இனி எமது நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் கலாமோகனிற்கான வரவேற்பும் அங்கீகாரமும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்று பார்ப்போமானால் ஒரு தெளிவற்ற சித்திரம் ஒன்றே எம்முன் தென்படுகின்றது. கலாமோகன் பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். அவற்றில் சில தமிழின் மிகச்சிறந்த கதைகளகாக் கொண்டாடப்படுகின்றன. அவரது சிறுகதையான 'மூன்று நகரங்களின் கதை' தமிழின் மிகச்சிறந்த 100 கதைகள் என்ற பட்டியலிற்குள் தமிழகத்து இலக்கிய ஆளுமைகள் பலராலும் வகைப்படுத்தப்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலிற்குள் வெறும் நான்கைந்து ஈழ எழுத்தாளர்கள் மட்டுமே அடங்கியுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. எனவே இது ஒரு அசாத்தியமான சாதனையாகவே எமக்குப் புலப்படுகின்றது. மேலும் தமிழக விமர்சகர்கள் ஈழ-புகலிட இலக்கிய ஆளுமைகள் என்று பட்டியலிடும்போது இவரது பெயர் இரண்டாவது அல்லது மூன்றாவதாக எஸ்.பொன்னுத்துரை,மு.தளையசிங்கம், மற்றும் சட்டநாதனிற்கு அடுத்ததாக அல்லது அதற்கு முன்னதாக முன்னிறுத்தப்படுகின்றது. இவரது சிறுகதைகள் பலவும் இன்றளவும் பல்வேறு இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன.
ஆயினும் ஈழ-புகலிட இலக்கியப்பரப்பில் இவருக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் எமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. அன்று புகலிடத்தில் பல்வேறு நாடுகளிலும் பல காத்திரமான இலக்கிய இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்த போதிலும் இவரது படைப்புக்கள் குறித்த விமர்சனங்களோ மதிப்பீடுகளோ பெரிதாக எவையும் வந்திருக்கவில்லை என்பதே எமது அவதானிப்பிற்குரிய விடயமாகும். இவர் வாழ்ந்து வருகின்ற பிரான்சில் இருந்து வெளிவந்த சஞ்சிகைகளில் கூட இவரது படைப்புக்கள் குறித்து (அந்த அறிமுகவிழா குறித்த விவாதங்கள் தவிர ) எந்தப் பதிவுகளும் இல்லை. இதை தவிர இவரது பெரும்பாலான படைப்புக்கள் கூட அன்று பரவலாகப் பேசப்பட்டு வந்த சஞ்சிகைகளான எக்ஸில், உயிர்நிழல், காலம் போன்ற சஞ்சிகைகளில் அன்றி தாயகம், பாரிஸ் முரசு போன்ற ஒரு குறிப்பிட்ட சஞ்சிகைகளிலேயே மீண்டும் மீண்டும் பிரசுரமாகியிருந்தன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இது இவர் குறித்த ஒவ்வாமை இவரது நட்பு வட்டத்திலேயே இருந்தது தெளிவாகப் புலப்படுகின்றது. இது குறித்து அவரே அவரது ஒரு சில படைப்புக்களில் வெளிப்படையாகப் பேசி இருப்பதினையும் நாம் கண் கூடாகப் பார்க்கலாம். இத்தகைய ஒவ்வாமை நாம் ஏற்கனவே கூறியிருந்தபடி இவர் தரித்துக் கொண்டு வாழ்நிலை, இவர் வரித்துக் கொண்ட அரசியல் நிலைப்பாடு காரணமாகவும் அமைந்திருக்கலாம். இங்கு ஒரு தடவை பிரஞ்சுப் பத்திரிகையான லிபரேசனுக்கு (LIBRATION ) கொடுத்த விளக்கம் ஒன்றில் "பிரான்சில் புகலிடம் பெற்ற தமிழ் அகதிகளில் 90 சதவீதமானவர்கள், கள்ள (பொய்யான) அகதிகள் ஆவர். ஏனென்றால் இவர்கள் பிரஞ்சு பிரஜா உரிமை பெற காத்துக் கிடப்பவர்கள்" என்று அகதிகளுக்கு எதிராக கருத்துக் கூறியதாகக் கூறி பல்வேறு இடதுசாரிகளும் இவர் மீது காட்டமான விமர்சனங்களை வைத்திருந்ததினையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது அவசியமாகும்.
இதுவரை கலாமோகன் படைப்புக்கள் மீது தாக்கம் செலுத்தும் புறவயமான விடயங்கள் குறித்துப் பார்த்தோம். இனி அவரது படைப்புக்களின் மீதான பார்வையைச் செலுத்தலாம். அவரது கதையின் கரு, களங்கள், கதை கூறும் முறை, உத்திகள், அதனது அழகியல் கூறுகள், இவற்றில் வெளிப்படும் கோட்பாடுகள் குறித்து பார்க்கலாம்.
இதுவரை எமது கையில் அவரது நூலுருவில் வெளியிடப்பட்டுள்ள 3 பிரதிகள் உண்டு. 'நிஷ்டை' என்னும் சிறுகதைத்தொகுப்பு 'ஜெயந்தீசன் கதைகள்' என்னும் குறுங்கதைகளின் தொகுப்பு மற்றும் 'வீடும் வீதியும்' என்ற நாடகப் பிரதியொன்று. கூடவே இவரது பல கதைகளும், கவிதைகளும் பல்வேறு சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தொடர்ந்தும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இவர் சில விமர்சனக் குறிப்புக்களையும் எழுதியுள்ளதை எம்மால் பார்வையிட முடிகின்றது.
இதுவரை எம் பார்வைக்கு கிட்டிய படைப்புக்களின் ஊடாக அவர் குறித்து ஒரு மேலோட்டமான வரை படத்தை உருவாக்க முனைவோமானால் சில விடயங்களை நாம் குறிப்பிட்டேயாக வேண்டும். 'ஜெயந்தீசன் கதைகள்' நூலின் முன்னுரையில் எஸ்.பொ. பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'தேசப்பற்றும் மொழிப்பற்றும் நிறப்பற்றும் இல்லாதவர் கலாமோகன்.".
ஆம். தேசம், மொழி என்ற வரையறைக்குள் இயங்குபவர் அல்ல கலாமோகன் . அவர் ஒரு சர்வதேசிய தளத்தில் இயங்கும் படைப்பாளி. எல்லைகள் கடந்தது அவரது நிலம். இன்று தமிழ் என்ற நிலம் எப்படி எல்லைகள் கடந்து இயங்குகின்றதோ அப்படியே தமிழ் என்ற மொழியும் எல்லைகள் கடந்து ஒரு சர்வதேசிய தளத்தில் இயங்குகின்றது. அதற்கு பிள்ளையார் சுழி போட்ட முதன்மையான படைப்பாளியாக கலாமோகனைக் குறிப்பிடலாம். இன்று அநேகமான எழுத்தாளர்கள் தாயகம் நோக்கிய ஏக்கங்கள், பெருமூச்சுக்களுடன் படைப்புக்களை உருவாக்கும் இதே வேளையில் கலாமோகன் அதன் தளையில் இருந்து முற்று முழுதாக விடு பட்டு விடுகின்றார். மேலும் இவரது குரல் கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு குரல். அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பாவ்லாக்கள் எதுவும் இவரிடம் கிடையாது. அத்துடன் இவரது கதைகள் பெரும்பாலானவை பெருநகரங்களின் கதைகள். அந்தப் பெருநகரம் தருகின்ற விடுதலையினால் அவரால் எமது பண்பாட்டிலிருந்தும் இலகுவாக விடுபட முடிகின்றது. அவரது கதை மாந்தர்கள் பல்வேறு நிலங்களிலும், கலாச்சாரத் தளங்களில் இருந்து வந்து பல்வேறு மொழிகளையும் பேசுபவர்களாக இருக்கிறார்கள்.
இந்தப் புள்ளிகளை எல்லாம் இணைத்துக் கொண்டு நாம் இப்போது இக்கட்டுரைக்குப் பொருத்தமாக இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பான 'நிஷ்டை' குறித்து மட்டும்கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம்.
'நிஷ்டை' 1999 காலப்பகுதியில் பிரான்சிலிருந்து எக்ஸில் பதிப்பாக வெளிவருகின்றது. இதில் 12 சிறுகதைகள் அடங்கியுள்ளன. 'பாரிஸ் Exile இதழிற்கு மதிப்பளித்து அவசர அவசரமாக சில சிறுகதைகளைத் தொகுத்துள்ளேன் ' என அவர் தனது முகவுரையில் குறிப்பிடுகின்றார். இந்த அவசரம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
'நிஷ்டை' வெளிவந்த காலப்பகுதியில் சமூகத்தில் ஓரளவு பேசப்பட்டதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது என்பதும் உண்மைதான். (இதில் நாம் ஏற்கனவே இக்கட்டுரையின் ஆரம்பித்தில் குறிப்பிட்டிருந்த டொரோண்டோ வெளியீட்டு நிகழ்வின் சர்ச்சைகளும் அடங்கும்).
இதில் முதலாவது சிறுகதையான 'மழை' 1990 களில் இலங்கையில் வீரகேசரியில் பிரசுரமாகியிருக்கின்றது. அந்தக் கதையின் களம் தாயகம். அதனைத் தவிர்த்து அனைத்துக் கதைகளும் பெருநகரங்களின் கதைகளாக பாரிசில் அல்லது ஒரு கற்பனையான உலகில் சஞ்சரிக்கின்றது. இதில் மழை, மூன்று நகரங்களின் கதை, உருக்கம் போன்றவை பல்வேறு விமர்சகர்களாலும் விதந்தோடப்பட்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பு ஒரு பலவீனமான தொகுப்பு என்று குறை கூறியவர்கள் கூட இந்த 3 கதைகளையும் மிகவும் பாராட்டிப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 'மூன்று நகரங்களின் கதை' தமிழின் 100 சிறந்த சிறுகதைகள் என்ற பட்டியலிற்குள் பல்வேறு இலக்கிய ஆளுமைகளாலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பல்வேறு இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டு வருகின்றது.ஆயினும் இவரது மற்றைய கதைகள் பல்வேறு விமர்சகர்களாலும் ஒரு எதிர்மறையான விமர்சனத்தையே எதிர் நோக்கியிருந்தன.
'கலாமோகனின் கதைகள் சின்னவட்டத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. வேறு ஏதும் இருந்தால் எனக்குப் புரியவில்லை'
'இவை எனக்கான கதைகள் அல்ல. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை' .
போன்ற விமர்சனங்கள் பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்படுகின்றன. ஏனிந்த வேறுபாடு ? ஏன் இந்த பின்னடைவு ?
ஏனெனில் நாம் மேலே குறிப்பிட்ட 3 கதைகளும் ஒரு யதார்த்தவாதப் பாணியில் இயல்பான மொழியில் நேரிடையாகவும் தீவிரமாகவும் எம்முடன் பேசுகின்றது. அதற்கு முக்கிய காரணம் இந்தக் கதைகள் சமூகத்தின் அன்றாட நடைமுறைப் பிரச்சினைகளான வீடு, குடும்பம், உறவுகள் ,இடப்பெயர்வு, பொருளாதார நெருக்கடிகள், வேலைத்தளம், அங்கு ஏற்படும் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்களைப் பேசுகின்றன. ஆனால் பெரும்பாலும் மற்றைய கதைகளில் ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள், பாலியல் உணர்வுகள், வேட்கைகள், காம ஏக்கங்கள் போன்ற விடயங்களே பெரும்பாலும் சித்தரிக்கப்படுகின்றன. பாலியல் உணர்வுகளை சிக்கல்களை பேசுவதுதான் இந்தக் கதைகளின் பின்னடைவுகளுக்கு காரணமா என்றால், அதுவல்ல பிரச்சினை. உண்மையான பிரச்சினை இங்கு இக்கதைகளை எழுதுவதற்கு இவர் பயன்படுத்தும் உத்திகளும் வடிவங்களும் மொழியுமாகும். சமூகம் சார்ந்த பிரச்சனைகளை ஒரு இயல்பான மொழியில் நேரிடையாகவும் தீவிரமாகவும் எழுதுகின்ற கலாமோகன் அக உணர்வுகளை சார்ந்த கதைகளை விபரிக்க ஒரு புகைமூட்டம் நிறைந்த இன்னொரு மொழியினை நாடுகின்றார். இதுவேதான் இங்கு பிரச்சினை. இவை அளவுக்கதிகமான அலங்கார வார்த்தைகள் வார்த்தைகளைக் கொண்டு ஒரு அந்தரத்தில் தொங்கும் மொழியினால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கதைகளில் வரும் கதைமாந்தர்கள் பேசுகின்ற மொழி எந்த ஒரு வட்டார வழக்கினையும் சாராமல் ஏதோ வானத்திலிருந்து குதித்த தேவதூதர்கள் பேசுகின்ற வார்த்தைகள் போல் தொனிக்கின்றன.
"என் பிரிதீக்குரியவரே பேசுங்கள்"
"என் உயிரினும் உயிரானவரே ! புதிதென்று நீங்கள் தந்த பூட்டிக் கொண்டு கதவினை நான் அடைத்ததைக் கண்டீர்கள்தானே !"
“நான் உள்ளேயில்லை கதவைத்திறக்க என்னிடம் திறப்பும் இல்லை. நான் எவ்வாறு உள்ளேயில்லையோ நீயும் அதுபோல வெளியேயில்லை. இதனை ஒத்துக் கொண்டு போய் விடு"
இப்படியாக தனது அன்றாட பிரச்சினைகள் சார்ந்த கதைகளை நேரடியாகவும் தீவிரமாகவும் எழுதிய கலாமோகன் ஆண்,பெண் உறவுச் சிக்கல்களை பாலியல் சார்ந்த கதைகளை எழுத முனையும் போது மட்டும் ஒரு புகைமூட்டம் நிறைந்த மொழிக்குள் புகுவதற்கான காரணங்கள் எமக்குப் புரியவில்லை.இப்படியான பிரச்சனைகளை கலாமோகன் மட்டுமல்ல பல்வேறு மூத்த எழுத்தாளர்களும் எதிர்நோக்கியிருந்தார்கள் என்பதும் பல்வேறு வாசிப்பனுபவங்கள் ஊடாக எமக்குத் தெரிய வருகின்றது. தனது 'ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்பார்வை' நூலில் ஜெயமோகன் இதே குற்றச்சாட்டினை எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை மீது பின்வருமாறு வைக்கின்றார். அது அச்சு அசலாக கலாமோகனிற்கும் பொருந்துகின்றது.
"இத்தகைய கதைகள் வாசிப்பிற்கு இன்பம் அளிப்பவையாக இருந்தாலும் எஸ்.பொன்னுத்துரையின் இயல்புவாதக் கதைகளின் தளத்திற்கு நகர முடியவில்லை என்றே எண்ணுகின்றேன். ஏனென்றால் காமகுரோதத்தின் மன இருள் என்பது யதார்த்தம். அதைச் சொல்ல அதேயளவு யதார்த்தமான மொழியும் முறையுமே பொருத்தமானது. காமச்சித்தரிப்பில் உள்ள இந்த அலங்காரம் ஒருவகை பசப்பாக எமக்கு ஜாடை அளித்து விடுகின்றது"
இதற்கு மேல் நாம் எதுவும் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறோம். ஜெயமோகன் எஸ்.பொன்னுத்துரை மீது வைக்கும் விமர்சனத்தையே நாமும் கலாமோகன் மீது வைக்கின்றோம். 'கலாமோகனின் அலங்காரம் மிக்க வார்த்தைகள் ஒரு பசப்பாகவே எமக்கு ஜாடை அளிக்கின்றது'.
கலாமோகன் தேசங் கடந்த எழுத்தாளராக, மொழிகள் அற்ற எல்லைகள் கடந்த எழுத்தளாராக எம்முன் நிலை நிறுத்தப்படுகின்றார். ஆனால் அவரது எழுத்துக்கள் அரசியல் நீக்கம் பெற்ற எழுத்துக்கள் அல்ல. தாரளாமாக அவரது கதைகள் அரசியல் நெருக்கடிகளைப் பேசுகின்றது. ஆயினும் ஏனோ தெரியவில்லை இடதுசாரிகள் மீது ஏதோ ஒரு ஒவ்வாமை அவரது எழுத்துக்களில் தொடர்ந்தும் அவதானிக்க முடிகின்றது. 'தோழர்கள்' மீது தாராளமாக தனது கிண்டல்களையும் நையாண்டிகளையும் முன் வைக்கின்றார்.(முக்கியமாக 'ஜெயந்தீசன் கதைகளில்). இதனால் இவரை இடதுசாரி முகாமில் உள்ளவர்கள் 'ஒரு பூர்சுவா வலதுசாரி' என்று தொடர்ச்சியாகத் தாக்குதல் தொடுப்பதினையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
இவரது பெரும்பாலான கதைகள் ‘கதைகளற்ற கதைகள்’ ஆகவே அமைந்திருக்கின்றன. கதைகளற்ற கதைகள் மீது எமக்கு எவ்வித ஒவ்வாமையும் இல்லை. கதைகளற்ற கதைகளிற்கு முன்னோடியாக நாம் மௌனியைக் குறிப்பிடலாம். ஆனால் கலாமோகன் பயணிக்கும் காலம் வேறு. தளமும் வேறு. இந்தக் கதைகளை வாசிக்கும்போது ஏதோ ஒரு போதாத்தன்மையினை நாமும் தொடர்ந்து உணர்ந்து வருகின்றோம்.
தொடர்ந்தும் இக்கட்டுரை நீள்வதில் எமக்கு விருப்பமில்லை. முடிவாக நாம் சொல்ல விரும்புவது இதனைத்தான். பல மிகச் சிறந்த சிறுகதைகளைத் தந்த ஒரு முன்னோடி எழுத்தாளரின் சறுக்கல்கள் எமக்குள் பல கிலேசங்களை ஏற்படுத்தி நிற்கின்றன. இங்கு நாம் வலியுத்தும் விடயம் ‘மூன்று நகரங்களின் கதை ‘ போன்ற மிகச் சிறந்த கதைகளை இவர் மீண்டும் எழுத வேண்டும் என்பதுதான்.
காலச்சுவடு பழைய இதழ்களைப் புரட்டிக் கொண்டிருகையில் எதேச்சையாக ஒரு இதழில் (காலச்சுவடு மார்ச் 2020) கலாமோகனின் சிறுகதை ஒன்று கண்ணில் பட்டது. 'நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அவர் மீண்டும் ஒரு சுமாரான கதையினையே தந்துள்ளது ஏமாற்றத்தினை அழிக்கின்றது. எமக்கு ஏமாற்றத்தினை அளிக்கும் கதை மற்றவர்களுக்கும் ஏமாற்றத்தினை அளிக்குமா? அல்லது அவர்கள் அதனை மிகச் சிறந்த கதை என்று கொண்டாடுவார்களா ? இலக்கியத்தின் விளங்கிக் கொள்ள முடியாத பக்கங்கள் இவை. புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி