
* கட்டுரையாசிரியர் - முனைவர் மூ.சிந்து, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை
முன்னுரை
பெண்ணிய எழுத்தாளரான தாமரையின் 'கதவும் கள்ளிப்பாலும்' எனும் கவிதையின் தொகுப்பில் 'தொலைந்து போனேன்' கவிதையில் பெண்ணின் மனவெளிப்பாட்டினை வெளிப்படும் நோக்கில் அமையப் பெற்றதாகும்.
‘திருவிழா’ அல்லது ‘உற்சவம்’ என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ்ப் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழிச் சொல்லாகும். திருவிழாவின் போது கிராமங்களில் மக்கள் ஒருமாதத்திற்கு முன்பே தன் இல்லங்களில் திருவிழாவிற்காக தன்னை தயார் செய்யும் நிலையைக் காண முடியும். அப்புாது தம் சுற்றங்களோடு ஒன்றாகத் திரண்டு இன்புற்று இருக்கும் நிலையில் அந்த நிகழ்வு மனதிற்கு இன்பம் தரக்கூடியதாகவும் பசுமையான நினைவுகளாகவும் அமைந்தமையைக் காணமுடிகிறது.
கவிதையின் போக்கு
இல்லத்தில் கடைக்குட்டியான மகள் எல்லோருக்கும் செல்லமாக வளரும் சூழலில் ஒரு திருவிழாவில் காணமல் போக தன் சுற்றம் முழுதும் அவளைத்தேடிப் பிடிக்கையில், அதே பெண் தான் வளர்ந்து திருமணவிழாவில் தன் சுற்றம் அனைவரும் முன் இருக்க தான் அந்த இடத்தில் எல்லோரும் இருக்க தொலைந்து போகும் தருணத்தில் பெண்ணின் மன உணர்வு எத்தகையது என்பதையும், சமூகச் சூழலில் பெண் தன் உணர்வினை தொலைத்து வாழும் நிலைப்பாட்டினையும் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டிச் செல்கிறார் என்பது கண்கூடத்தக்கது.
தொலைந்து போதல்
பெண் தனக்கான சுயத்தை வெளிப்படுத்துவது என்பது சிக்கலானதாகும். சிறு வயது முதல் இறப்புவரை ஏதோ ஒரு கட்டுக்குள் வாழும் வாழ்க்கையில் அவளது அனைத்து அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. பெண் சமூகத்தில் வளர வளர அவர்களுக்கான கட்டுப்பாடுகளும் வளர்ந்து விடுகின்றன. காலப்போக்கில் அவர்களின் அடையாளங்களைத் தன் குடும்பத்திற்காக இழந்து நிற்கின்றனர். ஒரு பெண் தனது திருமண வாழ்க்கையில் எப்படி “தொலைந்து போகிறாள்” என்பதை தன் கவிதையில் பெண்ணின் மன உணர்வாகவே தாமரை எடுத்துரைத்துரைக்கிறார்.
பட்டுப் பாவாடை சரிகைச் சட்டை
பாதங்களில் கொலுசு பட்டை
ஐந்து வயதிருக்கும் அப்போது
பெண்குழந்தைகளுக்கு சிறுவயதில் முதலே பருவத்திற்கு தகுந்தாற் போல உடைகள் இருந்தமையைக் காணமுடிகிறது. அவர்கள் அணியும் உடையைக் கொண்டு பருவங்கள் கண்டநிலையினைக் காணலாம். சிறுவயதில் பட்டுப்பாவடைச் சட்டையும், காலில் நன்கு சத்தம் தரும் கொலுசுகளையும் அணிந்திருக்கும் குழந்தை தன் பருத்தில் தனக்கே உரிய குணத்தோடு இயல்பாய் இருப்பதை எடுத்துரைக்கிறார்.
அன்பின் வெளிப்பாடு
பார்த்துப் பார்த்து ஒருநாள் அலங்காரம்
பற்றாக்குறைக்கு கன்னத்தில் திருஷ்டிப் பரிகாரம்
வீட்டின் கடைசியாகப் பிறந்த குழந்தை என்பதால், அடம் பிடித்து கேட்கும் அனைத்தும் கிடக்கும் செல்லப் பெண்ணாக வளரும் குழந்தைக்குப் பார்த்து பார்த்து அலங்கரித்து, யாருடைய கண்ணும் பட்டு விடாதபடி, கண்ணத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து ஊரின் திருவிழாவிற்கு அழைத்துச் செல்வதின் வாயிலாக அப்பெண் குழந்தையின் மீதுள்ள அன்பு புலப்படுகிறது.
ஊர்த் திருவிழா
பக்கத்து ஊரில் திருவிழாவாம்
முப்பது மைல் தொலைவில் அ்ந்த மைதானம்
மாடு பூட்டிய வண்டியில் பிராயணம்
தன் குடும்பத்துடன் பக்கத்து ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கு, முப்பது மைல் தூரம் மாடு பூட்டிய வண்டியில் பயணம் மேற்கொண்டு செல்லும் போது வழியில் வண்ணச்சேலைகள், வானவில் போன்று கதம்ப மாலைகள் வண்ணமாக தொங்கவிடப்பட்டுள்ளது. திருவிழாவில் புலியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவையும், கடைத்தெருக்களில் பஞ்சுமிட்டாயும், அரிசிப் பணியாரம் மற்றும் பல பலகாரங்கள் விற்கப்படுகின்றது. இத்தகைய திருவிழாவிக்குச் செல்லும் பெண்களின் மனமானது இயல்பாகவே சந்தோஷமாக இருக்கும் என்பதைக் காட்டிலும், தன் குடும்பம், வேலை இவற்றை மறந்து பெண்கள் வண்ணச் சேலைகள் கட்டி கலை நிகழ்வுகளைக் காணும் போது பெண்ணின் மனம் இன்புற்று இருக்கும் என்பதை எழுத்தாளர் எடுத்துரைத்துச் செல்கிறார்.
தொலைந்து போதல்
பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மக்கள் கூட்டம் நிறைந்த திருவிழாவில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள் அல்லது கூழ்காய்ச்சும் விறகு உலைகள் நிரம்பி நிற்கிறது. அந்த இடத்தில் வழிமாறிப்போய் தவிக்கும் பிள்ளை தன் பெற்றோர்களைப் பிரிந்து மனம் படும் துயரினையும், தன் பெற்றோர்களிடம் மீண்டும் சேரத்துடிக்கும் அந்தக் குழந்தை அதன் வழி அறியாது படும் பாடானது குழந்தையின் மனம் போலவே அறியமுடியாததாகவே அமைகிறது.
பெற்றோரின் மனமும் தேடுதல் நிகழ்வும்
தன் குழந்தையைக் திருவிழாவில் தொலைந்து போனதை அறிந்த உடன் பெற்றோர்கள் படும் பாடானது உயிர் போகும் நிலையை விட மோசமானது என்றும் அவளைத் தேடி திரும்பப் பெறப் போராடும் அந்த பெற்றோர்களின் மனநிலையும், தாயின் அன்பும், தந்தையின் பாசப் பாராட்டமும், பாட்டிக்குத் தன் பேத்தியின் மீதுள்ள அளவு கடந்த பாசத்தினவெளிப்பாடாக வேண்டுதலும், வழிபாடுகளுமாக மாறிய சூழலில் பெண்குழந்தையின் மீது கொண்ட அன்பானது வெளிப்படுகிறது.
தெய்வத்திற்கு நிகர்
குழந்தையைக் கூட்டத்தில் கண்டுபிடித்துத் தந்த பெண்ணிற்குப் பரிசாக அம்மனுக்குச் சாட்ட இருந்த பட்டையும், அரை பவுன் மூக்குத்தியும் பரிசாக அளித்ததன் பொருட்டு கடவுளுக்குச் செய்யும் சிறப்பினை அந்த பெண்ணிற்குச் செய்கின்றனர். இதன் மூலம் தன் பிள்ளையை மீட்டுக் கொடுத்த அந்த பெண் தனக்கு கடவுளாகவே தோன்றியது அவர்களின் மனஉணர்வின் மூலமாக எடுத்துரைக்கிறார் தாமரை.
வாழ்க்கையின் ஓட்டம்
வாழ்க்கையின் நாட்களை வேகமாக நகர்வதும், ஒவ்வொரு நிகழ்வும் நேற்று தான் நடந்தது போல இருந்தாலும் இருபது வருடங்களைக் கடந்து நிற்கும் பெண்ணின் மனமானது எத்தனை மாற்றங்களைச் சந்தித்து இன்று நிற்கிறது என்பதும், மேலே படிக்க விரும்பம் கொண்டாலும், அதைத்தடுத்து திருமண நிலைக்குத் தள்ளப்பட்ட சூழலில் பெண்மனம் படுந்துயரையும், பெண் விருப்பத்திற்கு மாறாக நடக்கும் பெற்றோரின் கட்டாய சூழலையும் எடுத்துரைக்கிறார்.
பெண்ணின் மனநிலை
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்னும் நிகழ்வு கட்டாய ஒன்றாக அமைவதும், பெற்றோர் தன் பிள்ளைகளக்குத் திருமண ஏற்பாடு செய்யும் போது பெண்ணின் மனநிலையை அறிந்தும், விருப்ப வெறுப்புகளை உணராது செய்யும் இந்தச் சடங்கின் மூலம் பெண் தன் மனதில் உள்ள உணர்வுகளையும், ஆசைகளையும் வெளிப்படுத்த முடியாது பெற்றோரின் கட்டுக்குள் அவர்களின் விருப்பத்திற்கு ஆடும் கைப்பாவையாகவே சித்தரிக்கப்படுகிறாள்.
திருமண ஏற்பாடும் திரளானக் கூட்டமும்
விருப்பமில்லா திருமணமானாலும், அதற்கான ஏற்பாட்டு நிலை என்பது மிகவும் ஆடம்பரமாகவும், ஆச்சரியமூட்டும் வகையிலும் நடக்கும் சூழலில் பெண்ணுக்குச் சீதனமாகப் பொருட்களை கொடுத்தும், பெண்ணையும் கட்டிக் கொடுக்கும் நிகழ்வில் ஏராளமான உறவுகள் கூட்டம் கூட்டமாகச் செல்ல மணப்பெண் மட்டும் மனஉணர்வின்றி இருக்கும் நிலையானது புலப்படுகிறது.
மறந்தும் தொலைந்து போனேன்
பெண்ணின் திருமண ஏற்பாட்டில் கூட்டமாய் உறவுகள் பட்டுப்புடவை, நகைகள் அணிந்து உலாவர, கடைசிப் பந்தியில் வந்த உறவுகள் அனைத்தும் வடைக்கு அடிதடி போட, கூட்டத்தில் உள்ள மக்கள் சத்தம், மொய் வரவு பந்தலில் ஏற்படும் சத்தம், திருமணம் நடைபெறும் இடம் சந்தைக் கடை போல தோற்றம் பெற, அந்தக் கூட்டத்தின் நடுவில் உள்ள மணப்பெண் தன் மணவிழாவில் தன்னைத் தொலைத்தும், தன் அடையாளத்தை மறந்தும் நிற்கும் சூழலில், அவளைத் தேடும் உறவுகள் அங்கு யாருமில்லை என்பதை எடுத்துரைக்கும் ஆசிரியர், திருமணம் பெண்ணின் வாழ்வில் நடக்கும் ஒரு மாற்றம் என்பதையும், விருப்பமின்றி நடந்தாலும் பெண் அதை ஏற்கும் கட்டமைப்பில் உள்ள நிலையினையும் எடுத்துரைக்கிறது.
முடிவுரை
பெண்களின் வாழ்க்கைக் கட்டமைப்பினை தெளிவுபடுத்துகிறது.
சிறுவயதில் வீட்டிற்குச் செல்லமாக வளரும் குழந்தை அந்த வீட்டில் மிகப் பொக்கிஷமானப் பொருளாகக் கருதப்பட்டத் தன்மை வெளிப்படுகிறது.
காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்கும் பெற்றோரின் மனநிலையைக் கொண்டு, பெண்மீது கொண்ட அன்பும் பெண்ணைச் செல்வமாகப் போற்றும் திறனும் அறியமுடிகிறது.
சிறு வயதில் தவறுதலாகக் காணமல் போன குழந்தையின் மன உணர்வு மதிக்கப்பட்ட நிலையில், அன்று அக்குழந்தைக்கு அதன் வலி பெரிதாகவும் தன்னைப் பெற்றோர்கள் அரவணைக்கும் போது அந்த அரவணைப்பின் ஆழமும் உணராத மனநிலையில் குழந்தையின் மனம் இருந்ததை வெளிப்படுகிறது.
பருவமாற்றம் காரணமாக பெண்ணின் விருப்பமின்றி நடைபெறும் திருமண ஏற்பாட்டின் வாயிலாக, குடும்பம் என்னும் கட்டமைப்புக்குள் பெண் வாழும் சூழலும், தாய், தந்தை எடுக்கும் முடிவுகளுக்கு பெண்கள் கட்டுப்பட்டு வாழும் அமைப்பில், பெண்ணின் சுதந்திரம், அவளது விருப்பமும் இங்கு மதிக்கப்படாது கட்டாயமாக்கப்படுகிறது என்பதை அறியமுடிகிறது.
திருமண ஏற்பாட்டில் விருப்பமில்லாத பெண், விலைப் பொருளாக விற்கப்படும் நிலையும், சீதனப் பொருட்கள் பெண்ணிற்கு ஈடுகட்டும் பொருட்களாகவும் சமூகத்தில் உலாவரும் நிலையும் எடுத்துரைக்கிறார்.
திருமணம் எனும் நிகழ்வில் பெண்ணின் மன உணர்வு தொலைந்து போகுமிடத்தில் அவளுக்கு ஆறுதல் சொல்லவும், அப்பெண்ணின் மன உணர்வுக்கு மரியாதை கொடுக்கவும் யாருமில்லாத சூழலில் ஆயிரம் உறவுகள் தன்னைச் சுற்றி இருக்கும் தருணத்தில், தான் மட்டும் தனியாக இருக்கும் நிலையில் தன்னை அந்தக் கூட்டத்தில் தேடும் நபர் ஒருவர் கூட இல்லை என உணரும் போது, பெண் இன்று தான் உண்மையாகத் தொலைந்துபோன உணர்வினை அடைகிறாள் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார்.
சிறுவயதில் தன்னைத் தேடிய குடும்பம் இன்று, தன்னை கண்டு கொள்ளாது கூட்டத்தில் உறவுகளுடன் கூடிப் பேசும் நிலையில் மணப் பெண்ணின் மனமானது “ தொலைந்து போனது” தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.
பெண்களுக்கு விருப்பமில்லாத கட்டாயத் திருமணம் செய்து அவர்களின் கனவுகளை அழிக்கும் சமூகநிலைப்பாடும், பெண்களின் உணர்வுகளை மதிக்கப்படாத நிலையும் இதன் வாயிலாக அறியலாகிறது.
மின்னஞ்சல் – இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.