
[கலாமோகன் புகலிடத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, குட்டிக்கதை, , நாடகம், மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. பிரெஞ்சு மொழியில் புலமை மிக்கவர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். கே.எல்.நேசமித்திரன், ஜெயந்தீசன் என்னும் புனைபெயர்களிலும் 'தாயகம் (கனடா) ' சஞ்சிகையில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. எக்ஸில் சஞ்சிகையில் இவரது சிறுகதைகள் பல வெளியாகியுள்ளன. இவரது படைப்புகளைப் பற்றிய எழுத்தாளர் வாசனின் கட்டுரையின் முதற் பகுதியிது. - பதிவுகள் -]
கலாமோகன் ஈழ-புகலிட இலக்கியத் தளத்தில் மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கி வரும் ஒரு படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு தளங்களிலும் பயணிப்பவர். இதுவரை எமது பார்வைக்கு 'நிஷ்டை' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'ஜெயந்தீசன் கதைகள்' என்ற குறுங்கதைகளின் தொகுப்பும் 'வீடும் வீதியும்' என்ற நாடக நூலும் மட்டுமே கிட்டியுள்ளன. இதனைத் தவிர வேறு ஏதாவது வெளி வந்துள்ளனவா என்று எமக்குத் தெரியவில்லை. அவ்வப்போது இணையத் தளங்களில் இவரது கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பும் கிட்டியிருந்தது. தொடர்ந்தும் பல இதழ்களிலும் இவர் தொடர்ச்சியாக எழுதி வருவதினையும் அவதானிக்க முடிகின்றது. தற்போது பிரான்சில் வசித்து வருகின்ற இவர் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருவதாக எம்மால் அறிய முடிகின்றது. இப்படியாக இவர் தொடர்ச்சியாக எமது சூழலில் இயங்கி வருகின்ற போதிலும் நவீன தமிழ் இலக்கியத் தடத்தில் இவரது இடம் எதுவென நிர்ணயிப்பதில் எமக்கு இன்னமும் பல இடர்ப்பாடுகள் உண்டு. இவரது படைப்புக்கள் குறித்தும் எம்மிடையே பல நேர்மறையான எதிர்மறையான பார்வைகள் உண்டு.
இன்று நவீன தமிழ் இலக்கியத் தளத்தில் ஈழ-புகலிட எழுத்தாளர்கள் பலரும் தமது தடத்தினை மிகவும் ஆழமாகப் பதித்துள்ளார்கள். இதில் அ.முத்துலிங்கமும் ஷோபா சக்த்தியும் தமக்கென ஒரு அரியாசனத்தை அமைத்துக் கொண்டுள்ளார்கள் என்பதினை மறுப்பதிற்கில்லை. மேலும் சயந்தன், குணா கவியழகன், அனோஜன் பாலகிருஷ்ணன், சேனன் போன்றோர் தமது போருக்குப் பிந்திய படைப்புக்களில் பலரதும் கவனத்தினை ஈர்த்துள்ளார்கள். இவர்களது படைப்புக்களும் அவை வெளி வரும் தருணங்களில் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பவையாக பெரிதும் பேசப்படுபவையாக இருக்கின்றன. இதற்குமப்பால் ஒரு சிலர் தொடர்ச்சியாகப் பேசப் படவில்லையாயினும் தமது ஒரேயொரு படைப்பினால் மிகப் பெரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தி ஒரு குறித்த காலத்தில் பெரிதும் பேசப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த வகைக்குள் யோ.கர்ணன், மாஜிதா, வாசு முருகவேல், போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த இடத்தில் நாம் கலாமோகனை இவர்களுடன் ஒப்பு நோக்கினால் இதில் எந்தவொரு வகை மாதிரிக்குள்ளும் இவர் அடங்கமாட்டார் என்பதினைப் புரிந்து கொள்ள முடியும்.
ஈழ-புகலிட இலக்கியப் படைப்பாளிகளில் முன்னோடியாக விளங்கும் இவர் மேற்குறித்த அனைவரிலும் இருந்து வேறுபட்டவராக இருக்கின்றார். இவர் அதிர்ச்சி மதிப்பீடுகளை நம்பி தனது படைப்புக்களை உருவாக்குவதில்லை.(இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'நிஷ்டை' வெளி வந்த போது சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்ததினை மறுப்பதற்கில்லை). ஆரவாரங்கள் இவர் பயணத்தில் இல்லை. அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி தனது எழுத்துப் பணியினைத் தொடரும் இவர் பெரிதளவில் சர்ச்சைகளுக்கும் உள்ளாவதில்லை.
அப்படியாயின் மேலே நாம் குறிப்பிட்ட அங்கீகாரங்கள் எதுவும் இவருக்கு கிடைக்காமல் போவதற்கு காரணங்கள் என்ன ? இவைகள் இவரது எழுத்தின் தோல்வியா ? ஒரு முன்னோடி எழுத்தாளரின் பின்னடைவுகளா இவை ? இவ்வாறு எம்மிடையே பல கேள்விகள் உண்டு. இதற்கு நாம் அகவயமானதும் புறவயமானதுமான பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம். அகவயமான விடயங்களாக அவரது எழுத்து, அதன் அழகியல் தன்மை, அது சார்ந்துள்ள கோட்பாடு, அது வெளிப்படுத்தும் சமூகப் பார்வை என்பவற்றினை குறிப்பிடலாம். புறவயமான காரணங்களாக அவரது தனிப்பட்ட வாழ்வு, அவர் வாழும் சமூகம், அச்சமூகம் அவரது எழுத்தினை எவ்வாறு எதிர்கொள்கின்றது போன்ற பல்வேறு விடயங்களை குறிப்பிடலாம். முதலில் நாம் இந்தப் புறவயமான காரணிகளை அவதானிக்கலாம்.
இதில் நாம் அவரது தனிப்பட்ட வாழ்வினை (அவரது அந்தரங்கக்களுக்குள் உள் நுழையாமல்) இதுவரை எழுத்தில் வெளிவந்த வகையில் பார்ப்போமானால் பின்வரும் விடயங்கள் வெளிப்படுகின்றன. 'அவர் பிரான்சில் தொழிலாளர்களுக்காக போராடி வருபவர். தமிழர்களுடன் அதிகம் பழக மாட்டார். ஒரு மறைமுகமான வாழ்க்கையினை வாழ்ந்து வருபவர். உலகளாவிய அரசியலில் அதிகம் நாட்டம்'. இந்த அவதானிப்புக்கள் அவர் எமது ஈழ அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டாதவர் என்கிற ஒரு விடயத்தை எமக்குத் தெளிவாக அறிவுறுத்துகின்றது. அதனால் தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசிய எதிர்ப்பு என்று இரு துருவங்களாகப் பிளவுண்டு கிடக்கும் எமது சமூகத்தில் இவர் எவர் பக்கமும் இல்லை என நாம் கூறலாம். எனவே எவரது ஆதரவும் கூட இவருக்கு இல்லை. எனவே இவரது படைப்புக்களை வெளிக்கொணர்வதில் எமது சமூகத்தில் அனைத்து தரப்பினரிடம் ஒரு ஒவ்வாமை உண்டு.அதனை ஊக்குவிப்பதிலோ அல்லது மக்கள் மயப்படுத்துவதிலோ அனைவரிடமும் ஒரு கள்ள மௌனம் உண்டு. அதனால்தான் பல்வேறு கழிசடை இலக்கியங்கள் மிக இலகுவாக அரங்கேறும் எமது சமூகத்தில் இவரது படைப்புக்கள் மிகவும் குறிப்பிட்ட ஒரு குறுகிய வட்டத்தினரிடம் மட்டுமே சென்றடைகின்றன.
இனி கலாமோகனின் படைப்புக்களை இந்த சமூகம் எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதினை நாம் பார்க்கலாம். கலாமோகனின் முதலாவது சிறுகதைத்தொகுப்பான 'நிஷ்டை' சுமார் 25 வருடங்களுக்கு முன் 2000 ஆண்டளவில் வெளிவருகின்றது. அது வெளிவந்து சில மாதங்களின் பின்பு கனடாவின் ரொறொண்டோ நகரில் ஒரு விமர்சனக் கூட்டம் நடைபெறுகின்றது. அந்த விமர்சனக் கூட்டம் குறித்து , அறுவடை நம்பி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையொன்று பாரீசில் இருந்து வெளிவரும் எக்ஸில் (நவம்பர் -மார்ச் 2000) இதழில் பிரசுரமாகின்றது. அக்கட்டுரையில் அறுவடை நம்பி அக்கூட்டத்தில் நடைபெற்ற உரையாடல்களை மிக விபரமாக எழுதிச் செல்கிறார். அவர் பின்வருமாறு இக்கூட்ட நிகழ்வினை எழுதிச் செல்கிறார். இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய காலம் செல்வம் இந்த 'நிஷ்டை' சிறுகதைத் தொகுப்புள் உள்ள கதைகள் சிறந்த சிறுகதைகள் இல்லாவிடினும் கலாமோகன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கின்றார். கூடவே கவிஞர் திருமாவளவன் 'இவை பரீட்சார்த்தமான கதைகள். சிறுகதைகள் என்ற வரையறைக்குள் அடங்காதவை. ஆனால் மிகச் சிறந்த கதைகள். இவற்றினை சாதாரணமாக விளங்கிக் கொள்ள முடியாது. இதனை இன்னொரு பரிமாணத்தில் இருந்து நோக்க வேண்டும் ' என்ற பாராட்டுக்களை வழங்குகிறார். தொடர்ந்த இந்தக் கூட்டமானது கலாமோகனின் படைப்புக்கள் குறித்த கூட்டமாக அமையாமல் கலாமோகன் குறித்ததான கூட்டமாக அமைந்திருந்தது. அக்கூட்டத்தில் எழுத்தாளர் சுமதி ரூபன் கலாமோகனின் படைப்புகள் தனக்கு அவரது காமலீலைகளாகத் தெரிவதாகக் குற்றஞ்சாட்டினார். வசந்திராஜா என்பவர் கலாமோகன் வாழத்தெரியாத கோழை என்று தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கினார்.
ஏன் இப்படியான தாக்குதல்கள் வருகின்றன என்பதினை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இலக்கியப் பிரதியினை எப்படி அணுக வேண்டுமென்ற ஒரு அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாமல் தமது பொதுப் புத்தியின் அடிப்படையில் புரிந்து கொள்ள முற்படும் வேளையில்தான் இத்தகை ஆபத்துக்கள் நிகழ்கின்றன. ஒரு ஆண்மைய வாத சிந்தனையில் இருந்து சற்றும் விலகாத பெண்ணிலை வாதிகளால் வைக்கப்படும் இத்தகை விமர்சனங்களில் ஆம்பிளை எண்டால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணங்கள் முன் வைக்கப்படுகின்றன. பொருளீட்டில் வெற்றி பெற்ற மனிதனே ஒரு முழு மனிதன் ஒன்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இது பிரதியில் உள்ள பாத்திரங்கள் மேல் வைக்கப்படாமல் எழுதிய எழுத்தாளன் மேல் வைக்கப்படுகின்றன. இதற்கு ஒரு பிரதியினை அணுகும் முறைமைகளில் உள்ள தவறுகளே காரணமாகின்றன. உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். ஒரு படைப்பில் தன்மை ஒருமையில் வரும் 'நான்' என்ற பாத்திரத்தினை அது அந்த எழுத்தாளன்தான் என்று தவறாகப் புரிந்து கொள்வது. இது பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கும்.
இப்போது எம்மால் புரிந்து கொள்ள முடியும். கலாமோகன் இத்தகைய சமூகத்தில்தான் வாழ்கிறார். இத்தகைய சூழலில்தான் தனது படைப்புக்களை எழுதுகிறார். ஒரு எழுத்தாளன் இத்தகைய சூழலில் இத்தனை தாக்குதல்களையும் எதிர்கொண்டுதான் தனது எழுத்துலக பயணத்தைத் தொடரவேண்டிய நிர்ப்பந்தம் அவனிற்கு. இத்தகைய சமூகத்தில் வாழும் ஒருவன் இதற்கமைய தன்னை தகவமைத்துக் கொள்வானாயின் அல்லது தனது எழுத்தினை தகவமைத்துக் கொள்வானாயின் அவனையறியாமலே அவன் ஒரு பாரிய வீழ்ச்சியினை எதிர் கொள்வது தவிர்க்க முடியாதது. கலாமோகன் இந்த தாக்குதல்களுக்கெதிராக தன்னை தகவமைத்துக் கொள்கின்றாரா அல்லது தன்னுடைய எழுத்தினை தகவமைத்துக் கொள்கின்றாரா எமக்குத் தெரியாது. ஆனால் இத்தகைய விமர்சனங்களும் அவதூறுகளும் மறைமுகமாகவேனும் அவரது எழுத்தில் பாதிப்பினை செலுத்தும் அல்லது ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும் எனபதினையும் நாம் மறுக்க முடியாது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.