
காலச் சுழற்சிக்குள் ஊரில் வாழ்ந்து, அனுபவித்து மகிழ்ந்தவையெல்லாம் இப்போது ஞாபக முடிச்சுக்களாகவே மனசுக்குள் பின்னிக் கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாய் அவிழ்த்து விடுதலையாக்குதல் என்பதும் ஒருவித சுகம்தான்! அதிலொன்றுதான் அன்று நாம் எழுதிய கடிதங்கள்.
பிறந்த மண்ணையும், ஊர் கூடி மகிழ்ந்த வாழ்வையும் தொலைத்துவிட்டு, பெற்றோர், உற்றார், உறவினர் என எல்லோரையும் பிரிந்து முன்பின் தெரியாத வெளிநாட்டுக்கு வந்த நம்மினத்தின் முதல் எதிர்பார்ப்பு என்றால் என்ன தெரியுமா? ஊரிலிருந்து ஒரு கடிதம் வராதா, அப்பாவோ, அம்மாவோ, சகோதரங்களோ, சொந்தங்களோ எல்லோரும் என்ன பாடோ? ஒவ்வொருநாளும் கடிதத்திற்காகக் காத்திருந்து, ஏமாந்த நாட்களைவிட, மாதங்களே அதிகம். என்றோ ஒருநாள் வீட்டிலிருந்து கடிதம் வந்துவிட்டால், என் மனசு துள்ளிக்குதித்துக் கொண்டாடும்.
கடிதங்கள் என்றதும், கற்றுவந்த கல்லூரிகள்தான் எல்லோர்க்கும் நினைவு வரும். கடிதம் எழுதுவது என்பதிலும்கூட பயிற்சியெடுத்து, அதிலும் தாராளமாய்ப் பிழைகள் விட்டு, ஆசிரியர்களிடம் அடிவாங்கியவர்களும் உண்டு ."இந்த இடத்தில ஏன் காற்புள்ளி போடேல்ல, இங்கே முற்றுப்புள்ளியை மறந்திட்டாய். ஒன்றை மற்றவர் சொன்னமாதிரி எழுதிவிட்டு, அதற்கு ஏன் மேற்கோள் குறிகள் போடேல்ல, அது என்ன உன்ர வீட்டு ஆடு, மாடே சொன்னது? கடிதத்தில ஆச்சரியமா! லட்சுமி குட்டிகள் போட்டதில ஒரு குட்டி செத்துப்போய்ச்சு என்று கவலையா, அதுவும் வடிவா எழுதிப்போட்டு அந்த வசனத்தை முடிக்கேக்க ஆச்சரியக்குறியை போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும். அதையும் மறந்திட்டியா, இல்லை நான் படிப்பிக்கேக்க நீ கிரகிக்கேல்லயா" என்று அதுக்கும் சேர்த்து ஒரு அடி விழும். கடிதமோ, கதையோ, கட்டுரையோ என்று எல்லாவற்றையும் எப்படி ஒழுங்காக, உறுப்பெழுத்தாக எழுதுவதென்று பயின்று, கற்றுத்தேர்ந்து வந்த எமக்கு இன்று எம்மொழியிலேயே பிழையின்றி எழுதுவதென்பது கல்லில் நாருரிப்பதுபோல!
இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்றால், நித்தம் பேனா பிடித்து நீண்டகாலம் எழுதாமற்போனது முதற்காரணம். மண்ணுக்கும் பாதங்களிற்குமான தொடு உணர்ச்சி அற்றுப்போதல் போல எம் விரல்களிற்கும், அறிவு மண்டலத்திற்குமான உணர்திறன் அற்றுப்போனதும் இன்னொரு மூலம். மொத்தத்தில் செய்தித்தாள்களைக்கூட அன்றாடம் வாசிக்கத்தவறியது, மற்றும் கைத்தொலைபேசியுடன் பயனற்ற செயற்பாடுகளுடன் வாழ்நாட்களைச் செலவழிப்பது போன்றவை. இந்த நிலையில்தான் என்மனம் கடிதம் எனும் ஞாபக முடிச்சை அவிழ்க்க முயன்றது. அப்போது,நான் சேகரித்து வைத்த கடிதங்களில் ஒன்றான அப்பாவின் கடிதத்தை எடுத்து மீண்டும் வாசித்தேன். அப்பா ஒன்று எழுதினாரென்றால், அதிலிருந்தே பலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாம். ஆகவே, அன்று ஊரில் இருந்து வந்த 'ஏரோகிராம்'கடிதத்தை ஆண்டுகள் கடந்து, கையில் எடுத்தேன். பவுத்திரமாக வைத்திருந்த என் பொக்கிஷம் அது. அப்பா, அம்மாவின் சுவாசம் கலந்த வாசம் அது. மாரி காலத்து மழைபோல நிறைந்த கடிதத்தில் நீண்ட சமாச்சாரங்களைப் பகிர்வதற்காக, அப்பா இயன்றளவு எழுத்துக்களைச் சிறிது சிறிதாய் துளிகளாக்கி, ஆரம்பிக்கும்போதே அதற்குள்ளும் உச்சியில் ' உ' எழுதி, கீழே சிவமயம் எழுதி, அன்பிற்கும் பாசத்திற்கும் .... என்று பாசத்தைக் கொட்டி எல்லோருடைய பெயர்களும் எழுதிமுடித்தவுடன் ஒரு வரிவரும். "யாவர்க்கும் எங்கள் நல்லூரான் அருள்புரிவாராக“.
அப்போதே நெஞ்சு மெல்ல கனக்கத்தொடங்கும். அப்பா, அம்மாவுடன் வாழ்ந்த வாழ்வையும் கண்ணுக்கு முன்னால் கூட்டிவந்து நிறுத்தி அந்தக் கடிதம் கதை சொல்லும். கண் இமைகள் வாய்க்கால் வெட்டி கண்ணீர் பாய்ச்சும். அழகான அப்பாவின் கையெழுத்தில் அப்போது அவரின் வயதுக்கேற்ற நடுக்கத்தையும் சேர்த்து சுமந்துவந்த காகிதமது. அம்மா பகிர்ந்த அன்பை,அச்சொட்டாய் மொழிபிழிந்து அப்படியே அப்பா பகிர்ந்திருந்தார். "என்ர ராசா, என்ர குஞ்சு விடிஞ்சாற் பொழுதுபட்டால் எப்போதும் உங்கட நினைப்புத்தான்..." அதுவே எனக்கு, என் அம்மா என் தலையை வருடுவதுபோல் இருக்கும். எத்தனை நினைவுகள்? இன்றும்கூட அம்மாவின் அந்தத்தாலாட்டு எனக்குள் இசைந்து ஓயவில்லை. வெளிர் நீலவண்ணத்தில் 'ஏரோகிராம்'ஐ வாங்கி,இடைவெளிகளே விடாமல் எழுதி முடித்து, உலை வைத்து வடித்த கஞ்சியைத் தொட்டு, கடிதத்தை மடித்து சுத்திவர ஒட்டி அனுப்பிய உயிர்களின் வாசமது.இன்றும் அந்தக்கரைகளில் காய்ந்த சோற்றுப்பருக்கையின் அடையாளங்கள் மறையவில்லை. மாறாக,என் எந்தையும்,தாயும் இன்றில்லை என்றாலும்,அவர்களின் நினைவுகளைச் சுமக்கும் என் மனசின் முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடுதலையாக்குவதே நான் விரும்பும் என் வாழ்வின் அமைதியான ஓடம்.
(“Aerogramme” (ஏரோகிராம்) என்ற பெயர் வந்ததற்கு காரணம் அதன் சொற்பிறப்பிலேயே இருக்கிறது.
(???? Aerogramme:-இந்த சொல் இரண்டு பகுதிகளால் ஆனது:
“Aero” = காற்று / வானம்
“Gramme” = எழுதப்பட்ட செய்தி / கடிதம்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.