கில் எடுப்பதில்லை போல இருக்கிறது. காலனிக் காலத்திலிருந்து வார ஒரு பழக்கமாகவும் இருக்கலாம்.

உடல், இயற்கையிலேயே வலிமையானது, ஆரோக்கியமானது.அதை வெட்டிக் கொத்திப் பாழாக்கி விட்டால்..,பிறகு மருத்து,மாத்திரைக்கு அடிமையாவதை விட வேற வழி இல்லை.

இயற்கையும் கூட அப்படித்தான்..அரைகுறைகளால் சதா பாழாக்கி விடப் படுகின்றது.

இப்பவெல்லாம், சிற்றூர்ந்தில், ஊபருக்குப் பிறகு சிறிய கணினித் தட்டில் இரண்டாம், மூன்றாம் ஆளாக நின்றாலும் பயணக் கட்டளை வருவதற்கு நேரம் எடுக்கின்றது. சில பகுதிகளில் முதலாம் ஆளாக நின்றாலும் கூட‌ முற்பது நிமிசம் வரையில் நின்று பார்ப்பான்.வராவிட்டால் அகன்றும் விடுகிறான்.

சில பகுதிகளில், இப்பவும், விதி விலக்காக‌ பழைய வாடிக்கையாளர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலே , சற்று கூட நேரம் நிற்கலாம்.அவன் தற்போது சென்.ஜோர்ஜ் பகுதியில் இரண்டாம் ஆளாக நிற்கிறான்.கோப்பியை வயிற்றுக்கு நல்கா விட்டாலும் கூட‌ உடலினுள் உள்ள நீரினை கட்டாயம் அகற்றியே வேண்டும் ."கோப்பி,கோப்பி "என்று சதா வயிறு அடித்துக் கொண்டிருந்தது. கோப்பியும் ஒரு போதை நீர் தான்.

தலையை வேறு வலித்தது."ஒரு கோப்பி குடித்தால் தான் எல்லாமே சரியாகும் ". சிற்றூர்ந்தை, கிட்டவுள்ள‌ எரிபொருள் நிலையத்திலுள்ள ரிம் கொற்றனுக்கு உடனடியாக‌ விட்டான்.

அந்த நிலையம் எப்பவுமே நெரிசலான. பகுதி தான் நிற்கிறான்,.நிறுத்துவதற்கு இடத்திலில்லாது ஆளுக்காள் கிடைத்த‌ இடத்தில் எல்லாம் நிறுத்தி விட்டிருந்தார்கள் .அவனும் ஒன்றிலே செருகினான்.இப்படியும் போய் ‘ கோப்பி வேண்ட வேணுமா?’ என்ற சலிப்பும் எட்டிப்பார்த்தது.

வீதி வழியே இருக்கிற கோப்பிக் கடைகள் என்றால் நகரக் காவலர் தொல்லைகள் அதிகம். இதய நகரத்தில்,…. வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகள் எல்லாம் செய்திருக்க மாட்டார்கள். "கிராமங்கள் எல்லாம் நகரங்களாக ...மாற வேண்டும்"என்ற குரல்களை அவன் ஈழப் புறங்களில் கேட்டிருக்கிறான்.நகரங்களைப் பற்றிய அறியாமையால் தான் அவை எழுந்திருக்கின்றன என உணர்கிறான். இக்கரைக்கு அக்கரைகள் பச்சைகள் !'சாதி'என்பது கூட ‘சாதிக்கிறது என்ற எளிமையான பொருளையேக்
கொண்டிருக்கிறது. நகரத்திலிருப்பவர்கள் கிராமங்களிற்குச் சென்று ...எல்லா அர்த்தங்களையும் குழப்பி கெடுத்து விட்டிருக்கிறார்கள் என்றே படுகின்றன. மனித யந்திரங்கள் ஆட்டி வைக்கப் போற நகரங்கள், ஏற்கனவே தொடங்கி விட்டன‌ …தாம் சிறந்தனவாம்"இராசாத்திக்கு குடிமையாக கிடந்து சிற்றூர்ந்தை ஓடிக் கொண்டிருப்பதாகவும் சிலசமயம் தோன்றுகிறது.

நிரையில் ஒரு சாதனையாளனாக‌ நின்று கோப்பியையும் வாங்கி விட்டான் நீரையும் கழித்து விட்டு வெளிய வந்த போது குளிர்க் காற்று இதமாக வீசியது. ஒரு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுகிற போது ஏற்படுற மகிழ்ச்சியே ஒரு தனி கலை தான்,போங்கள் ! மேலே பார்த்தவன் நிலத்தையும் கீழே பார்த்தான்.ஒரு பேப்பர்த் துண்டு போல பத்து ரூபாத் தாள் ,நிலத்தோடு... ஒட்டிக் கிடந்தது.எல்லோருக்கும் அவரவர் அவசரம் .யாருமே நிலத்தைப் பார்க்கவில்லை. பார்க்கவும் பொறுமை இருக்கவில்லை. அது கனநேரமாய் இருந்திருக்கிறது. பிறகென்ன எடுத்துக் கொண்டான்.

சிற்றூர்ந்தில், ஏறி செலுத்த, வாகனங்கள் இடித்துக் கொண்டு நகர்வது போல நகர, அவன் கணனித் திரையில் இப்பவும் இரண்டாவது ஆள் தான்.பயணக் கட்டளை வருவதற்குள்ளே, தமிழீழமும் கிடைத்து விடிந்து விடும். அப்பத் தான் ஒரு பெட்டையும், பெடியனும் நிற்க, பெண், பனி உடுப்பில் உள்ள பைகளில் ஏதோ தேடிக் கொண்டிருந்தாள். அவன் உள்ளே ,வெளிய வந்த போது ...வந்ததாய்த் தெரிந்திருக்கவில்லை. இப்பத் தான் வந்திருக்கிறார்கள் .சாத்தியமில்லை. !ஒருவேளை அவளுடையதாக இருக்குமோ? சிற்றூர்ந்தை மெதுவாக்கினான் .பின்னுக்கு வந்தவன் "பூம்,பூம்"என … சத்தம் அடித்தான். வாகனத்தை நிறுத்த முடியாது. வெளியேறியே ஆக வேண்டும்.

பெடியன் நண்பன் தானே, ஒரு மனிதத் தனம் ஒரு கோப்பியை வாங்கித் தர அவனிடமிருந்து வெளிய வராதா? வரத் தானே வேண்டும். என்னவும் நடக்கட்டும்.

“இக்கட்டுகள்” நேரா விட்டால் மனிதரும் இனச்சார்பானவராக வக்கிரமும் தட்டிப் போய் விடுகிறார்கள்.

சிந்திப்பதை நிறுத்தினான் ,"சே ! நானும் எவ்வளவு மோசமானவனாய் இருக்கிறேன்" அது… நிற்காது, நகர்ந்தான்.மனம் ஒரு குரங்கில்லை,அது குறளி.

இனி இதை என்ன செய்வதாம்? பணத்தை கடனாய் எடுத்து பாவித்து விட்டு நாளை ஒரு வீடற்றவருக்கு கொடுத்து விடலாம் .உடனே ஒரு வாக்குறுதி., ஒரு சமாளிப்பு.

நாளைய வாக்குறுதி நாளை மாறியும் விடலாம்.எதையும் இன்றே செய், அதையும் நன்றே செய்! புத்திமதிகளுக்கும் குறைவில்லை.

கை, தாளை இடுப்பிலே இருக்கிற பணப் பையில் தானாகவே வைத்து விட்டிருந்தது.

‘ பயணக் கட்டளை’ வருவதாக… இல்லை !

சிற்றூர்ந்தை அடுத்த பகுதிற்கு, பாத்தஸ்ட் பக்கமாக… நகர்த்தினான்.

புளோருக்கு மேலே, பாத்தஸ்ட் வீதியில் ஏறுகிற போது,எறும்பு ஊர்ற மாதிரி வாகனங்கள் நகர, நகர, இது வேளைக்காகாது என்று ஓரம் கட்டினான்.அவனுக்கு முன்னால் ஓடி வந்த சீனப் பெண் ஒருத்தி நிறுத்தி இருந்த அவன்ர‌ ‌ சிற்றூர்ந்தை விட்டு
பின்னால் வந்த இதே ரக சிற்றூர்ந்தை மறித்து ஏறினாள். கொழுப்பு.

."ஆகா, பணத் தாளில் அந்த சக்தி விளையாட ஆரம்பித்து விட்டது ". இடுப்பிலிருக்கிற பையிலிருந்து ஒரு பத்து ரூபாத் தாளை எடுத்து பேனா வைக்கிற கோப்பிக் கப்பிலே வைத்து விட்டான்.

ஒரு மண்ணும் வேண்டாம்.போற போது ... இதை முதல் வேலையாய் அகற்றியாக‌ வேண்டும். தீர்மானத்திற்குப் பிறகு , எவ்வளவு நிம்மதியாய் மூச்சு வருகிறது. அடுத்தவன் பொருளுக்கு ஆசை படவேக் கூடாது தான்.

கொண்டு வந்திருந்த உதயன் பத்திரிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அப்படியே உள்ளே இழுத்து விடும் முதலே "டங்" என்று திரையில் பயணக் கட்டளை பளிச்சிட்டது. ஒரு விரலால் தொட்டு ஏற்பதாக அறிவித்தான்.

விமான நிலையத்திற்குப் போறது என விபரத்தையும் தந்திருந்தது. பாத்தஸ்ட், லேக்சோரில் இருக்கிற நகர விமான நிலையமாகத் தான் இருக்கும் .பத்து ,பன்னிரண்டு ரூபா வரும்.செலுத்திச் சென்று பயணியை ஏற்றினான்.

"எவ்வளவு நேரத்தில் போவாய்?"என்று பயணி கேட்டார். "நகர விமான நிலைய த்திற்கு தானே?" என்று கேட்டான்

."இல்லை,சர்வதேச..நிலையம்"என்றார்.

ஆகா,இது அறுபது,அறுபத்தைஞ்சு.. ரூபா.வரப் போகிறது.

"மத்தியானம் என்பதால் எப்படி யும் ,அரை மணி நேரத்திற்கு முதலேயே போய் விடலாம்."என்றான்.

"குட் !ஜி.பி.எஸும் அப்படித்தான் சொல்கிறது"என்று செல்பேசியைப் பார்த்து கூறிச் சிரித்தார்.

சிற்றூர்ந்து பறந்தது.அலென் விரைவு வீதியை எடுக்கிறதில் சிறிது நேரம் எடுக்கிறது. வழக்கமான‌ ‌ நேரத்தை விடக் குறைவு தான்.அவன் எதிர்பார்த்த மாதிரி பத்து நிமிசத்திற்குள்ளே அலென் வீதியில் ஏறி இருந்தான்.பிறகு பதினைந்து நிமிசம் போதும்.ஆனால் ,401 விரைவு வீதியிலே சேகரிப்புப் பிரிவிலே விடக் கூடாது,விரைவுப் பிரிவிலே விட வேண்டும்.இவ்வளவு ஓடுறான் ….இது, தெரியாதா ?

ஊபர் ஓட்டி, அந்த தொகைக்கும் அரைவாசியில் ஓடுறான். சிற்றூர்ந்துகாரர்கள் பலர் தான் தற்போது ஊபர் ஓடுகிறார்கள். இவன் ஊபர் ஓட்டியை எப்பவுமே போட்டியாக நினைக்கவில்லை. தவிர பெரிய வருவாய்க் கிடைக்கப் போவதில்லை.

அவர்களிற்கு இப்ப முதலாளிமார் கராஜ்காரர்கள் இல்லை, முதலாளிமார் மாறி இருக்கிறார் இப்ப, முதலாளிமார் நகரசபை. சிற்றூர்ந்துகள் இரவும் ,பகலும் வெவ்வேறு ஓட்டிகளால் ஓடபடுகின்றன எந்த‌.புதிய வாகனத்தை ஆறு வருசமே ஓடலாம்.ஊபருக்கும் அதே விதி தான். ஆனால் ஊபர் ஓட்டி ஒருவர் தான்.வாகனம் நல்ல நிலையில் இருந்தால், ஒழுங்காய் எண்ணெய்யும்,கவனிப்புமாக இருந்தால் ஊபரை...தாரளமாக எவ்வளவு காலமும் ஓடலாம் என்று தான் இருக்க வேண்டும்.சிற்றூர்ந்து ஒரு வியாபாரமாக நடைபெறுகின்றது .ஊபர் அப்படி இல்லை.அது வாகனத்தை வைத்திருப்பவர் கார்பூல் போல பகிர்கிறவர்.

நகரசபைக்கு வாகன‌ங்கள் அதிகம் விற்றால் அதிக வரியும். கிடைக்கின்றது. வான் நோக்கிய கட்டிடங்கள் எழுவதால் ...வரியும் கிடைக்கின்றன'என்பதால் ...கவலைப்படுவதில்லை. எதையுமே வருவாய்க்காக ....ஒரு வக்கிரத்தனத்தால் வியாபாரமாகவே பார்க்கிறது.

பிற்காலம்,,ஊபர் ஓட்டிகளை, சிற்றூர்ந்து ஓட்டிகளை விட கடனாளியாகவே ஆக்கப் போகிறது. அவர்கள் சிற்றூர்ந்து அனுமதியையும் இழக்க விரும்பாது அதற்கும் தேவையில்லாமல்…. கணிசமான பணம் கட்டி வைத்திருக்கவே போகிறார்கள். ஊபருக்கு வாங்கிற வாகனங்களும் கூட‌,ஆறு வருசத்திற்குப் பிறகு நல்ல நிலையில் இருந்தாலும் அதன் பெறுமதி இயல்பான வாகனத்தை விட அரைவிலையில் கூட தேறப் போவதில்லை.வியாபாரங்களும் கூரிய நகங்களை உடையவை .

ஊபர் ஓட்டி ஒருவர் தான் ஒரு வாகனத்தை ஓடலாம் என்ற நிலை ….மாற‌ வேண்டும், ஒருவருக்கு என்பதால் வீதியில் இரண்டு மடங்கு வாகனங்கள், காற்றில் சேர்கிற காபன்கள் இரண்டு மடங்கு . வருவாய்களிற்காக காபன்களை கூட்டுகிற ஜென்மங்கள் இவர்கள்.

ஊபர்,எதிர்கால வாகனத்தை ஓட்டி இல்லாது ஓட வைக்கப் போறதாக ... மாயம் பேசுகின்றது.பனி பெய்யிற காலங்களில் வாகன‌ங்களின் சில்லுகள் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன..என பலவீனம் கொண்டதாகவே விபத்துகள் ஏறிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றன.

பனி இல்லாத நாடுகளில் வேண்டுமானால் ஓரளவு வெற்றியளிக்கலாம்.ஆனால் இங்கே...சாத்தியமே இல்லை.அதிக கவனிப்புடன் தயாரிக்கப்படுற பயணிகளின் விமானங்களே தறிக்கெட்டுப் விழுகின்றன.கனவுகள் நல்லவை தான்.அவை கொஞ்சத்தையே சாத்தியப்படுத்துபவை,முழுமையாகவில்லை.

முந்தி, சிற்றூர்ந்தில் ஓடிய‌ அம்பாசிடர் சிற்றூர்ந்து போல ஒன்று தான் இந்த ஊபரும்!

ஊபருக்குப் பிறகே அம்பாசிடர் சிற்றூர்ந்துக்கு இருவர் ஓடலாம் என்ற அனுமதியே வழங்கியிருக்கிறார்கள்.ஆனால் சிற்றூர்ந்துத் தகட்டை விற்க முடியாதாகவே இருக்கும். அம்பாசிடர் சிற்றூர்ந்து, பழமைவாதக் கட்சித் தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் இருந்த ஸ்டிபன்கார்பரின் கண்டுபிடிப்பு. இப்ப இந்தப் பாடுபடுகிறது.

பணம் பாதாளம் வரைக்கும் பாயும்.

முற்பது நிமிசத்தில் கொண்டு போய் இறக்கி விட்டான்.

விசில் அடிக்கலாம் போல தோன்றியது.

"குட் ரைவிங்"என்று பாராட்டி விட்டு பத்து ரூபா கூடுதலாகவும் சேர்த்து தந்து விட்டு,"பாதுகாப்பாய்….. பார்த்து ஓடு "என்று பைகளை இழுத்துக் கொண்டு போனான்.

கோப்பிக் கப்பில் இருந்த தாளைப் பார்த்துச் சிரித்தான். ஆட்டம் போடுவது வேடிக்கையாகவும் இருக்கிறது.

விமான நிலையத்திற்கு அண்மித்தப் பகுதியில் பயணக் கட்டளைகள் இப்பவெல்லாம் வருவதில்லை.கணனித்திரையில் முதலாம் ஆளாக இருந்தான். வேற யார் நிற்கப் போறார்கள்?

வழியில் இருந்த ரிம் கொற்றன்னில் கோப்பி ஒன்றை வங்கிக் கொண்டு வந்தான். அப்பவும் முதலாவது ஆள் தான்.எங்கே வரப் போகிறது?விட்டக் குறையாய் இருந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தை வாசிப்போம் எனத் திறந்தான்."டங்"என கட்டளை.அதிருஸ்டம் தலைகீழாய் விளையாடுகிறது.

அந்த பயணம் இருபது ரூபாவைத் தந்தது.அன்றைய நாள் திங்கள் கிழமை.

எப்படி ஓடினாலும் நூற்றி ஐம்பதைத் தாண்டாத அன்று தொடர்ந்து ஓடியதில் வெள்ளிக்கிழமையில் வாரது போல இரு நூறைத் தொட்டது. தாண்டியும் இருந்தது.டிப்ஸ் முற்பது.

. வேலை முடித்த பிறகு, தோளில் ஒரு உளைவோ ,உளைச்சல் !

எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு வெளிய வர ,வழக்கமாக எதிர்படுற பெண்,"சிகரட் இருக்கிறதா""என்று கேட்டாள்."இல்லாட்டி லைற்றர் இருக்கிறதா?"என்று கேட்பாள்.ஒரு நாளுமே சில்லரை இருக்கா?எனக் கேட்டதில்லை.அவனுக்கு

அந்த வீடற்றப் பெண்ணில் ஒருவகை அனுதாபம் இருக்கிறது .அரசால் தீர்க்க முடியாத பிரச்சனைகளில் இவர்களும் ஒன்று

இனப்பிரச்சனையைப் போன்றே இதுவும் நீண்டது .

அவன் உட்பட எல்லாருக்கும் மனமும் ....வர வேண்டும்.

ஏற்கனவே கோப்பிக் கப்பிலிருந்து எடுத்து வந்த அந்த பத்து ரூபாத் தாளை எடுத்து .."நான் புகைப்பதில்லை,நீ வேணுமானால் வாங்கிப் பத்து"என அவள் கையில் போட்டான்.மறுக்கவில்லை,வாங்கிக் கொண்டாள்.

.மனம் ஆறுதலாக இருந்தது.

இனி ,இரவு ஓட்டியிடம் ..கொடுத்து விட்டு பேருந்து பிடித்து வீட்டுக்கு ஓட வேண்டும். அடுத்தவர் பிரச்சனையை தீர்க்க உதவுற போதே "மனிதரர்களாகிறார்கள்"என்று யாரோ ஒரு கருத்தை உதிர்த்ததும் ஞாபகம் வருகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.